நூற்பு என்னும் கைத்தறிநெசவு அமைப்பை நடத்திவரும் சிவகுருநாதனின் நீண்டநாள் கனவு கைத்தறி நெசவுக்காக ஒரு பள்ளி அமைக்கவேண்டும் என்பது. முழுப்பணத்தையும் செலவிட்டு, கடனும் பெற்று, அவர் சென்னிமலையில் நூற்பு நெசவுப்பள்ளியை ஆரம்பித்திருக்கிறார். அதற்கான பணிகளில் நீண்டநாட்களாகவே ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது சந்திக்கையில் பணி எந்த அளவுக்கு நடக்கிறது என்பதைச் சொல்வார். அது சென்ற ஆகஸ்ட் 25 அன்று செயல்வடிவமாகியது.
விழாவில் பங்குகொள்ள என்னை அழைத்திருந்தார். நான் ஈரோட்டில் இருந்து ஊர் திரும்பிய அதே சூட்டில் மீண்டும் ஈரோட்டுக்கே கிளம்பிச் சென்றேன். ரயில்நிலையத்திலேயே சிவகுருநாதன் வந்து அழைத்துச்சென்றார். வெஸ்ட்லேண்ட் விடுதியறையில் ஒன்பது மணி வரை தூக்கம். அங்கிருந்து கிருஷ்ணன், ஈஸ்வர மூர்த்தி, சுவாமிநாதன் என மூன்று வழக்கறிஞர்கள் புடைசூழ சென்னிமலைக்குச் சென்றேன்.
சென்னிமலையில் மு.ப.நாச்சிமுத்து நகர் ‘கைத்தறிக் காவலர்’ என அழைக்கப்பட்ட மு.ப.நாச்சிமுத்து அவர்களால் உருவாக்கப்பட்டது.சென்னிமலை நெசவாளர்கள் வெவ்வேறு முதலாளிகளின்கீழ் கொத்தடிமைகள் போல பணியாற்றிய ஒரு காலம் இருந்தது. மு.ப.நாச்சிமுத்து அவர்கள் 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி சென்னிமலை நெசவாளர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். சென்னிமலை ஒரு நெசவுமையமாக உருவாகியது அதன்பிறகுதான்.
நாச்சிமுத்து அவர்கள் சென்னிமலை நெசவாளர்களுக்காக ஆயிரம் வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியை உருவாக்கினார். இத்தகைய ஒரு முயற்சி தமிழகத்தில் வேறெங்கும் நிகழ்ந்துள்ளதா என்று தெரியவில்லை. அவர் மறைவுக்குப் பின் அது அவர் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. அங்குதான் சிவகுருநாதன் தன் பள்ளியை அமைத்துள்ளார்.
நாச்சிமுத்து நகர் அமைந்து எழுபத்தைந்தாண்டுகள் ஆகின்றன. ஆனால் எல்லா வீடுகளும் இன்றும் உறுதியாக நிலைகொள்கின்றன. அன்று ஓட்டுவீடுகளே வழக்கம். ஆனால் இவ்வில்லங்கள் வசதியான சிமிண்ட் கூரையிடப்பட்டவை. நெசவுக்கான இடங்களுடன் நல்ல சூழலுடன் விரிந்த சாலையமைப்புடன் அமைந்துள்ளன. அதில் ஓர் இல்லத்தை சிவகுரு விலைக்கு வாங்கி புதுப்பித்து விரிவாக்கம் செய்திருக்கிறார்.
குக்கூ அழகியல் என ஒன்று உண்டு. எளிமையான முறையில் ஆனால் மிகநவீனமான தோற்றத்துடன் செய்யப்படும் அரங்க அலங்காரங்கள், இல்ல வடிவமைப்புகள். அவர்களின் நூல்வடிவமைப்பில்கூட அதைக் காணலாம் (தன்னறம் நூல்கள்) சிவகுருவின் நூற்புப் பள்ளி வசதியானது. விற்பனை- கண்காட்சிக்கூடம், நெசவுப்பயிற்சிக் கூடம், பயிலுநர் தங்குமிடங்கள், கூட்டுச்சமையலறை ஆகியவை கொண்டது.
ஜனபடா என்னும் அமைப்பு கர்நாடகத்தில் மேல்கோட்டை என்னும் ஊரில் உள்ளது (ஜனபடா மேல்கொட்டை இணையப்பக்கம்) ராமானுஜரின் வரலாற்றுடன் நெருக்கமான தொடர்புகொண்ட தலம் மேல்கோட்டை. இங்கே ராமானுஜர் 12 ஆண்டுக்காலம் வாழ்ந்ததாகவும், இங்குள்ள செலுவநாராயணர், யோகநரசிம்மர் ஆலயங்களின் பூஜைமுறைகளை அவரே உருவாக்கியதாகவும் வரலாறு.
ராமானுஜர் யாதவபுரி எனப்படும் மேல்கோட்டையில் யதிராஜ மடம் என இன்று அழைக்கப்படும் மடத்தை அமைத்தார். மாண்டியா (மண்டயம்) மாவட்டத்தில் இந்த ஊர் உள்ளது. இங்கே ராமானுஜரின் மாணவர்களாக அமைந்தவரின் வம்சாவளியினர் மண்டயம் மரபினர் எனப்படுகின்றனர். (மண்டயம் மரபு) நாங்கள் பலமுறை இங்கே வந்துள்ளோம்.
இங்கே ஜனபடா சேவா டிரஸ்ட் என்னும் அமைப்பு 1960ல் சுரேந்திர கௌலகி என்னும் காந்தியரால் தொடங்கப்பட்டது. சுரேந்திர கௌலகியின் மகன் சந்தோஷ் கௌலாகி ஜனபடா அமைப்பிலேயே வளர்ந்தவர். இன்று அவர்தான் அவ்வமைப்பை வழிநடத்துகிறார். கர்நாடக கைத்தொழில் உலகில் பெரிய மாற்றத்தை உருவாக்கிய அமைப்பு இது. இருபதாண்டுகளுக்கு முன் கணிப்பொறி ஊழியராக இருந்த சிவகுருநாதன் சந்தோஷ் கௌலாகி அவர்களைச் சென்று சந்தித்தபோது உருவான தூண்டுதலால்தான் வேலையை உதறி நூற்பு அமைப்பைத் தொடங்கினார்.
நிகழ்வுக்கு விருந்தினர்களாக சந்தோஷ் கௌலாகி, எம்.பி.நாச்சிமுத்து அவர்களின் மகன் , பழங்குடிமக்களுக்காகப் போராடும் வி.பி. குணசேகரன் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.பேரா.லோகமாதேவி, கவிஞர் ஆனந்த்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது. விற்பனையகத்தை சந்தோஷ் கௌலாகி திறந்துவைத்தார். நெசவுக்கூடத்தை நான் திறந்துவைத்தேன்.
நெசவுக்கூடத்திலேயே ஐம்பதுபேர் கூடிய நிகழ்வு. குக்கூ அமைப்பின் சிவராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சந்தோஷ் கௌலாகி, வி.பி.குணசேகரன் ஆகியோருடன் நானும் பேசினேன்.
என் உரையில் நான் சொன்ன கருத்து சுருக்கமாக இதுதான். (உரை பதிவுசெய்யப்படவில்லை என்று தெரிகிறது) இன்றைய வாழ்க்கையில் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறைந்து வருகிறது. நடுத்தரவர்க்க வாழ்க்கைக்கு பெரும்பாலானவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதையொட்டி சலிப்பும் அதன் விளைவான உளச்சோர்வும், உளச்சிக்கல்களும் உருவாகின்றன. உறவுகள் அதனால் சிதிலமடைகின்றன.
இந்த உளச்சோர்வை கார்ல் மார்க்ஸ் அவருடைய இளமையிலேயே சுட்டிக்காட்டியிருந்தார். அதை பின்னர் மார்க்ஸியர்கள் பொருட்படுத்தவில்லை. அது இளம் மார்க்ஸ் ஹெகலிய செல்வாக்கால் சொன்ன கருத்து என கடந்துசென்றனர். ஆனால் லூயி அல்தூஸர் அதை பிற்காலத்தில் மிக விரிவாக விளக்கி முன்னெடுத்தார். அதை எஸ்.வி.ராஜதுரை தமிழில் எழுதிய அன்னியமாதல் என்னும் நூலில் விரிவாக விவாதித்துள்ளார்
மரபான உழைப்பில் உழைப்பவனுக்கு ஒரு பொருளை உருவாக்கும் நிறைவு உள்ளது. அவனுடைய தனிப்பட்ட படைப்புச்சக்தி வெளியாகி அவனுக்கு உழைப்பை மகிழ்ச்சியானதாக ஆக்குகிறது. ஆனால் நவீனத்தொழில்மயமாக்கம் பெருந்தொழிலையும் கூட்டு உழைப்பையும் கொண்டுவந்தது. தான் உருவாக்கும் பொருள் என்னவென்றே தெரியாமல் அந்த உருவாக்கத்தின் ஒரு சிறுபகுதியில் மட்டுமே உழைப்பாளர் இன்று பணியாற்றுகிறார். விளைவாக உழைப்பு மட்டுமே இருக்கிறது, உருவாக்குவதன் நிறைவு இல்லை, படைப்புசக்தி வெளியாவதன் மகிழ்ச்சியும் இல்லை.
இவ்வாறு உழைப்பில் இருந்து அன்னியமாதல் நிகழ்ந்தமையால்தான் உழைப்பாளி வேலையில் கடும் விலக்கத்தை அடைகிறான். காலப்போக்கில் அவன் ஆழ்ந்த உளச்சோர்வடைகிறான். அவ்வுளச்சோர்வை வெல்ல அவன் கேளிக்கைகளை நாடுகிறான். அவை மேலும் சலிப்பூட்டுகின்றன. ஒரு கட்டத்தில் போதை, சூதாட்டம் ஆகியவற்றை நாடுகிறான்.
இந்த நிலை இன்று மூளையுழைப்புத்துறையில் மிகமிகப்பெரியதாக வளர்ந்துள்ளது. மார்க்ஸ் சொன்னதைவிடப் பலமடங்கு மேலாக. இன்று ஒட்டுமொத்த பொருளியலமைப்பை மாற்றி, உழைப்பாளியை அர்த்தமில்லா உழைப்பில் இருந்து விடுதலை செய்யமுடியுமா என்றால் அது ஒரு தொலைதூரக் கனவு. உடனடியாக, ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒன்றுண்டு. தனக்கான தனித்த படைப்புலகை உருவாக்கிக் கொள்வது. அங்கே தன் படைப்புசக்தியை வெளிப்படுத்துவது, எதையாவது உருவாக்குவது. அது சலிப்பையும் உளச்சோர்வையும் வெல்லுவதற்கான மிகச்சிறந்த வழி.
அந்த தனித்த படைப்புத்தளம் கைகளால் செய்யக்கூடிய ஒரு தொழிலாகவே இருக்கவேண்டும் என்று காந்தி சொன்னார். கைகளால் ஒன்றை உருவாக்குபவன் தன் அகத்தை அதன் வழியாகச் சீரமைத்துக் கொள்கிறான். மார்க்ஸ் பற்றி பியாரிலாலுடன் உரையாடுமிடத்தில் காந்தி அதைச் சொல்கிறார்.
காந்தி இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் கதர் இயக்கத்தை இணைத்தது வெறும் பொருளியல் நடவடிக்கை மட்டும் அல்ல. நூற்பு என்பது ஒரு தியானம். காந்தி கொந்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவின் பலகோடி இளைஞர்களை நூற்பு என்னும் செயல்பாடு வழியாக தியானம் செய்ய வைத்தார். அவர்களுக்கு அகக்கட்டுப்பாட்டை பயிற்றுவித்தார். அதன் வழியாக அகிம்சையை புரிந்துகொண்டு அவர்கள் அமைதிப்போராளிகள் ஆயினர்.
இன்றும் அத்தகைய ஒரு ‘கைத்தொழில்தியானம்’ நம்மில் பலருக்கும் தேவைப்படுகிறது. குறிப்பாக மூளையுழைப்பு செய்பவர்களுக்கு. கைகளால் ஒரு படைப்புச்செயலைச் செய்யவேண்டும். ஒரு பொருளை நேர்த்தியாகவும் பொறுமையாகவும் செய்வதன் வழியாக அவர்கள் தங்கள் அகத்தின் எல்லா சிதறல்களையும் தொகுத்துக்கொள்ள முடியும். இந்த நூற்புப் பள்ளி அதற்குரிய இடமாகவும் ஆகவேண்டும்
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவுக்குப் பின் அங்கிருந்து ஈரோடுக்கி கிளம்பினேன்.
நூற்பு தொடர்புக்கு