மூன்று வெவ்வேறு கடிதங்கள், மூன்றிலும் வெவ்வேறு வகையில் ஒரேவகையான கேள்விகள். ஆங்கிலம் கலந்த குழப்ப நடை. ரீல்ஸ் பார்க்கும் பையன்கள் என ஊகிக்கிறேன்.
இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் திரும்பத் திரும்ப பதிலளித்திருப்பேன். ஆனாலும் புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். முகநூல் போன்றவற்றால் குழம்பிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி குழம்பி, கேட்டுவிடுவோம் என நினைப்பவர்களில் பத்திலொருவர் வாசகர்களாக ஆக வாய்ப்புண்டு என்பதே என் அனுபவம். அதையெல்லாம் அப்படியே எடுத்துக்கொண்டு செல்பவர்களே பலநூறுபேர், அவர்கள் என்றுமே என் உலகுக்குள் நுழையப்போவதில்லை.
இலக்கியவாதிகளை உருவாக்குகிறேனா?
இலக்கியத்திற்குள் வந்து ஒரு இரண்டு ஆண்டுகள் எதையாவது வாசித்த எவருக்கும் தெரியும், இலக்கியவாதிகளை எவரும் உருவாக்க முடியாது. இலக்கியத்தின் வடிவங்களை கற்பிக்க முடியும். இலக்கியத்துடன் தொடர்புடைய வரலாறு, கலை, தத்துவம் ஆகியவற்றில் அறிமுகம் உருவாக்கி அளிக்கமுடியும். ஆனால் இலக்கிய ரசனை, இலக்கியப் படைப்புத்திறன் இரண்டுமே சம்பந்தப்பட்டவரின் அடிப்படை இயல்பு மற்றும் அனுபவங்கள் வழியாக மட்டுமே உருவாகி வருபவை.
எந்த இலக்கிய முன்னோடியும் இலக்கியத்தை கற்பித்ததில்லை. இலக்கியத்திற்குரிய ஒரு சூழலை மட்டுமே உருவாக்கினர். அது விவாதச்சூழலாகவே இருக்கும். அத்தகைய சூழல் என்றும் இங்கே இருந்துள்ளது. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தேவதச்சன், ஞானக்கூத்தன் என பலரை மையமாகக்கொண்டு அச்சூழல்கள் அமைந்தன. அவர்களின் சூழலில் இருந்தே அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாகி வந்தனர். ஒவ்வொருவரும் அவரவருக்கான பார்வையும், தனித்தன்மையும் கொண்டவர்கள்.
முன்னோடிகளில் பலர் தங்கள் பார்வையை வலியுறுத்துபவர்களாக இருந்தனர்- உதாரணமாக சி.சு.செல்லப்பா. நான் அதையும் முன்வைப்பதில்லை. ஏராளமான பிற ஆசிரியர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே ஒரு சூழலை உருவாக்குகிறேன். அவர்கள் ஒருவருடன் ஒருவர் முரண்பட்ட பார்வை கொண்டவர்கள். அவர்களிடமிருந்து உருவாகி வருபவர்களும் அப்படி வெவ்வேறு பார்வையும் ஆளுமையும் கொண்டவர்களே.
நான் என் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டும் முன்னிறுத்துகிறேனா, அவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுக்கிறேனா?
நீண்டகாலம் எங்கள் வட்டத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் எதுவுமே எழுதியதில்லை என்ற குற்றச்சாட்டை இளிப்புடன் சொல்லிக்கொண்டே இருந்தனர். இன்று, இலக்கியத்திலோ பண்பாட்டிலோ பொருட்படுத்தும்படி எதையேனும் எழுதுபவர்கள், செய்பவர்கள் ஏன் வாசிப்பவர்கள்கூட பெரும்பாலும் என் நட்புவட்டத்தினரே என்று கண்கூடாகத் தெரிகிறது. அதையே ஆணித்தரமாகச் சொல்கிறேன், அந்த இளிப்புக்குப் பதிலாக. அதை மறுக்கமுடியாமல் அடுத்த வம்பை கிளப்புகிறார்கள்.
எங்கள் அரங்குகளில் மிகப்பெரும்பாலும் எங்கள் நட்புச்சூழலுக்கு அப்பாலுள்ள எழுத்தாளர்களும், கலைஞர்களுமே பங்குகொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் பார்த்தால் எங்கள் அரங்குக்கு வராதவர்கள் மிகமிகச் சிலர். வந்த அனைவரையுமே விரிவாக முன்வைத்துள்ளோம். எங்கள் அரங்குகளில் எங்கள் நட்புவட்டத்தினர் ஒப்புநோக்கக் குறைவாகவே இடம்பெற்றுள்ளனர். அவர்களே ஐயம்திரிபற நிரூபித்துவிட்டு மேலெழுவதே நன்று என்பதே எங்கள் எண்ணம்,
எங்கள் நட்புக்குழுவிலிருந்து வரும் எவருக்கும் எங்கும் இடம் ‘வாங்கிக்கொடுக்க’ வேண்டியதில்லை. அவர்கள் ஐயமற்ற வகையில் பங்களிப்பாற்றி, அதன் விளைவாகவே தங்கள் இடத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் தகுதியை கேள்விக்குட்படுத்துமளவுக்கு வாசிப்புத்தகுதி கொண்ட எவரும் இங்கில்லை.
விருதுகளுக்குப் பரிந்துரைப்பதும் அதை வெளியே சொல்வதும் விருது பெற்றவர்களை அவமதிக்கிறதா?
முகநூலின் தற்குறிகளுக்கு தோன்றுவது அது. விருதுகள் ‘ஜனநாயக’ அடிப்படையில் அளிக்கப்படுவதில்லை. அப்படி அளிக்கப்பட்டால் இலக்கியத் தகுதிக்குப் பதில் வெகுஜனசெல்வாக்கும் அதிகாரச்செல்வாக்குமே ஓங்கி நிற்கும். உலகமெங்கும் விருதுகள் எல்லாமே தகுதியான சிறுவட்டத்தின் பரிந்துரை (peer circle) வழியாகவே அளிக்கப்படுகின்றன.
ஆகவே விருதுகளுக்கு முறையாகப் பரிந்துரைப்பது எந்த ஒரு படைப்பாளிக்கும், இலக்கியச்செயல்பாட்டாளனுக்கும் கடமையாகிறது. தகுதியானவர் என தான் நினைப்பவர்களை முன்வைக்கவேண்டும். ஏன் அப்படி கருதுகிறேன் என்பதை விளக்கவேண்டும். தேவை என்றால் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்பவர்களுடன் இணைந்தும் செயல்படவேண்டும். அதுவே இலக்கிய அறம்.
அவ்வாறு பரிந்துரைப்பதில் ரகசியமேதும் இல்லை. விருது என்பது ரகசியச்செயல்பாடு அல்ல. நமது இலக்கிய அளவுகோல்களை எப்போதுமே வெளிப்படையாகவே வைத்திருக்கவேண்டும். அது ஒன்றும் ‘சலுகை’ காட்டுவதோ, ‘தூக்கிவிடுவதோ’ அல்ல. அது எழுத்தாளனுக்கு நாம் செய்யும் ‘உதவி’ அல்ல. நாம் ஓர் இலக்கிய விழுமியத்தை முன்வைக்கிறோம். அதை இச்சமூகமும், இலக்கிய அமைப்புகளும் ஏற்கும்படிச் செய்ய முயல்கிறோம். அதன்பொருட்டே இவற்றைச் செய்கிறோம். இது நம் இலக்கியச் செயல்பாட்டின் கடமைகளில் ஒன்று.
ஓர் இலக்கியவாதியை இன்னொருவர் விருதுக்குப் பரிந்துரைத்தார் என்றால் அதில் அந்த இலக்கியவாதி மகிழ்ச்சியடைவதே இயல்பானது. ஏனென்றால் அது ஓர் ஏற்பு. அதை வெளிப்படையாகச் சொல்வதே மேலும் மகிழ்ச்சிக்குரியது. பரிந்துரைத்தேன் என ஒருவர் ரகசியமாகச் சொல்வார் என்றால், ஆனால் பொதுவெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார் என்றால் (பலர் அப்படிச் செய்கிறார்கள்) அதுதான் பிழையானது.
எனக்கு ஒருவர் தகுதியானவர் என்று பட்டால் அவரை என் குரலுக்கு இடமிருக்கும் எங்கும் ஆணித்தரமாக முன்வைப்பதே என் கடமை என நினைக்கிறேன். நான் முக்கியமானவர்கள் என நினைப்பவர்களின் ஒரு பட்டியலை முன்வைக்காமல் எந்த அரங்கிலும் பேசியதில்லை. சம்பந்தமே அற்ற சர்வதேச இலக்கியத் திருவிழாக்களிகூட என் மொழி இலக்கியவாதிகளின் பெயர்களைச் சொல்லாமல் இருந்ததில்லை. அது என் இலக்கியச் செயல்பாடு. அதற்கு எவரும் கட்டுப்பாட்டையும் விதிக்கமுடியாது, நான் பெயர் சொல்லும் எழுத்தாளர்கள் எனக்குக் கடன்பட்டவர்களும் அல்ல.
இவை இலக்கிய அதிகாரத்தை நிறுவும் முயற்சிகளா?
இலக்கிய அறிமுகம் கொண்ட எவருக்கும் தெரியும், இலக்கியத்தில் ஒருபோதும் மைய அதிகாரம் என ஒன்று இருக்க முடியாது. இலக்கியத்தில் செயல்படுபவை அதிகாரங்கள் அல்ல, வெவ்வேறு தரப்புகள். அவை கருத்தியல் தரப்புகளாக இருக்கலாம், அல்லது அழகியல் தரப்புகளாக இருக்கலாம். முற்போக்கு இலக்கிய முகாம் முன்வைப்பது கருத்தியல் தரப்பு. க.நா.சு முன்வைத்தது அழகியல் தரப்பு.
இந்தத் தரப்புகள் நடுவே மோதல் நிகழ்கிறது. அந்த மோதலின் விளைவான முரணியக்கமே (dialectical movement) இலக்கியத்தை முன்னெடுக்கிறது. ஒவ்வொரு தரப்பும் தன்னை முடிந்தவரை தீவிரமாக, முடிந்தவரை முழுமையாக முன்வைத்தாகவேண்டும். அதுவே இலக்கியச் செயல்பாடு என்பது. அப்படித்தான் சி.சு.செல்லப்பா செயல்பட்டார். க.நா.சு. செயல்பட்டார், சுந்தர ராமசாமி செயல்பட்டார். அப்படிச் செயல்படுவதை அதிகாரச்செயல்பாடு என்று சொல்வது அறிவின்மை.
ஆனால் மேலே சொன்ன அத்தனை முன்னோடிகளையும் பற்றி இதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் அதிகாரச்செயல்பாட்டில் இருப்பதாக. சொன்னவர்கள் அதிகார அரசியல் செயல்பாட்டில் இருந்தவர்கள். அவர்களே இன்றும் அதே குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் அரசியலதிகாரச் செயல்பாட்டுக்கு எதிராக அழகியலை முன்வைத்தால் அதை அதிகாரச்செயல்பாடு என்று வசைபாடுகிறார்கள்.
அப்படியென்றால் அதிகாரச் செயல்பாடு என ஒன்று இல்லையா? உண்டு. அமைப்புகளை கைப்பற்றிக்கொண்டு, அவற்றின் அதிகாரத்தை இலக்கியத்தில் செயல்படுத்துவதே அதிகாரச் செயல்பாடு. அறிவுத்தளத்தில் இரண்டு அமைப்புகளே அதிகாரம் கொண்டவை. ஒன்று, அரசுசார்ந்த அமைப்புகள். இரண்டு, கல்வித்துறை அமைப்புகள். இவ்விரு அமைப்புகளையும் எவர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகின்றனர் என எவருக்கும் தெரியும்.
தனிநபர்கள், தங்கள் தொடர்புகள் வழியாக அவற்றில் பொறுப்புகளை வகித்துக்கொண்டு அதிகாரம் செலுத்துவது எப்போதுமே நிகழ்கிறது. எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் விருது பெறுவதெல்லாம் அப்போதுதான். யோசித்துப் பாருங்கள் இப்போது விருதின்புனிதம் பற்றிப் பேசும் எவரேனும் ஒரு சொல்லேனும் அப்போது பேசியிருக்கிறார்களா என்று.
நம் கல்வித்துறை நீண்டகாலம் இடதுசாரி ஆதிக்கத்தில் இருந்தது. அரசு சார்ந்த கலாச்சார அமைப்புகளிலும் அவர்களின் செல்வாக்கே இருந்தது. அதற்கு அவர்களின் தொழிற்சங்க அமைப்புகள், கலாச்சார அமைப்புகளின் பங்கு மிகுதி. இன்று அவற்றை இந்துத்துவர்கள் கைப்பற்றிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழக அரசு மற்றும் கல்வித்துறை எப்போதுமே திராவிடக் கருத்தியலின் பிடியில்தான் உள்ளது.
ஆனால் அவர்களைப் பற்றி இந்த அதிகாரக் குற்றச்சாட்டு வருவதே இல்லை. ஏனென்றால் அவை மெய்யான அதிகாரங்கள். அவற்றை கேள்விக்குரியதாக்கினால் உரிய எதிர்வினைகள் இருக்கும் அந்த அதிகாரத்தை எதிர்க்கும் தரப்பு மட்டுமே நாங்கள். மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்கள். சொந்தப்பணத்தில் செயல்படுபவர்கள். எந்த அதிகாரமும் அற்றவர்கள். ஆனால் எங்களை இலக்கிய அதிகாரம் என எதிர்க்கிறார்கள். அதிகார எதிர்ப்பு வேடமும் கிடைக்கும், அதிகாரத்தின் சில்லறைகளையும் பொறுக்கிக்கொள்ளலாம்- அவ்வளவுதான் இவர்களின் நோக்கம்.
*
எங்களுடையது மையம் கொண்ட அமைப்பு அல்ல. உண்மையில் நான்கூட இதன் ஒருங்கிணைப்பு விசை அல்ல. இங்கே இலக்கிய அழகியல் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் எழுத்தாளர்களாகவும் வாசகர்களாகவும் பலர் உள்ளனர். அவர்களுக்குத் தங்களை ஒருங்கிணைக்க, உரையாடிக்கொள்ள ஒரு களம் தேவைப்பட்டது. தன்னியல்பாக அது இந்த இணையதளம் சார்ந்து உருவாகி வந்தது. இந்த களம் எந்த அறிவுப்பரப்பையும்போல ஒன்றையொன்று மறுக்கும் கருத்தியல்தரப்புகள் கொண்டதுதான். ஆனால் இலக்கிய அழகியல் சார்ந்த அளவுகோல்களில் ஒரு பொதுத்தன்மை உண்டு. அதுவே இணைக்கும் சக்தி