இன்றைய எழுத்தில்…

அன்புள்ள ஜெயமோகன்

நான் அண்மையில் உங்களுடைய புக்பிரம்மா உரையாடலைக் கேட்டேன். உண்மையைச் சொன்னால் நான் உங்களை கேள்விப்பட்டிருந்தாலும் எதுவும் படித்ததில்லை. எனக்கு இலக்கிய ஆர்வம் இருந்த காலம் இப்போது பின்னகர்ந்துவிட்டது. அதிகமாக நான் வாசிப்பவை ஆங்கிலத்தில் குறிப்பாக அரசியல் நூல்களும், சமூகவியல்நூல்களும்தான்.

புக்பிரம்மா உரையில் நீங்கள் ஐந்தே நிமிடத்தில் தமிழின் புதிய இலக்கியப்போக்குகளைச் சுருக்கிச் சொன்னது சிறப்பாக இருந்தது. புக்பிரம்மா இறுதிநாள் விழாவில் உங்கள் உரையாடலும் மிகச்சிறப்பாக இருந்தது. துணிச்சலாகக் கருத்துக்களைச் சொன்னீர்கள். அப்படிச் சொல்வதற்கான தகுதி என்ன என்பதையும் அந்த உரையாடலிலேயே காட்டிவிட்டீர்கள். ஆழமான உரையாடல் அது.

நான் மீண்டும் நவீன தமிழிலக்கியம் வாசிக்கலாமென நினைக்கிறேன். எனக்கு சுஜாதாவுக்குப்பிறகு எவரையும் தெரியாது. அவர் எனக்கு அலுவலகத்தில் சீனியர். இன்று எழுதிக்கொண்டிருப்பவர்களில் எவரை நான் வாசிக்கலாமென நினைக்கிறீர்கள்?

ஆர். ஜெய்கணேஷ் 

சுனில் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெய்கணேஷ்

உங்கள் ரசனை எனக்குத் தெரியவில்லை. ஒரு சூழலில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் பலர் பல வகைகளில் பல்வேறு பேசுபொருட்களை எழுதிக்கொண்டிருப்பார்கள். பொதுவாக இன்னின்ன வகையானவர்கள் எழுதுகிறார்கள் என்றுதான் சொல்லமுடியும். அவர்களில் எவர் உங்கள் ரசனைக்கு உகந்தவர்கள் என்பதை நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும். 

இன்று எழுதிக்கொண்டிருப்பவர்களில் முற்றிலும் இளைய தலைமுறையினர் சிலரைப்பற்றிச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இவர்கள் அன்றி நான் வாசிக்காமல் விட்டவர்கள் பலர் இருக்கக்கூடும். நான் என் நண்பர்கள் வலுவாகப் பரிந்துரைக்கும் நூல்களை மட்டுமே இப்போது வாசிக்கிறேன். இப்போதிருக்கும் நேரக்கணக்கில் அவ்வளவுதான் சாத்தியம்.

விஷால்ராஜா

மலையாளத்திலும் இதேபோல என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும் அளவுக்கு நான் வாசித்தாகவேண்டும். என் பொதுவான வாசிப்பு என்பது இன்று பெரும்பாலும் இந்திய தத்துவம் சார்ந்ததே. உதாரணமாக இந்த மூன்று மாதங்களில் நான் சைவ, வைணவ ஆகமநூல்களை மட்டுமே வாசித்திருக்கிறேன்.

இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரில் சற்று மூத்தவர்கள் சாம்ராஜ், கமலதேவி ஆகியோர். சாம்ராஜின் கொடைமடம் அண்மையில் வெளிவந்த குறிப்பிடத்தக்க நாவல். கமலதேவி இன்றைய பெண்களின் வாழ்க்கையின் நுணுக்கமான சிக்கல்களை எழுதுபவர். ஆர்.சூடாமணியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அவர் எழுதிய ஒரு கதை விவாதமாகியது

கமலதேவி

சுனீல் கிருஷ்ணன் காரைக்குடிக்காரர், ஆயுர்வேத மருத்துவர். அவருடைய மருத்துவ உலகுடன் தொடர்புடைய படிமங்களைக் கொண்டு குழந்தையின்மையைப் பற்றி அவர் எழுதிய நீலகண்டம் நாவல் முக்கியமானது.  காந்தியவாதியான சுனில்கிருஷ்ணன் காந்தி டுடே என்னும் இணைய இதழின் ஆசிரியர். இலக்கியச் செயல்பாட்டாளராகவும் முதன்மைப்பணி ஆற்றிவருபவர்.

சுரேஷ் பிரதீப்

சிறுகதைகளில் விஷால்ராஜா வடிவ அடக்கம் கொண்ட கதைகளை எழுதுகிறார். அவருடைய திருவருட்செல்வி அண்மைக்கால சிறுக்தைத் தொகுதிகளில் முக்கியமான ஒன்று. சுரேஷ்பிரதீப் பலவகையான வடிவச்சோதனைகளுடன் எழுதி வரும் படைப்பாளி. அவருடைய ஐந்து சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவ்வாண்டு யுவபுரஸ்கார் விருது பெற்ற லோகேஷ் ரகுராமன் தஞ்சைப்பின்னணியில் எழுதி வருகிறார்.

கார்த்திக் பாலசுப்ரமணியம் நவீன வாழ்க்கையிலுள்ள உறவுச்சிக்கல்களையும் பொருளில்லா உழைப்பின் வெறுமையையும் நுணுக்கமாகச் சித்தரித்தவர். அவருடைய நட்சத்திரவாசிகள், தரூக் என்னும் இரு நாவல்கள் முக்கியமானவை. சி.சரவணக் கார்த்திகேயன் இன்னொரு வகையில் நவீன வாழ்க்கையின் சிக்கல்களை வெவ்வேறு புனைவுச்சூழல்களில் வைத்துப் பேசுகிறார். காந்தியின் பாலியல்சோதனைகள் பற்றிய அவருடைய் ஆப்பிளுக்கு முன் குறிப்பிடத்தக்க படைப்பு.

கார்த்திக் பாலசுப்ரமணியன்

கார்த்திக் புகழேந்தி திருநெல்வேலி நாட்டார்க்கதைக்கருக்களை நவீன புனைகதையாக ஆக்குபவர். சுஷீல்குமார் நாகர்கோயில் தொன்மங்களையும் கிராமிய வாழ்க்கையையும் சார்ந்த கதைகளை எழுதுகிறார். தமிழில் இவ்வகை கதைகள் எப்போதும் வெவ்வேறுவகையில் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் நகரத்தை கிராமம் சந்திப்பதென்பது நமது வாழ்க்கையின் யதார்த்தங்களில் முக்கியமானது.

ஜெயன் கோபாலகிருஷ்ணன் , லெ.ரா.வைரவன், ராம் தங்கம்ஆகியோர்அவ்வகையில் தெற்கத்திய கிராமிய வாழ்க்கையை எழுதும் படைப்பாளிகள்.  கிராமத்தில் வாழ்ந்து அவ்வாழ்க்கையை எழுதிய முந்தைய தலைமுறை படைப்பாளிகளான சோ.தர்மன் போன்றவர்களின் எழுத்தில் இருந்து இவ்வகை எழுத்து மாறுபட்டது

தெய்வீகன்

தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்று பிறிதொரு வாழ்க்கைச்சூழலில் இருந்து கதைகளை எழுதுபாவ்ர்கள் பொதுவாக அரிதானவர்கள். நம் புலபெயர்வின் அளவை வைத்து பார்க்கையில் மிகமிகக்குறைவானவர்களே புதிய வாழ்க்கையை எழுதியவர்கள். அவ்வகையில் ஜப்பானிய வாழ்க்கைப்பின்புலத்துடன் எழுதும் ரா.செந்தில்குமார்  முக்கியமானவர். அவருடைய இசூமியின் நறுமணம், பதிமூன்று மோதிரங்கள் ஆகியவை அண்மையில் அதிகமும் கவனிக்கப்பட்ட சிறுகதைத் தொகுதிகள்.

ஆஸ்திரேலியப் பின்னணியில் கதைகளை எழுதும் தெய்வீகன் ஈழப்போராட்டத்தின்போது புலம்பெயர்ந்தவர். அவருடைய ததைகளில் புலம்பெயர்தலின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய வாழ்க்கையின் நுண்ணிய சித்திரங்கள் தமிழ்ப்பண்பாட்டுநோக்கில் கூறப்பட்டுள்ளன.

ரா.செந்தில்குமார்

மயிலன் ஜி.சின்னப்பன்  தன் மாறுபட்ட கதைக்கருக்களால் அதிகமும் பேசப்படும் படைப்பாளி. மருத்துவராகப் பணியாற்றுபவர். அவருடைய முதல்நாவலான பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் பரவலாக வாசிக்கப்பட்ட படைப்பு. மயிலன் சின்னப்பன் பல்வேறு பண்பாட்டுக்குறிப்புகளுடன் எழுதப்படும் கதைகளுக்காக அறியப்பட்டவர். சித்ரன் அவருடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டியவர். சித்தமருத்துவராக காரைக்குடியில் பணியாற்றுபவர்.

செந்தில் ஜெகந்நாதன் தஞ்சை மாவட்டத்தின் பின்னணியில் வேளாண்மைக்குடிகளின் கதைகளை எழுதியவர். அவருடைய மழைக்கண் அண்மையில் தமிழில் அதிகம் விவாதிக்கப்பட்ட சிறுகதைத் தொகுதி. சினிமாவில் பணியாற்றுகிறார். அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவரான பா.திருச்செந்தாழையுடன் அவரை ஒப்பிடலாம்.

ஜா.தீபா
ஜா.தீபா

சினிமாப்பின்னணியுடன் எழுதும் இன்னொரு படைப்பளி ஜா.தீபா. நெல்லைப்பின்னணி கொண்ட பல கதைகளை எழுதியவர். சினிமா குறித்த கட்டுரைகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

ஈழநாட்டைச் சேர்ந்தவர்களான அகரமுதல்வன், வாசு முருகவேல் இருவருமே தமிழகத்தில் இன்று அதிகமான வாசிக்கப்படும் படைப்பாளிகள். உணர்ச்சிகரமான நடையும் படிமங்களும் கொண்டது அகரமுதல்வனின் எழுத்து. மெல்லிய அங்கதம் கொண்ட யதார்த்தவாதக் கதைகளை வாசு முருகவேல் எழுதுகிறார். இருவருக்கும் தமிழகமெங்கும் அவர்களுக்கான வாசகர்கள் உள்ளனர்.

ம.நவீன்

வெவ்வேறு வரலாற்றுச்செய்திகளை மறு ஆக்கம் செய்து சிறுகதைகளை எழுதி வருகிறார் ரம்யா. நீலி என்னும் இணைய இதழின் ஆசிரியரும்கூட. நீலத்தாவணி அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி. தீபு ஹரி முதன்மையாக புதுக்கவிதைகள் எழுதிவருபவர். அண்மையில் கதைகளும் எழுதுகிறார். பலவகையிலும் இவர்களை முந்தைய தலைமுறை எழுத்தாளரான உமாமகேஸ்வரியுடன் ஒப்பிடலாம்.

சிங்கப்பூர் எழுத்தாளர்களான அழகுநிலா சிங்கப்பூர் பின்னணியிலும் தமிழகப்பின்னணியிலும் எழுதுபவர்.  இதழாளரும் இலக்கிய ஒருங்கிணைப்பாளருமான லதா சிங்கப்பூரின் பின்னணியில் முக்கியமான கதைகளை எழுதியவர். சிங்கப்பூரின் எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்று சித்துராஜ் பொன்ராஜ் ஐ குறிப்பிடலாம்.

வாசு முருகவேல்

தமிழ்ப்பிரபா பேட்டை என்னும் முதல்நாவல் வழியாக தமிழிலக்கியத்தில் முக்கியமான இடத்தை பெற்றவர். வாழ்க்கைவரலாற்று நாவலான கோசலை தமிழ்ச்சூழலில் தலித் வாழ்க்கையின் போராட்டகுணத்தை, கல்வி வழியாக மக்கள் மேலெழுந்து வருவதன் சித்திரத்தை அளிக்கும் நாவல்.

மலேசியாவில் இருந்து எழுதும் படைப்பாளிகளில் ம.நவீன் முக்கியமானவர். அங்கே வல்லினம் என்னும் இலக்கிய இயக்கத்தை முன்னெடுப்பவர். அவருடைய பேய்ச்சி, சிகண்டி என்னும் நாவல்கள் முக்கியமானவை. மலேசியாவில் நவீன இலக்கியத்தின் முதன்மையான ஆளுமை என அவரை மதிப்பிடலாம்.

அனோஜன் பாலகிருஷ்ணன்

மலேசியாவில் அண்மையில் தொடர்ச்சியாக இளம்படைப்பாளிகள் திறமையான எழுத்தாளர்களாக உருவாகி வருகிறார்கள்.ச.பாலமுருகன்,அரவின்குமார், அ.பாண்டியன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மலேசிய எழுத்து தமிழகத்தின் சாயல் அற்றது, அவர்களுக்கே உரிய ஒரு பண்பாட்டை முன்வைப்பது.

சுவிட்சர்லாந்தில் இருந்து  எழுதிவரும் சயந்தன்  ஈழத்தில் இருந்து அந்நாட்டுப் புலம்பெயர்ந்தவர்.  சயந்தன் எழுதிய ஆதிரை என்னும் நாவல் தமிழிலக்கியத்தில் ஈழப்போரைச் சித்தரித்த முதன்மையான படைப்பாக மதிப்பிடப்படுகிறது.

சயந்தன்

முற்றிலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அஜிதன், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன். அஜிதன் எழுதவந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு நாவல்கள் (மைத்ரி, அகல்கிஸா) ஒரு சிறுகதைத் தொகுதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். மென்மையான கற்பனாவாதத் தன்மை கொண்ட இக்கதைகள் கற்பனாவாதத்தின் உலகியல்தன்மையை கடந்து தத்துவார்த்தமான ஆன்மிகமான தளங்களை நோக்கிச் செல்பவை.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் தென்மாவட்டத்து நாட்டாரியலைப் பின்னணியாகக் கொண்ட கதைகளை எழுதுபவர். தொன்மங்களை நவீனப்படிமங்களாக ஆக்க முயல்கிறார். இவருடைய தொகுதி ஏதும் இதுவரை வெளிவரவில்லை. காளிப்பிரசாத் அவருடைய முதல்தொகுதியான ஆள்வதும் அளப்பதும் வழியாகக் கவனம்பெற்றவர்.

சுசீல்குமார்

இவை பொதுவான பரிந்துரைகள். இவர்களில் சிலர் இன்னும் முழுமையாக தங்களை நிறுவிக்கொள்ளவில்லை. இன்று நான் முழுமையான பட்டியல்களைப் போடுவதில்லை, முன்புபோல முழுமையான வாசிப்பு என்னிடமில்லை என்பதே காரணம். நான் என் அளவிலான பரிந்துரைகளையே அளித்துள்ளேன். ஆனால் இவர்கள் அடிப்படையான கலைத்திறனும், இலக்கியத்தில் தீவிரமும் கொண்டவர்கள். இவர்கள் வழியாக நாம் இன்றுவாழும் தமிழிலக்கியத்தின் துடிப்பான இளந்தளிர்ச்சுருளை அறிந்துகொள்ள முடியும்.

பொதுவாக தீவிரமான இலக்கியவாசகர்கள் இளம்படைப்பாளிகளைக் கவனிக்கவேண்டும். அவர்களில் உருவாகி வரும் புதிய சாத்தியக்கூறுகளை அடையாளம் காணவேண்டும். சாதாரணமாக இளம்படைப்பாளிகளை அவர்களைப்போன்ற இன்னொரு இளம்படைப்பாளி மட்டுமே வாசிக்கிறார். வாசகர்கள் உருவாகி, அவர்கள் இளம்படைப்பாளிகளுக்கு தொடர் எதிர்வினைகளை அளிக்கையிலேயே தீவிரமான இலக்கிய இயக்கம் உருவாகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்- கீரனூர் ஜாகீர் ராஜா
அடுத்த கட்டுரைPhilosophical Discourses