எல்லாக் காலங்களிலும் உள்ளம் கலங்கி முன்னடி வைக்கத் தயங்கும் தருணம் எல்லோருக்கும் வாய்க்கிறது. கனவுகள் அவ்விடத்தில் சந்தேகங்களாகித் தேங்கும் நிலையும் ஆகிறது. மனம் செயலற்று தவிக்கும் எல்லா சூழல்களிலும் தேற்றி எடுக்க ஒரு சொல், தூக்கி விட ஒரு கை தேவைப்படுகிறது.
கேள்விகளும் ஐயங்களும் நிறைந்த எத்தனையோ மனங்களை நெறிப்படுத்தி தெளிவுறச் செய்த வார்த்தைகளின் புத்தகம் ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய தன்மீட்சி நூல். தயங்கும் பல நெஞ்சங்களை துணிவுற்று முன்னகர வழி செய்த தன்மீட்சி நூலை இன்னும் பல பல இளம் மனங்களிடம் கொண்டு செல்லும் முயற்சி ஒன்றினைக் கையிலெடுக்கிறோம்.
தன்மீட்சி நூலின் வாசிப்பனுபவக் கட்டுரைப் போட்டி ஒன்றைத் திட்டமிட்டுள்ளோம். வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தும் விசை முனைப்பிலும் ஒரு மனநலத் தெளிவளிக்கும் நூலை பரவலாக கொண்டு சேர்க்கும் முயற்சியாகவுமாக இது இருக்கும் என நம்புகிறோம்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் தன்மீட்சி நூல் வாசிப்பனுபவத்தை கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டும். பக்க அளவுகளில் நிபந்தனை ஏதுமில்லை. தேர்ந்தெடுக்கப்படும் 25 கட்டுரையாளர்களுக்கு மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் ஆசிரியர் ஜெயமோகன் ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழுடன் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான தன்னறம் நூல்வெளி வெளியீட்டு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும்.
தன்மீட்சி நூலை வாங்கி வாசிக்க இயலாத மாணவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு தங்களது பள்ளிக் கல்லூரி அடையாள அட்டையை அனுப்பி நூலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டுரைகளை அனுப்பிவைக்க வேண்டிய இறுதி நாள் :
15/09/2024
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் மற்றும் புலன எண்
[email protected]
9843870059