நூற்பு, சிவகுரு கடிதம்

தொழிலெனும் தியானம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த ஆறு மாத காலமும் மிகுந்த போர்காலம் போன்றே இருந்தது. பிடித்த வேலைகளை முழுவதுமாக செய்ய இயலாமல் இருந்தது. கனவை நனவாக்கும் சமயத்தில் நெருக்கடிகள் பலவும் வரும் என்று எதிர்பாத்திருந்தாலும் அதன் அளவு மீறி வந்தவை ஏராளம். எல்லாவற்றையும் கடக்க எனக்கு நானே சொல்லிக் கொண்டது இரண்டு வார்த்தைகள்.

கைத்தறி துறையில் புதியவற்றை செய்து காணப்போகிறோம். அதற்காக நம் தலையை பணயம் வைத்திருக்கிறோம். மற்றொன்று சிவராஜ் அண்ணன் சொல்வது, ‘எவ்வளவுக்கு எவ்வளவு பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு நாம் சுதந்திரம் அடைவோம்.’ என்ற இரு வார்த்தைகள்தான். இந்த வேலைகள் எவற்றையும் விளைவை எதிர்பார்த்து செய்யவில்லை. புதியது ஒன்றை செய்துபார்க்கிறோம் என்ற நிறைவு மட்டுமே என்னை அனுதினமும் நகர்த்தியது.

நண்பர்கள் அன்றி இப்பெருஞ்செயல் சாத்தியமாகியிருக்காது. என்றும் அரவணைத்து செல்லும் குக்கூ நண்பர்கள், என் வாழ்வின் ஆசிரியர்களுள் ஒருவரான நீங்கள் மற்றும் உங்களது வாசகர்கள் அன்பினாலே, இன்று வரை கைத்தறியினை நிறைவோடு கைபிடித்திருக்கும் கைத்தறி நெசவாளிகளின் கனவு வேரூன்றி முளைவிட்டிருக்கிறது . இன்னும் இன்னும் கூடுதல் பொறுப்புகளோடு தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னுள் எழுகிறது.

கைத்தறி கூடத்தில் உங்களது குரலும் ஜனபடா காதி நெசவாளர் கூட்டுறவின் தலைவர் சந்தோஷ் கவுலாகி ஐயா மற்றும் விபி குணசேகரன் ஐயாவின் குரல்களும் ஒலித்தது நூற்புக்கு கிடைத்த பெரும் பேறு. அந்த இடம் எப்படி மாறவேண்டும் என்று எண்ணியிருந்தோமோ அந்த எண்ணம் உங்கள் குரலாலே ஒலித்தது பெரும் நிறைவு. அத்தோடு நெசவாளர் வாழ்வாதாரத்துக்கும் அவர்களின் வாழ்விடத்துக்கும் வழி செய்த மாமனிதர் எம். பி.நாச்சிமுத்து ஐயாவின் மகனது வருகை கூடுதல் மகிழ்வை அளித்தது. நூற்போடு இணைந்து பயணிக்கும் நெசவாளர்களுக்கு அன்று கிடைத்த அங்கீகாரம் அவர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

எனது வாழ்நாள் கனவாக நான் எண்ணத்தில் சுமந்தது கைத்தறிக்கான ஒரு பள்ளி உருவாக்குவது என்பது. இன்றைக்கும் நாளைக்குமென எல்லா இளம் மனங்களுக்குமான வார்த்தைகளையும் வழிகளையும் ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதிய எங்கள் ஆசிரியரான உங்கள் கரங்களால் நூற்பு நெசவுப் பள்ளி திறந்து வைக்கப்பட்டது பேராசீர்வாதம் என்று மகிழ்கிறோம்.

நிகழ்வில் நிறைய பேச நினைத்திருந்தும் என்னால் பேச இயலவில்லை. நன்றியுணர்வில் முழுவதும் கரைந்திருந்தேன். வார்த்தைகள் எழாமல் கண்ணீர் மட்டுமே எஞ்சியிருந்தது. இத்தனைபேருடைய அன்பிற்கும் கைக்கொண்டுள்ள செயலில் இருந்து மனம் அன்னியமாகாமல் மகிழ்வோடு தொடர்ச்சியாக செயல்படுவேன் என்ற வார்த்தையினை மட்டுமே தாழ்மையோடு சொல்லிக் கொள்கிறேன்.
நிகழ்வு முடிந்த அன்றைய மாலை வேலையில் நாச்சிமுத்து நகர் பெண்கள் பலர் வந்திருந்து அவர்களது நெசவு அனுபவங்களை பகிர்ந்து சென்றது மகிழ்ச்சியளித்ததோடு புதிய செயலுக்கான கனவையும் கொடுத்திருக்கிறது.
நேற்று வந்த எழுபது வயது நெசவாளர் ஐயா ஒருவர் நூற்பு உருவான கதையையும் என் பயணத்தையும் சொன்னதும் கட்டியணைத்து அழுதுவிட்டார். அவ்வளவு நெகிழ்வோடு தன் கனவையும், கனவை விட்டு வெகுதூரம் இப்போது சென்று விட்டதையும், அவருள் எப்போதும் எஞ்சி நிற்கும் நம்பிக்கையான அனுபவத்தினையும் பகிர்ந்துகொண்டார். இன்று வரை ஒவ்வொரு நெசவாளராக வந்து பார்த்து அவர்களது அனுபவத்தினை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். நெருக்கடியான காலகட்டத்தில் நெசவைவிட்டு வெளியேறிய கஷ்டத்தை பகிர்ந்துகொண்டும் நூற்பின் முயற்சியை கண்டு மகிழ்வோடும் நம்பிக்கையோடும் செல்கின்றனர்.

இரவு பகலாக உடனிருந்து நிகழ்விற்கு உருதுணையாக இருந்து நண்பர்கள் அனைவருக்கும் வாழ்வில் என்றென்றைக்கும் நன்றிகடன் பட்டிருக்கிறேன்.

நூற்பின் மீது அன்பு வைத்து நூற்பு கைத்தறி கூட்டமைவின் துவக்க விழாவிற்கு வந்திருந்து வாழ்த்திய உங்களுக்கும், பெரியவர்களுக்கும் மற்றும் அனைத்து நட்புகளுக்கும் சிரம் தாழ்த்தி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும்… நன்றியும்…

சி.சிவகுருநாதன்
9578620207
www.nurpu.in
முந்தைய கட்டுரைWestern Philosophy Class, A Letter
அடுத்த கட்டுரைஇரா.முருகன், வாழ்த்துக்கள்