எம்.வேதசகாயகுமார், ஆய்வாளனும் ரசனையாளனும்

(எம்.வேதசகாயகுமார் நினைவாக பாலக்காடு சித்தூர் கல்லூரியில்  11 ஜனவரி 2024 அன்று அவருடைய மாணவர்கள் ஒருங்கமைத்த நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்துவடிவம்

எழுத்துவடிவம் விவேக் ராஜ்)

எனது இருபதாண்டுகால நண்பரும் வழிகாட்டியாக இருந்தவருமான வேதசகாயகுமார் அவர்களை பற்றி ஒரு நினைவுரை ஆற்ற இங்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். வேதசகாயகுமாரும் நானும் எங்கள் மதிப்புமிக்க ஆசிரியர் சுந்தர ராமசாமி அவர்களின் மாணவர்கள். அவர் அவையில் இருந்து கிளம்பிவந்த இருவர். அந்த பட்டியலில் ராஜமார்த்தாண்டன், அ.கா.பெருமாள் போன்ற பலர் இருக்கின்றனர். ராஜமார்த்தாண்டனும் அ.கா.பெருமாளும் வேதசகாயகுமார் போலவே இந்த கல்லூரியில் பயின்று இங்கேயே முனைவர் பட்ட ஆய்வை செய்தவர்கள். அவர்கள் இருவருக்கும் ஆசிரியராக இருந்த பேராசிரியர் ஜேசுதாசன் அவர்கள் இந்த கல்லூரியில் நீண்டகாலம் பணியாற்றியவர். இத்தருணத்தில் அவர்களை நினைவுகூர்வது பெரும் நிறைவை அளிக்கிறது.

ஜேசுதாசன் அவர்களை நான் வேதசகாயகுமாருடன் சென்று பார்த்திருக்கிறேன். அவருடைய துணைவியார் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள்  புகழ்பெற்ற புத்தம்வீடு எனும் நாவலை எழுதியவர். அதன்பிறகு மாநீ உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். ஜேசுதாசன் வழிகாட்டலில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் Countdown from Solomon என்ற தலைப்பில் ,கம்பராமாயணம் வரைக்குமாக, நான்கு தொகுதிகளாக எழுதியிருக்கிறார். தமிழின் முக்கியமான ஓர் இலக்கிய ஆவணம் என்று அதை சொல்லலாம். ஜேசுதாசன் திருவனந்தபுரம் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று புலிப்புனம் என்ற சிற்றூரில் வாழ்ந்துவந்தார்.

ஜேசுதாசனுக்கும் வேதசகாயகுமாருக்குமான உறவு என்பது குரு-சீட உறவுக்கான ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஞானம் என்பது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கடந்து செல்வது ஆச்சரியமான ஒன்று. ஜேசுதாசன் அவருடைய ஆசிரியர் கோட்டாறு குமாரசாமி பிள்ளை பற்றி என்னிடம் சொன்னார். ஜேசுதாசனின் தந்தை கொத்தனார் வேலை செய்தவர். அவருக்கு அக்காலத்தில் உணவு தவிர அரையணா அல்லது ஒரு அணா சம்பளம்தான். அத்தகைய, உணவுக்கே கடினமான சூழலில் ஜேசுதாசன் உயர்நிலைப் படிப்பை படிக்கவேண்டும் என்று விரும்பினார். அவரை கோட்டாறு பள்ளியில் சேர்ப்பதற்கு அவரது தந்தை அழைத்துச்சென்றார்.

பள்ளி நிர்வாகம் அவரது மதிப்பெண்ணை பார்த்துவிட்டு, அவர் சேர்ந்துக்கொள்ளலாம் என்றும் ஆனால் பள்ளிக்குரிய கட்டணத்தை கட்டினால்தான் சேரமுடியும் என்றும் சொன்னார்கள். அவர்களிடம் பணம் இல்லை, பணம் தேடும் வழியும் அன்றில்லை. ஜேசுதாசன் அழுதுகொண்டே தன் தந்தையுடன் வெளியே வந்தார். தந்தை அவரிடம், ‘நீ படிக்க முடியாது, என்னை மாதிரி கொத்தனார் வேலைதான் செய்யவேண்டும், அதுதான் விதி’ என்றார்.

அப்போது, அங்கே தமிழாசிரியராக பணிபுரியும் கோட்டாறு குமாரசாமிபிள்ளை இவர்களுக்கு எதிரே வந்தார். தொலைவில் அவரை கண்டபோதே அவரே தனது ஆசிரியர் என்று தெரிந்துவிட்டதாக ஜேசுதாசன் என்னிடம் சொன்னார். அவர் குமாரசாமி பிள்ளையிடம் நேரே சென்று தனது படிக்கும் ஆர்வத்தை சொன்னார். குமாரசாமி அவரை உள்ளே கூட்டிச்சென்று பள்ளியில் சேர்த்துக்கொள்ளும்படியும் அதற்கான கட்டணத்தை தனது சம்பளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளும்படியும் சொன்னார். அப்போது ஜேசுதாசன் யாரென்றே குமாரசாமிக்கு தெரியாது. அதற்கு முன் எந்த உரையாடலும் அவர்களுக்குள் நிகழவில்லை. பின்பு உணவு, உறைவிடம் பற்றி ஜேசுதாசனிடம் விசாரித்தார். ஜேசுதாசன், தனது ஊர் நெய்யூர் என்றும் தனக்கு இங்கு எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என்றும் சொன்னார். குமாரசாமி அவரை தன் வீட்டிற்கே அழைத்துச்சென்று உணவளித்தார்.

குமாரசாமி வெள்ளாளர், இவர் நாடார். அக்காலத்தைய சாதி ஆசாரங்களெல்லாம் அவர் வீட்டிலும் உண்டு. ஆனால் அவர் வீட்டில் பிள்ளைகள் இல்லாததால் ஜேசுதாசன் அவர்களுக்கு மகனாகவே வளர்ந்துவந்தார். அந்த வீட்டிலேயே தங்கி ஆசிரியருக்கு பணிவிடைகள் செய்து கல்விகற்றுவந்தார்.

அதன்பிறகு முதுகலை பட்டம் முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிகமாக ஒரு வேலை கிடைத்தது. ஆனால் ஆறுமாத காலத்திற்குள்ளாக அங்கிருக்கும் அரசியலால் இவர் வெளியேற்றப்பட்டார். ஜேசுதாசன் அங்கிருந்து கிளம்பி ஆசிரியர் குமாரசாமி வீட்டிற்கு வந்து, தனக்கு வேலை போய்விட்டதை சொல்லி அழுதார். குமாரசாமி, ‘நான் இருக்கும்போதாடா நீ அழுகிறாய்?’ என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றார். அங்கு எஸ்.வையாபுரிபிள்ளையிடம் சென்று ‘இவன் என் மகன். இவனுக்கு நீங்கள் வேலை கொடுக்கவேண்டும். இது என் ஆணை’ என்றார். வையாபுரிபிள்ளை மன்னரிடம் சொல்லி திருவனந்தபுரத்தில் ஜேசுதாசனுக்கு வேலை கிடைக்கச்செய்தார்.

ஜேசுதாசன் வீட்டில் குமாரசாமிபிள்ளையின் ஒரு பெரிய வண்ண ஓவியம் இருக்கும். ஒரு பக்கம் அந்த ஓவியமும் மறுபக்கம் ஏசுவின் படமும் இருக்கும். நான் அவர் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் ஒருநாள்கூட அந்தப் படங்களில் தூசி இருந்து பார்த்ததில்லை. தனது முதுமைக் காலத்திலும் ஒவ்வொருநாளும் தானே அந்தப் படங்களை சுத்தம் செய்வார். ‘இந்த வயதான காலத்தில் மேலே ஏறி அதை சுத்தம்செய்ய வேண்டாமே, வேறு யாரையாவது செய்யச்சொல்லலாமே’ என்று கேட்டிருக்கிறேன். ‘ஒருநாளைக்கு ஒருமுறையாவது பிள்ளையவர்களை தொடுவது என்பது பெரிய விஷயம். அது நமக்கு ஒரு நோன்பு மாதிரி’ என்பார்.

அவருடைய மாணவர் வேதசகாயகுமார். ஜேசுதாசன் இறக்கும் வரைக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேதசகாயகுமார் தவறாமல் சென்று அவரை கண்டு வருவார். நான் அப்போது தக்கலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். வேதசகாயகுமார் பேராசிரியரிடம் ஆழ்ந்த தத்துவ விவாதங்களிலெல்லாம் ஈடுபடமாட்டார். அதையெல்லாம் என்னிடம்தான் பேசுவார். அவரிடம் சென்று அன்றாட உலகியல் விஷயங்களை செய்துகொடுப்பார். எண்ணெய் வாங்கிவருவது, காலில் போடும் களிம்பு வாங்கிவருவது போன்ற வேலைகளை செய்வார். பேராசிரியர் அந்த வேலைகளையெல்லாம் தனது மகனிடம் சொல்லமாட்டார். இவரிடம்தான் சொல்வார்.

நான் அவரிடம் அதுபற்றி கேட்டேன். ‘அவர்களிடம் ஏன் சொல்லவேண்டும் ? இவன்தானே என் மாணவன்’ என்றார். அவருடைய எல்லா மாணவர்களும் அவரிடம் அதேபோன்ற பணிவுடன் இருந்தனர். ஆனால் வேதசகாயகுமாருக்கு இருந்த பக்தி சாதாரணமானது அல்ல. காலடியில் அமர்தல் (உபநிஷத்) என்று சொல்வார்கள். அவ்வாறு பேராசிரியரின் காலடியில் அமர்ந்துதான் வேதசகாயகுமார் கற்றுக்கொண்டார்.

வேதசகாயகுமாரை பேராசிரியர் கம்பராமாயணப் பாடல்களை படிக்கச்சொல்லி கேட்பார். எதுவும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பார். பத்து இருபது பாடல்களுக்கு ஒருமுறை ‘குமாரு பாத்தியாடா, அதில இந்த வரியை பாரு’ என்று ஏதோவொரு வரியை சுட்டிக்காட்டுவார். வேதசகாயகுமார் என்னிடம் சொன்னார், ‘எனக்கு எதோ ஒரு இடத்தில் சந்தேகம் வந்துவிட்டால் சரியாக அதே இடத்தில் பேராசிரியர் என்னிடம் விளக்குவார். சந்தேகம் வராத இடங்களில் அவர் எதுவுமே சொன்னது கிடையாது’. ஏனென்றால் வேதசகாயகுமாரும் ஒரு பேராசிரியர், வகுப்புகள் எடுக்கக்கூடியவர். இவருக்கு என்னென்ன தெரியும் என்பது ஜேசுதாசனுக்கும் தெரியும். இந்த இடத்தில் இவருக்கு சந்தேகம் வரும் என்று தெரிந்து அங்கு மட்டும்தான் விளக்கமளிப்பார்.

அத்தகைய உறவு அடுத்த தலைமுறையிலும் தொடர்வதை பார்க்கிறேன். வேதசகாயகுமார் மறைந்தபிறகு அவருடைய மாணவர் சஜன் அவரைப்பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார். அதை பார்த்தபோது அந்த மகத்தான தொடர்ச்சி எனக்கு தெரிந்தது. இன்று அவரின் மாணவர்களான மனோகரன், உமா போன்றோர் இந்நிகழ்வை இங்கே முன்னெடுப்பதென்பது அந்த அறுபடாத தொடர்ச்சியை காட்டுகிறது. அத்தகைய தொடர்ச்சி இன்று மிகவும் அபூர்வமாகிவிட்ட ஒன்று. இது என்றும் நீடிக்கவேண்டும்.

கல்விமுறையில் இன்று ஒரு வேறுபாடு உள்ளது. பழைய கல்விமுறை என்பது குரு-சிஷ்யன் என்கிற உறவு உடையது. குரு அமர்ந்துகொண்டும் சிஷ்யன் நின்றுகொண்டும் நிகழும் கல்வி அது. நவீனக்கல்வி என்பது மாணவர்கள் அமர்ந்துகொண்டும் ஆசிரியர் நின்றுகொண்டும் நிகழும் கல்வி. இன்றைய கல்வி என்பது மாணவரின் தேவைக்கேற்ப கற்பிக்கக்கூடிய கல்வி. ஆசிரியரின் திறமைக்கேற்ப கற்பிக்கக்கூடிய கல்வி அல்ல.  ஆசிரியருடைய திறமைக்கேற்ப கற்பிக்கக்கூடிய கல்விதான் சிறந்த கல்வி.

ஆனால் இன்றைய கல்வி தவறானது என்று நான் சொல்லமாட்டேன். இது சராசரிக்கல்வி. இதன்வழியாகத்தான் நாம் அடுத்த நிலைக் கல்விக்கு செல்லமுடியும். இந்த சராசரிக் கல்விதான் அனைவருக்குமான கல்வி. ஆனால் இது போதுமானதல்ல. ஓர் அமைப்பிடம் இருந்து அல்ல, ஒரு தனிமனிதனிடமிருந்துதான் நீங்கள் கற்றுக்கொள்ளமுடியும். ஆசிரியர் எப்படி சிந்திக்கிறாரோ அந்த சிந்தனையின் கூடவே சென்றால்தான் நீங்கள் சிந்திக்க முடியும் . குதிரையுடன் ஓடி நாம் ஓடக்கற்றுக்கொள்வதுபோல.

எனது ஆசிரியர்கள் அத்தனைபேரையும் நான் அவ்வாறுதான் நினைவுகூர்கிறேன். நான் மகத்தான பல ஆசிரியர்களை அடைந்த நல்லூழ் கொண்டவன். நாராயணகுரு மரபில் வந்த துறவியான நித்யசைதன்ய யதி எனது குரு. அவருடன் நெடுங்காலம் இருந்திருக்கிறேன். அவரிடம் ஒருமுறை, ‘இங்கே குருகுலத்தில் என்ன சொல்லித்தருகிறீர்கள் ?’ என்று கேட்டேன். அவர், ‘I do not teach anything. I allow people to be with me’ (நான் இங்கு எதையும் கற்பிப்பதில்லை. இவர்களை என்னுடன் இருக்க அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்) என்றார்.

ஆனால் அதைவிட பெரிய கல்வி ஒன்று கிடையாது. காலையில் அவருடன் நடை செல்வதும் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது உடன் அமர்ந்திருப்பதும்தான் அங்கிருப்பவர்கள் செய்வது. அவர்கள் அத்தனைபேரும் புகழ்பெற்ற தத்துவவாதிகளாக இன்று உள்ளனர். இன்று கேரளம் முழுக்க அறியப்படக்கூடிய ஷௌகத் போன்ற அறிஞர்கள் நித்யாவின் காலடியில் இருந்து வந்தவர்கள். அதுதான் சரியான கல்வி. அப்படியொரு தொடர்ச்சி ஜேசுதாசனுக்கும் வேதசகாயகுமாருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இருக்கிறது.

நான் வேதசகாயகுமாரை அவரது இல்லத்தில் சந்திக்கும் பெரும்பாலான தருணங்களில் அவர் யாரேனும் சில மாணவர்களோடுதான் இருப்பார். காலை ஐந்து மணிக்கு நடைபயணம் செல்லும்போதுகூட அவர் வீட்டருகே இரண்டு மாணவர்கள் காத்திருப்பர். பலர் அவருடைய நேரடி மாணவர்கள் அல்லர். இந்து கல்லூரியிலோ கிறிஸ்தவ கல்லூரியிலோ முனைவர் பட்ட ஆய்வு செய்பவர்கள். ஆனால் அங்கே ஆய்வு செய்தாலும் வேதசகாயகுமாரிடம் வந்தால்தான் அந்த ஆய்வை முடிக்க முடியும். ஏனென்றால் பெரும்பாலான தமிழாசிரியர்கள் நூல்களையே வாசிப்பது கிடையாது.

மேலும் சுவாரசியமான விஷயம், திருவிதாங்கூர் வரலாறு, அதன் சமூகவியல், நாட்டாரியல் பற்றியெல்லாம் ஆய்வு செய்பவர்களும் வேதசகாயகுமாரிடம் வருவர். அவர் இலக்கிய ஆசிரியர் மட்டுமல்ல. வரலாற்றிலும் நாட்டாரியலிலும் அவருக்கு மிகப்பெரிய வாசிப்பு உண்டு. குறிப்பாக குமரிமாவட்ட திருவிதாங்கூர் வரலாற்றில் மிக ஆழமான வாசிப்பு உண்டு. எப்போதும் மாணவர்கள் சூழ இருக்கக்கூடியவராக, மாணவர்களிடம் பேசுவதில் ஆர்வம் உடையவராகவே குமார் இருந்து வந்திருக்கிறார்.

அதேவேளை, ஒருவகையில் அது சார்ந்த ஏமாற்றமும் எனக்கு உண்டு. ஒரு நூலாசிரியராக எவ்வளவு எழுதியிருக்கக்கூடுமோ அதில் பத்து சதவீதம்கூட அவர் எழுதவில்லை. அவருடைய இளமைக்காலத்தில் தமிழ்ச் சிறுகதை வரலாறு என்ற நூலை எழுதினர். அதன்பிறகு பெரும்பாலும் எதுவும் எழுதவில்லை. மாணவர்கள் கூடவே வாழ்ந்துவந்தார். நான் சொல்புதிது இதழை தொடங்கியபோது வலுக்கட்டாயமாக அவரை எழுதவைத்தேன். ஒவ்வொரு இதழுக்கும் தலைப்பு கொடுத்து அவரை எழுதச்சொல்லி கேட்டுவாங்கி வெளியிட்ட கட்டுரைகள் இன்று அவருடைய முக்கியமான படைப்புகளாக உள்ளன.

சொல்புதிது இதழில் எல்லா இதழ்களிலும் குமார் ஆய்வுக்கட்டுரை தரத்திற்கு ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதில் ‘சங்க இலக்கியத்தின் சிறுகதை வேர்கள்’ என்ற முக்கியமான கட்டுரை ஒன்றுண்டு. தமிழ் சிறுகதைகளின் முதல் வடிவங்கள் சங்க இலக்கியத்தில் எப்படி உள்ளது என்பதை கண்டறிந்து சொல்கிறார். இசைத்தமிழ் அறிஞர் லட்சுமண பிள்ளை பற்றி மிகவிரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அது இசைத்தமிழுக்கு கன்னியாகுமரி மாவட்ட பங்களிப்பு, அதில் லட்சுமண பிள்ளையின் பங்களிப்பு என்ன என்பது பற்றியது. அதன்பிறகு பெரும்பாலும் அவர் எழுதவில்லை.

ஓய்வுபெற்ற பிறகுதான் அவருக்கு, தனது பணிகளில் பெரும்பாலானவை எழுதப்படாமலே போய்விட்டன என்ற எண்ணம் வந்து, கிட்டத்தட்ட ஐந்தாண்டுகாலம் உழைத்து தமிழிலக்கிய விமர்சன கலைக்களஞ்சியத்தை எழுதிமுடித்தார். இன்று அவருடைய மிகப்பெரிய படைப்பு என்பது அதுதான். தமிழிலக்கிய விமர்சகர்கள் அத்தனை பேரைப்பற்றிய வரலாறும் விமர்சனக் குறிப்புகளும் அடங்கிய கட்டுரைகள் அவை.

அதையும்கூட அவர் எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. அப்போது மத்திய அரசாங்கத்தின் நன்கொடைப் பணம் அவருக்கு கிடைத்திருந்தது. கிட்டத்தட்ட நூற்றைம்பது பேருக்கு அந்த பணம் வந்திருந்தது. அந்த பணத்தை வாங்கிய பெரும்பாலானவர்கள் எதையுமே செய்யவில்லை. பெயருக்கு ஏதோவொன்றை எழுதிக்கொடுத்துவிடுவார்கள். அவற்றில் சொல்லும்படியாக இருந்த ஒரே படைப்பு வேதசகாயகுமாருடையது. ஏனெனில் அவரது இயல்புக்கு பணம் பெற்றுக்கொண்டுவிட்டால் வேலை செய்துதான் ஆகவேண்டும். முதலில் அந்த பணத்தை வாங்கவேண்டுமா என்று தயங்கினார். நான் அவரை கட்டாயப்படுத்தி அதை வாங்கவைத்தேன். அவர் கைநீட்டி பணம் பெற்றுக்கொண்டுவிட்டாரென்றால் கண்டிப்பாக வேலை செய்வார் என்று எனக்குத் தெரியும். அதனால் தமிழுக்கு மகத்தான ஒரு படைப்பு அவரிடமிருந்து கிடைத்தது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக அவரை நாள்தோறும் சந்திக்கக்கூடியவனாக நான் இருந்திருக்கிறேன். எனது வீட்டிற்கு அ.கா.பெருமாள் உட்பட நாகர்கோயிலின் நண்பர்கள் அத்தனைபேரும் வருவார்கள். அவ்வப்போது மாலை வேளைகளில் சபை கூட்டங்கள் நடைபெறும். அந்த சபையில் முக்கிய பேச்சாளராக வேதசகாயகுமார் இருப்பார். இலக்கியம் சமூகவியல் என்று மட்டுமல்ல, எல்லா தலைப்புகளிலும் அவரிடம் பேசமுடியும். நாகர்கோயிலில் சிறந்த உணவுவிடுதி எது என்றும் கேட்கலாம், சிறந்த தையற்காரர் யார் என்றும் கேட்கலாம். அவரை கூட்டிக்கொண்டு மீன் வாங்குவதற்கு கடைகளுக்கு செல்லலாம். மீன்களின் எல்லா வகைகளும் அவருக்கு தெரியும். எங்கு எந்த மீன் நன்றாக இருக்கும் என்பதும் தெரியும். ஆனால் ஒவ்வாமை காரணமாக அவர் மீன் சாப்பிடமாட்டார். கிட்டதட்ட ஆல் ரவுண்டர் மாதிரியான ஆளுமையாக இருந்தவர்.

நவீன தமிழிலக்கிய விமர்சன மரபு

தமிழ் இலக்கிய வரலாறுக்கு ஒரு நூறாண்டுகால நவீன இலக்கிய வரலாறு உண்டு. நான் ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அந்த நூலில் சரிபாதி அளவுக்கு நவீன இலக்கியத்தின் வரலாறை எழுதியுள்ளேன். ஆனால் இன்னமும் நவீன தமிழிலக்கிய வரலாறு விரிவாக எழுதப்படாத ஒன்றுதான். அப்படி எழுதப்பட்டால் அதில் நவீன தமிழிலக்கியத்தின் விமர்சன வரலாறு ஒன்று எழுதப்பட வேண்டும். நவீன தமிழிலக்கிய விமர்சன வரலாற்றில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகள் உள்ளன.

அதன் முதல் தொடக்கமாக ஒரு பட்டியலை சொன்னால், முக்கியமாக மூன்று நபர்களை சொல்லலாம். ஒருவர் பேராசிரியர் ரா.ஸ்ரீ.தேசிகன். அவர் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தனின் காஞ்சனை தொகுதிக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.

இரண்டாவதாக, ஏ.வி.சுப்பிரமணிய அய்யர். இவர் திருநெல்வேலியில் இந்து நாளிதழில் நிருபராக இருந்தவர். நவீன தமிழிலக்கிய விமர்சனம் சார்ந்த கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நவீன தமிழ் இலக்கியம் என்ற அவருடைய நூல்தான் முதலில் எழுதப்பட்ட விமர்சன நூல். அதில்தான் அவர் முதன்முறையாக, கல்கி ஒரு வணிக எழுத்தாளர் என்றும் புதுமைப்பித்தன்தான் தீவிர எழுத்தாளர் என்றும் ஒரு பிரிவினையை சுட்டிக்காட்டினார். அப்படிப்பட்ட பிரிவினை அவருக்கு முன் யாரும் அறிந்திராதது.

மூன்றாவதாக, வ.வே.சுப்பிரமணிய ஐயர். ஏறத்தாழ முதலிரண்டு பேருக்கும் வழிகாட்டியாக அமைந்தவர். இம்மூவரையும் தமிழிலக்கிய விமர்சன மரபின் முன்னோடிகள், பிதாமகர்கள் என்று சொல்லலாம். மூன்று வகையில் இவர்கள் முக்கியமானவர்கள்.

வ.வே.சு.ஐயர் இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் என்பதை கோடிட்டு காட்டியவர். குறிப்பாக பாரதியின் கண்ணன் பாட்டுக்கு அவர் எழுதிய முன்னுரை என்பது நவீன இலக்கிய விமர்சனத்தின் ஒரு சரியான தொடக்கம் எனலாம். கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கு ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் தமிழ் இலக்கியத்தை விமர்சன ரீதியாக அணுகுவது பற்றிய கருத்தும் உள்ளது. அவரில் இருந்துதான் ரா.ஸ்ரீ.தேசிகன் ஒரு திசையிலும் ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் மற்றொரு திசையிலும் முளைத்தெழுகின்றனர். இம்மூவரையும் முன்னோடி மூவர் என்று சொல்லலாம்.

இவர்களுக்கு பிறகு, இவர்களிடமிருந்து ஊக்கம் பெற்ற ஒரு விமர்சன அலை தமிழிலக்கிய சூழலில் உருவாகியது. அதில் முக்கியமான மூவர் க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா, ஆ.முத்துசிவன். திறனாய்வு உள்ளிட்ட பல சொற்களை முத்துசிவன்தான் உருவாக்கினார். புதுமைப்பித்தனின் நண்பனாக இருந்த அவர் இளமையிலேயே இறந்துவிட்டார். இம்மூவரும் சேர்ந்து இலக்கிய விமர்சனத்தின் அடுத்த காலகட்டத்தை உருவாக்கினர். இதில் முத்துசிவன் மட்டும்தான் கல்வித்துறையை சார்ந்தவர். மற்ற இருவரும் சிற்றிதழ் மரபை சார்ந்தவர்கள். இவர்கள் தீவிரமான விமர்சனங்கள், விவாதங்கள் வழியாக ஒரு அலையை உருவாக்கியிருந்தனர்.

இவர்களுடன் விவாதித்து இவர்களுக்கு நேர் எதிராக மற்றொரு விமர்சன அலை ஒன்று உண்டானது. அதிலும் முக்கியமாக மூவரை சொல்லலாம். இலங்கையை சேர்ந்த இடதுசாரி விமர்சகர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நா.வானமாமலை ஆகியோர். இம்மூவரையும் முற்போக்கு இலக்கிய விமர்சன முன்னோடிகள் என்று சொல்லலாம்.

இவ்வாறு தமிழிலக்கிய விமர்சன மரபில் மூன்று தரப்புகள் முக்கியமானதாக இருந்திருக்கின்றன.

() தொடக்ககால விமர்சன தரப்பு

1) வ.வே.சு.ஐயர்

2) ஏ.வி.சுப்பிரமணிய அய்யர்

3) ரா.ஸ்ரீ.தேசிகன்

() நவீன / அழகியல் விமர்சன தரப்பு

1) க.நா.சுப்ரமணியம்

2) சி.சு. செல்லப்பா

3) ஆ.முத்துசிவன்

() முற்போக்கு விமர்சன தரப்பு

1) க.கைலாசபதி

2) கா.சிவத்தம்பி

3) நா.வானமாமலை

இம்மூன்று அலைகளுமே தமிழில் வலுவான செல்வாக்கை செலுத்தியுள்ளன. அதில் ஒரு சிறு பகுதிதான் கல்வித்துறை தொடர்பானதாக இருந்தது. ஏனெனில் அன்று கல்வித்துறை பெரும்பாலும் மரபிலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. அவர்கள் நவீன இலக்கியத்திற்குள் வரவே இல்லை. 1960 களில்கூட தமிழகத்தின் கல்வித்துறையில் நவீன இலக்கியத்தின் இடம் என்பது மிகக் குறைவானதே.

நவீன இலக்கியத்திற்கான இடத்தை கல்வித்துறைக்குள் உருவாக்கியவர் பேராசிரியர் ஜேசுதாசன். அவர் பணியாற்றிய இந்த சித்தூர் கல்லூரியில்தான் முதன்முறையாக க.நா.சு.வையும் சி.சு.செல்லப்பாவையும் வரவழைத்தார். இது கேரளம் என்பதால் அவரால் அதை செய்யமுடிந்தது. தமிழ்நாட்டில் செய்திருக்க முடியாது. பின்னர் திருவனந்தபுரத்திற்கு ஆர்.சண்முகசுந்தரம் போன்றோரை வரவழைத்திருக்கிறார். அன்று திருவனந்தபுரம், சித்தூர் கல்லூரிகளில்தான் நவீன தமிழிலக்கியம் கல்வித்துறைக்குள் காலெடுத்துவைத்து நுழைகிறது.

அதன்பிறகுதான் மதுரை காமராஜர் பல்கலை., அண்ணாமலை பல்கலை. போன்ற கல்விநிலையங்களில் நவீன இலக்கியத்திற்கான இடம் உருவாகி வருகிறது. அதுவும் ஜேசுதாசன் வழியாகத்தான். அது அவருடைய தனிப்பட்ட சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய இந்த பணிக்கு கேரள இலக்கிய ஆசிரியர்களான பி.கே.நாராயண பிள்ளை, அய்யப்ப பணிக்கர் போன்றோர் பெரும் உதவி செய்திருக்கின்றனர். பிற்காலத்தில் மதுரை காமராஜர் பல்கலை. பாடத்திட்ட குழுவிலும் ஜேசுதாசன் இடம்பெற்றார்.

ஆனாலும் கல்வித்துறைக்கு வெளியேதான் விமர்சன அலை வலுவாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த மூன்று தரப்புகளே. முதல் தரப்பினர் ஒருவித முன்னோடி முயற்சியை செய்திருக்கின்றனர். ஒரு இலக்கியத்தை எவ்வாறு அணுகவேண்டும் என்றுமட்டும் அவர்கள் எழுதினர். இரண்டாவது தரப்பும் மூன்றாவது தரப்பும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கு முக்கிய காரணம் இரண்டாவது தரப்பினர் அழகியல் மரபை சார்ந்தவர்கள், மூன்றாவது தரப்பினர் முற்போக்கு முகாமை சார்ந்தவர்கள்.

இத்தகைய கருத்து முரண்பாடுகளை ஒரு சிறு அளவிலேனும் புரிந்துகொண்டால்தான் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும். ஒரு இலக்கிய விமர்சகன் தன்னை எவ்வாறு வரையறை செய்துகொள்கிறான், எதன் அடிப்படையில் அந்த விமர்சனத்தை செய்கிறான் என்பதுதான் அந்த விமர்சனத்தின் இயல்பை காட்டுகிறது. வ.வே.சு.ஐயர், ”ஒரு விமர்சகன் சுருதி சுத்தமான ஒரு ரசிகனாக தன்னை ஓர் இலக்கிய படைப்பின் முன்னால் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார். ரசனை என்பதைத்தான் அவர் முன்னிறுத்துகிறார். அது எந்தமாதிரியான ரசனை என்பதுபற்றியெல்லாம் அவர் விரிவாக பேசவில்லை. ரசனையில் உள்ள சுருதி பேதங்களை சுட்டிக்காட்டுவதுதான் விமர்சனமாக இருக்கமுடியும் என்பது அவர் கருத்து.

கண்ணன் பாட்டுக்கு அவர் எழுதிய முன்னுரையில் ”பாரதி இந்த பாடல்களை தமிழின் அகத்துறை மரபுடைய ரசனை அடிப்படையில் மிகச்சரியாக எழுதியிருக்கிறார். ஆனால் அஷ்டபதி பாடிய ஜெயதேவர் அப்படியல்ல. அவர் சற்று விரசம் நோக்கி சென்றிருக்கிறார் என்பது என் அபிப்பிராயம்” என்கிறார். அந்த அளவுக்கு ஒரு ரசனை சார்ந்த விமர்சகனாக அவர் இருந்திருக்கிறார். தொடக்ககால விமர்சன தரப்பான அம்மூவருமே ரசனை அடிப்படையிலேயே விமர்சனம் செய்துள்ளனர்.

அவர்களுக்கு அடுத்தகட்டமாக கா.ந.சு. உள்ளிட்ட தரப்பினர் மூன்றுவிதமான பார்வையைக் கொண்டிருந்தனர். முத்துசிவனை பொறுத்தவரை, ஒரு விமர்சகன் இலக்கிய விமர்சனத்தின் கோட்பாடுகளை முழுமையாக படித்திருக்க வேண்டும்; அதன் அடிப்படையில்தான் விமர்சனத்தை முன்வைக்க வேண்டும். ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் (I.A.Richards), டி.எஸ்.எலியட் (T.S.Eliot), வில்லியம் எம்சன் (William Empson) போன்றோர் அவருடைய முக்கியமான முன்னோடிகள். ஒரு கல்வியாளரின் பாதை என்பது அதுதான். ஏற்கெனவே இருக்கும் விமர்சனங்களில் இருந்து கொள்கைகளை எடுத்துக்கொண்டு இன்றைக்குரிய விமர்சனத்தை முன்வைப்பது அதன் முறைமை.

சி.சு.செல்லப்பா அலசல் விமர்சனம் என்பதை முன்வைத்தார். ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு அதில் உள்ள கூறுகளை ஆராய்ந்து அதை பகுப்பதும் தொகுப்பதுமான முறைமை அவருடையது. கா.ந.சு. எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்வது கிடையாது. இன்னின்னது முக்கியமானது என்பதாக அவர் ஒரு பட்டியலைத்தான் முன்வைத்தார். அவரது விமர்சன முறை அது.

அக்காலத்தில் அத்தகைய பட்டியல் மீது பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் வெறுமனே பட்டியலை மட்டுமே போடுவதாகவும், அது ஏன் முக்கியம் என்பதை சொல்வதில்லை என்றும் அதனால் அவர் வெறும் பட்டியல்காரர் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த எழுபத்தைந்து ஆண்டுகாலத்தில் கா.ந.சு. உருவாக்கிய பட்டியல்தான் இன்றும் நிற்கிறது. அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள்தான் இன்றும் முக்கியமான படைப்பாளியாக நீடிக்கின்றனர்.

இன்று அத்தகைய பட்டியல் முறையை இலக்கிய விமர்சனம் அல்ல என்று யாரும் சொல்லமாட்டார்கள். Canon என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் முதன்மை நூல்களை பட்டியல் போடுவது என்பது இன்று ஒரு முக்கியமான இலக்கிய செயல்பாடு. ஹெரால்டு ப்ளூம் (Harold Bloom) போன்ற மாபெரும் இலக்கிய விமர்சகர்களின் பணி என்பது ஐரோப்பாவின் முதன்மை நூல்களை (Western Canon) முன்னிறுத்தியதே. ஐரோப்பிய இலக்கியத்தின் தலைசிறந்த நூல்களின் ஒரு பட்டியலை அவர் உருவாக்கினார்.

அத்தகைய பட்டியல்களில் இருந்து காலப்போக்கில் சில நூல்கள் வெளியேறவும் செய்யலாம். உதாரணமாக, கா.ந.சு. ஆர்.சண்முகசுந்தரம், காசியபன் போன்றோருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இன்று யாரும் கொடுப்பதில்லை. அவர் ப.சிங்காரத்தை பொருட்படுத்தவேயில்லை. ஆனால் அவர் இன்று முக்கியமான படைப்பாளியாக உள்ளே வந்திருக்கிறார். இதுபோன்று சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவர் உருவாக்கிய பட்டியல் ஏறத்தாழ அப்படியேதான் நீடிக்கிறது.

இவர்களுக்கு அடுத்தகட்டமாக சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், பிரமிள் என்ற மூவர் வருகின்றனர். இம்மூவரும் ஒருவரையொருவர் நிராகரித்தும் முழுமை செய்தும் ஒரு இலக்கிய விமர்சனத்தை உருவாக்கினார்கள். அதுவும் ஒரு ரசனை விமர்சனம்தான். அதில் சு.ரா.வின் பாணி என்பது இலக்கியத்தின் வடிவத்தை (Structure) மட்டும் கருத்தில் கொள்வது. கச்சிதமான மொழியில் எழுதப்பட்டிருத்தல், சிறுகதை, நாவல், கவிதை போன்றவை அதனதற்குரிய வடிவத்தில் அமைந்திருத்தல் போன்ற அழகியல் அம்சங்களே அவரது அளவுகோல்கள்.

வெங்கட் சாமிநாதனை பொறுத்த அளவில் ஒரு படைப்பு என்பது அதன் ஆசிரியரை மீறி ஒருவித இயல்கடந்த பித்து நிலையில் (Trance) வெளிப்படுவதாக இருக்கவேண்டும். தனக்கு தெரிந்ததை எழுதி வைப்பவன் எழுத்தாளன் கிடையாது என்பது அவர் கருத்து. ஒரு பூசாரி சன்னதம் வந்து பேசுவதுபோல ஒரு எழுத்தாளனிடமிருந்து படைப்பு வெளிப்பட வேண்டும். அந்த பித்து நிலையின் மூலத்தை ஆராய்வதுதான் அவரது அடிப்படை. பிரமிளுக்கு ஒரு படைப்பில் இருக்கும் தரிசனம் (Vision), தத்துவார்த்தமான முழுமைநோக்கு என்பதே முக்கியம். இவ்வாறு இம்மூவரும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் விமர்சனத்தை முன்வைத்தனர்.

இம்மூவரும் தனித்தனியாக சிற்றிதழ்களையும் நடத்தியுள்ளனர். வெங்கட் சாமிநாதன் தனது யாத்ரா இதழில் எழுதியவை அனைத்தையும் பிரமிள் தனது லயம் இதழில் மறுத்து எழுதினார். இவ்விரு இதழ்களுமே நாகர்கோயிலில்தான் அச்சாகும். அவற்றை வேதசகாயகுமார் எடுத்துச்சென்று அச்சகத்திற்கு கொடுப்பார். அவரும் அ.கா.பெருமாள் அவர்களும் சேர்ந்து அப்பணியை செய்தனர். வேதசகாயகுமார் அவ்விருவருக்குமே நண்பராக இருந்தார். இவர்கள் அத்தனைபேருமே சு.ரா.விற்கு நெருக்கமானவர்களே. ஒவ்வொரு மாதமும் சு.ரா. வீட்டில் நடைபெற்ற காகங்கள் இலக்கிய கூட்டத்தில் அமர்ந்து பேசக்கூடியவர்கள்.

அவர்களுக்கெல்லாம் நாகர்கோயில் என்பது ஒரு மையப்புள்ளியாக இருந்தது. அந்த  மூவருக்கும் அடுத்தகட்டமாக வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன், தமிழவன், ப.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைவரும் நாகர்கோயிலை சேர்ந்தவர்களே. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லலாம்.

இவ்வாறு சு.ரா., வெ.சா., பிரமிள் போன்றோருக்கு அடுத்த தலைமுறை விமர்சகராக வேதசகாயகுமார் உருவாகி வந்தார். இத்தனை பேருக்கு மாணவராக இருந்து அவர்களுடைய செல்வாக்கு இருந்தபோதிலும் அவர்களிடமிருந்து இவர் எப்படி மாறுபடுகிறார், கூடுதலாக இவரிடம் என்ன உள்ளது என்பதுதான் அவரை நாம் வரையறுப்பதற்கான அடையாளம்.

(மேலும்)

முந்தைய கட்டுரைசிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
அடுத்த கட்டுரைஆலயப்பயணம்,கடிதம்