கடலூர் சீனு
அறிவின் தனிவழிகள்
இனிய ஆசிரியர் ஜெ,
கடலூர் சீனு குறித்த கட்டுரையை வாசித்தேன், வாழ்நாளெல்லாம் அவர் செய்த தவம் பலித்தது என்று சொல்ல வேண்டும், வசிஷ்டரின் கையால் பிரம்ம ரிஷி என்பது இது தான் அல்லவா, ஆரம்பம் முதலே மிகுந்த மகிழ்ச்சியாக வாசித்து வந்தேன் இறுதியில் மணம் நெகிழ்ந்து போனேன், ஆசிரியரை பற்றி மாணவரும், மாணவர் மீது ஆசிரியரும் கொள்ளும் அன்பும் அர்ப்பணிப்பும் எளிதில் காண கிடைக்காதது.
சட்டென்று கண்முன்னால் பார்கும் போது அதிலும் நான் மிகவும் நேசிக்கும் நீங்கள், உங்கள் வாசகரை பற்றி சொன்னது ஒரு வித பரவசமான உணர்வை ஏற்படுத்தியது எனலாம்.கடலூர் சீனு எழுதிய பல கட்டுரைகளை தளத்தில் படித்து வியந்திருக்கிறேன், அவரின் வாசிப்பின் ஆழம் உண்மையில் வியக்க வைக்கிறது.
அவர் பெரிய எழுத்தாளராக விளங்குவார் என்று எதிர் பார்த்த எனக்கு உங்கள் கட்டுரை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது, மேலும் இது சரி தானே என்றும் தோன்றியது.மிக சிறந்த வாசகர் மிக சிறந்த எழுத்தாளருக்கு சமம் என்ற உங்கள் கருத்தை நான் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன்.அவரை போல நல்ல வாசகராக வேண்டும் என்று முயற்சி செய்ய வேண்டும் என்று தோன்ற தொடங்கி விட்டது.
நன்றி
என்றும் அன்புடன் உங்கள்
அனில் குமார்.
அன்புள்ள ஜெ,
சீனு அண்ணாவை குறித்த கட்டுரை படித்தேன். விஷ்ணுபுரம் விழாக்களில் ஒருமுறை பங்கேற்றிருந்தால் கூட சீனு என்ற ஆளுமை குறித்து அறிந்திருக்க முடியும். 2022ம் ஆண்டு நான் முதன்முறையாக ராஜஸ்தானி சங் பவனில் அண்ணனை கண்ட போது சுற்றி 20 பேர் கூடியிருக்க நான் நீங்கள் தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பார்த்தபோது அண்ணா எய்டனை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
சென்ற மாம் மலைத்தங்குமிடத்தில் வெண்முரசு நாள் காலை அமர்வு தொடங்குவதற்கு முன் கிராத சைவத்தை குறித்து உரையாற்றிக்கொண்டிருந்தார். திருவெள்ளறை குறித்த அவரது கடிதத்தை https://www.jeyamohan.in/199304/ கையேடாக கொண்டு தான் முதல் முறை புண்டரீகாக்ஷப் பெருமாள் கோயில் சென்று வந்தேன். அத்தனை முழுமையாக திருப்பைஞ்சீலி மற்றும் திருவெள்ளறை கோயிலை குறித்த குறிப்பை நான் வாசித்ததில்லை.
என்னை போன்று அவரிடம் நேரடியாக உரையாடாதவர்களுக்கு கூட அவர் கொடுத்தது நிறைய இருக்கிறது.
அன்புடன்,
மனோஜ், திருவானைக்காவல்