விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
அன்புள்ள ஜெ
வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விருது இரா. முருகனுக்கு அறிவித்துள்ளீர்கள். தகுதியானவருக்கு தகுதியான விருது.
புனைவில் யதார்த்தம் என்பது ஆசிரியரும் வாசகரும் சந்திக்கும் புள்ளி எனில் அந்த யதார்த்தத்தை உடைத்து அப்புள்ளியை வேறு வகையில் ஏன் நிகழ்த்த கூடாது என்ற சிந்தனையின் வழி வருபவை அவரது நாவல்கள். வரலாற்றில் நிகழாத, ஆனால் நிகழ சாத்தியம் கொண்ட நிகழ்வுகளை அங்கத நடையில் புனைவுகளாக்கும் படைப்புகள் அவை.
அவருக்கு வாழ்த்துகள்.
அன்புடன்
கலைச்செல்வி
அன்புள்ள ஜெ
இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். இலக்கியவிருதுகள் இன்று ஒரு நாள்கூட கவனத்தில் நிற்காத சூழலில் தொடர்ச்சியாக விருதுபெற்றவரை முன்னிறுத்தி அவரை புதிய வாசகர்களிடையே கொண்டுசெல்லும் உங்கள் முயற்சி மிகவும் போற்றற்குரியது.
இரா முருகன் ஓர் எழுத்தாளராகச் சரியாக இன்னமும் வாசிக்கப்படாதவராகவே நீடிக்கிறார். அவருடைய நாவல்கள் மிக நீளமானவை. அவற்றை வாசிப்பதற்கு ஓர் அறிவார்ந்த உரையாடல் நிகழவேண்டும். கதையாக வாசிக்கமுடியாது. பலவகையான இண்டர்டெக்ஸ்சுவல் ப்ளே கொண்டவை அவை. நாம் தமிழில் அந்த கோட்பாட்டை எவராது வெள்ளைக்காரன் எழுதினால் மனப்பாடம் செய்து திரும்ப கட்டுரையாக எழுதுவோம். அதற்கு உதாரணமாக ஒரு படைப்பு எழுதப்பட்டால் அதை வாசித்து புரிந்துகொண்டு அதை வாசிக்கும் வழிகளை சாமான்ய வாசகர்களுக்குச் சொல்லிக்கொடுக்க இங்கே எவரும் இல்லை. தமிழில் இலக்கியத்தில் அகாடமிக் காண்ட்ரிப்யூஷன் என்று அறவே ஏதுமில்லை. இங்குள்ள கல்வித்துறையில் எவருமே அசலாக எதையும் படிப்பதில்லை. படித்தாலும் புரியாது. ஆகவே உருப்படியான எழுத்து என்பதே இல்லை. இலக்கிய அக்கப்போர்கள், அரசியல் சண்டைகளுக்குத்தான் அனைவரும் முண்டியடிக்கிறார்கள். அப்படி ஒருவர் இருந்திருந்தால்கூட இரா. முருகனின் அபாரமான மெடாஃபிக்ஷன் பற்றி நல்ல கட்டுரைகள் வந்து இங்கே ஒரு வாசிப்பு நிகழ்ந்திருக்கும். இனிமேலாவது அப்படி ஒரு வாசிப்பு நிகழ்ந்தால் நல்லது.
ஸ்ரீரங்கராஜன்