இரா. முருகன் அருமையான தேர்வு. தவறாக நினைக்காதீர்கள் முருகன் பெரும் வாசக பரப்புக்கு பரிச்சயம் ஆனவர் அல்ல. நம்மை போன்ற நூறு பேருக்கு மட்டுமெ அறியப் பட்டவர். ஆனால் பல கோடி வாசகர்களால் அறியப்பட வேண்டியவர். அவருக்கு இந்த விருது பெரும் பேறு. ஆய்ந்தறிந்து நீங்கள் தருகிறீர்கள். உங்கள் கைகளுக்கு நூறு முத்தங்கள்.
என்றும் உங்களுடன்
கீரனூர் ஜாகிர்ராஜா .
அன்புள்ள ஜெ
இரா முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய மனதுக்கு மிக உகந்த எழுத்தாளர். அவர் இங்கே பேசப்படவே இல்லையே என்ற மனக்குறை எனக்கு இருந்துகொண்டே இருந்தது. உங்கள் இணையப்பக்கத்தில் மட்டும்தான் அவரைப்பற்றி அவ்வப்போது ஏதாவது வாசிப்புக்குறிப்பு வரும். இரா முருகனின் கலைத்தன்மையை சாதாரணமாக உணர முடியாது. அவருக்கு அரசியல் இல்லை. சமூக விமர்சனமாக எதையும் எழுதுவதில்லை. ஒரு அன்னியன் விட்டேத்தியான பார்வையிலே சொல்லிச்செல்வதுபோலத்தான் எழுதுவார். அந்த விலக்கத்தில்தான் அற்புதமான பகடிகள் உருவாகி வருகின்றன. அந்தப்பகடிகளை ரசிப்பதற்கும் ஒரு வாசிப்புத்தகுதி வேண்டும். அவர் எதைப் பகடி செய்கிறார் என்று தெரிந்துகொள்ள கொஞ்சம் சரித்திரமும் அரசியலும் சமூகவரலாறும் தெரிந்திருக்கவேண்டும். தமிழில் மாய யதார்த்தவாதம் பலர் எழுதியிருக்கிறார்கள். எதுவுமே சகிக்காது. இரா முருகனில் மட்டும்தான் மாய யதார்த்தவாதத்தின் களியாட்டமும் கொண்டாட்டமும் வெளிவந்து அழகான கலையம்சத்தை அடைந்துள்ளன.
நன்றியுடன்
சீ.ராம்குமார்