( 30 ஜூலை 2024 அன்று வெள்ளக்கோயில் புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை. எழுத்துவடிவம்: விவேக்ராஜ்)
அனைவருக்கும் வணக்கம்
இங்கு ஒரு பேரறிஞரை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவருடைய பெயர் தென்திருப்பேரை அனந்தகிருஷ்ண ஐயங்கார். இங்கு யாருமே அந்த பெயரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில் நானே சமீபத்தில்தான் அவரைப்பற்றி கேள்விப்பட்டேன். தென்திருப்பேரை என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி கரையில் இருக்கும் ஒரு வைணவத் தலம். இவர் அங்கு பிறந்தவர். இவருடைய தந்தை திருவிதாங்கூர் சமஸ்தான ஆஸ்தான வித்வானாக இருந்தவர். ஏறத்தாழ பாரதியின் சமகாலத்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட மரபிலக்கிய செய்யுள் பாடல்களை எழுதியுள்ளார். டி.கே.சிதம்பரநாத முதலியார் உள்ளிட்ட பல அறிஞர்களுக்கு நெருக்கமானவர். இங்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டிக்கொண்டபோது அவரை புகழ்ந்து பாடி பரிசு பெற்றிருக்கிறார். கவர்னரை சந்தித்து பரிசு பெற்றிருக்கிறார். திருவிதாங்கூர் அரசாங்கத்திடமிருந்து விருதும் தங்கத்தோடாவும் பெற்றிருக்கிறார். இவ்வாறு அக்காலத்தில் ஒருவித ராஜவாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவர் எழுதிய ஒருவரிகூட இன்றைய தலைமுறையினரால் படிக்கப்படுவது கிடையாது. மொத்தமாகவே மறைந்துபோய்விட்ட ஆளுமை.
அவருடைய சமகாலத்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. ஆனால் அவருடைய ஒவ்வொரு வரியும் இன்றும் உள்ளன. இன்றும் பாரதி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவரை அச்சில்வராத அவருடைய எழுத்துக்களை தேடிப்படிப்பது, அவர் வேறு ஏதேனும் பெயரில் எழுதியிருந்தால் அது அவர்தான் என உறுதிசெய்துகொண்டு பதிப்பிப்பது, அவர் பங்களிப்பாற்றிய படைப்புகளை கண்டுபிடிப்பது என்று அவருடைய ஒவ்வொரு துளி எழுத்தும் அச்சில் வந்துகொண்டும் படிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.
இத்தகைய வேறுபாடு ஏன் நடக்கிறது ? 1915 களில் திருநெல்வேலி நகரத்தில் அனந்தகிருஷ்ண ஐயங்கார் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது பாரதி எதிரில் வந்திருந்தால் அனந்தகிருஷ்ணர் அவரை ஒரு மனிதனாகக்கூட கருதியிருக்க மாட்டார். ஏனென்றால் அன்று பாரதி பணமோ செல்வாக்கோ இல்லாத சாதாரண மனிதர். ஆனால் அனந்தகிருஷ்ணரோ பிரபுக்களால் கொண்டாடப்பட்ட மாபெரும் அறிஞர். இவர்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன ? ஒருவருக்கு காலம் ஒரு சிம்மாசனத்தை போட்டு வைத்திருக்கிறது. இன்னொருவருக்கு ஒரு குப்பைக்கூடையை செய்துவைத்திருக்கிறது. நூறாண்டுகளுக்கு பின் இப்போது அந்த வேறுபாடு நமக்கு தெரிகிறது. ஆனால் அன்று திருநெல்வேலியில் இருந்த பலருக்கும் அந்த வேறுபாடு தெரிந்திருக்காது. அதைத்தான் பண்பாட்டில் வாழ்தல் என்கிறோம். சிலர் வாழ்கிறார்கள், சிலர் அப்படியே மறைந்துபோகிறார்கள். எவர் வாழ்கிறார்கள் என்பது முக்கியமானது.
இந்தியாவை அந்நியர்கள் ஆண்டுகொண்டிருந்தபோது, இங்கு அடிமைத்தனம் ஓங்கியிருந்தபோது, இந்தியாவின் அதிபராக முடிசூட்டிக்கொண்ட ஒரு வெள்ளையருக்கு வாழ்த்துப்பா எழுதி தங்கத்தோடா வாங்கியவருக்கு வரலாறு அளித்தது அந்த குப்பைக்கூடையையே. ஆனால் வெள்ளையனுடைய தடியடியை ஏற்று சிறைசெல்ல தயாராக இருந்து அந்நிய மண்ணில் குடியேறி அங்கு பட்டினியில் வாழ்ந்து, ‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா இப்பயிரை செந்நீரால் காத்தோம்’ என்று பாடி வாழ்ந்த ஒருவனுக்கு வரலாறு அளித்தது அந்த சிம்மாசனம். அவன்தான் வரலாற்றிலும் பண்பாட்டிலும் வாழ்பவன். எல்லா காலகட்டத்திலும் அப்படித்தான்.
இன்று நம் கண்முன்னால் மணிமுடி சூடி ஓங்கி நிற்பவர்கள், அரசையும் அதிகாரத்தையும் அண்டி பிழைப்பவர்கள், எப்போதெல்லாம் எவரெவர் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களையெல்லாம் வாழ்த்திப்பாடி வாழும் அனைவருக்கும் ஏற்கெனவே அனந்தகிருஷ்ண ஐயங்காருக்கு போடப்பட்ட குப்பைக்கூடை காத்திருக்கிறது. எவனொருவன் நான் இந்த மண்ணின் கலைஞன் என்று தலைதாழ்த்தாமல் தருக்கி நிற்கிறானோ அவனுக்கு சிம்மாசனம் காத்திருக்கிறது. அவர்கள் வழியாகத்தான் இந்த பண்பாடு தன்னை தொகுத்துக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளையும் செல்வந்தர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் நாடி வாழ்பவர்களே எப்போதும் வெளிச்சத்தில் இருப்பர். அவர்களைத்தான் சாமானியர் வழிபடுவர். ஏனெனில் சாமானியர்களுக்கு அவர்களைத்தான் புரியும். ஆனால் உண்மையில் வரலாற்றில் நிற்பவர்கள் அவர்களல்லர்.
அறிஞர்கள் பண்பாட்டில் வாழ்தல்
ஒரு பண்பாட்டினுடைய ஆன்மா எதுவோ அதை பிரதிபலிப்பவவனே வரலாற்றில் நிற்பவன். சமயங்களில் அவனை நம்மால் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். பாரதி பற்றி அவருடைய சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் எழுதியிருக்கும் சித்திரம் என்பது அவ்வளவு ஒளிமிக்கது அல்ல. அவருக்கு அபின் உட்கொள்ளும் பழக்கம் இருந்தது. வ.உ.சி.யின் தன்வரலாற்று குறிப்பில் ஒரு நிகழ்வு வருகிறது. பாரதி ஒரு சாமியாருடன் சென்னையில் உள்ள வ.உ.சி.யின் இல்லத்திற்கு செல்கிறார். இருவருமே லேகியம் உட்கொண்டிருந்ததாகவும் இருவர் உடலிலும் அழுக்கு படிந்திருந்ததாகவும் வ.உ.சி குறிப்பிடுகிறார். அவர்கள் குளிப்பதற்கு வெந்நீர் கேட்க வ.உ.சி.யின் மனைவி அதை வைத்து கொடுக்கிறார். அதில் இருவரும் குளிக்கிறார்கள். குளிக்கும்போதே அவர்களுக்குள் சண்டை வருகிறது. இவ்வாறாகவே வ.உ.சி. தனது நூலில் ஒரு சித்திரத்தை அளிக்கிறார்.
ஆனால் அந்த பாரதி அல்ல வரலாற்றில் நிற்கும் பாரதி. கண்முன்னால் உருவாக்கிய விடுதலை வேள்வி கருகிப்போகும்போது அவர் சென்றடைந்த இருள் அது. சான்றோர்கள் சிறையில் மாள்வதோ என்று எழுதியவனின் கண்ணீர் அந்த சித்திரத்தில் உள்ளது. அவன் வெற்றியடைந்த, மகிழ்ச்சியான மனிதனல்ல. தகிக்கும் ஓர் அனல்த்துண்டாகவே அவன் வாழ்ந்திருக்கிறான். அக்காலகட்டத்தில் அவனை பார்ப்பவர்கள் அவனை ஒரு போதையடிமை என்று நினைத்திருக்கலாம். அதேசமயம் அனந்தகிருஷ்ணர் ஜகஜோதியாக வாழ்ந்தவர். ஆனால் எது குப்பைக்கூடை, எது சிம்மாசனம் என்று வரலாறு ஏற்கெனவே முடிவு செய்துவைத்திருக்கிறது.
இங்கு பாரதியை பற்றி பேசும்போது எனக்கு நினைவுக்கு வருபவர் ஜெயகாந்தன். மடம் என்று சொல்லபடும் அவருடைய மொட்டைமாடி கொட்டகையில் அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆறேழு நபர்கள் அங்கு இருப்பர். அது ஒருவகையான சமத்துவம் திகழும் இடம். அன்று தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவரும் செல்வாக்கின் உச்சத்தில் இருந்தவருமான கருப்பையா மூப்பனார் அங்கு வருவார். அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருப்பவரிடம் சற்று தள்ளி அமரும்படி சொல்லிவிட்டு அங்கே உட்காருவார். அந்த கூட்டத்தில் ரிக்ஷா ஓட்டுனரும் அமர்ந்திருப்பார். தெருவில் செல்லும் ஒருவர் கஞ்சாவின் மணத்தை அறிந்து ஒரு இழுப்புக்காக அங்கு வந்து உட்காருவார். ஜெயகாந்தனுக்கு அவர்கள் எல்லோருமே சமம்தான்.
ஜெயகாந்தன் பேசும்போது அந்த தருணத்தில் ஏதோவொன்றை தொட்டெடுத்து பேசிச்செல்வார். ஒருமுறை சித்தர் பாடல் ஒன்றை சொன்னார். அதில் பஸ்பம் என்ற சொல் வந்தது. சித்தர் பாடல்களில் இந்த பஸ்பம் என்ற சொல் அதிகமுறை வருகிறது என்று நான் சொன்னேன். அதிலிருந்து அவர் ஒரு பேச்சை தொடங்கினார். அது கற்பித்தல் அல்ல. அங்கிருக்கும் யாருக்கும் அது நினைவில் இல்லாமலும் போகலாம். ஒருவகையில் அது வரலாற்றை நோக்கி பேசுவதுதான். மீண்டும் அதைப்பற்றி அவர் பேசவோ எழுதவோ முடியாமல் போகலாம். ஆனால் அப்போதைக்கு அவர் அதை பேசிச்செல்வார்.
பஸ்பம் என்பது சித்த மருத்துவத்தில் உள்ள கருத்து அல்ல. அது சைவ சித்தாந்தத்தில் உள்ள கருத்து. ஒவ்வொன்றையும் சாம்பலாக்க முடியும் என்பதே அதன் அடிப்படை கருத்து. இப்புவியில் உள்ள அனைத்தையும் சாம்பலாக்கி நீரில் கரைக்கமுடியும். அது எப்படி என்று தொடர்ந்து சோதனை செய்கிறார்கள். அதன் ஒரு குறிப்பிட்ட விளைவாக சிலவகை சாம்பல்களை மருந்தாகவும் மாற்றிக்கொள்கிறார்கள். ஒவ்வொன்றும் சாம்பலாகும் என்ற சைவ சித்தாந்தத்தினுடைய கொள்கையைத்தான் விபூதி என்கின்றனர். அனுபூதி என்றால் களிப்பு. விபூதி என்றால் களிப்பின்மை, இன்பமின்மை என்று பொருள். இங்குள்ள அனைத்தும் ஒருகணம் சாம்பலாகும். அம்பலத்து ஆடும் அவன் அங்கை சூடிய தீயால் எரிக்கும்போது இங்கிருக்கும் அனைத்தும் சாம்பலாகத்தானே வேண்டும். அந்த சாம்பலை உருவாக்கி பார்க்கும் ஒரு சித்தாந்தம் சைவத்தில் இருக்கிறது. அதன் ஒரு சிறு வெளிப்பாடுதான் அவர்கள் செய்த பஸ்ம சோதனைகள் என்று அவர் சொன்னார்.
அவர் அதை பேசும்போது நான் ஒன்றை நினைத்துக்கொள்வேன். அந்த பேச்சை அப்போது யாரும் குறிப்பெடுத்துக்கொள்ளவில்லை. அவர் சொல்லிக்கொண்டிருந்த மிக அசலான அந்த கருத்தை அனைவரும் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தனர். யாருமே அதை பதிவு செய்யவில்லை எனில் அது அப்படியே மறைந்துவிடும் என்ற பதைப்பு எனக்கு ஏற்பட்டது. நீண்டகாலத்திற்கு பிறகு நண்பர்களிடம் அதுபற்றி சொன்னேன். ‘நீங்கள் அதை கேட்டீர்கள் அல்லவா ? யாரோ ஒருவன் கேட்டால் போதும். அவன் வழியாக அதன் தொடர்ச்சி நிகழும்’ என்றார்கள். இன்று அதை நான் உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதுதான் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் பண்பாட்டில் வாழும் விதம்.
இன்று திரும்பிப்பார்க்கும்போது எத்தனையோ புலவர்களின் பெயர்களும் அறிஞர்களின் பெயர்களும் வரலாற்றில் இருக்கின்றன. ஆனால் எத்தனை அரசர்களின் பெயர் இருக்கிறது ? ஒரு புலவன் பாடினால்தான் அந்த அரசனுடைய பெயர் இருக்கும். வரலாறு என்பது அறிஞர்களின் தொடர்ச்சியாக எழுதப்படுவது. சொல்லப்போனால் அது அறிவின் தொடர்ச்சி. இந்த மனிதகுலமே சேர்ந்து அறிவு என்ற ஒன்றை திரட்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு நூலகத்திற்கு சென்று அங்கிருக்கும் மொத்த நூல்களையும் பாருங்கள். எவ்வளவுபெரிய ஞானசேகரம்!
உலகின் தலைசிறந்த பிரம்மாண்டமான நூலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். லண்டன் மியூசியம் நூலகம் போன்று மிக தொன்மையான நூலகங்களுக்கு சென்றிருக்கிறேன். அதை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எவ்வளவு பெரிய அறிவை மனிதன் ஒட்டுமொத்தமாக திரட்டி வெளியே வைத்திருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக பல்லாயிரம் அறிஞர்கள் எழுதி, பேசி, உரைகளும் மறுவிளக்கங்களும் அளித்து தொடர்ந்து திரட்டித்திரட்டி ஒற்றை துளியாக ஆக்கி வைத்திருக்கின்றனர். பல தேனீக்கள் எடுத்துவந்த தேன் ஒரு கூட்டில் இருப்பதுபோல அனைத்து அறிவையும் ஒன்றென திரட்டி வைத்திருக்கிறார்கள்.
வரலாறை பார்க்கும்போது, மனிதன் முதலில் பேச கற்றுக்கொண்டபோதே அதை தொகுக்க ஆரம்பித்திருக்கிறான் என தெரிகிறது. அதன்பிறகு மொழி என்ற ஒன்று உருவாகிறது. மொழி வழியாக அனைத்தையும் தொகுக்கிறான். அதன்பிறகு இலக்கியம், நூல்கள், நூலகங்கள் வாயிலாக தொகுத்தல் தொடர்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் இருந்துதான் மொழிபெயர்ப்பு எனும் விஷயம் உருவாகிறது. குறிப்பாக காலனிய ஆதிக்கவாதிகள் தாங்கள் ஆண்ட நாடுகளில் இருந்த நூல்களையெல்லாம் தங்கள் மொழிக்கு மொழிபெயர்த்து கொண்டுவந்து சேர்த்தார்கள். ஐரோப்பிய நூலகங்களில் உலக ஞானமே ஒன்றாக திரட்டப்பட்டிருக்கிறது. இன்று இணையத்தில் பல லட்சம் நூல்கள் திரட்டப்படுகின்றன. அடுத்தகட்டமாக செயற்கை நுண்ணறிவு வந்து இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து பார்க்கக்கூடிய வசதியை நமக்கு அளிக்கிறது.
நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதும்போது அதற்கான ஆராய்ச்சிக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டது. அதே அளவுக்கு ஆராய்ச்சி பின்புலம் கொண்ட ரஷ்ய வரலாற்று பின்னணியில் எழுதப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு ஒன்றரை ஆண்டுகளே தேவைப்பட்டது. ஏனெனில் விஷ்ணுபுரம் எழுதியபோது இணையம் இல்லை. பின்தொடரும் நிழலின் குரல் எழுதியபோது இணையம் வந்துவிட்டது. வருங்காலத்தில் இந்த ஞானம் இன்னும் ஒன்றாகத் திரட்டப்படும்.
இவ்வாறுதான் பண்பாட்டில் அறிஞர்கள் ஞானமாக வாழ்கிறார்கள். அவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமல்லாது என்றைக்குமாக வாழ்கிறார்கள். பலகோடி மனிதர்கள் இங்கு பிறந்து வாழ்ந்து சாகிறார்கள். அவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமே வாழக்கூடியவர்கள். அவர்களின் பிள்ளைகள் அவர்களை ஓராண்டுகாலம் வரைக்கும் நினைவில் வைத்திருக்கலாம். அதற்குப்பின் அவர்கள் வெறும் முதலெழுத்தாக மட்டுமே சுருங்கிப்போவர். மெய்யான அறிஞர்கள் மட்டும்தான் இறந்தகாலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வருவார்கள். நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு சென்றுகொண்டிருப்பார்கள்.
சாமானியர்கள் பண்பாட்டில் வாழ்தல்
ஆனால் அவர்கள் மட்டும்தான் பண்பாட்டில் வாழ்கிறார்களா சாமானிய மனிதர்கள் வாழ்வதில்லையா ?
ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரிய நாட்டில் ஒரு சிற்றூருக்கு நான் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கு ஒரு பழமையான சர்ச்சில் கிறிஸ்தவ புனிதர்களை கௌரவிக்கும் விதமான பழமையான ஒரு கத்தோலிக்கத் திருவிழா (All Saints Festival) நடந்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட பதினாறாம் நூற்றாண்டு சூழல் அங்கு நிலவியது. நீண்ட கவுன் அணிந்த பெண்கள், காக்கி நிற ஆடையும் பெரிய தொப்பியும் அணிந்த ஆண்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். ஒரு பகுதியில் ஜிப்ஸிகள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தனர்.
அந்தச் சிறிய தேவாலயத்தை ஒட்டி ஒரு சந்தை உருவாகியிருந்தது. அதை ஃப்யெர என்பார்கள். கேன்டீஸ் எனும் சீனி மிட்டாய்கள், சீஸ் எனும் பாலாடைக்கட்டிகள் அங்கே பலவிதமாக செய்துவைக்கப்பட்டிருந்தன. பல்வேறு விதமான இறைச்சிகளை சுட்டு கொடுத்துக்கொண்டிருந்தனர். அந்த சூழலே எங்களுக்கு விநோதமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. நாங்கள் மட்டும்தான் வேறொரு உலகில் இருந்து வந்தவர்களாக அங்கு இருந்தோம். ஒரு தொன்மையான காலகட்டத்துக்கு திடீரென்று சென்றுவிட்டிருந்தோம்
ஆனால் அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது, இவையெல்லாம் ஒருவித ஏற்பாடுகள் என்று. அங்கு நிகழ்ந்தது ஒருவகையான நாடகம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரைக்கும் இத்தகைய திருவிழாக்களெல்லாம் அங்கு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. இருபதாம் நூற்றாண்டில் அனைவருக்கும் ஆர்வம் போய்விட்டதால் அந்த விழாக்களையெல்லாம் அப்படியே விட்டுவிட்டனர். உலகப்போர்களுக்கு பின் திருவிழாக்கள் முற்றிலும் நின்றுபோய் மறக்கப்பட்டுவிட்டன.
அதன்பிறகுதான் அந்த இழப்பை அவர்கள் உணர்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களுக்கு கலாச்சாரமே இல்லாமல் போய்விட்டது. உலகில் பல நாடுகளில் திருவிழாக்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனால் தங்களுக்கு திருவிழாக்கள் இல்லாமல் போய்விட்டதை உணர்ந்தார்கள். திருவிழா ஒரு பண்பாட்டுச் சொத்து என அறிந்தார்கள். ஆகையால் மறைந்த திருவிழாக்களை அவர்கள் மீண்டும் நிகழ்த்துகிறார்கள். அங்கிருந்த ஜிப்ஸிகள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள். பதினாறாம் நூற்றாண்டு சூழலை அங்கு செயற்கையாக உருவாக்கி திருவிழாக்களை ஒருவித நாடகம்போல் நடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டில், ஒரு ஐம்பதாண்டுகளில் மதுரை சித்திரை திருவிழா, காஞ்சி கருடசேவை, சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் போன்ற திருவிழாக்கள் நின்றுபோய் விடுகிறது எனக்கொள்வோம். அதன்பிறகு இன்னும் ஐம்பதாண்டுகாலம் கழித்து வரக்கூடிய தலைமுறையினர் திருவிழாக்களை இழந்துவிட்டோமே, பண்பாடற்றவர்களாக ஆகிவிட்டோமே என்று எண்ணி இந்த திருவிழாக்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து மீண்டும் நடித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் ? அதுதான் இன்று ஐரோப்பாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
வரலாற்றில் பண்பாட்டில் வாழ்வதென்பது நமது வாழ்க்கையை நாம் செறிவுபடுத்திக் கொள்வதே. உண்டு, உடுத்தி, குடித்து வாழ்ந்து சாவது வாழ்க்கை அல்ல. அது உயிரோடிருத்தல் (surviving) மட்டுமே. வாழ்தல் (living) என்பது பண்பாட்டில் வாழ்தலே. இந்த நூற்றாண்டின் இந்திய அல்லது தமிழ் பண்பாட்டின் எந்தெந்த அம்சங்களோடு உங்களுக்கு தொடர்பிருக்கிறது என்று பாருங்கள். அந்த தொடர்புதான் வாழ்தல் என்பது. இங்கிருக்கும் சங்கீதம் உங்களுக்கு தெரியுமா ? பண்ணிசை அறிமுகம் உள்ளதா ? இங்கிருக்கும் கலைகளில் அறிமுகம் உண்டா ? தலைசிறந்த நாதஸ்வர வித்வான் ஒருவர் வாசித்தால் ஒருமணிநேரம் உட்கார்ந்து உங்களால் கேட்கமுடியுமா ?
எண்ணிப்பாருங்கள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை உங்கள் முன்வந்து வாசித்தால் மெய்மறந்து உங்களால் அமரமுடியுமா ? உங்கள் தாத்தாவால் முடியும். உங்களால் முடியாது. நாம் இன்று பண்பாட்டில் இருந்து நழுவி வெறுமனே உயிரோடு இருக்க ஆரம்பித்திருக்கிறோம். இன்று ஐரோப்பியர்கள் வாழத்தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதற்குமுன் எந்த சூனியத்திற்கு சென்றார்களோ அந்த சூனியத்தை நோக்கி இன்று நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அவர்கள் வீழ்ந்ததை நாம் இங்கு திரும்ப நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் மீண்டதை நாம் அறியவில்லை.
இன்று நீங்கள் ஒரு கோவிலுக்கு செல்கிறீர்கள். பத்து இருபது நிமிடங்களுக்குள்ளாக அதை சுற்றிவந்துவிடுகிறீர்கள். ஆனால் கோவில் என்பது ஒரு கலைச்செல்வம். சிற்பக்கலையை ஓரளவுக்கு அறிமுகம் செய்துகொண்டிருந்தால் வாழ்நாள் முழுக்க பார்க்கக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் ஆலயங்கள் உள்ளன.
உதாரணமாக, தமிழக ஆலயங்களில் ஒரு முனிவருடைய சிலை உள்ளது. அவர் கைகளை கூப்பி நின்றிருக்கிறார். அவருடைய இடுப்புக்கு கீழே புலியின் கால்கள் உள்ளன. அங்கு வியாஹ்ரபாதர் அல்லது புலிப்பாணி என்று எழுதியிருக்கும். அதை பார்த்துவிட்டு புலிக்கால்களுடன் இருக்கும் பொம்மை என்று கடந்து சென்று விடுவீர்கள். கொஞ்சம் பண்பாட்டு அறிமுகம் இருந்திருந்தால் அது எவ்வளவு பெரிய உருவகம் என்று தெரிந்திருக்கும். அது யோகமரபின் மிக முக்கியமான உருவகம். யோகமரபில் புலிக்கால் என்பது ஒருமுறைகூட தவறாத, பிறழாத கால் என்று பொருள்.
நான் 1984 இல் கங்கையில் சுந்தரவனக்காடுகள் வழியாக படகில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது கமுகுப்பாளையில் செய்த முகமூடியை என்னிடம் கொடுத்து தலையின் பின்பக்கம் அணிந்துகொள்ளுமாறு சொன்னார்கள். முகம் பின்னோக்கி இருப்பதுபோல தெரியும் என்பதற்காக. நான் எதற்காக என்று கேட்டேன். புலி வந்து தூக்கிச் சென்றுவிடும், அதனால் பாதுகாப்புக்காக என்றார்கள். எப்படி என்று கேட்டேன். இந்த கிளைகள் வழியாக வரும் என்று அங்குள்ள மாங்குரோவ் மரங்களை சுட்டிக்காட்டினர்.
மாங்குரோவ் எனும் அலையாத்தி காடுகள் கங்கை நதிக்குள் இறங்கி நிற்கின்றன. ஒரு மனிதன் தொற்றி வரமுடியாத அளவுக்கு அதன் கிளைகள் மென்மையானவை. ஆனால் பெரும் எடைகொண்ட வங்காளப்புலி அதன் வழியே வரும். இரண்டு மாதங்களுக்கு முன்னால் படகில் சென்ற ஒருவரை பின்புறமாக வந்து புலி ஒன்று தூக்கிச்சென்றுவிட்டதாக படகோட்டி சொன்னார். அதுதான் புலிப்பாதம் என்பது. யானைக்கு கால் பதறும், புலிக்கு பதறாது. புலிக்கால் கொண்டவர் என்பது ஒரு பெரிய குறியீடு. ஒருபோதும் பிறழாத நடை கொண்டவர் என்பது பொருள். இது ஒருவகையான அடையாளம். இதுபோன்று குறைந்தது பத்தாயிரம் வகையான சிற்பங்கள் தமிழக ஆலயங்களில் இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு சிறு ஆர்வம் இருந்தாலும் அவன் செல்லக்கூடிய தொலைவு மிக அதிகம்.
இன்று இந்த தலைமுறைக்கு இருக்கும் பெரும் சிக்கலே சலிப்பு என்பதுதான். மூன்று நிமிட ரீல்ஸ்களாக பார்த்து தள்ளுகின்றனர். ஒரு ரயிலுக்காக காத்திருக்கும் ஐந்து நிமிடத்தில்கூட ஒருவன் ரீல்ஸ்களை புரட்டிக்கொண்டிருக்கிறான் என்றால் அவனுடைய உள்ளத்தில் எவ்வளவு தூரம் சலிப்பு இருக்கும் ? போர் அடிப்பதாக சொல்லப்படுவதன் அர்த்தம் என்னவென்றால் ‘என்னுடைய உள்ளத்துடன் இருக்க என்னால் முடியவில்லை’ என்பதே. தனது சொந்த மனத்துடன் வாழமுடியாததால் அதற்கு வெளியில் இருந்து எதையேனும் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
பண்பாட்டில் வாழவில்லை என்பதால்தான் ஒருவனுக்கு போர் அடிக்கிறது.நம்மை முழுதும் ஆட்படுத்தக்கூடிய அளவுக்கு பண்பாட்டு செறிவு இங்குள்ளது. மதம், சிற்பக்கலை, இசை, இலக்கியம் என்று எவ்வளவோ உள்ளன. ஆனால் அவற்றை அறிவதற்கு கொஞ்சமேனும் பயிற்சி வேண்டும். பண்பாட்டில் வாழ முயலவேண்டும். உங்கள் பக்கம் ஒரு அடிப்படை முயற்சி இல்லையென்றால் அது அப்படியே உங்கள் கண்மூடி பொருளற்று இருக்கும்.
அத்தகைய பயிற்சி இல்லாததால்தான் இதுபோன்று ரீல்ஸ்களை புரட்டிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ரீல்ஸ்களை புரட்டினால் ஓரிரு ஆண்டுகளில் அதுவும் சலித்துவிடும். அதன்பிறகு அவர்கள் சென்றுசேர்வது சூதாட்டமாகத்தான் இருக்கும். எங்கெல்லாம் இணைய விளையாட்டுகள் தீவிரமாக உள்ளதோ அங்கெல்லாம் அடுத்தகட்டம் என்பது சூதாட்டம்தான். நமக்கு முன்பே அந்த சூழ்நிலைக்கு சென்ற சீனா, ஜப்பான், கொரியர்கள் போன்றோர் திவாலான பின்புதான் நாம் இங்கு இப்போது அவற்றையெல்லாம் தொடங்கியிருக்கிறோம்.
அறிவுடன், கலையுடன் உள்ள உறவுதான் பண்பாட்டில் வாழ்தல் என்பது. பண்பாட்டின் ஒரு துளி சுவையை அறிந்தவனுக்கு சலிப்பு என்பது இல்லை. தமிழை அறிந்தவனுக்கு சாவு இல்லை என்று கவிஞர்கள் பாடுவது அதைத்தான். ஏதோவொரு சுவையை அறிந்தவனுக்கு அழிவில்லை.
நான் தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்பவன். பயணத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர் உடன் இருந்தால் அவரை தாங்கிக்கொள்ளவே முடியாது. திரும்பத் திரும்ப மூன்று விஷயங்களை பற்றி மட்டுமே அவர் பேசிக்கொண்டிருப்பார். ஒன்று, அவர் பிள்ளைகள் எங்கு வேலை பார்க்கிறார்கள் என்பது. இரண்டு, அவருக்கு என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பது. மூன்றாவதாக, என்னென்ன சாப்பிடலாம் என்று சொல்வார். இதையே மூன்றுமணிநேரமும் பேசிக்கொண்டிருப்பார். வேறு ஏதேனும் விஷயங்களை பற்றி பேசும் வயதான ஒருவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?
ஒரு தலைமுறை காலத்திற்குள்ளாக இந்த அளவுக்கு காலிடப்பாக்களாக நாம் ஆகிவிட்டோம். ஆனால் நமது தாத்தாக்கள் அப்படி இல்லை. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்வை வண்டி கட்டிச்சென்று விடியவிடிய கேட்டிருக்கிறார்கள். அதுதான் பண்பாட்டில் வாழ்வது என்பது. நாம் அப்படி வாழவில்லை. நாம் சலிப்பில் ஊறிக்கிடக்கிறோம்.
ஒருவன் பண்பாட்டில் வாழத்தொடங்கும்போதுதான் மெய்யான ஆன்மீகத்திற்குள்ளும் செல்லமுடியும். மற்றவர்கள் வியாபார பக்தியை மட்டுமே செய்வார்கள். ஒளவையார் சொன்னதுபோல ‘பாகும் பருப்பும் கலந்து நான் தருவேன். நீ எனக்கு இதைத்தா’ என்று கேட்பதுதான் இன்று பக்தியாக உள்ளது. இந்த காணிக்கைக்கு இது வரவேண்டும் என்பது ஒருவகை வியாபாரமே. இதற்கு அப்பால் உள்ள ஆன்மிகம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் அது பண்பாட்டை அறிவதனூடாக, பண்பாட்டில் வாழ்வதனூடாகத்தான் சாத்தியம். அந்த ஆன்மீகத்தை அறிவதற்கு ஒரு தன்னுணர்வு தேவை. அதை பக்தியில் இருந்து தியானத்தில் இருந்து அறியலாம். அதற்கான தொடக்கம் என்பது பண்பாட்டில் வாழ்தல்தான்.
எது நம் பண்பாடு ?
நான்கடவுள் படத்திற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம். அதில் நான் எழுதிய ஒரு கதாபாத்திரம் ருத்ரனின் குருவாக வரும் அகோரி. அந்த கதாபாத்திரத்திற்கு நடிகனை நடிக்கவைக்கமுடியாது என்று பாலா சொன்னார். ஏனெனில் என்ன இருந்தாலும் அவன் நடிகன் மட்டும்தான். திரைப்படக்கலை என்பது ஒன்றை இருநூறு மடங்கு பெரிதாக காட்டக்கூடியது. ஆனால் உண்மையான ஒருவனைத்தான் அவ்வாறு காட்டமுடியும். பொய்யாக ஒருவனை காட்டினால் அவன் நடிக்கிறான் என்பது தெரிந்துவிடும். அதாவது உண்மையில் பணக்காரராக இருக்கும் ஒருவரைத்தான் படத்திலும் பணக்காரராக நடிக்கவைக்க முடியும். நீதிபதியாக ஒருவர் வருகிறாரென்றால் அவர் உண்மையிலேயே ஓய்வுபெற்ற ஓர் அதிகாரியாகத்தான் இருப்பார். அவர் நடிக்கும்போதுதான் நம்பும்படியாக இருக்கும். அங்காடித்தெரு படம் எடுத்தபோது, கோடீஸ்வர முதலாளி கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க எவ்வளவோ நடிகர்கள் இருந்தும்கூட மிகவும் முயன்று பழ.கருப்பையாவை நடிக்கவைத்தோம். ஏனென்றால் அவர் உண்மையில் பணக்காரர். அந்த நடை, பாவனை வேறொருவருக்கு வராது.
அப்படியிருக்க ஆன்மீகத்தின் உச்சத்தில் இருக்கும் ஞானியான ஒருவரை யார் நடிப்பார்கள் ? அதற்கான ஆட்களை தேடினோம். அப்போது அங்கு ஒருவரை பார்த்தேன். நான் என்னுடைய கல்லூரிப்படிப்பின் கடைசி ஆண்டு படிப்பை துறந்து சாமியாராக கிளம்பி சென்றவன். சிலகாலம் பிச்சையெடுத்து சுற்றியிருக்கிறேன். அதைப்பற்றி நான் எழுதிய ஏழாம் உலகம் என்ற நாவலுடைய தழுவலாகத்தான் நான்கடவுள் படம் எடுக்கப்பட்டது. அப்போது பிச்சைக்காரனாக சிலகாலம் நான் காசியில் இருந்திருக்கிறேன். அக்காலகட்டத்தில் அங்கு நான் பார்த்த ஒருவர் அப்படியே இப்போதும் அங்கு உட்கார்ந்திருந்தார்.
ஜாங்லி பாபா என்பது பிறர் அவருக்கு இட்ட பெயர். காட்டுத்துறவி என்று பொருள். கருப்புநிற ஆடை உடுத்தியிருக்கும் நாகா சாமியார். அவர் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நான் பாலாவிடம் சொன்னேன். பாலா பார்த்துவிட்டு, ‘இவர்தான், இவர் வந்தாலே போதும், நடிக்கக்கூட வேண்டாம்’ என்றார். உடனே சரவணன் என்னும் உதவி இயக்குநர் வழியாக நாங்கள் அவரிடம் சென்று பேசினோம். பாலா அவரிடம் நடிக்கமுடியுமா என்று கேட்டார். அவர் ஒரு குச்சியை ஓங்கி ‘போடா’ என்றார். அடித்துவிடுவார் என்பதால் அருகிலேயே செல்லமுடியவில்லை. அப்போதைக்கு அந்த விஷயத்தை அப்படியே வைத்துவிட்டு படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம்.
ஒருநாள் படப்பிடிப்பின்போது ஜாங்லி பாபா ஒரு படகில் சிறுவன் ஒருவன் துடுப்புபோட தனியாக சென்றுகொண்டிருந்தார். கரையில் இளையராஜாவின் ‘ஓம் சிவோஹம்’ என்ற பாடலை இசைக்கவிட்டு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது அவர் இறங்கிவந்து என்னை அழைத்தார். அது என்ன பாட்டு என்று கேட்டார். நான், ‘அது வீரபத்ரர் பற்றிய பாட்டு, அகோரிகளுடைய பாட்டு, அகோரிகளை பற்றித்தான் படம் எடுக்கிறோம்’ என்றேன். அவர் அப்படியா என்று கேட்டு அருகில் வந்து படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆர்யா அகோரி சாமியாராக நின்றுகொண்டிருந்த காட்சி. அந்த நேரத்தில் பாலா மீண்டும் அவரிடம் சென்று சில காட்சிகளில் நடிக்கும்படி கேட்டார். அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்.
அதன்பின் படப்பிடிப்பு தொடங்கியது. அவரைப்பொறுத்தவரை நடிப்பு என்பது ஒன்றுமே கிடையாது. முதல்நாள் வந்து கேமராவில் உள்ள லென்ஸை பற்றி கேட்டார். ஒருநாளைக்குள்ளாக பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார். இயல்பாக நடித்தார். அவர் அதற்குமுன் சினிமாவே பார்த்தது கிடையாது.
சில நாட்கள் கழித்து நாங்கள் சிலருக்கு பணம் வழங்கிக்கொண்டிருந்ததை பார்த்தார். அதை பார்த்துவிட்டு என்னை அழைத்து ‘எனக்கும் பணம் வேண்டும்’ என்றார். நான் பாலாவிடம் சொல்ல பாலா வந்து அவரிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். அவருக்கு பணம் என்பது சற்று பிடிபடவில்லை. யோசித்துவிட்டு, ’ஃபிப்டி தெளஸண்ட்’ என்றார். உடனே அந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டது. அது மதிய நேரம். அதன்பின் ஆறுமணியளவில் படப்பிடிப்பு முடிந்ததும் நான், ஆர்யா, எனது நண்பர் எழுத்தாளர் சுகா ஆகிய மூவரும் படகில் வந்து அஸ்ஸி காட் என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது மொத்த அஸ்ஸி காட்டுமே ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
ஒரு கடைக்காரர் எங்களை அழைத்து, ‘சாமீ, ஜிலேபி சாப்பிடுங்க, ஃப்ரீ’ என்றார். நாங்கள் ஏன் என்று கேட்டோம். ‘ஜாங்லி பாபா எல்லா கடைகளுக்கும் காசு கொடுத்துவிட்டார். அதனால் எல்லோருக்கும் ஜிலேபி ஃப்ரீ’ என்றார். அப்போது நாங்கள் மூன்றுபேரும் உட்கார்ந்து எங்களுடைய ஜிலேபியை நாங்களே சாப்பிட்டோம். அன்று மாலைக்குள்ளாக ஐம்பதாயிரம் ரூபாயையும் பகிர்ந்தளித்துவிட்டு அவர் மீண்டும் பிச்சைக்காரராக தனது இடத்திற்கு சென்றுவிட்டார். அவர்தான் நமது பண்பாட்டின் மையத்தில் இருப்பவர்.
பல ஆண்டுகளுக்கு முன் காந்தி அரசியலுக்கு வரும்போது அன்றைய ஆங்கிலேயே வைஸ்ராய் ஒருவர், ‘இவர் இந்தியாவை கைப்பற்றுவார்’ என்று எழுதினார். இந்தியாவை ஒரு பிச்சைக்காரர் மிக எளிதாக கைப்பற்றிவிடமுடியும். உடைமையின்றி வெறுங்கைகளோடு வரக்கூடியவனின் காலடியில் இந்த தேசம் விழுந்துகிடக்கும். ஜாங்லி பாபா அமர்ந்திருக்கும் இடம்தான் நமது பண்பாடு. எழுத்தாளர்களும் அறிஞர்களும் வாழும் பண்பாட்டின் மையத்தில் இந்த அனல் வாழ்கிறது. அந்த அனலில் இருந்தே பிற அனைத்தும் பற்றிக்கொள்கின்றன
நன்றி