தனிமையின் நூறு ஆண்டுகள் நான் வாசித்த நாவல்களில் தனித்துவமானது. முதலில் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் சுகுமாரன் மற்றும் திரு. ஞாலன் சுப்ரமணியம் இருவருக்கும் மற்றும் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நன்றிகளையும் பாட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்நாவலை மூல மொழியில் வாசிக்கா விட்டாலும், சிறிதளவேனும் என்னால் ஆசிரியரை நெருங்கி உணர முடிந்தது. அவ்வகையில் இது ஒரு சிறப்பான மொழிபெயர்ப்பு என்றே நினைக்கிறேன். அங்கங்கு பெயர் குழப்பங்கள் இருந்தாலும் நாவலின் சுவாரசியமும், மர்மமும் குறையாமல் தங்குதடையில்லாத வாசிப்பு இன்பத்தையே கொடுத்தது.
ஒரு நல்ல நாவலை வாசிக்கும் போது அந்நாவலின் களத்திலும், கதாபத்திரங்களிலும் மற்றும் நிகழ்வுகளிலும் ஒன்றிணைந்து பயணிப்பது எளிதில் நிகழக் கூடியது தான். ஆனால் மாரக்கேஸ் இந்நாவலில் கட்டி எழுப்பிய மகோந்தா என்ற கற்பனை நகரையும் தாண்டி, அதில் நிகழும் சம்பவங்களையும், அந்நகர மக்களின் நம்பிக்கைகளையும் நம்பும்படி செய்வது தான் ஆச்சரியமானது. மகோந்தா நகரின் எல்லைகள், அமைப்பு என எதையும் தனியாக குறிப்பிட்டு சொல்லாமல், கதையின் ஓட்டத்தில் கதைமாந்தர்கள் மற்றும் நிகழ்வுகளின் மூலம் அந்நகரின் அமைப்பை வாசகனின் கற்பனையில் கட்டமைக்கிறார் மாரக்கேஸ் . அந்த வகையில், இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் கற்பனையில் அவர்களுக்கான மகோந்தாவையே உருவாக்கிக் கொள்வார்கள். அதுபோலவே, நாவலில் நுழைந்து விட்ட பிறகு அவ்வுலகில் நடைபெறும் எல்லாமே சாத்தியம் தான் என்ற உணர்வை, தன் அபாரமான மொழிநடை மற்றும் விவரிப்பு மூலமாக குறியீடுகள், உருவகங்கள், படிமங்களை பயன்படுத்தி சாத்தியபடுத்துகிறார் மாரக்கேஸ.
ஹோசே அர்காதியோ புயேந்தியாவின் புலம்பெயர்வுக்கு காரணமான புருடென்சியோ அகுலெய்ரரின் கொலையில், ஹோசே அர்காதியோ புயேந்தியா மற்றும் உர்சுலா இகுவாரனின் குற்றவுணர்வே அவர்களை பாடாய்படுத்துகிறது. ஆனால் அதை புருடென்சியோ அகுலெய்ரரின் ஆவியாக மாரக்கேஸ் கூறும் போது ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஏனெனில் அவை ஏற்கனவே நம் மனதில் இருக்கும் தொன்மங்கள். இவ்வாறாக, தொன்மங்கள் மற்றும் வரலாறுகளில் மாயாஜாலத்தை நாவலின் உண்மைதன்மையுடன் கலந்து ஒரு மாய உலகில் வாசகனை உலவ விடுகிறார் மாரக்கேஸ்.
முழுக்க முழுக்க ஆசிரியரின் பார்வையிலேயே விரியும் நாவலில் ஆங்காங்கே மட்டும் கதை மாந்தர்களின் உரையாடல் நடைபெறுகிறது. அந்த கதை மாந்தர்களின் உரையாடல் அவர்களின் குணங்களுக்கு ஏற்ப ஆழமானதாகவோ, அருவருப்பானதாகவோ, நகைச்சுவையாகவோ அல்லது பைத்தியக்காரதனமாகவோ இருந்தாலும் அந்த வரிகள் எல்லாமே பெரும்பாலும் கதாபாத்திரங்களின் ஒரு உணர்வையோ அல்லது அவர்களின் உண்மைதன்மையையோ கடத்துவதாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக, மகோந்தாவிற்கு முதன் முதலாக வரும் ரயிலை பார்க்கும் ஒரு சாதாரண பெண் நகரவாசிகளிடம், “அது வந்து கொண்டிருக்கிறது. ஒரு சமையலறை தனக்கு பின்னால் ஒரு கிராமத்தையே இழுத்து வருவது போல வந்து கொண்டிருக்கிறது” என்பாள். இதில் இருக்கும் அறியாமையின் சுவடை விட கற்பனையின் ஆழம் வெகுவாக ரசிக்க வைக்கிறது. இதற்கு முன் ரயிலையே கண்டிராத, நகரை விட்டு வெளியவே சென்றிராத ஒரு பெண்ணின் கண்களில் ரயில் புகைவிடும் சமையலறையாகத் தானே தெரியும்.
மேலும், மகோந்தாவிற்கு நாடோடிகள் அறிமுகம் செய்யும் உலகின் அறிவியல் கண்டுபிடிப்புகளான காந்தம், ஒளிபெருக்கி, தொலைநோக்கி, சினிமா மற்றும் ஐஸ்கட்டி போன்றவற்றில் சினிமா பகடியாகவும், காந்தம் தத்துவமாகவும், தொலைநோக்கி தீர்க்கதரிசனமாகவும் அவற்றைப் பற்றிய வரிகளால் எனக்கு தோன்றியது. ஆனால் ஐஸ்கட்டி மட்டும் நம்ப முடியாத ஆச்சரியமாகவே இப்போதும் நீடிக்கிறது.
இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பை பற்றி நிறையவே பேசலாம். முதல் தலைமுறை ஹோசே அர்காதியோ புயேந்தியா முதல் கடைசி தலைமுறை குட்டி அவுரேலியானோ வரை எல்லோருமே பலவித தேடல்களிலும், அலைகழிப்புகளிலும், வாழ்க்கையின் ரகசியங்களிலும் தொலைந்து போகிறவர்களாக இருந்தாலும் அனைவரிடமும் உள்ள ஒரே ஒற்றுமை அவர்களின் தனிமை. நாவலின் தொடக்கத்தில் சிறிய கிராமமாக இருக்கும் மகோந்தாவிற்கு வெளி உலகுடன் உள்ள ஒரே தொடர்பு அங்கு வரும் நாடோடிகள் மட்டுமே ஆனால் பின்னாட்களில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மனிதர்களை ஈர்த்து ஒரு முக்கிய நகரமாகவே வளர்ச்சி பெறுகிறது. எனவே தனிமையின் நூறு ஆண்டுகள் மகோந்தாவின் தனிமை என்பதை விட புயேந்தியா குடும்பத்தின் தனிமை பற்றியது என்பதே சரியாக இருக்கும்.
ஹோசே அர்காதியோ புயேந்தியா முதல் குட்டி அவுரேலியானோ வரை எல்லோருமே தங்கள் வாழ்க்கை பற்றிய பார்வையில் ஒடுங்கி, பிறரைப் பற்றி கவலை கொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு உர்சுலா இகுவாரன். அவள் மட்டுமே அந்த குடும்ப நலனுக்காக தாய்மையின் துணை கொண்டு இறுதிவரை போராடுகிறாள். முக்கியமாக அழகி ரெமேதியெஸ் ஒரு தேவலோக பெண் போலவே வலம் வருகிறாள். அவளுக்கு இந்த உலகமோ, அவளுக்காக ஏங்கும், அவளை காதலிக்கும் யாருமே பொருட்டில்லை. விளக்க முடியாத புதிர் போல ஆனால் வசீகரிக்கும் அழகுடன் எல்லோரிடமும் சவால் விடுகிறாள். மாறாக, அமரந்தாவோ தனக்கு என்ன தேவை என்பதை கூட உணர முடியாதவளாக, காதல் அவளுக்காக கைநீட்டி நிற்கும் தருவாயில் வெறுப்பை உமிழ்ந்து கதவை அடைத்துக் கொண்டு அழுகிறாள். ரெபேக்கா தனது நீண்ட நாள் காதலனை வலிமையான காமத்துக்காக உதறி செல்பவளாகவும், ஒரு கட்டுபாடான சூழலில் ஒழுக்கமாக வளர்ந்து தன்னை நிரூபித்து பின் தனக்கான சுதந்திரதை ஈட்டிக் கொள்ளும் ரெனேட்டா ரெமேதியெஸ்(மேமே) இறுதியல் குடும்ப பெருமைக்காக காதலனை இழப்பவளாகவும் வருகிறார்கள். இவ்வாறாக காதலும் இந்நாவலில் கைவிடப்பட்டு தனிமையிலேயே தான் உள்ளது.
மாரக்கேஸ் காலத்தைக் கையாண்ட விதத்தை நாவலின் முதல் வரியிலேயே நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலம் மற்றும் இறந்தகாலம் பற்றிய செய்திகளை சொல்வதன் வழியாக உணர்த்திவிடுகிறார். நாவல் நிகழும் காலம் பற்றிய வரையாறுக்கபட்ட எந்தக் குறிப்பும் இல்லாமல் குறியீடுகள் மூலமாக காலத்தைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்கி, அடுத்தடுத்த நிகழ்வுகள் வழியாக நேரடியாகவே நாவலை முன்னெடுத்து செல்கிறார். ஆனால் கதாபாதிரங்களின் தனிபட்ட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னும் பின்னும் அமைத்து காலம் பற்றிய ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகிறார். எவ்வாறெனில், நடந்து முடிந்த ஒரு நிகழ்வு எப்போது நடந்தது, எப்படி நடந்தது என்பதை எதிர்பாராத இன்னொரு நிகழ்வின் மூலம் தெளிவுபடுத்தி ஆர்வத்தை தூண்டி விடுகிறார். அவர் எழுத்தில் மொழி சலனமே இல்லாத ஓடை நீர் போல எந்த தடையும் இல்லாமல் நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது. மாரக்கேஸின் கதை சொல்லும் ஒழுக்கு ஒரு புளிய மரத்தின் கதை நாவலில் வரும் தாமோதரன் ஆசானையும், கதை சொல்லும் முறை உங்களின் நற்றுணை சிறுகதையில் வரும் அம்மணி தங்கச்சியையும் எனக்கு நினைவுறுத்தியது.
அதுபோலவே, நாவலின் தொடக்கத்தில் நாடோடியான மெல்குயாதெஸ் நிர்மாணிக்கும் ரசவாத ஆய்வுக்கூடம், நாவலின் இறுதிவரை எந்த மாற்றமும் இல்லாமல் அவ்வாறே நீடிக்கிறது. பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டியிட்டாலும் தூசிபடியாமல், எந்த பொருளும் சேதமாகமல் மெல்குயாதெஸ் விட்டு சென்றது போலவே உள்ளது. மொத்த உலகிற்கும் நகரும் காலம் அந்த ஆய்வுக்கூடத்தில் மட்டும் நின்று விடுகிறதா என்ற கேள்வி மனதில் எழும் போது ஆவியின் துணைகொண்டு சமாதானம் செய்கிறார் மாரக்கேஸ் .
இந்நாவலில் பல குறியீடுகள் இருந்தாலும் மஞ்சள் நிறம் இறப்பு அல்லது அழிவின் குறியீடாகவே பயன்படுத்தபட்டுள்ளது. முதல் வாசிப்பில் நான் இதை கவனிக்கவில்லை என்றாலும் இரண்டாம் முறை வாசிக்கும் போது எங்கெல்லாம் மஞ்சள் நிறம் வருகிறதோ, அது மஞ்சள் பூவோ, மஞ்சள் பட்டாம்பூச்சிகளோ, மஞ்சள் ரயிலோ அல்லது மஞ்சள் தொப்பியோ எதுவாக இருந்தாலும் அவை இறப்பையும் அழிவையுமே கொண்டு வருகின்றன.
இந்நாவல் மனித வாழ்வின் நிலையாமையை பற்றி பேசுவதாகவே எனக்கு தோன்றுகிறது. நாம் பின்பற்றும் விழுமியங்களும், நம் நம்பிக்கைகளும் காலபோக்கில் மறைந்து போவதன் பொருளின்மையே மீண்டும் மீண்டும் என் கண்முன் வந்தது. எல்லா கதாபாத்திரங்களும் இலக்கை நோக்கி வேகமாக பாய்ந்து, வாழ்க்கையின் வெளியில் காணாமல் போகிறார்கள். உண்மையை தேடும் முயற்சியில் சலிப்பையே அடைகிறார்கள். நாவலில் வரும் மெல்குயாதெஸின் ஆவி ஒவ்வொருவரின் மனசாட்சி என்றே நினைக்கிறேன், எல்லோருமே அதை தவிர்த்துவிட்டு உலக இன்பங்களிலும், இலட்சியங்களிலும் மூழ்கி அழிகிறார்கள். ஏனெனில் எல்லோரும் செல்வது சுயநலத்தின் பாதையில் எனவே அவர்களால் நிறைவு அடையவே முடியவில்லை அவர்களின் உலகை மீறி வேறு எதையும் உணர முடியவில்லை. ஒருவன் மட்டும் முயல்கிறான், உண்மையை காணும் தருணத்தில் அவனும் அழிகிறான். இறுதியில் வாழ்ந்த சுவடே இல்லாமல் நினைவில் கூட எஞ்சாமல் காணாமல் போகிறார்கள்.
முதல் முறை வாசித்த போது பெயர் குழப்பங்களுக்குள்ளும், மொழியின் செறிவுக்குள்ளும் சிக்கி திணறியதால் இரண்டாம் முறையும் வாசித்தேன் அப்போது தான் நாவலின் பல அடுக்குகள் தெளிவாயின. எப்போது வாசித்தாலும் ஏதேனும் ஒரு புதிய திறப்பை கொடுப்பதாகவே இந்நாவல் இருக்கும். மிக அருமையான நாவல். என்னால் கடந்து வர முடியவில்லை. எனவே தான் உங்களுக்கு எழுதினேன்.