இரா முருகன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இரா முருகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். கௌரவிக்கப்படாத எழுத்தாளர்களை நீங்கள் கௌரவிப்பது என்பது தமிழில் மிக அவசியமான, தவிர்க்கமுடியாத, ஒரு பணி. துரதிருஷ்டவசமாக அது இப்போது உங்களால் மட்டுமே இங்கே செய்யப்படுகிறது. விருதுக்குரியவர்கள் என்று நான் மானசீகமாக ஒரு பட்டியல் வைத்திருந்தேன். தேவிபாரதி, பாவண்ணன் ஆகியோர் வரிசையில் இருந்தார்கள். அவர்களில் தேவிபாரதிக்கு சாகித்ய அக்காதமியும் பாவண்ணனுக்கு இயல் விருதும் கிடைத்தமையால் இரா முருகனுக்கு விருது வரிசைப்படி வந்துள்ளது என்று நினைக்கிறேன். இரா முருகன் கொஞ்சம் வயதில் இளையவர் என்று நினைக்கிறேன். மிகமுக்கியமான பணி. வாழ்த்துக்கள்

எஸ்.கோதண்டராமன்

அன்புள்ள ஜெ

இரா முருகனுக்கு அளிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது மனநிறைவை அளிக்கிறது நீண்டகாலமாக எழுதிவந்தாலும் அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காமலேயே இருந்து வருகிறர். பெரும் பத்திரிகைகளில் எழுதுவதுமில்லை. ஆகவே அவரைப்பற்றி பெரும்பாலும் எவருக்கும் தெரியாத நிலை உள்ளது. இந்த விருது வழியாக இளைய தலைமுறை அவரை அறியவேண்டும்

இரா முருகன் இன்றைய இளைஞர்களுக்கு இன்னும் அணுக்கமானவராக இருப்பார் என நினைக்கிறேன். அவருடைய மூன்றுவிரல் கணிப்பொறி உலகைப் பற்றி தமிழிலே எழுதப்பட்ட முதல் நாவல். நவீனத்தொழில்நுட்ப உலகில் இருந்து எழுதவந்தவர். ஆகவே செண்டிமெண்ட் எல்லாம் இல்லாத எழுத்து. சரித்திரத்தையே ஒரு சாஃப்ட்வேர் போல எழுதிப்பார்க்கிறார் என்ற எண்ணம் எனக்கு உண்டு. மானுடமனதையும் ஒரு சாப்ஃட்வேர் ஆகத்தான் பார்க்கிறார்.

மிக நவீன எழுத்து. தமிழில் போஸ்ட்மாடர்ன் என்று சொல்லத்தக்க சில எழுத்துக்களில் ஒன்று. ஆஃப்டர் ட்ருத் எழுத்து, ஆஃப்டர் ஹிஸ்டரி எழுத்து, ஆஃப்டர் எதிக்ஸ் எழுத்து என்றால் அவர் எழுதுவதுதான்

 

வெங்கட்ராம்

முந்தைய கட்டுரைSpiritualism And Science
அடுத்த கட்டுரைஞான பைரவர்