«

»


Print this Post

அறிவியலுக்கென்ன குறை?


இந்திய அறிவியல் எங்கே என்ற கட்டுரையை வாசித்துவிட்டுப் பலரும் கருத்து சொன்னார்கள். அதில் நண்பர் வேணு அவர்கள் இந்த கடிதத்தொடர்பை அனுப்பியிருந்தார்கள்.

இதில் ஓர் அறிவியலாளரை நாம் காண்கிறோம். மக்கள் தொலைக்காட்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும். இதற்குமேல் நமக்கு என்ன தேவை?

கண்களில் நீர் தளும்ப இதை எழுதுகிறேன்

ஜெ


நண்பர்களே,

விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டின் சமகால விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பதை அவரே என்னைத்தொடர்பு கொண்ட மின்னஞ்சல் மற்றும் காணொளி இணைப்புகள் வழி அறிந்து பெருமிதம் கொள்கிறேன். அவரே முன்வந்து என்போன்ற சிறுவனை முறையாகத் தொடர்புகொண்டது அவரின் எளிமைக்கும் பரந்த மனதுக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

ஜெயமோகன் அமெரிக்க விஜயத்தின்போது திண்ணை இதழில் வெளியான அறிவிப்பிலிருந்து என் மின்னஞ்சல் முகவரி கிடைத்த விபரத்தையும் அண்மையில் மின்னஞ்சல்வழி அவரே கூறியுள்ளது அவர் ஜெயமோகனின் வாசகர் என்பதற்குச் சான்றாகும்.அவர் போன்ற ஒரு அறிஞரை நம் குழுமத்தில் இணைய அழைப்பதில் மகிழ்கிறேன்.அறிவியல் சம்பந்தமான தங்களின் ஐயங்களை அன்னாரிடம் நண்பர்கள் தயங்காது கேட்கலாம்.
அவரின் வலைப்பூ, காணொளிகள், முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் என் உரையாடல் கீழே.

வேணு


ஆசிரியருக்கு வணக்கம்,

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதைக் கண்டு பிடித்து இருக்கிறேன்.பாறைத் தட்டுகள் உயர்ந்ததற்கு ஆதாரம் கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கு.என் கண்டு பிடிப்பு குறித்து புகைப் பட ஆதாரங்களுடன் தங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுப் பின் வரும் இணைப்புகளை சமர்ப்பிக்கின்றேன்.

காணொளிகளின் தொகுப்பு: http://www.youtube.com/user/ponmudi1

பகுதி 1

httpv://www.youtube.com/watch?v=Qi9JE86efdU

பகுதி 2

httpv://www.youtube.com/watch?v=K3DIHsjzlpk

படவிளக்கம்.1

உலக அதிசயங்களில் ஒன்றான கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கானது கொலராடோ நதியால் அரிக்கப் பட்டதால் உருவானது என்று கருதப் படுகிறது.ஆறால் அரிக்கப் பட்டிருந்தால் பள்ளத்தாக்கானது ஒரே போக்கில் அமைந்து இருக்க வேண்டும். ஆனால் படத்தில் கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கானது பல்வேறு திசை நோக்கிப் பிளவு பட்டு இருக்கிறது. இவ்வாறு பூமி பல்வேறு திசையில் பிளவு பட்டதற்கு பூமிக்கு அடியில் இருந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரந்ததே காரணம்.

படம் http://www.uptake.com/blog/wp-content/uploads/2009/08/img_0055.jpg
படம் http://skywalker.cochise.edu/wellerr/students/soil-ph/project_files/image005.jpg

பட விளக்கம்.2

கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கில் பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் அமைந்து இருக்கிறது.
பாறைத் தட்டுகள் கீழிருந்து மேல் நோக்கி உயர்ந்து இருந்தால்தான் இவ்வாறு பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் இருக்க முடியும்.

படம் http://www.sedonagrandcanyontourcompany.com/images/grand_canyon_cover.jpg

பட விளக்கம்.3

பொதுவாக இரண்டு நிலப் பகுதிகள் மோதுவதால் நடுவில் நிலம் உயர்ந்து மலைகள் உருவாகின்றன என்று கருதப் படுகிறது.ஆனால் இந்தப் படத்தில் நிலம் பிளவு பட்டு இருக்கும் இடத்தில பாறைத் தட்டுகளால் ஆன ஒரு மலை உருவாகி இருக்கிறது.எனவே பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயருவதால்தான் மலைகள் உருவாகின்றன என்பது புகைப் படம் மூலம் நிரூபணமாகிறது.

படம் http://www.planetside.co.uk/terragen/tgd/images/deep_canyon_v04.jpg

அன்புடன்,
விஞ்ஞானி.க.பொன்முடி
1 , அப்பு தெரு ,நுங்கம் பக்கம்,
சென்னை.600 034,
பேச : 98400 32928


மதிப்பிற்குரிய விஞ்ஞானி பொன்முடி அவர்களுக்கு,

தங்கள் கண்டுபிடிப்பை எண்ணி வியக்கிறேன். தாங்களின் தற்போதைய பெயர், ஊர் எது என்றறிய ஆவல். இது போன்ற பல அரிய கண்டுபிடிப்புகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னைப்போன்ற சாமான்ய மனிதர்களின் அவா.

வாழ்த்துக்களுடன்,
வேணு


மதிப்பிற்குரிய திரு வேணு தயாநிதி அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.
தங்களின் பதில் கடிதத்திற்கு நன்றி,
பாராட்டுக்கும் நன்றி,

என் கண்டு பிடிப்பு மிகவும் தற்செயலான எதிர்பாராத ஒன்று.எங்கோ எப்பொழுதோ படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது.”ஒரு உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று கூறாதே…என் வழியில் ஒரு உண்மை வந்தது என்று கூறு”.( மன்னிக்கவும் கூறிய அறிஞர் யார் தெரியவில்லை).
நான் தற்பொழுது சென்னையில் வசிக்கின்றேன். தற்பொழுது சுனாமி நில அதிர்ச்சி எரிமலை குறித்து ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

மற்றபடி கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதற்கு சூரியனின் முன் நோக்கிய பயணமே காரணம் என்பதுடன் சூரியன் போன்ற நட்சத்திரங்கள்தான் எரிந்து முடிந்த பிறகு வாயுப் பொருட்களை இழந்த பிறகு சுருங்கி கிரகங்களாக உருவாகின்றன என்பதும் என் கண்டு பிடிப்பு.

இது குறித்து பல விண்ணியல் ஆதாரங்களுடன் நான் எழுதிய புத்தகத்தை விகடன் பிரசுரத்தார் வெளியிட்டு இருகின்றனர்.பெயர் ”பூமிப் பந்தின் புதிர்கள்”அத்துடன் கடல் மட்டம் உயர்வதற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுகளே காரணம் என்பதும் என் கண்டு பிடிப்பு இது குறித்து நான் எழுதிய ”பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது” என்ற புத்தகத்தை நியூ செஞ்சுரி ஹவுஸ் வெளியிட்டு இருகின்றனர்.

தங்களின் கடிதம் உண்மையில் உற்சாகத்தை ஊட்டுகிறது.
கூகுளில் என் பெயரை உள்ளிட்டால் என் கட்டுரைகளை படிக்கலாம்.

என்றும் அன்புடன் விஞ்ஞானி.க.பொன்முடி

pls visit  : The origin of continents and planet-Contents


ஐயன்மீர்,

தங்கள் பதில் மடல் கண்டு இறும்பூது எய்தினேன். அறிவியலை முறையாகப் பாடமாகப் பயின்று ராப்பகலாக உழைத்து முயன்றுவரும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரபஞ்சத்தின் சகல காரண காரியங்களையும் மதி நுட்பத்தினால் கண்டறிந்து தெளிந்து உண்மைகளை இவ்வுலகுக்கு வெளிப்படுத்தும் தங்களைப்போன்ற விஞ்ஞானிகளை என்னென்பது. நிற்க. தங்களிடம் நான் கேட்க விரும்புவது ஒரே ஒரு உதவி மட்டுமே. இந்த மின்னஞ்சல் முகவரி பற்றித் தங்களுக்கு எவ்விதம் தெரியவந்தது? அல்லது நண்பர்கள் யாராவது தெரியப்படுத்தினார்களா…

அந்த நல்லவரின் முகவரி/ அஞ்சலை மட்டும் தயவு செய்து தர இயலுமா?

மிக்க நன்றி!
அன்பன்,

வேணு


வணக்கம் அய்யா,

சுனாமி குறித்த உண்மையை உலகிற்குத் தெரியப் படுத்த உலகெங்கும் உள்ள சான்றோர்கள் அறிஞர்கள் பெருமக்கள் ஆகியோரின் மினஞ்சல்களை இணையத்தில் தேடிய பொழுது தங்களின் மினஞ்சல் முகவரி கிடைத்தது.
இணைய தள முகவரி http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80908064&format=print&edition_id=20090806

முக்கியமாக அந்தக் காலத்தைப் போல் அல்லாமல் தற்பொழுது இணைய தளத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் பல ஆராய்சிக் கட்டுரைகள் மற்றும் தகவல்கள் என் ஆய்விற்கு மிகப் பெரிய அளவில் உதவின என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் விஞ்ஞானி க.பொன்முடி.

முற்றிற்று

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/20504/