முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு

எம். முடிசூடியபெருமாள் பிள்ளை 1963ல் முதுகலை சமூகவியல் முடித்து தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி பூதப்பாண்டியில் ஆசிரியராக வேலைபார்க்கையில்தான் முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்தார். அன்று வளர்குழவியாக சமூகவியலின் இடுப்பில் அமர்ந்திருந்த மானுடவியலில் தெ.சக்ரபாணிக் கோனார் எம்.ஏ.டி.லிட். வழிகாட்டலில் மதுரைப்பல்கலைகழகத்தில்.

முதலில் தலைப்பு ஒன்றும் தகையவில்லை. பல கோணங்களில் யோசித்துப்பார்த்தார். மலைவாழ் மக்களைப்பற்றி ஆய்வுசெய்வது மரபு. ஆனால் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் சிவாலய தரிசனம் செய்தே ஆகவேண்டிய தீட்சை எடுத்த சைவராகையால் அது முடியாது. உள்ளூர் தாழ்குடிகளைப் பற்றி செய்யலாம்தான். ஆனால் அவர்களில் நந்தனார் தவிர பிறர் நீசர்கள் என பிள்ளைவாள் நம்பினார். நந்தனார் பற்றி ஆராய்வது சைவமே ஒழிய மானுடவியல் அல்ல.

அப்போதுதான் அழகியபாண்டிபுரத்தில் தன் அம்மாச்சனின் வீட்டுக் கல்திண்ணையில் மதியச்சாப்பாட்டின் சூடு அடங்க துண்டுவிரித்துப் படுத்துக் கிடந்தபோது தாழக்குடி சுப்பையாபிள்ளை அந்தக் கருத்தை முன்வைத்தார்.”ஏல மாப்ள நீ கண்ட கண்ட களுதைகளை போட்டு நோண்டிட்டுக் கெடக்குகதுக்கு பேயாம நம்ம வெள்ளாம்புள்ளையள பத்தி ஆராய்ச்சிசெய்லே…வேணுங்கிறத கேளு, சொல்லுகேன். பெண்டுபிள்ளையளப்பத்தி உன் மாமிட்டே கேளு, பிச்சுப் பரத்தி வைச்சுப்போடுவா. மிச்சத்துக்கு அடுக்களையிலே ஆச்சி வேற கெடக்கா…பின்ன என்ன வேணும்?”‘

முதலில் முச்சூபிள்ளைக்கு அது நல்ல யோசனையாகப்படவில்லை. வெள்ளாளர்களைப்பற்றி என்ன ஆராய வேண்டிக்கிடக்கிறது? ”சும்மா கெடயும் மாமா… நடக்கப்பட்ட காரியமா சொல்லும். இல்லேண்ணாலும் வெள்ளாப்பயலுகளைப்பத்தி என்னத்த எளுத? சாளைப்புளிமொளம் எப்ப்டி காச்சுகதுண்ணா? சோலி மயிரப் பாரும்”

”இல்லடே…நான் சொல்லுகது அதில்ல…” என்று தாசுப்பிள்ளை அருகே புரண்டுவந்தார். ”தாளி, இங்கிண இப்பம் நிண்ணவன் நடந்தவன்லாம் வெள்ளாளன்லா? வழிசுத்தம்ணு சொன்னா சிரிக்கானுக. அப்டி விட்டா பின்ன எலவாணியனும் வளைச்செட்டியும் நம்ம வாசலில வந்து நிண்ணு பொண்ணு கேப்பானுக….”

”அதுக்கு இப்ப என்ன செய்யணும்கியோ? அடிமாட்டுக்கு வைக்குததுமாதிரி சுத்த வெள்ளாளனுக்கு எல்லாம் காதில சூடுபோட்டு முத்திர வைக்கணும்கியேளா?” முச்சூப்பிள்ளை சொன்னார்.

”அதுவேண்டாம்லெ..இப்ப இருக்கபப்ட்ட வெள்ளாளன்ல அசல் யாரு, மூப்பு யாரு, என்னென்ன கூறு இருக்கு எல்லாத்தையும் எளுதி ஒரு புஸ்தகமாட்டு போட்டிரு…பின்ன ஒண்ணும்செய்ய முடியாதுல்லா? ” மேலும் நெருங்கி குரலைத்தாழ்த்தி ”நம்ம மேலத்தெரு அழகியநம்பியாபிள்ள எண்ணைக்கு பிள்ளைவாளானான்னு தெரியுமால ஒனக்கு? ஏல அவனுக பாண்டிநாட்டிலேருந்து வந்தவனுகள்லா? அங்க இவனுக யாரு என்னாண்ணு ஆரு கண்டா? நீ உனக்க எளுத்தில அவனுகளுக்கு ஒரு சவிட்டு வைக்கணும் கேட்டியா?”

இவ்வாறாக தலைப்பு உருவாகியது.”தமிழ்நாட்டு வெள்ளாளர் சமூக அமைப்பும் பிரிவுகளும் வாழ்க்கைமுறையும் – இனவரைவியல் நோக்கில்” ஆய்வு பதிந்து உடனே முதற்கட்ட தகவல்திரட்டில் பிள்ளைவாள் இறங்கினார். வெள்ளாளர் சாதியின் ஒரு குடும்பமரம் ஒன்றை போடுதல். தன்வீட்டு வாசிப்பறைச் சுவரிலேயே மரத்தின் அடியை வரைந்தார். ஆணிவேரை நன்றாக நீட்டி குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் குரங்குவரைக்கும் கொண்டுசென்று அடையாளம் செய்தார். மூன்று பக்கவேர்கள், சேரசோழ பாண்டியர்கள். சல்லிவேர்கள், பதினெண் வேளிர்கள். ”சல்லிப் பயக்க” என்று சொல்லி அவர்களுக்கு பெயர் சொல்லாமல் விட்டார். தாய்மரம் நாஞ்சிநாட்டு மருமக்கள்வழி வெள்ளாளர்களல்லாமல் யாராக இருக்க முடியும்? அ·தே ஆய்வின் விதையென்க.

நாஞ்சிநாட்டு மக்கள் வழி வெள்ளாளர்கள் தங்களை குமரிக்கண்ட ‘ராமபிதாகஸ்’ வம்சாவளியினர் என்றதை பிள்ளைவாள் ஏற்கவில்லை. ஆனால் முதல் ‘ஹோமோஎரக்டஸே’ நாங்கள்தான் என்று நெல்லைமாவட்ட சைவப்பிள்ளைமார் சொன்னபோது சற்று குழப்பமாகத்தான் இருந்தது. ”சீச்சீ அவனுகள்ட்ட அந்தப் பழக்கம்லாம் நானறிஞ்சவரை இல்லலே…. அதுக்கு நாம ஏர்வாடிப்பக்கமா போகணும் கேட்டியா? இவனுக அங்கிண இங்கிண போய் தொடுப்பு தொக்குவச்சு சீக்கு வாங்குவானுகளே ஒழிய…”என்று தாசுப்பிள்ளை ஐயப்பட்டார்.

சோழியவேளாளர்களின் குடுமி சும்மா ஆடாது என்ற தகவல் கிடைத்தது. துளுவ வேளாளர் துளுநாட்டிலிருந்துவந்தவர்கள். சரி, தொண்டைமண்டல வேளாளர்கள்? கொங்குவேளாளர்? கார்காத்த வேளாளர்கள் எண்ணிக்கையில் குறைவு. செல்வாக்கு அதிகம். ஆகவே அவர்கள்தான் வேளாளர்களில் உயர்சாதி என்றார்கள் அவர்கள். ”எவன் சொன்னான்?”என்றார் சிவ தீக்கை வாங்கி கழுத்தில் உருத்திராக்கமிட்டு முக்கொட்டை பட்டம் பெற்ற திருநெல்வேலிச் சைவக்குலமணி குத்தாலிங்கம் பிள்ளை ”அவனுக தாலிய பாத்தேரா? தேவமார் தாலிமாதிரி இருக்கும்…அவன்லாம் தேவன்மார்லா? கார் காத்தன்னா என்ன அர்த்தம்? இல்ல கேக்கேன். மழைக்கு காத்திருக்கிறதுண்ணுதானே? வே, அவனுக வானம்பாத்த பூமிக்காரனுகள்லா?”

கார்காத்தபிள்ளைவாள் குமரகுருப்பிள்ளை ஆவேசத்துடன் வெற்றிலை எச்சிலை எட்டித்துப்பிச் சொன்னதாவது ,”என்ன சொல்லுறானுக? கேக்க ஆளின்னேன்னா நாந்தான் அப்பன் நடராஜன் ஆடறதுக்கு மத்தளமடிச்சேன்னு சொல்லிருவானுக போல இருக்கே? இப்ப எழுதிக்கிடுங்க தம்பி. சோழியன்னா என்ன?அந்தக்காலத்திலே இவனுக நாகபட்டினம் காரைக்கால் கடக்கரையிலே சோழி பொறுக்கி கொண்டாந்து விக்கிறத எங்கப்பா கண்ணால பாத்திருக்காரு…சோழ ராஜாவா, இவனுகளா? நல்ல கணக்கு ஹெஹெஹெ”

துளுவ வேளாளர்தான் ராஜராஜசோழனுக்கு பெண்கொடுத்த வெங்கிநாட்டார் என்றனர் அவர்கள். ”குந்தவை எங்க குடும்பத்து மருமகளாக்குமே…அவ நினைவாலே நாங்க இப்பவும் எங்க கல்யாணங்களிலே பொண்ணை குந்தவைச்சுத்தான் தாலியக் கட்டுறது” கொங்கு கவுண்டர்கள் கன்னடதேசத்து குடியேறிகளான கவுடர்களே என சைவவேளாளர் வாதாட அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு கோங்குமரத்தடியில் சிவபெருமானைக் கூடிய தேவகன்னிகை அங்கேயே பெற்றுப் போட்டுவிட்டுப்போன குழவியிலிருந்து உதித்த வம்சம் என்றார்கள்.

நாலைந்துமாதத்தில் ஒன்று தெரிந்தது எல்லா பிள்ளைமாருக்கும் அவர்கள்தான் அசல் என்றும் முதல் என்றும் நினைப்பு இருக்கிறது. தன் ஆய்வேட்டின் முதல் ஈவை பிள்ளைவாள் குறித்தார். ‘ஒருவன் தன் சாதியையே பூமியில் முதல் சாதி என்று நினைக்கிறான் என்பது அவன் பிராமணன் என்பதற்கு ஆதாரம். ஒருவன் தன் சாதிப்பிரிவே வேளாளர்களில் முதலானது, உண்மையானது என்று சொன்னான் என்றால் மட்டுமே அவன் உண்மையான வேளாளன்”

கொண்டைகட்டிப் பிள்ளைமார், கொடிக்கால் பிள்ளைமார், கீழ்நாட்டுப் பிள்ளைமார்,காரைக்காட்டுப்பிள்ளைமார், நரங்குடிப் பிள்ளைமார், அரும்பூர் பிள்ளைமார்,சிறுகுடிப் பிள்ளைமார், வீரக்குடிப் பிள்ளைமார், கோட்டைப் பிள்ளைமார், நீறுபூசிப் பிள்ளைமார், செந்தலைப்பிள்ளைமார், படைத்தலைப் பிள்ளைமார், வெள்ளிக்கைப்பிள்ளைமார், பவளக்கட்டிப்பிள்ளைமார், தொள்ளைக்காதுப்பிள்ளைமார், ஆற்றங்கரைப்பிள்ளைமார் என்று ‘மற்ற பிள்ளைமாரை விட மேலான’ பிள்ளைமாரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காகப் பெருகியபடியே போயிற்று.வீட்டில் வரைந்த சாதிமரம் மச்சைத்தொட்டு பலகையில் மடங்கி விரிந்தது.

இதில் குறுக்கும் நெடுக்கும் பிரிவினைகள். சைவம் அசைவம். அசைவத்திற்குள் சைவம். ”நாங்கள்லாம் வெள்ளியும் புதனும் கறிகவிச்சி தொடமாட்டோம். கண்டகண்ட வரத்து-போக்கு வெள்ளாளனுகளைப்போல இல்ல. மொறையும் நெறையும் விடுகதில்ல” என்று அசல் நெடுங்காட்டுப்பிள்ளைமார்குலத்தைச் சேர்ந்த வள்ளியம்மைஆச்சி சொல்லியதில் உச்சிக்காட்டுப் பிள்ளைமார் குறிப்புணர்த்தப்பட்டிருப்பதை உணரும்படி பிள்ளைவாள் அதற்குள் தேறியிருந்தார். ஆனால் ”நாங்கள்லாம் சைவப்பிள்ளைமாரிலே ஒரு பிரிவு. செத்தாலும் சிக்கன் சிக்ஸ்டி·பைவ் மட்டும் தொடமாட்டோம்” என்று சோங்குடிப்பிள்ளைமார் சொன்னபோது அவருக்குச் சற்று குழப்பமாகவே இருந்தது என்பது உண்மையே.

இதேபோல சைவத்துக்குள் அசைவமும் உண்டு. சைவப்பிள்ளைமாரில் ஒருவகையான நூற்றுக்குடைய பிள்ளைமார் காளிக்கு படைத்த கோழி ஆடு மட்டுமே உண்பார்கள். மற்றபடி சுத்த சைவம். ஆத்திர அவரசரத்துக்கு என காளியை வீட்டிலேயே நிறுவியிருப்பார்கள். பயணங்கள் பெருத்து ஓட்டல்களும் அதிகரித்தபோது சிறிய காளி சிலையை இடுப்பில் வைத்திருந்ததாகவும் இப்போது கழுத்திலேயே போட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ”எல்லா பிள்ளைமாரும் சைவம்தான் கேட்டுக்கிடுங்கோ. என்னான்னாக்க சிவனுக்க சடையிலேருந்து பிறந்தவன் வெள்ளாளன். சிவன் எருதையும் யமன் எருமையையும் பரசுராமன் கலப்பையையும் குபேரன் தொப்பையையும் இவனுகளுக்கு குடுத்து அனுப்பினாகன்னு ஐதீகம்….”

”சொல்லப்போனா இந்த சைவம்கிறது என்ன? என்னப்பன் அம்மையப்பன் விடமுண்ட கண்டன் ஆனையைக் கொன்னு போர்த்தினானே?”என்று சிதம்பரசேவுகம்பிள்ளை கேட்டார். ”அந்தக்காலத்திலே காப்பி குடிக்கலாமா கூடாதாண்ணு ஒரு பிராது வந்தப்ப எங்கப்பா சிவஞானப்பேரொளி காசிநாதப்பிள்ளைவாள் ‘அவன் ஆலகாலம் உண்டவனல்லவோ, எல்லாத்தையும் அவனுக்கு அர்ப்பணித்து உண்பது சிவாயமே ஆம்’ அப்டீன்னு சொல்லி தீத்து வைச்சாஹ…” சிதம்பரசேவுகம்பிள்ளை நெகிழ்ந்தார் ”மருந்திலருமருந்துருவான பெருவிருந்தென்னப்பனல்லவோ?” பிள்ளைவாளுக்கு மேல்துண்டால் மறைத்து சற்றே ‘மருந்து அருந்தும்’ பழக்கமும் உண்டு. அ·து சிலசமயம் விருந்தாவது அவன் ஆடல். அப்போது சுட்டகருவாடும் சிவாயமே ஆம்.

கொண்டைகட்டிப் பிள்ளைமார் அந்தக்காலத்தில் பாண்டிய அவையில் கொண்டையுடன் செல்லும் உரிமை உடையவர்கள். இவர்களில் மூன்றுவகை. வலக்கொண்டை ,இடக்கொண்டை, நடுக்கொண்டை. வழுக்கையரும் சாதியால் கொண்டையரே. வலக்கொண்டையே இதில் மேலானது என்ற கூற்றை பிற இருவரும் மறுத்தாலும் சமீபமாக பின்கொண்டைகட்டிப் பிள்ளைமார் என்று ஒருவகையினர் கிளம்பியிருப்பது மோசடி என்றும், அவர்கள் பிள்ளைமாரே அல்ல என்றும் ஒரே குரலில் சொன்னார்கள். கொடிக்கால்பிள்ளைமார் மதுரை ராஜ்ஜியத்து சிவன்கோயில்களில் கொடிஏற்ற கம்பம் கொண்டுவரும் கௌரவம் பெற்றிருந்தவர்கள். இவர்களில் நுனிக்கொடிக்கால்பிள்ளை அடிக்கொடிக்கால் பிள்ளை என்ற இரு பெரும் பிரிவும் நடுக்கொடிக்கால்பிள்ளை என்ற சிறு பிரிவும் உள்ளன.

கோட்டைப்பிள்ளைமார் புகழ்பெற்றவர்கள். கோட்டைக்குள் மட்டுமே வாழ்வார்கள், வெளியே செல்வதே இல்லை. பெண்ணெடுப்பதும் கொடுப்பதும் உள்ளேயே. ஆகவே இவர்களை அறியாமலேயே வெளியே கோட்டைப்புறம் பிள்ளைமார் என்ற ஒரு தனிப்பிரிவு உருவாகிவந்தது. அது பின்னர் வலங்கோட்டை இடங்கோட்டை என்று இரண்டாகப்பிரிந்தது. நீறுபூசிப்பிள்ளைமார் என்பவர் சிவபண்டாரங்கள் என்றும் வைராவிகள் என்றும் சொல் உண்டு. இல்லை இவர்கள் சிவாச்சாரியார்கள் என்றும் சொல்வதுண்டு. அவர்கள் செந்தலைப்பிள்ளைமாரை ”அவனுக நேத்துவந்தவனுகள்லா? தம்பி நல்லா கேட்டுக்கிடுங்க. போர்ச்சுக்கல்காரனுக இந்தப்பக்கம் வந்து கோமணம் அவுத்த வகையில உருவானவனுக. செந்தலைன்னு சும்மாவா சொன்னான்?” என்றர்கள்.

ஆனால் ஊழிமுதற்றோன் ஆடிய கொடுகொட்டியில் அவன் சடையெல்லாம் செந்நிறம் கோண்டபோது உதித்தவர்கள் என்று அவர்கள் தரப்பு. ஆகவே அவர்கள் பாண்டியப்படை நடத்தியவர்களாகக் கருதப்படும் படைத்தலைப் பிள்ளைமாரை ஏற்பதில்லை ”தம்பி, என்ன பேச்சு பேசுதீக? அவனுக படைத்தலையானது எப்ப? அவனுகளை நேத்துவரை நாங்க தலைப்படைப் பிள்ளைமார்னுல்லா சொல்லுவோம்? தலைச்சுமையாட்டு பலசரக்கு கொண்டுவந்து விப்பானுக. தலையில படைபிடிச்சு கெடக்கும்….ஸ்ஸ்ஸ்ஸல்லிப்பயக்க!”

சிறுகுடிப் பிள்ளைமாரில் மேலைசிறுகுடி கீழைச்சிறுகுடி என்ற இருபிரிவு உண்டு. மேலைச்சிறுகுடிக்குள் வெற்றிலைக்காரர், பட்டக்காரர், இல்லக்காரர் என்று மூன்று பிரிவு. இதில் வெற்றிலைக்காரரில் மட்டும் வடக்குநாட்டார், மழவர், உருமால்காரர், செங்காலர், சுக்காலர், தெக்குநாட்டார், கச்சைக்காரர் என்று ஏழுபிரிவு. இதிலே வடக்குநாட்டாரில் மட்டும் மூலைக்காரர், கொடுங்குடி, மூவாலர், பச்சைகாட்டார், வீரளர், குடும்பக்காரர், சிவப்பர் என்று ஏழு வகை. இதில் மூலைக்காரரில் ஏழுவகை மேலும் உண்டு. அவர்கள் வாழைக்காரர், குடிகாப்போர், உடன்குடியார், செக்காளர், முத்தாளர், மூத்தாளர், நெடும்பாளர். இவர்களில் வாழைக்காரரில் மட்டும்…

தொள்ளைக்காதுப்பிள்ளைமார் சமணர்களாக இருந்து தாய்மதம் திரும்பியவர்கள் என்றார் ஆய்வாளர் அ.தா.கோ.க.சரவணமுத்து முதலியார். சமணர்களிடம் மட்டுமே காது துளையிட்டு நீட்டும் வழக்கம் இருந்தது என்பதை பழைய சிற்பங்கள் காட்டுகின்றன. இவர்கள் காது நீட்டும் பழக்கத்தை மேலும் சிலகாலம் நீட்டியிருக்கலாம். இவர்களில் இரு பிரிவு. வலத்தொள்ளை, இடத்தொள்ளை. இப்பிரிவுகள் நான்குநான்காக மேலும் பிரிகின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்துக்கு மாறி பதினெட்டாம் நூற்றாண்டில் தாய்மதம் திரும்பிய வேளாளரும் உண்டு. இவர்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள் என்ற ஆய்வை பிள்ளைவாள் முடிக்கவில்லை

ஆற்றங்கரைப் பிள்ளைமார் பண்டு மீன்பிடித்தார்கள் என்பது கார்காத்தார்களின் அவதூறாக இருக்க வாய்ப்பில்லை என்று முச்சூப்பிள்ளைவாளுக்கு பட்டாலும் இவர்களில் கால்நனைச்சகுடி, குளிச்செழுந்த குடி, தடுக்கிவிழுந்த குடி என மூன்று உள்பிரிவுகள் உண்டு என்பதை அவர் முழுக்க நம்பவில்லை. ஆனால் 1972ல் கால்நனைச்சகுடிப் பிள்ளமாருக்கும் தடுக்கிவிழுந்த குடிப்பிள்ளைமாருக்கும் இடையே சாதிக்கலவரம் மூண்டு கோமதியாச்சியின் பாம்படக்காது அறுக்கப்பட்ட நிகழ்ச்சியானது மேற்படி பிரிவினை பொய்யல்ல என்பதற்கான வெள்ளிடைமலை ஆதாரமாக நிலைநிற்கிறது.

வெள்ளிக்கைப்பிள்ளைமார் பழைய பொற்கைபபண்டியன் அவையில் இருந்தவர்கள். அவன் கதவைத்தட்டியபோது பக்கத்திலே நின்ற இவர்களும் என்ன ஏதென்றறியாமல் கதவைத்தட்டப்போய் அவன் கையை வெட்டிக் கொண்டபோது தாங்களும் வேறுவழியில்லாமல் வெட்டிக் கொண்டு பின்னர் தங்கள் சக்திக்கு ஏற்ப வெள்ளியால் செய்துகொண்டார்கள். ஆம், இவர்களில் மூன்றுவகை. பத்துமாற்றுப்பிள்ளைமார், பத்தரை மாற்றுப்பிள்ளைமார், பதினாறுமாற்றுப்பிள்ளைமார். பதினாறுமாற்றுப்பிள்ளைமார் வீட்டில் மற்ற இருவரும் கைநனைப்பதில்லை. கைநனைக்காதவர்களை எதிரே கண்டால் கட்டித்தழுவி ‘மாப்ளே, எப்டி இருக்கிய? மருமகப்புள்ள சொம்மா இருக்காளா?” ”ஆமா மாமா, ஆச்சிக்கு மண்டையிடிக்கு கொறவுண்டா?” என்றெல்லாம் உருகி வழிவது பிள்ளைமார் பண்பாடு.

இதைத்தவிர ஒட்டுமொத்த பெரும்பிரிவினை ‘பஞ்சத்துப்பிள்ளை, பாம்பரைப்பிள்ளை’ என்பது. பரம்பரைப்பிள்ளைமார் ஒரே ஊரில் வாழ்ந்து தலைமுறைக்கு ஒருமுறை பிளந்தபடியே இருக்கும் ‘பதியெழுவறியா பழங்குடி’யினர். ஒரேயொரு குடும்பம் மட்டும் எஞ்சிய நல்லூர்ப்பிள்ளைமார் என்ற சாதியில் அப்பாவும் பிள்ளைகளும் இரு சாதிகளாகப் பிரிந்ததை பிள்ளைவாள் பதிவுசெய்திருக்கிறார். ”அவனுக நீசப்பயக்கள்லா? சாதிசுத்தம் கெடையாது. சோத்தத் தின்னுட்டு எலைய வழிச்சுத் தின்னுற கூட்டம்!”என்று அப்பா பையன்களைப் பற்றிச் சொன்னதாகவும் சொல்லியிருக்கிறார்.

பஞ்சத்துப்பிள்ளைமார் என்பவர் பிறர் அவசரத்துக்கு எல்லாம் தங்கள் பேருடன் பிள்ளைசேர்த்துக் கொள்வது. அதில் நாநூற்று எண்பத்திஎட்டு முதல்கட்ட சாதிகளும் ஒவ்வொரு சாதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபசாதிகளும் உண்டு என்க

பிள்ளைவாள் ஆய்வுக்காக தமிழ்நாடு முழுக்க பயணம் செய்தார். ”எத்தனை பெரிய தொலைநோக்கி வருகிறதோ அந்த அளவுக்கு அதிகமாக நட்சத்திரங்கள் விண்வெளியில் தெரியவருகின்றன என்பதுபோல எந்த அளவுக்கு பயணம்செய்து எந்த அளவுக்கு முயற்சிசெய்கிறோமோ அந்த அளவுக்கு பிள்ளைமாரும் கண்ணில் படுகிறார்கள். இது உலக ஆய்வாளர்களுக்கு என்றும் வற்றாத ஒரு ஜீவநதியின் ஊற்று.”என்பது அவரது முடிவடையா ஆய்வேட்டு முன்னுரைக் குறிப்பு

1986 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முடிசூடியபெருமாள் பிள்ளை தன் ஆய்வேட்டிற்கான முன்வரைவை முடிக்காமலேயே காலமானார். ஆய்வுக்காக அவர் சேகரித்த தகவல்கள் ஏழு பெரிய மரப்பெட்டிகளிலாக அவருக்குப்பின் அவரது ஆய்வை முன்னெடுத்த க.சிவசுப்ரமணிய பிள்ளை எம்.ஏ அவர்களால் கொண்டுசெல்லப்பட்டது. சாதிமரம் மச்சுப்பலகை முழுக்கப்பரவி பக்கத்து அறைகளிலும் விரிந்து பரந்து கிடந்தது.

தன் ஆய்வேட்டிற்கான முன்வரைவில் வெள்ளாளப்பிள்ளைகளில் பதினெட்டுலட்சத்து எண்பத்து எட்டாயிரத்து அறுநூற்றுப் பன்னிரண்டு உட்பிரிவுகளை முடிசூடியபெருமாள் பிள்ளை எண்ணிக்கை வாரியாக பட்டியலிட்டிருந்தார். ஆய்வாளர்கள் செல்ல மேலும் வெகுதூரம் இருக்கிறது என்பது உண்மையாயினும் பிள்ளைமாரின் மொத்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் ஓர் உண்மை இடிக்கிறது. ஒரே பிள்ளைவாள் பல உட்பிரிவுகளில் ஒரேசமயம் திகழ வாய்ப்பு உண்டா என்ன?

முந்தைய கட்டுரைவற்கீஸின் அம்மா
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்