கொட்டுக்காளி: அஜிதன்

நேற்று ‘கொட்டுக்காளி’ திரைப்படம் மனைவியுடன் சென்றுப் பார்த்தேன். தமிழில் இதுவரை வெளிவந்துள்ளவற்றில் தலைசிறந்த திரைப்படம் இதுவே என்பது என் எண்ணம்.

பலரும் இந்த படத்தை ஆணாதிக்கம், சாதியம், மூடநம்பிக்கை என்ற மூன்று சட்டகங்களுக்குள் வைத்து மட்டும் உரையாடுவதை காண்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் அக்களங்களை பின்புலமாக கொண்டு, அவற்றுக்கு மேலெழும் தத்துவார்த்தமான தளம் ஒன்று இருக்கிறது

படத்தின் ஆரம்பத்தில் “எல்லாவற்றுக்கும் இயற்கைக்கு நன்றி” என்ற வாசகத்துடன் துவங்கும் போது அதை வெறும் தேய்வழக்காக பயன்படுத்தியதாகவே எண்ணினேன்

ஆனால், இந்த படத்தில் முழுக்க முழுக்க நிறைந்திருக்கும் அந்த தரிசனம் என்பது ’பொருட்களுக்குள் ஊடுருவியிருக்கும் ஒருபோதும் முழுதறிய முடியாத அந்த ஆற்றலைப்’ பற்றியது

அது வெளியே ஒரு தெய்வீகத்தை நோக்கி சுட்டுவது அல்ல, முழுக்க முழுக்க தன்னில் நிறைந்திருப்பது (immanence). உலகம் முழுவதும் வெவ்வேறு கலாச்சாரங்களில் தோன்றியுள்ள தரிசனம் இது என்றாலும் அதற்கு தமிழுக்கே உரித்தான வெளிப்பாடு என ஒன்று உள்ளது.

அது சங்க கால மனநிலையில் இருந்து நாம் காணும் ஒன்று. சங்க காலத்தின் அகம் என்பது மனதின் அகவயம் மட்டுமல்ல, மனதின் ஒவ்வொரு அசைவையும் இயற்கையில் இணைக்கும் புள்ளியில் நிகழ்வது அது.

இவை இரண்டுக்கும் உவமானம்-உவமேயம் எனும் உறவையும் மீறி ஒரே ஊற்று ஒன்று இருப்பதாக காண்பது அது. சங்க இலக்கியத்தில் ’முருகயர்தல்’ என்று ஒன்று உண்டு. பெண்களில் கூடும் அணங்கு. மேலை பண்பாட்டில் அதை meloncholia-வுக்கு இணையாக சொல்லலாம்

வரலாறு நெடுகிலும் ஆணாதிக்கத்தின் உச்ச அழுத்தத்துக்கு பெண்கள் கொள்ளும் இரண்டு நேரெதிரெதிர் வெளிப்பாடுகள் hysteria மற்றும் meloncholia. இவை இரண்டும் பெண்மையின் வெளிப்பாடுகள், ஆனால் அவற்றில் வெளிப்படும் அவர்களே அறியாத ஆற்றல் என்பது ஒன்றே.

இயற்கையின் இரண்டு வெளிப்பாடுகளே இந்த வெடித்து எழுதலும், உள்ளொடுங்குதலும். இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக காட்டப்படுவது அந்த ஆற்றலைத்தான். அதன் முன் பிற எல்லோரும் திகைத்து குழம்பி நிற்கிறார்கள்.

அக்கதாபத்திரங்களுக்கு மர்மம் ’ஏன் இந்த பிடிவாதம்?’ என்பது எனில், நமக்கு ’அது என்ன ஆற்றல்?’ என்பது அதே அளவு மர்மமானது. சாதிய விழிப்புணர்வு கொண்டவர்களாகவோ, பெண்களின் சமவுரிமையை மதிப்பவர்களாகவோ எண்ணிக்கொள்வதால் அந்த மர்மம் சிறிதளவும் இல்லாமல் ஆவதில்லை.

படத்தில் அதற்கு காரணமான காதலோ, அவளது காதலனோ எதுவும் காட்டப்படவில்லை. ஏனென்றால் அவை வெறும் நிமித்தங்கள் மட்டுமே. அதன் வழி எழும் அந்த ஆற்றல் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. இது இயக்குனரின் அபாரமான தரிசனத்தை காட்டுகிறது.

படத்தில் பல தருணங்களில் காற்றின் அசைவாக அந்த ஆற்றல் உணர்த்தப்படுகிறது. மீனா கதாபாத்திரம் வேண்டிக்கொள்ளும் போதும், காளையை கூட்டி செல்ல அந்த சிறுமி ஓடி வரும் முன்னும் இலைகள் சிலிர்க்க அக்காற்று வீசுகிறது.

விரிந்த கூந்தல் தொடர் படிமமாக வருகிறது, முதலில் அம்மாவில் பின் மகளில், பின் மிக வலுவாக ஓடிவரும் அச்சிறுமியில். இப்படத்தில் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொள்ளும் காட்சி ஒன்று வருகிறது, ஆனால் அது தெய்வத்தின் பார்வைகோணத்தில் காட்டப்படுகிறது.

மேலிருந்து அல்ல, நடப்பட்ட அந்த கல்லிலிருந்து, அதனுள் உறையும் ஆற்றலிலிருந்து, வானம் அல்ல இங்கு கடவுள் உறையும் இடம். பின்பு மணிகளை அசைத்து அதை விழிக்கச்செய்வதும் அதில் பாண்டியும் மீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதும் மிக அசாதாரணமான தருணங்கள்

அங்கே வேண்டிக்கொள்ளும் மீனாவின் அகத்தை ஒருபோதும் தொடமுடியாது அல்லது அறியமுடியாது என்பது தரும் ஆற்றாமை, பின்னால் பாண்டியின் வன்முறையில் வெளிப்படும் தருணத்தில், அவன் மீது உண்மையில் பரிதாபமே ஏற்படுகிறது.

குரல் உடைய தழுதழுத்தபடி அவன் சொல்கிறான், ‘கழுத்தை அறுத்து கொன்றுவிடுவேன்’. அந்த ஆற்றல் முன் ஆண்கொள்ளும் அதிகபட்ச வெளிப்பாடு அதுவே. ஆனால் அது அந்த அகத்தை அழிப்பது எனும் எளிய செயலே. தீயை ஒருபோதும் தீண்ட முடியாது, அதை தற்காலிகமாக அணைக்க மட்டுமே முடியும்.

வன்முறை வெடிக்கும் அந்த காட்சி திரைப்படமாக்கலில் ஒரு உச்சம். பாடலை முணுமுணுக்கும் மீனாவின் அண்மைகாட்சி அவள் அகத்தை மிகச்சிறிதாக திறந்து காட்டும்போது எங்கிருந்து என்று தெரியாமல் ஒரு கை தாக்குகிறது, அவளது தனிமைக்குள் ஊடுருவ முயற்சிப்பது போல. பல நொடிகளுக்கு பிறகே அது பாண்டி என்பது காட்டப்படுகிறது. அவன் அந்த ஆட்டோவுக்குள் அவளை அடைய சுற்றி சுற்றி வருவதும், பிறரை தாக்குவதும் எல்லாம் அத்தனை நுட்பத்துடன் படமெடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் பாண்டியில் வெளிப்படுவதும் அவனையும் மீறிய ஆற்றல் ஒன்றே. இவை இரண்டும் சாதியமும் ஆணாதிக்கமும் இல்லாத ஒரு சூழலிலும் எதிரெதிர் நின்று மோதிக்கொள்ளும். அத்தகைய ஒரு இடத்தில் பல சமயம் நமக்கு தீர்வுகள் இருப்பதில்லை. உதாரணமாக திருமணமான குழ்ந்தைகள் கொண்ட ஒரு பெண்ணுக்கு ஒரு உறவு ஏற்படலாம் அது முழுக்க முழுக்க அழிவை நோக்கி கொண்டு செல்வதாக இருக்கலாம் ஆனால் அங்கும் அதே ஆற்றல் வெளிப்படும் தருணம் ஒன்று வரும்.

இப்படத்தில் கடைசிக்காட்சியில் வரும் சடங்கு மிக வலிமையான ஒரு காட்சியனுபவம். அந்த பூசாரி செய்யும் சடங்கும் அவன் முன் அந்த திருமணமான பெண் நிற்கும் நிலையும். அவன் முன்னால் ஒரு உடல் மட்டுமே நிற்கிறது. அதன் உள் எழுந்த ஒன்றை அவன் கையாள செய்யும் சடங்குகள் எத்தனை வீணானவை. மீண்டும் மீண்டும் ஆதி சமூகங்களின் உணர்வைப்போல கருப்பையில் அந்த ஆற்றல் குடியிருப்பதாக அதை தீண்டுகிறான். மூச்சில் இருந்து அதை உறிஞ்சி எடுக்கமுயல்கிறான்.

கடைசியாக அந்த கோழியில் அதை ஏற்றி கழுத்தறுத்து இடும்போது பாண்டியின் உள்ளும் ஒன்று அறுபடுகிறது. அந்த ஆற்றலை விரட்டவேண்டும் என்றால் அவன் தன்னை, தன்னில் ஒரு பகுதியை பலிகொடுக்க வேண்டும். அவனது கழுத்தில் தடவப்பட்ட விபூதி இங்கு என்ன அர்த்தம் கொள்கிறது. ஒருவேளை மீனா அதில் இருந்து மீண்டு சமரசம் செய்தாலும் அந்த ஆற்றலை பார்த்த அவன் மீண்டும் பழைய பாண்டி அல்ல.

அதேநேரம் அந்த பூசாரியின் சடங்குகள் வெறும் கிராமத்து மூடநம்பிக்கை என்று கடந்து விலகிச்செல்ல கூடியதா? நவீன யுகத்தில் நாம் இவ்வெளிப்பாடுகளை ’கையாள’ ஏற்படுத்தியிருக்கும் மருத்துவ உளவியலும் இதை போன்ற சடங்குகள் அல்லவா?

உண்மையில் இவற்றுக்கு விடையில்லை என்பதே உண்மை, சாதியத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும், மூடநம்பிக்கைக்கும் தீர்வுகள் குறைந்த பட்சம் நாம் கற்பனை செய்ய முடியும். ஆனால் அதைவிட ஆழமாக திரைப்படத்தில் எழும் கேள்விகளுக்கு விடையில்லை என்பதே படத்தின் இறுதிக்காட்சியாக காண்கிறேன்.

இலக்கியவாதி திரைப்பட விமர்சனம் எழுதுவது குறித்து சூழலில் சலனம் இருப்பதை காண்கிறேன். ஆனால் நான் என்னை இலக்கியவாதியாக மட்டும் காணவில்லை. ஒரு கலைஞனாக ஒன்று சொல்வேன். கொட்டுக்காளியின் நுட்பத்தையும் ஆழத்தையும் இலக்கியத்தில் இன்று தொடக்கூடிய எழுத்தாளர்களை ஒரு கை விரல்களில் எண்ணிவிடலாம்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு மலையாள திரைப்படம் எத்தனை பாவனையான மேலோட்டமான படம் என்பதை கூற அதை ’கடைசி விவசாயி’ உடன் ஒப்பிட்டிருந்தேன். அத்திரைப்படத்தில் வெளிப்பட்டிருந்த தமிழ் நிலம் சார்ந்த ஆன்மீகம் என்னை வலுவாக பாதித்தது. ஒரு கற்பனாவாத லட்சியத்துடன், யசுஜிரொ ஒஸுவின் படங்களுக்கான கலை அமைதியும் மனிதமும் அப்படத்தில் இருந்தது.

கொட்டுக்காளி அதற்கு நேர்மாறாக வலுவான ஊடுருவும் தன்மை கொண்டது. இரண்டு போக்குகளும் இணையானவை என்றாலும் கலை ரீதியாக கொட்டுக்காளி இன்னும் தூய்மையாக இயக்கப்பட்டுள்ளது.

இவ்விரண்டு படைப்புகளுக்காக பெருமிதமும், சற்று பொறாமையும் கொள்கிறேன். பி. எஸ். வினோத்ராஜிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஇஸ்லாம், கடிதம்
அடுத்த கட்டுரைஇரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்