இரா.முருகன், வாழ்த்துக்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு

வணக்கம். நலம்தானே.

இரா. முருகன் அருமையான தேர்வு. வாழ்த்துகள். நலமாக இருங்கள் அன்புடன்

அ. முத்துலிங்கம்

*

அன்புள்ள ஜெ

இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். முருகனின் அரசூர் வம்சம் நாவலின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் நான் வாசித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பிலேயே மிக அசலான ஒரு படைப்பு என்னும் எண்ணம் எனக்கு வந்தது.அதன்பிறகு தமிழ்நூலை தேடி வாசித்தேன். அசலில் பாதிகூட மொழியாக்கத்தில் இல்லை என்று தெரிந்தது.கிட்டாவய்யன் என்னும் பெயரே ஓர் ஆளை மனதில் கொண்டுவந்துவிடும். ஒரு வர்ணனை போகிறபோக்கில் ஒரு அபத்தத்தை நம் மனதில் நிறுத்திவிடும். அவருடைய மொழிநடை தாவிச்செல்லும் உரைநடைக்கு தமிழில் மிகச்சிறந்த உதாரணம். புதுமைப்பித்தந் சுஜாதா அதன்பின் இரா முருகன்தான். அவர்கள் இரண்டுபேரையும் விட ஓர் அடி முன்னால் பாய்ந்துவிட்டிருக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்

இரா முருகனுடைய நடையைத்தான் நானெல்லாம் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். வேண்டுமென்றே சிதறியடித்துக்கொண்டு செல்லும் ஒரு நடை. பக்கவாட்டிலே ஏகப்பட்ட திசைதிரும்பல்கள் உண்டு. நமுட்டுச்சிரிப்புகள் உண்டு. சொல்ல வருவதென்பது அவருக்கு முக்கியம் கிடையாது. (அப்படி குறிப்பாக ஒன்றை அவர் சொல்லவருவதுமீல்லை) அவர் ஒரு மொழிப்பிராந்தியத்தை உருவாக்குகிறார். அதில் விளையாடுகிறார். அவர் எழுத்தை வாசிக்கும்போது தேர்விழாவிலே சிலம்பமாடிக்கொண்டு வரும் வாத்தியார் ஞாபகம் வருகிறார். வித்தை காட்டுகிறார். கூடவே எதிர்பாராத திசையில் எல்லாம் பாய்ந்து கண்டபடி அடிக்கவும் செய்கிறார். ஆனால் வன்முறை கிடையாது. எல்லாமே விளையாட்டுத்தான்.

இரா முருகனுக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கும் பாராட்டுக்கள்.

ஜெயபாலன் மகேந்திரன்

 

இரா.முருகன், கடிதங்கள்

இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்

இரா.முருகன், கடிதங்கள்
இரா முருகன், கடிதங்கள்
இரா முருகன், விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்
இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம், கடிதங்கள்
முந்தைய கட்டுரைநூற்பு, சிவகுரு கடிதம்
அடுத்த கட்டுரைகுத்தூசி குருசாமி