கடலூர் சீனு
அறிவின் தனிவழிகள்
வணக்கம் ஜெ,
கடலூர் சீனுவைப்பற்றிய முகநூல் சீண்டல்களை நான் வாசித்தேன். ஒன்று தெளிவாகப் புலனானது. கடலூர் சீனுவின் இலக்கிய வாசிப்பு பற்றியோ அவரின் உதிரி உதிரியான கருத்துக் கடிதங்கள், மேடைப் பேச்சுகள் பற்றியோ முகநூல் போராளிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே உறுதியாகத் தெரிந்துகொண்டேன்.
நான் கடலூர் சீனுவைக் கண்டடைந்தது ஊட்டி இலக்கிய முகாம் ஒன்றில். நீங்கள் நினைவுகூர ராங்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். அவரிடம் புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் பற்றி தயார்செய்து பேசச்சொல்லியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். அவரும் பேசினார். அப்பேச்சு உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. நீங்கள் அவர் சரியாகத் தயார் செய்துகொண்டு வரவில்லை என்று கடுமையாகக் கடிந்துகொண்டீர்கள். அதனால் அவர் சோர்ந்துபோகவில்லை என்பதை அரைமணி நேர இடைவெளிக்குப் பின்னர் தன் ஆற்றலை நிரூபிக்க நினைத்து உங்களிடம் அதே தலைப்பில் பேச அனுமதி கேட்டார். நீங்களும் அனுமதித்தீர்கள். அந்த அரைமணிப்பொழுதில் தான் வாசித்தவற்றை நினைவுகூர்ந்து, தொகுத்துக்கொண்டு, எந்தக் குறிப்பும் இல்லாமல். ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல் உயிர்த்தெழுந்து சிறப்பாகப் பேசி முடித்தார். அடுத்த கணமே நீங்கள் அவரைப் பாராட்டினீர்கள். அன்றைய முகாமுக்கு மலேசியாவிலிருந்து மூவர் வந்திருந்தோம். காற்றால் தூண்டப்பட்ட தீயைப்போல அவர் மீண்டெழுந்ததை எங்கள் பயணத்தில் ஓயாமல் பேசிக்கொண்டோம். ஒரு துறையைப் பற்றி ஆழ்ந்தறியாமல் அவர் தன் கருத்தை முன் வைத்ததில்லை என்று அவரை நெடுக வாசித்து அறிந்துகொண்டேன். அவரின் எண்ணற்ற கட்டுரைகளை நான் பல்வேறு இணைய தளங்களில் வாசித்து பிரமிப்படைந்திருக்கிறேன். கோவையில் நடந்த விஷ்ணுபுற விழாவில் நான் அவரைக் கேட்டேன், “ஏன் சீனு நீங்கள் ஒரு வலைத்தளம் தொடங்கி உங்கள் படைப்பை அதில் பதிவுசெய்து வரலாமே” என்று. அவர் ,”பரவால்லீங்க இப்பிடியே எழுதிட்டிருந்தாலே போதும்,” என்று மிகுந்த தன்னடக்கதுடன் பதிலிறுத்தினார். அவருக்கு புத்தகம் போடுவதிலோ தன் ஆற்றலை நிரூபிக்க வேண்டுமென்பதிலோ மெனக்கெடலை வலிந்து நிறுவிக்கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன். அவர் ஒரு சிறந்த வாசகனாக இன்புற்று இருப்பதையே விரும்புகிறார் என்பதை அவருடைய கடிதங்கள் விமர்சனங்கள் முன்மொழிகின்றன. சமீபத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட புக் பிரம்மா இலக்கிய விழா கருத்தாடல்களை நானும் கேட்டேன். அவர் ஆற்றலை அறிய அந்த ஒரு நிகழ்ச்சியேகூட போதும்! அவருக்குள்ள திறமையைப் பார்க்கும்போது அவர் படைப்புகளைச் சரியாகத் தொகுத்திருந்தால் இன்றைய தேதியில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக ஆகியிருக்கக்கூடும். அந்தப் புகழை விரும்பாத ஒரு அபூர்வமான மனிதராகவே இருப்பது வியப்பாக இருக்கிறது. கடலூர் சீனு பற்றிய உங்கள் பதிவு அவரை அறியாதவர்களைச் சென்றடையவேண்டும் என்பதே என் இத்தருண ஆசை.
கோ.புண்ணியவான்..
ஆசிரியருக்கு,
தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த ஒரு ஆக்கம்.
கிட்டத்தட்ட உங்களின் (உண்மையான) பல வாசகர்களுக்கும் இந்த வகையான ஒரு உணர்வே கடலூர் சீனுவுடன் உண்டு.
ஆல் அமர்ந்த ஆசான்” என்ற உங்கள் ஒரு கட்டுரை நினைவில் வருகிறது (கடலூரும் பாண்டிக்கு) அருகில் தானே!!! அதனால் தான் என்னவோ….
என்றும் மாறாத மதிப்புடன்.
சங்கர் பூமிலிங்கம்.