அண்ணா ஹசாரே சாதிவெறியரா?

குழும விவாதத்தில் ஒருவர் அண்ணா ஹசாரேபற்றி இன்று இடதுசாரிகளில் சிலர் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராம அமைப்பில் தலித்துக்கள் அசைவம் சாப்பிடத் தடை இருந்தது. அப்படி சாப்பிட்ட தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டார்கள். இரண்டு, அங்கே ஜனநாயகமே இல்லை. பஞ்சாயத்து தேர்தல்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர் பிராமணிய வெறியர், சர்வாதிகாரி.

இதைச் சொன்ன ஒரு இடதுசாரி கட்டுரையாளர் இதையெல்லாம் அவரே சென்று பார்த்தது போல எழுதினாராம். அதற்கு நான் எழுதியபதில் இது.

அண்ணா ஹசாரே பற்றி தான் நேரில் போய் பார்த்ததாக அவ்விமர்சகர் சொன்னவை  ராமச்சந்திர குகா அண்ண ஹசாரே பற்றி எழுதிய http://www.telegraphindia.com/1110827/jsp/opinion/story_14423092.jsp  என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்தக் கட்டுரையை மட்டும் வாசித்ததனால் முழுமையான பார்வையை உருவாக்க முடியாமல் துண்டாகச் சொல்லப்படும் முழு அவதூறுச் சித்திரம் அது.

குகா அவரது கட்டுரையியில் அண்ணா ஹசாரே பற்றி முகுல் சர்மா எழுதி வெளிவரப்போகும் ஒரு நூலில் இப்படி இருப்பதாக எழுதியிருந்தார்.

The strengths and limitations of Anna Hazare are identified in Green and Saffron, a book by Mukul Sharma that shall appear later this year. Sharma is an admired environmental journalist, who did extensive fieldwork in Ralegan Siddhi. He was greatly impressed by much of what he saw. Careful management of water had improved crop yields, increased incomes, and reduced indebtedness. On the other hand, he found the approach of Anna Hazare “deeply brahmanical”. Liquor, tobacco, even cable TV were forbidden. Dalit families were compelled to adopt a vegetarian diet. Those who violated these rules — or orders — were tied to a post and flogged.

என்ற பத்தியில் இருந்து எடுத்தவை இடதுசாரிகளின் அவதூறுவரிகள். அதற்கு ஆதாரம் கேட்டால் சொல்லமுடியாது. ஆகவே தானே சென்றதாகப் பீலா விடுகிறார் அந்த விமர்சகர். பொது விவாதத்துறையில் இது மிகமிக அபாயகரமான ஓர் உத்தி. இந்தக்கட்டுரை வெளிவருவதற்கு முன் எங்குமே இவர் இதையெல்லாம் சொன்னதில்லை. அண்ணா ஹசாரே பற்றி அவருக்கு  முன்பு எதுவுமே தெரியாது என்பதே உண்மை.

உண்மையில் அவர் அதே முகுல் சர்மா எழுதிய கட்டுரையை http://kafila.org/2011/04/12/the-making-of-anna-hazare/ என்ற தளத்தில் வாசித்திருந்தால் ஓரளவேனும் உண்மை தெரியும். முகுல் சர்மா அமெரிக்க ஆய்வாளர். முதலாளித்துவ நோக்கு கொண்டவர். அவர் தன்னிறைவுள்ள காந்திய அமைப்பை உருவாக்கமுயலும் அண்ணாவின் முயற்சியை எப்படிப் பார்ப்பார் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் அவர் எழுதுவது இவர்கள் சொல்லிய சித்திரத்தை அல்ல.

அண்ணா ஹசாரே அந்த பின்தங்கிய சாதிவெறிக் கிராமத்தில் எப்படி தீண்டாமையை முழுமையாக ஒழித்தார், எப்படி சாதிய சமத்துவத்தைக் கொண்டுவந்தார் என்று சொல்கிறார் முகுல் சர்மா.

In Ralegan, there are a few Mahars, Chamars, Matangs, Nhavi, Bharhadi and Sutars. Since the beginning of his work, Anna has been particularly emphasizing the removal of approachability and discrimination on caste basis meted out to people, who are popularly referred to as Harijans here. The concept of ‘village as a joint family’, or all inhabitants of the village as ‘almighty God’, has prompted the villagers to pay attention to the problems of Harijans. The integration of Dalits into an ideal village has two components in Ralegan. One is to assume that they were always there to perform some duties and necessary services and that their usefulness justifies their existence in the present. The other component is hegemonic, designed to get Dalits into a brahaminical fold. It is not only manifested in the way food or dress habits are propagated; it is prevalent in several other forms.

அந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்த்தரமாக நடத்தப்பட்டமைக்கு எதிராக அண்ணா ஹசாரே தனிமனிதனாக நிகழ்த்திய ஒரு போர் அது.  அங்கே அவர் தீண்டாமையை ஒழித்தார். தலித் மக்களுக்குக் கிராமசபைகளில் சம அதிகாரம் கொண்டுவந்தார். அவர்களைப் பொருளாதார விடுதலை பெறச்செய்தார். அதை நம்முடைய மதுரைப் பக்க கிராமங்களில் முதலில் செய்து காட்டிவிட்டு அல்லவா இந்த இடதுசாரிகள் அண்ணா ஹசாரேவைக் குற்றம் சொல்லவேண்டும்? கண்ணெதிரே தலித்துக்கள் ஊர்-சேரி என இரண்டுபட்ட அமைப்பால் ஒதுக்கப்பட்டு வாழும்போது அதைக் கண்டும் காணாமல் ஐம்பதாண்டுகளாக அரசியல் பேசும் இவர்களுக்கு அண்ணா ஹசாரேவைப் பேச என்ன யோக்கியதை?

ராலேகான் சித்தியில் தலித் மக்களை ஒதுக்குவதற்காக உயர்சாதி சொன்ன சாக்கு அவர்கள் மாடு தின்கிறார்கள் என்பது. அதைத் தடுக்க அண்ணா ஹசாரே கண்டுபிடித்த ஓர் உத்தி அந்த மக்களை மாடு சாப்பிடுவதில்லை என அவர்களே முடிவெடுக்கவைப்பது. அந்தச் சாதிக்கட்டுப்பாட்டுக்கு அவர்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பட்டாகவேண்டும். அவர்களை அண்ணா ஹசாரே தண்டித்தார் என்பதை அவதூறு என்றே சொல்ல வேண்டும்

உண்மையில் வட இந்தியாவில் சாதாரணமாகவே அசைவ உணவு குறைவு. மகாராஷ்டிர கிராமங்களில் பெரும்பாலான சதவீதம் சைவ உணவுதான். சப்பாத்தி ,தயிர், வெங்காயம், சப்ஜி ,தால், கொஞ்சம் சோறு. தலித்துக்கள் மிக மிக அபூர்வமாக செத்த மாட்டின் கறி உண்பார்கள். குளத்துமீன் இன்னும் அபூர்வமாக.

வடக்கத்தி கிராமங்கள் எல்லாம் இன்றும் பல்வேறு சாதிகள் வாழும் தனிப்பகுதிகளாகவே இருக்கும்[ இங்கும்கூட பல ஊர்களில் அப்படித்தானே? ]அந்த பகுதிகளுக்குள் சந்திப்போ உரையாடலோ சாத்தியமல்ல. அண்ணா ஹசாரே உருவாக்க முயன்ற கிராமசுயராஜ்ய அமைப்பு ஒரே பொருளாதார மண்டலம். எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒரே அமைப்பாக வாழ்ந்தாகவேண்டியிருந்தது. அதில் பெரும்பான்மையினரான சாதியினருக்கு தலித் மக்கள் மேல் கடுமையான வெறுப்பு இருந்தது. தலித்துக்கள் வாழ்ந்த நிலை பொருளியல் அடிமட்டம்.

முகுல் சர்மாவே அண்ணா ஹசாரெ தலித்துக்களை உள்ளே கொண்டுவர இரு வழிகளை கையில் எடுத்தார் என்கிறார். ஒன்று, அவர்கள் ஆற்ற வேண்டிய பணியை சுட்டிக்காட்டுவது. அவர்கள் இல்லாமல் கிராமம் இல்லை என்பது. இரண்டு அவர்கள் மாடு தின்பதை விலக்குவது. அந்த சாதிக்கட்டுப்பாட்டையே அசைவம் சாப்பிடத் தடை என்று இவர்கள் இன்று திரிக்கிறார்கள்.

முகுல் சர்மாவே அவரது நூலில் அண்ணா ஹசாரேவைக் கண்டிக்கும் தோரணையில் எழுதும்போதுகூட இப்படித்தான் சொல்கிறார். கிராமமே கடவுள் என்பது அண்ணாவின் கொள்கை. அந்த அமைப்புக்குள் சமமான உரிமை கொண்டவர்களாக தலித் மக்களைக் கொண்டுவருவதற்கு அவர் கண்டுபிடித்த வழிமுறைதான் பிராமணிய தன்மையை தலித் மக்களுக்கு அளிப்பது என.

அதாவது தலித்துக்களை ஒடுக்குவதற்காக அண்ணா அதைச் சொல்லவில்லை. சம உரிமைக்காக, பொருளாதார விடுதலைக்காக அவர் அங்கே சமயோசிதமாக உருவாக்கிய ஒரு வழி அது. அதை அவரை சாதி வெறியர் என்று சித்தரிக்கப் பயன்படுத்துவது அப்பட்டமான மோசடி மட்டுமே.

அண்ணா தலித்துக்கள் மாடு உண்ணக்கூடாது என சத்தியம் வாங்கியது தப்பு என சிலர் சொல்லலாம். ஆம்  அது ஒரு வலுவான வாதம். [அது பாரதி தலித்துக்களுக்கு பூணூல் போடவேண்டும் என்று சொன்னது போன்ற ஒரு செயல்]  அங்குள்ள சூழலில் 1970களில் அது தேவைப்பட்டிருக்கலாம். [1986ல் அந்நிலை கண்டிப்பாக இல்லை. அங்கே சாதாரணமாகவே குளத்துமீன் சாப்பிடக்கிடைத்தது என் நேரடி அனுபவம்] அதை நானும் ஏற்க மாட்டேன். ஆனால் அண்ணா ஹசாரே அந்த மக்களுக்கு கிராமசபையில் சம இடத்தையும் பொருளியல் மேம்பாட்டையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆகவேதான் அவர்களின் மறுக்கமுடியாத தலைவராக ஆனார். அவர்கள் அவரை எங்கள் கடவுள் என்று சொல்லும் அளவுக்கு.

அண்ணா ஹசாரே உருவாக்க எண்ணியது ஒரு நவீன ஜனநாயகலட்சிய சமூகத்தை அல்ல. ஒரு நடைமுறைக் கிராமசமூகத்தை. அங்கே எது உடனடி சாத்தியமோ அதைத்தான் அவர் செய்ய முடியும். அவருக்கு வெறுமே உயர்ந்த ஜனநாயக லட்சியங்களைச் சொல்லிக்கொண்டு சும்மா இருப்பவரல்ல அவர். உடனடியாக கள்ளச்சாராய கிராமமாக இருந்த ராலேகான் சித்தியை ஒரு தன்னிறைவான வேளாண்மைகிராமமாக ஆக்க அவர் முயன்றார்.

சுற்றிலும் சாதிவெறி தாண்டவமாடும் ஒரு சமூகத்தில், அம்பேத்கார் சிலையைக்கூட தொடாத ஒரு சமூகத்தில், அவர் தலித்துக்களை கிராமசபைகளில் சம உரிமை கொடுக்க வைத்த சாதனையைக் கொச்சைப்படுத்த அவர் விதித்த கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதில் என்ன நேர்மை இருக்கிறது? அவரது நோக்கத்தை அங்கீகரித்து, அவரது வழிமுறைகளை ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் நோக்கத்தையே சிறுமைசெய்கிறார்கள் . இதே வழிமுறையை இவர்களின் தலைவர்களிடம் செய்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ன?

அண்ணா ஹசாரே அந்த கிராமத்தில் அரசியல்கட்சிகள் நுழையாமல் பார்த்துக்கொண்டார். அதற்குக் காரணம் உண்டு.  அது கள்ளச்சாராயத்துக்கு புகழ்பெற்ற ஊர். அந்த கள்ளச்சாராயம் அரசியலால் மீண்டு வரக்கூடாதென நினைத்தார். இன்றுகூட தமிழகத்திலும் பல மாதிரி கிராமங்களில் ஊருக்குள் அரசியலை நுழையவிடாமல் வைத்திருக்கிறார்கள். அண்ணா ஹசாரே அங்கே சர்வாதிகாரத்தை உருவாக்கவில்லை, மாறாகப் பழைய கிராம பஞ்சாயத்து முறையை கொண்டுவந்தார்.

அவர் உருவாக்கிய பஞ்சாயத்து அமைப்புகள் முழுமையான ஜனநாயக முறைப்படித்தான் செயல்பட்டன. தலைவர் தேர்தல் மட்டுமல்ல எல்லா தீர்மானங்களும் எல்லாரும் வாக்களித்தே எடுக்கப்பட்டன–  தலித்துக்கள் வாக்களிக்கும் அமைப்பு கொண்ட ஒரே மகாராஷ்டிர கிராம அமைப்பும் அதுதான்.

அண்ணாவின் வழிமுறைகள் முன்னுதாரணங்களா? தேசிய அளவில் கொண்டுசெல்லப்படமுடிபவையா? நானும் ராமச்சந்திர குகாவுடன் சேர்ந்து ஐயப்படுகிறேன். காந்திய கிராமசுயராஜ்யமே எனக்கு ஐயத்துக்கிடமானதே. அண்ணா அதை நம்புகிறார். கொண்டுவர முயல்கிறார். நான் நவீனக் கல்வியும் நவீன உலகத்தொடர்பும் நவீனத்தொழில்நுட்பமும் கொண்ட ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே சிறந்ததாக நினைப்பேன். கிராமசமூகத்தை மூடப்பட்டுவிட்ட ஒன்றாகவே நினைக்கிறேன்.

ஆகவே நானும் அண்ணா ஹசாரேவின் கிராமசுயராஜ்ய கனவை விமர்சிப்பேன். ஆனால் அவரை சாதிவெறியன் என்றும் சர்வாதிகாரி என்றும் சொல்லும் போக்கு இலட்சியக்கனவுகளை அவமதிக்கும் மனச்சிறுமையை வெளிப்படுத்துவது என்றே நினைக்கிறேன்.

அவதூறுகள் சொல்லாமல் இவர்களால் அண்ணா ஹசாரே பற்றி ஒரு விமர்சனம் கூட முன்வைக்கமுடியவில்லை என்பதே அவர் எப்படிப்பட்டவர் என்பதற்குச் சான்று.

முந்தைய கட்டுரைஇலங்கையில் இருந்து ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇந்திய அறிவியல் எங்கே?