அன்புள்ள இரா.முருகன் அவர்களுக்கு
உங்களுடைய அரசூர் வம்சம் நாவலை வாசித்தேன். உங்கள் படைப்புகளில் முதலாவதாக நான் வாசிப்பது. இந்நாவல் வழியாகவே உங்கள் புனைவுலகத்திற்குள் நுழைந்திருக்கிறேன். அண்மையில் எங்களது நற்றுணை வாட்ஸப் குழுமத்தில் தங்கள் படைப்புலகம் குறித்த கருத்தரங்கிற்கான அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன் தொடர்ச்சியாகவே தங்களது அரசூர் வம்சம் நாவல் நிரையையும் மிளகு நாவலையும் வாங்கினேன். என் தனிவாசிப்புகளில் மூழ்கியிருந்தபடியால் வாங்கியவை அத்தனையையும் கருத்தரங்க நாளுக்கு முன்னதாக வாசிக்கவியலவில்லை. நேற்றைய தினம் அரசூர் வம்சம் நாவலை மட்டும் வாசித்து முடித்தேன்.
அரசூர் வம்சம் நாவல் சுகமான வாசிப்பனுபவத்தை வழங்கியது. இந்த நாவலை பற்றி தமிழ் விக்கி இணையதளத்தில் ஒரு கட்டுரை உள்ளது. மேற்படி கட்டுரை அரசூர் வம்சத்தை மாய யதார்த்தவாத கூறலில் அமைந்த நவீன தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று என மதிப்பிடுகிறது. மாய யதார்த்தவாத கூறுமுறையில் நான் வாசிக்கும் முதல் நாவல் என்பதால் சற்று அன்னியமாக இருந்தது. இந்த அந்நியத்தன்மை ஆசிரியராக இந்த நாவலின் வழியாக நீங்கள் எதை காட்டுகிறீர்கள் என்ற என் கேள்வியின் மேல் அமைந்தது.
மறுபக்கம் இதன் கதைச்சொல்லல் நம் எல்லோருக்கும் மிக அணுக்கமானது தான். என் அப்பா, ஆயா வழியாக அரசூர் வம்சத்தின் கதை போன்ற எம் முன்னோர் கதைகளை கணிசமாக கேட்டுள்ளேன். அவற்றில் ஊடாடும் மாயத்தன்மையை இந்நாவல் எப்படி பயன்படுத்துகிறது ? அதனை என்னால் விளங்கி கொள்ள முடிகிறதா என்பவையே என் தத்தளிப்பாக இருந்தது. புதிய எழுத்தாளர் ஒருவரின் படைப்புலகத்திற்குள் நுழைகையில் முதலில் வெறும் கதை கேட்கிறோம். பின்னால் அந்த கதைக்கு பின்னால் உணர்த்தப்படும் கதைகளை கேட்கிறோம். இப்போதைக்கு உங்கள் புனைவுலகில் கதை கேட்டுள்ளேன். இவை உணர்த்தும் கதைகளை கேட்க இன்னும் சற்று தூரம் சென்று பழகினால் வந்துவிடும் என தோன்றுகிறது. அதற்கு நற்றுணையின் கூடுகை உதவிகரமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
அரசூர் வம்சம் நாவலின் கதைக்களத்தை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம் என தோன்றுகிறது. சுப்பிரமணிய அய்யர் அவரது மகன்கள் சாமிநாதன், சங்கரன். சுப்பிரமணிய அய்யர் மூன்று தலைமுறையாக புகையிலை வியாபாரம் நடத்துபவர். எனவே நல்ல பணக்காரர். அவரது முதல் மகன் வேத வித்து சாமிநாதன் மன பிறழ்வு கொண்டு முந்நூறு மூத்த பெண்ணை கூடுபவன். இளைய மகன் சங்கரன் புகையிலை வியாபாரத்தை தன் கையிலெடுத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. திருமண வயதாகிவிட்டது. தீவிரமான பெண் பித்து கொண்டவனும் கூட.
சங்கரனுக்கு அம்பலபுழையில் உள்ள பகவதிக்குட்டியை பெண் பார்க்கிறார்கள். பகவதிக்குட்டி குப்புசாமி, துரைசாமி, கிட்டாவய்யன், அலமேலு,(இன்னொருத்தியின் பெயர் நியாபகம் இல்லை) வரிசையில் கடைக்குட்டியாக பிறந்தவள். அண்ணன்கள் மூவரும் சமையல்காரர்கள்.
சங்கரனுக்கு பகவதிக்குட்டியை திருமணம் செய்விக்கிறார்கள்.
இந்த மையக்கதைக்கு குறுக்கும் நெடுக்குமாக பட்டுப்போன ஜமீன் மாளிகையின் ராஜா, ராணி குடும்ப கதை. மூத்த சுமங்கலி பெண்டான சுப்பம்மா கிழவி, ஆகாய பிரவேசத்தில் அற்ப சங்கை தீர்க்கும் வயசன், ஜோசியர் அண்ணாசாமி அய்யாங்கார், பிஷாரடி வைத்தியர், எம்பிராந்திரி, பனியன் சகோதரர்கள், கருத்தன், சுலைமான், கொட்டக்குடி தாசி என சகலரும் வந்து செல்லும் களமாக நல்ல பூக்கோலம் போல இருக்கிறது.
இத்தனை சுருக்கமான களத்தில் ஐநூறு பக்கங்களில் விரியும் நாவல் எங்கும் அலுப்பு தட்டுவதேயில்லை. வெவ்வேறு விதமான மொழிகள் வழியாக சுவராசியமான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. நாவலை முழுக்கவே கடைவாயில் அதக்கிய புன்னகையுடனேயே வாசித்து முடித்தேன்.
நாவலிலிருந்து என் மனதில் இறங்கிய இடங்களை தொட்டு சொல்லலாம் என நினைக்கிறேன். தொடக்கமே ராணி குளிக்கும் போது பார்க்கிறார்கள் என முறைவைப்பதுடன் தான். வேறு எந்த ஊரிலும் ராணி இப்படி முறை வைத்திருக்கமாட்டார். ராஜாவோ சீகைக்காய் வாச தலைமுடியும் இப்படி அழைத்து சென்று காலையிலேயே ஒரு கலவி போட்டால் என்ன என்ற நினைப்புமாக ராணிக்கு செவி கொடுக்கிறார். இந்நாவலில் வரும் அநேக ஆண்களும் இப்படி பெண் பைத்தியமாக உள்ளார்கள். பெண் பைத்திய கதைக்கு பின்னால் வரலாம், இப்போதைக்கு முன்னோர்களுக்கு முதல் கும்பிடு வைத்துவிடலாம். இல்லையெனில் அவர்கள் கோபித்து கொள்வார்கள்.
பொதுவாக நாவலில் கதாபாத்திரங்களின் அக ஓட்டத்தை நினைவு பெருக்காக எழுதி காட்டுவதே யதார்த்தவாத நாவல்களின் உத்தி. இந்த முறையில் வாசகன் தன்னை கதாப்பாத்திரத்துடன் பொருத்தி கொள்வது எளிது. ஒரு கதாப்பாத்திரமாகவே மாறி நடித்து அதன் மூலம் அவனடையும் திறப்புகளே அத்தகைய நாவலின் மறைபிரதி. இந்த முறையில் குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தின் எண்ணங்கள் என்பவை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றான எண்ணத்தை தோற்றுவித்து தனிமனிதனின் அக அலைவுகளுக்கு செல்ல யதார்த்தவாத நாவல்கள் வழியமைக்கின்றன. அத்துடன் அப்படி நடக்கும் போது ஒருவகையான தற்பாவனையில் இருப்பதால் தீவிரத்தன்மையை அடைகிறோம்.
ஆனால் இங்கே முன்னோர்கள் வந்து ராஜாவிடம் வந்து பேச ஆரம்பிக்கையில் எல்லாமே ஒரு விளையாட்டாக உருமாறிவிடுகிறது. வெறுமே வேடிக்கைய பார்ப்பவனாக வாசகன் மாறிவிடுகிறான். அது இலகுவாக வேறொருவரின் கதை போல உணர செய்கிறது. இன்னொன்று முன்னோர்கள் வந்து சொல்கிறார்கள் என்றவுடன் அவர்கள் சொல்வதெல்லாம் காலப்பெருக்கின் மரபின் குரல்களாக உருமாறி விடுகின்றன. எனவே ராஜா முடிவு எடுக்கும் போது எங்கெல்லாம் முன்னோர்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் அவரது மரபு மனம் விழித்தெழுந்து கொள்கிறது என வாசித்தெடுக்க வாய்ப்புண்டு.
மறுபக்கம் மூத்தக்குடி பெண்டுகளையும் இப்படியே பார்க்கலாம் என்று தோன்றுகிறது. மூத்தக்குடி பெண்டுகள் எப்போதும் வாசம் செய்யும் சுப்பம்மா கிழவியை எப்படி எடுத்து கொள்வது? அவளை அமானுஷ்ய பேர்வழியாக வரித்து கற்பனை பண்ணிக்கொள்வது நல்ல வாசிப்பின்பத்தை கொடுக்கிறது. ஆனால் யதார்த்தமும் ஊடுக்கலக்கையில் அவளை பாதி மனம் பிறழ்ந்தவளோ என்று எண்ண செய்கிறது. ஏனெனில் சாமாவிற்கு அடுத்தபடியாக குருக்கள் பெண் தெரிவது சுப்பம்மா கிழவிக்கு தான். ஒருவேளை சுப்பம்மா கிழவி ஊரைவிட்டு சேர்த்து ஓடியதையும் சேர்த்து எடுத்து கொண்டால் அந்தக்கால சமூகம் அவள் மேல் விதித்த இறுக்கமான கட்டுபாடுகளின் வடிவமாக கூட மூத்தகுடி பெண்டுகளை பார்க்கலாம்.
ஆனால் சுப்பிரமணிய அய்யர் மூத்தக்குடி பெண்டுகளின் குரலில் பாடி செல்வது, அப்படி முழுதாக எடுத்துகொள்வதை தடுக்கிறது. அவர் மூத்தக்குடி பெண்டுகளை போல் பாடுவதும் குளிக்கும் பெண்களை குனிந்து பார்க்கலாமோ என பாடுவதும் கல்யாணி அம்மாள் இறக்கும் போது பகவதியிடம் இந்த குடும்பத்து ஆம்பிளைகள் எல்லாம் அலையப்பட்டதுக்க. வாச்சவனும் பெத்தனும் என்பதையுமெல்லாம் சேர்த்து பார்த்தால் சுப்பிரமணிய அய்யரின் தொடுப்பு வழிகளை பற்றித்தான் யோசிக்க முடிகிறது.
இன்னொன்று குளிக்கும் பெண்களை குனிந்து பார்க்கலாமோ என சுப்பம்மாளும் அய்யரும் பாடுவதை கேட்கையில் அவர்களின் உலகத்தில் ரகசியமே இல்லை என்ற விஷயம் வெட்ட வெளிச்சம். இதேபோல நேரடியாக பகவதிக்குட்டியிடம் குருக்கள் பெண்ணே வந்து பேசுவதும் அவள் ஜன்னி காண்பதுமெல்லாம் தான் மணக்க போகும் குடும்பத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களை அறிவதால் வந்தவை என்றும் தோன்றுகிறது
பகவதிக்குட்டி காண்கையில் குருக்கள் பெண்ணும் வெடி வைப்பவனின் வளர்ந்த கால்களும் சண்டையிட்டு கொள்ளும் வினோத நிகழ்வும் இன்னொன்று வயசன் பறந்து செல்வது அவரது புத்திசுவாதீனத்தை தான் காட்டுகிறது. கூடவே வெடி வைப்பவனின் வளர்ந்த விரல்கள் சம்பவம் பகவதிக்குட்டிக்கு அவன் மேல் ஆசை இருந்ததோ என எண்ணாமல் இருக்க செய்வதில்லை. ஏனெனில் பின்னர் அவளுக்கும் சங்கரனுக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைக்கு ஆறு விரல் இருப்பது இதனுடன் தொட்டு காட்டப்படுகிறது.
சங்கரனின் வீட்டுப்பக்கம் வந்தால் சாமிநாதனின் மனபிறழ்வை இந்தளவுக்கு விளையாட்டுத்தனமான நகைப்புடன் கூறி பார்ப்பது இதவே முதல்முறை. அதற்கு பின்னுள்ளது, அவனது பொருந்தா காமம் குறித்த விருப்பமே. அவன் சுப்பம்மா கிழவியை தொடப்போவது அதன் உச்சம். மறுபக்கம் அந்நேரத்தில் சுப்பம்மா கிழவியின் கனவில் வௌவால் உருக்கொண்டு கணவன் வந்து அவளை புணர்வது விதவையாகி போன, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இற்செறிப்பில் உள்ளாக்கப்படும் துன்பமும் அவர்களுக்கு உள்ள இயல்பான உணர்ச்சிகளையும் காட்டுகிறது. இதே சுப்பம்மாவின் முன்னிலையில் தான் அம்பலப்புழையில் நிச்சயதார்த்தத்தின் போது குருக்கள் பெண் மூத்தக்குடி பெண்டுகளிடம் நீங்க எல்லாம் இடுப்பு விரிச்சு படுத்து சுகம் அனுபவிச்சவா தானே என்கிறாள். அது சுப்பம்மாவிற்கு முன் நடப்பது முக்கியமானது.
மறுபக்கம் சங்கரனை எடுத்துக்கொண்டால் அவன் வைத்திசார் வீட்டுக்கு செல்வது தான் ஞாபகம் வருகிறது. அங்கே கப்பலில் சென்று உச்சமாக துரைச்சாணிகளுடன் கூத்தடிப்பதும் மேலதிகமாக மறுநாள் காலையில் மூஸல்மான் குப்பாயம் தரித்து தஸ்தகீர் ராவுத்தரின் குமாஸ்தவாக தலையில் பொதியும் கையில் மைக்கூடுமாக நின்று தெண்டனிடுவதுமே அரசூர் வம்சத்தில் மிக பிடித்த பகுதி என்பேன். யாராவது அரசூர் வம்சம் என்றால் என்ன ? விரிவாக விளக்கவும் என கேட்டால் இதை தான் சொல்ல வேண்டும்.
வைத்தி சார் வீட்டில் இருக்கும் போது பட்டணத்து பிராமணர்களின் யோக்கியதை நினைத்து ஏளனம் கொள்கிறான். எனவே அந்த பயல்களின் கண்ணுக்குப்பட்டாலும் ஏதும் நடந்துவிடாது என திருப்தியுற்று சுலைமானுடன் கப்பல் ஏறுகிறான். வாய்ப்பு கிடைத்தவுடன் கப்பலில் ஜல்சா தான். அதிலும் குடித்துவிட்டு உளறியபடி நக்னமாக கப்பல் தளத்தில் காற்று வாங்க போனேன் என்பது மிக பிரமாதமான பகுதிகள். குடித்தவனின் தாறுமாறான எண்ண பெருக்குகளின் கலவை. அடுத்த நாள் காலையில் தஸ்தகீர் ராவுத்தரின் குப்பாயம் தரித்த குமாஸ்தவாக பணியேற்பது நமது வம்ச வழி கதைகளின் மேல் விழும் சாட்டை வீச்சு தான். இதன் தொடக்கம் சுப்பிரமணிய அய்யர் அறிமுகமாகும் போது புகையிலை கடையை பிராமணனாகப்பட்ட தான் வைத்திருப்பதன் சஞ்சலத்தில் உள்ளது. சங்கரனின் கப்பல் குமாஸ்தா பகுதியை வாசிக்கையில் சூழ்நிலை தான் அடையாளத்தை உருவாக்குகிறது. அடையாளம் என்பது பண்பாட்டு அடையாளம் மட்டுந்தான். குருதி அடையாளங்கள் கலப்புகள் தான். மற்றபடிக்கு மனிதன் வீண் பெருமையடிக்கும் வெறும் பயல் தான் என்று நினைத்து சிரிக்க தோன்றுகிறது.
இந்த சம்பவத்துடன் கிட்டாவய்யன் ஜான் கிருஷ்ணமூர்த்தியாக வேதம் ஏறுவதையும் இணைத்து கொள்ள வேண்டும். அதுவும் எந்த சாவக்காட்டு பிராமணனை வேதம் ஏறிய பட்டி மோனே விரட்டினானோ அவனிடமே சென்று ஐயா சாமி போட்டு வட்டிக்கு கடன் வாங்கி நிலம் வேதம் ஏற்பது நகைமுரண் தான். கூடவே இந்த அடையாளமெல்லாம் பிறர் ஏற்றி சுய லாபத்திற்காக இவர்கள் சொருகி கொண்டதற்கு அப்பால் ஒன்றுமில்லை என எண்ண செய்கிறது.
அடுத்து ஜோசியரின் யந்திரத்தின் கதையுடன் கடிதத்தையும் முடித்து கொள்ளலாம் என்று பார்க்கிறேன். இந்த யந்திர கதைக்கு முன்னால் ஒன்று சொல்ல வேண்டும். அரசூர் வம்ச நாவல் நடக்கும் காலக்கட்டத்தில் பொதுவாகவே இங்கே யந்திரம் பதிக்கும் தொழில் அமோகமாக நடந்திருக்கிறது என நினைக்கிறேன். ஏனெனில் எங்கள் குடும்ப கதையிலும் அப்படிப்பட்ட சம்பவங்களும் செய்திகளும் கதைகளும் கணிசமானவை உண்டு. அதே போல ஆண்களின் அலைபாய்தல் இருக்கிறதே அதுவும் மாறுவதற்கில்லை. அந்த கதைகளில் பாதிக்கு பாதி தொடுப்பு சமாச்சாரங்கள் தான். ஒருமுறை என் அப்பாவின் இளமையில் இன்னொரு கிழம் சொல்லியிருக்கிறது, அவனுக கெட்டதே குடியிலயும் கூத்தியார் சோக்குலயும் தானே யா என்று. ஆக அதுவும் கூட ஒரு கலச்சார நிகழ்வு போலாக்கும். என்ன இதையெல்லாம் தமிழர் பண்பாட்டு சிறப்பு என்றும் வம்ச விருத்தியின் வீரியத்துவம் என்றும் தண்டோரா போட முடியாது:)
ஜோசியர் தூர திருஷ்டி வழியாக கொட்டக்குடி தாசியை எழுப்பி சரிந்த எந்திரத்தை நிற்க வைத்திருக்கிறார். அங்கும் அவருக்கு ஒரு கை இருக்கும் போலும். இருந்தாலும் கொட்டக்குடி தாசிக்காக சங்கரன் ஏங்குவது சற்று தூக்கலான நல்ல சமாச்சாரம் தான். அவளுக்கு மட்டும் அந்த ஊரில் வெண்பா இயற்றவும் தமிழ் படிக்கவும் தெரிகிறது என்பது ஒரு நோக்கில் நம் சமூக வீழ்ச்சியின் மேலான விமர்சனம் தான். தாசிகள் தான் கல்வியை காத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கற்பை காக்க தெரியவில்லை என புலம்பல். இன்னொரு பக்கம் எப்போதடா அவளிடம் போக போகிறோம் என புளுங்கல்.
யந்திரத்தில் உள்ள தேவதைகள் பேசுவதை இப்போதைக்கு தேவதைகளாக மட்டுமே இருக்கிறார்கள். அவை இந்த மனிதர்களின் எண்ண குவியல்களின் முரண்பாடுகள் என நினைக்கவும் தோன்றுகிறது.
கடைசியாக ராஜாவை பற்றி விரிவாக சொல்ல புஸ்தி மீசை கிழவனின் படப்பிடிப்பு உற்சவத்தை விவரிக்க வேண்டும். செத்தவன் செத்துட்டான் ஏமே அந்த கூழ கும்பாவுல கரச்சி எடுத்தா என்பது எமது முன்னோரின் திருவாக்குகளில் ஒன்று. கிழவன் போனப்பிறகு ராஜா வயிறார உண்டு வல்லாரை ஒழிவதும் பனியன் சகோதரர்களை கூப்பிட்டு படவிழா நடத்தி சிங்காரிப்பதும் அதையே ஞாபகப்படுத்தின. அதாகப்பட்டது போனவனுக்கு தூக்கம் கொண்டாறது இருக்கப்பட்டவனுக்க சந்தோஷமாக்கும் என்ற படிக்கு அப்பகுதியை வாசித்தேன். அதிலும் கூட ராஜாவுக்கு சேடிப்பெண் மேல் ஏக பிரியம்.
கூடவே ராணி தான் சாமா கொள்ளிக்கட்டை வீசினாலா என்பது சந்தேகமாய் இருந்தால் முன்னோர்கள் வந்து அவள் நல்ல ஸ்தீரியாக்கும் என தீர்ப்பளித்து விட்டார்கள். ஆனால் அவள் பகவதியிடம் குளிக்க மேல் தடுப்பு கட்டு கொள்ள சொல்லுவது சங்கரனுக்கு நல்ல நறுக்கு, மட்டுமல்லாமல் பெண் குலத்து பரிபாஷை போலும் அதெல்லாம். இதெல்லாம் அலமேலு கழுத்து நிறைய வரும் சிநேகாவை அவுச்சாரி என வைகையில் பகவதிக்கு கொட்டக்குடி தாசி ஞாபகம் வருவதை காண்கையில் தோன்றுவது.
எது எப்படியானாலும் அரசூர் வம்சம், அவரவர் சொந்த வம்ச கதைகளின் மேல் மறுவிசாரணை நடத்தவும் – அந்த கதை தெரிந்திருந்தால் -, நம் முன்னோர்களின் பகடையாட்டங்களை வெகு சுவாரசியமாக விவரிக்கவும், வாழ்க்கை என்பதன் மேல் சிரிப்பை விரட்டும் திண்ணை கிழவனாகவும் காட்சியளிக்கிறது. அந்த சிரிப்பு போலி பெருமிதங்களை சரித்து போட்டுவிட்டு சமூக விமர்சனத்தையும் சேர்த்து கொள்கிறது. அரசூரில் பயணிக்க இன்னும் இடம் உள்ளதாகவே உணர்கிறேன். மற்றொரு முறை எழுதுகிறேன்.
விஷ்ணுபுரம் விருது இரா முருகன் அவர்களுக்கு வாசகனாக என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
சக்திவேல்
இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்