தூக்கு- எதிர்வினை

திரு ஜெ,

( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்)

நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வைத்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் ‘இந்த’ தூக்கு தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது.  இந்த தண்டனைக்கு எதிரான கருத்துள்ள கடிதம் ஒன்றாவது வெளியிடப்பட்டிருந்தால் சரியாயிருந்திருக்கும். எனவேதான் ‘இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக’ நீங்கள் சொன்னதற்குப்பின்பும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த தூக்கு தண்டனை குறித்த ஓரே ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய இம்மூவரும் ராஜீவ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் அல்ல மாறாகக் கொலைக்கு உடந்தையாய் செயல்பட்டார்கள் என்பதே குற்றச்சாட்டு. (நேரடியாக ஈடுபட்டதாக சொல்லப்படுபவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார்கள் அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்). இவ்வகைக் குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை என்பது அதிகப்படியானது அதுவும் ஏற்கனவே இருபது ஆண்டுகாலம் அவர்கள் வாழ்க்கை சிறையில் கழிந்திருக்கும் நிலையில்.

மேற்குறிப்பிடப்பட்ட மூவரில் பேரறிவாளன், இன்றைக்கும் தான் குற்றமற்றவர் என்று கூறி வருகிறார்.  அவர் எழுதியுள்ள புத்தகத்தை நீங்கள் படித்துப்பார்த்தீர்களானால், தண்டனக்குப்பயந்து செய்த தவறை இல்லை என்று மறுக்கும் கேவலமான புத்தி உள்ளவர் அல்ல என்பது தெரியும்.

அவர் குற்றமற்றவர் என்று நம்பும் என் போன்றோர்க்கு மிக இளம் வயதிலிருந்தே அவர் அனுபவித்து வரும் சிறைத்தண்டனையே பெரும் வேதனையான விஷயமாகத்தெரியும் போது அவரது மரண தண்டனையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும்?

உங்கள் கட்டுரை குறித்து விமர்சனம் எழுதியுள்ளோர்களின் ஒரு சில வரிகளையும் அதற்கான என்னுடைய பதிலையும் கீழே அளித்துள்ளேன்.

“இந்த விஷயத்தில் இறங்கிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். இவர்கள் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு நல்ல விசயங்களுக்கும் தோள்கொடுத்தவர்களே அல்ல. இந்தியா அழியவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள். அதற்காக இவ்வளவுநாளாகப் பிரச்சாரம் செய்யகூடியவர்கள்.எவ்வளவோ வெளிநாட்டுக் காசு வாங்கிக்கொண்டு பேசுபவர்கள்.” –சாமிநாதன்.

சாமிநாதனின் இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது, மிகப்பெரிய அபாண்டமான குற்றச்சாட்டின் மூலம்,தான் எதிர்ப்பவர்களை ஒரேயடியாக சிறுமைப்படுத்தும் முயற்சி.

“இப்போதுகூட 2047லே இந்தியாவைத் துண்டுதுண்டாக சிதறடிப்போம் என்றுதான் வைகோ பேசிக்கொண்டேஇருக்கிறார். ’இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா’ என்று இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறார்.   இவர்களை நம்பியா நாம் ஆதரவு கொடுப்பது?” –சாமிநாதன்.

வைகோ-வைப்பற்றி இவர் தெரிந்து வைத்திருப்பது இவ்வளவுதான். வைகோ-இந்திய அரசாங்கத்திற்கெதிராகக் கோபமாக சொல்லும் வார்த்தைகளை மட்டும் எடுத்து அவருக்கெதிராகப் பயன்படுத்தும் இவர்கள் அந்தக் கோபத்திற்கு மூலகாரணமாக இருக்கும் மனித இனத்திற்கெதிரான கொடுஞ்செயல்களை,  முற்றிலுமாக மறைத்து விடுகிறார்கள், மிக சாமர்த்தியமாக.

ராஜீவ்காந்தி இந்தியாவின் அதிபராக இருந்தவர். ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு இருந்தவரும் கூட என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவரைக் கொன்றது கொலை அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்தியது.  அது ஒரு தேசிய அவமானம்-சாமிநாதன்.

சாமிநாதனின் இந்தக் கருத்திற்கு அவரது கருத்தையே கொண்டிருக்கும் சரவணனின் கருத்தையே பதிலாகத்தருகிறேன்.

‘அதாவது அவர்கள் நம்மைக் கொல்வது நியாயம், நம் அரசு திருப்பி அவர்களைக் கொல்வது அநியாயம். இதுக்கு என்ன அறிவுஜீவி பசப்பு?’  –சரவணன் ஆ

ராஜீவ் மரணம் குறித்த என்னுடைய கருத்தைத் தெரிவிப்பது அவசியம் என்று கருதுகிறேன், அது என்னைப்பற்றி மட்டுமல்ல என்னைப் போன்ற தமிழீழ ஆதரவாளர்களைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவும். ஒரு சராசரி மனிதனாக, இந்தியனாக மற்றவர்களைப்போன்றே என் மனதிலும் மிக ஆழமான ஒரு காயத்தை ஏற்படுத்தியது ராஜீவ் கொலை. 1991 மே- 21ம் தேதி நள்ளிரவில் செய்தி தெரிந்த நொடியில் எனக்கேற்பட்ட பெரும் அதிர்ச்சியும் வேதனையும் இன்றும் என்னால் உணர முடிகிறது. மற்றொருபுறம் அதே சராசரி மனிதனாய், தமிழைத் தாய் மொழியாகக்கொண்டவனாக, ஈழத்தில் இந்தியாவின் தலையீட்டால் அவர்களுக்கேற்பட்ட பல்லாயிரம் மடங்கு அதிகமான வேதனைகளும் இழப்புகளும் என்னை பாதிக்கிறது. மிகக்குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால்,

அ) போருக்கு முன்பாகப் புலிகளின் 19 முக்கிய தளபதிகளின் மரணம்(அவர்களுள் பலர் புதிதாய்த் திருமணமானவர்கள்) மற்றும் காந்திய வழியில் போராடி மடிந்த திலீபனின் மரணம்.

ஆ)போரின் போது கொல்லப்பட்ட 12-ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிப் ‘பொது’ மக்களின் மரணம். குறிப்பாக யாழ் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 87 பேரின் படுகொலைகள் மற்றும் வெல்வெட்டித் துறையில் கொல்லப்பட்ட 300க்கும் அதிகமான பொது மக்களின் மரணம்.

இ) இந்தியாவின் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்- தகவலின் படி ஒப்பந்தத்திற்கெதிரான முறையில் புலிகளையும், பிரபாகரனையும் கொல்ல இந்தியா முயற்சித்தது.

மேலும் நாட்டிற்காகப் பணி செய்ய ராணுவத்தில் இணைந்த நம்து வீரர்களை, எம் மக்களுடனே போரிடச்செய்ததால் ஏற்பட்ட 1400 இந்திய போர் வீரர்கள்களின் மரணம் மற்றும் தனது இன அழிப்பைத்தடுக்கப் போராடிய 4000-க்கும் அதிகமான தமிழ்ப்போராளிகளின் மரணம்,

ஆகிய காரணங்களாலும் இதையொத்த இன்னும் பல காரணங்களாலும் ராஜீவ் மரணத்தைத் தாங்கிக்கொள்ளப் பழகிக்கொண்டேன்.

-அறிவுடை நம்பி.

 

அன்புள்ள அறிவுடைநம்பி,

உங்கள் கடிதத்தை முழுமையாகவே வெளியிடுகிறேன். நான் இதை முடித்துக்கொள்ளலாமென நினைத்தது ஜனநாயக விவாதம் என்ற பேரில் இருபக்கத்தையும் பேச ஆரம்பித்து ஓர் உணர்ச்சிகரமான விஷயத்தை மழுங்கடிக்கவேண்டாமென்றுதான்.

இருவிஷயங்களில் நான் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். ஒன்று, இம்மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை அவர்களின் சிறைவாசத்துடன் சேர்க்கும்போது அடிப்படை மனிதநீதிக்கு மேலாக போகுமளவுக்கு மிகையானது. ஆகவே தூக்கு  அநீதியானது. உடனடியாக நிறுத்தப்படவேண்டியது.

முதற்குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் மரணதண்டனை எப்படி மிகையாகப்பார்த்தாலும்  கொலைபற்றிய நேரடித்தகவல்கள் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லாத பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டிருப்பதும் பிழையானதே. அந்தக் கடுமைக்கு அன்றிருந்த தடா சட்டம் காரணம் . அது  பின்னர் பிழை என விலக்கிக்கொள்ளப்பட்டதனால் சட்டபூர்வமாகவும் தண்டனை மறுபரிசீலனைக்குரியதாக ஆகிறது

அரசியல் குற்றங்களை உலகமெங்கும் அவை நிகழ்த்தப்பட்ட அரசியல் சூழலையும் கருத்தில்கொண்டுதான் பார்ப்பது வழக்கம்.  அப்பட்டமான வெறும் குற்றமாகப் பார்க்கும் வழக்கம்  நாகரீக உலகில் இல்லை. இந்தியாவிலும் அதே நிலைப்பாடுதான் நாகா, மணிப்பூர் பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று இக்குற்றம் நிகழ்த்தப்பட்ட சூழல் முழுமையாகவே  மாறி விட்டமையால் இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டாகவேண்டும். ஆகவே இந்தக் கடும் தண்டனையை மறுபரிசீலனை செய்ய எல்லா அரசியல் நியாயமும் உள்ளது. முன்னுதாரணங்களும் உள்ளன.

ஆகவே இந்தத் தூக்குத்தண்டனையை  ரத்துசெய்வதே மனிதாபிமானம். அரசியல் விவேகம். அடிப்படைப்பொதுப்புத்தி. ஒரு சமூகத்தின் தார்மீகத்துக்கு எதிராக அரசு செயல்படக்கூடாது.

காங்கிரஸ் அரசு பரிசீலிக்காவிட்டாலும் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றே நினைக்கிறேன். இருபத்தைந்தாண்டுக்கால தனிமைச்சிறையை மரணதண்டனையை ரத்துசெய்வதற்கான வலுவான காரணமாகக் காட்டலாம், அதற்கு நிகரான பத்து முன்னுதாரணங்களாவது இந்திய வரலாற்றில் உள்ளன.

அதற்கு எதிராக இன்று தமிழகத்தில் உருவாகியிருக்கும் மனிதாபிமான இயக்கத்தை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.கடைசிக்கணத்திலாவது அரசும்  உண்மைநிலையை உணரக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.  ஆகவே இன்னும் ஒரு நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.

அல்லது, அப்சல்குருவை தூக்கிலிடுவதை மதச்சார்பற்ற சித்திரமாகக் காட்ட இம்மூன்று உயிர்களும் தேவைப்படுகின்றன என்றால் அது என்றென்றும் இந்திய ஜனநாயகத்துக்குக் களங்கம்தான்.

காங்கிரஸ் அரசு போர்க்குற்றவாளியான ராஜபக்‌ஷேக்கு அளிக்கும் ஆதரவின் மூலம் அறுபதாண்டுகளாக சர்வதேச அளவில் அதற்கிருந்து வந்த ஒரு அடிப்படை மரியாதையை இழந்து கோழையான,செயலற்ற, வன்மம் கொண்ட அரசு என்ற சித்திரத்துடன் இன்று நின்றுகொண்டிருக்கிறது.

அதன் மூலம் இந்திய வம்சாவளியினருக்கு உலகமெங்கும் இந்தியா காவல் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் அரசு சிதைத்துவிட்டது. இது ஒரு வரலாற்றின் முடிவு. ஒரு தார்மீகத்தின் அழிவு. அதை இந்தியசமூகம் இன்னமும் உணரவில்லை.

இன்று இந்த தூக்குத்தண்டனை மூலம், அதன் குடிமக்கள் மனத்திலும் அந்தச்சித்திரத்தையே அது நிலைநாட்டப்போகிறது. அது காங்கிரஸ்அரசுக்கு மட்டும் அல்ல நம் ஜனநாயகத்துக்கும் பேரிழப்பே.

ஜெ

தூக்கிலிருந்து மன்னிப்பு

 

 

 

 

முந்தைய கட்டுரைஎஸ்.எல்.எம்.ஹனீஃபா
அடுத்த கட்டுரைஅமெரிக்கன் கல்லூரி ,மதுரை