படையல் என்னும் புதையல்
வணக்கம் ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் ஈஸ்வரி. சென்னை தான் குடித்தனம். புனைவுகளை அதிகம் வாசிக்கும் பழக்கம் உடையவள். உங்களின் ஒரு சில படைப்புகள் மட்டுமே வாசித்திருக்கிறேன். மிகவும் பாதித்தது நூறு நாற்காலிகள். அதை படிச்சு முடித்ததும் அம்மாவுக்காக அழுகனுமா, இல்லை அவர் கலெக்டர் ஆனதுக்கு சந்தோஷப் படனுமா, அப்படின்னு யோசிக்கும் போதே என்ன படிச்சாலும் பெரிய பதவிக்கு போனாலும் இதுதான் நடக்கும் அப்படின்னு கோபம் தான் கடைசியில் மிச்சமாகுது. அந்த ஆதங்கத்தோடு இரண்டு நாள் கணவரிடம் புலம்ப மட்டுமே முடிந்தது என்னால்.
நூறு நாற்காலிகள் படித்து ரொம்ப நாள் கழித்து படித்தது தான் படையல். நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்ட மாதிரி அந்த கதை களத்துக்கு ஒவ்வொரு வரியும் கூட்டிட்டு போயிடுச்சு.
கந்தவர்னில் ஒரு சின்ன இடத்தில் மட்டுமே வரும் வள்ளியம்மை கடைசியில் சாமியாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சாங்க. அணஞ்ச பெருமாளுக்கு வள்ளியம்மை பத்தி தெரிஞ்சுருக்குமா அப்படிங்கிற கேள்வியோடே கழிந்தது இரண்டு நாள் சிந்தனை. தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நீங்க கண்டிப்பா யோசித்து இருப்பிடங்கள். இல்லையா?
கந்தர்வனின் அடுத்த கட்டமாகவே யட்சனை பார்க்க வைத்துள்ளீர்கள். புத்தகத்தின் அட்டைப் படம் என்னவோ மங்கம்மாள் ராணியையும் பேரனையுமே குறித்தாலும் என் கண்ணுக்கு எரிமாட சாமியாகவும், உடனுரைநங்கையாகவும் அவர்களின் கீழே இருக்கும் இயக்கன் சாமியாகவே தெரியுது.
எரிசிதையில் வருகிற இரண்டு வேறு கனவு காட்சிகள் அந்த இரண்டு பெண்களின் மனநிலையை கண் முன்னாடி கொண்டு வந்தது. அதில் இருக்கும் காதலை ஏத்துக்க முடிந்தது. படையல் நீங்க சொல்லி இருக்கிற மாதிரி ஆன்மீகத்தின் உச்சம். திரை – ஒன்னுமே இல்லாத வாழ்றதுக்கு திரையழகும் நல்லது தான். ஆனால் திரையை நீக்கும் போதே உண்மையை அறிய முடிகிறது.
கடைசியாக மங்கம்மாள் சாலை. அதை படித்து முடித்ததும் கண்டிப்பாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது. என் சொந்த ஊர் திருநெல்வேலி. எப்பொழுதும் சென்னையில் இருந்து காரிலே தான் பயணம். எப்ப காரில் போகும் போது கேட்காத காலமே கிடையாது, எப்படி இந்த வரண்ட பூமியில் (மதுரை-கோவில்பட்டி) முன்னாடி காலத்தில் வாழ்ந்திருப்பாங்கன்னு. இப்ப கொஞ்சம் ஊகிக்க முடியுது. இனி ஒவ்வொரு பயணத்தின் போதும் மங்கம்மாள் ராணிக்கும், மீனாட்சிக்கும் நன்றி சொல்லாமல் பயணிக்க முடியாது.
படையல் படைப்பை படித்த பிறகு தமிழ் நாட்டின் வரலாறு இன்னுமே தெரிந்து கொள்ள ஆசை வந்துள்ளது. அதற்கு முழு காரணமாக அமைந்தது உங்களின் கதை களமே. என் குழைந்தகளுக்கும் தோழர்களின் குழந்தைகளுக்கும் அடுத்த எங்களின் பயணத்தில் சொல்வதற்கு “நெறைய கதை” கொடுத்ததற்கு மிக்க நன்றிகள். தமிழ்நாட்டின் வராலரை தெரிந்து கொள்ள இன்னும் சில புத்தகங்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றியுடன்
ஈஸ்வரி.