ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]

-1-

 

 

“இன்னைக்கு வேண்டாம் சார். செவ்வாய்கிழமை.” என்று ஷரவணன் சொன்னபோது நான் ஒத்துக்கொண்டேன். அது எனக்கு வசதியாயிருந்தது. சாயங்காலத்துக்குள் முடிக்கவேண்டியவை நிறைய இருந்தன. ஷரவணனோடு போய் மனைகளைப் பார்க்க முடியாது. இந்த ‘செவ்வாய்’ விஷயம் தோதாக வந்ததால் உடனே சரி என்று சொன்னேன். நானாகவே அதைச் சொல்வதுபோலவே சொன்னேன் “அரே! இன்னைக்கு செவ்வாய்கிழமை! நானும் வேலைக்கு நடுவில மறந்துட்டேன் பாரு.”

இரண்டு நாட்கள் கழிந்தபின்னும் ஷரவணன் இடம் பார்க்கப்போவது குறித்து எதுவுமே சொல்லவில்லை. வழக்கமாக அவனது வியாபாரம் காலையில் அலுவலக நேரத்துவக்கத்திலிருந்தே ஆரம்பித்துவிடும், உள்ளே வந்து டீ கப்பை அவன் டேபிளில் வைத்தவுடன். சில வருடங்களுக்கு முன் பியூனாக இந்த அலுவலகத்தில் சேர்ந்தான். பின்னர் மெதுவாவாகக் கூடுதல் சேவைகளைச் செய்து வேலையில் நீடித்தான். அலுவலகத்தில் எல்லோருக்கும் அவனிடம் ஏதாவது சொந்த வேலை இருந்தது. எதுவானாலும், பழைய ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்க, பழைய மின்விசிறியைக் கழற்றி எறிய, காரின் பின்புறம் இடிபட்ட இடத்தை சகாய விலையில் சரி செய்ய, தச்சரைக் கூப்பிட்டு வந்து ஆணிக்கு ஐந்து ரூபாய் வீதம் சுவற்றில் ஓட்டை போட, அவனிடம் கேட்டால் போதும், வேலை முடியும். பெங்களூருவில் ஒரு இடம் வாங்க வேண்டுமா, ஆவணங்களை சரிபார்க்க வக்கீல் வேண்டுமா, வீட்டைக் கட்டித்தர ஆள் வேண்டுமா, பூமி பூஜைக்கு பூசகர் வேண்டுமா? அவன் எப்போதும் தயாராயிருந்தான். உங்களுக்கு நாடி சாஸ்திர பண்டிதரோ வாஸ்து சாஸ்திர பண்டிதரோ வேண்டுமென்றாலும், பாபாவை தரிசிக்க வேண்டுமென்றாலும், சாஸ்திரப்படி பூசைக்கு உங்கள் சாதி உட்பிரிவுக்குள் பூசாரி வேண்டுமென்றாலும், அவனிடம் சொன்னால் உடனடியாக ஏற்பாடு செய்வான். கன்னடம் தெலுங்கு தமிழ் ஹிந்தி சரளமாகப் பேசுவதால் அவனுடைய தாய்மொழி என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆங்கிலம், தப்பும் தவறுமாயிருந்தாலும், புரிந்துகொள்ள முடியும்.

இரண்டு நாட்கள் கழித்து வேலைப்பளு கொஞ்சம் குறைந்திருந்தது நான் சொன்னேன், “இன்னைக்கு நாம போயி இடத்தப் பாக்கலாம் ஷரவணா.”

“ஒரு நாள் பொறுங்க சார். வெள்ளிக்கிழமை போகலாம்”

“ஏன்? நல்ல நேரம் பாக்குறியா?” கிண்டலாய்ச் சொன்னேன்.

“அப்படியே வச்சுக்கோங்க. எவ்வளவு சுளுவா வேல நடக்குதுன்னு பாக்கத்தான போறீங்க..”

அந்த வெள்ளிக்கிழமை நாங்கள் போய் இடத்தைப் பார்த்தோம். முழுதாய்ப் பார்க்குமுன்பே அவன் எரிச்சலுடன் சொன்னான்,”இது தெக்கு திசைய பாத்திருக்கும்னு தெரிஞ்சிருந்தா உங்களக் கூப்பிட்டுட்டு வந்திருக்கவேமாட்டேன்.” எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. ஷரவணன் வேண்டாமென்றான். “இது உங்களுக்கில்ல சார். வேணும்னா இதேபோல இன்னொண்ணு பாக்கலாம் சார்.”

“எந்த தெசைய பாத்திருந்தாலும் எனக்குக் கவலையில்ல. வேற ஏதாச்சும் பிரச்சனை இருக்குதா சொல்லு..” என் தொனி ‘உன் வேலைய மட்டும் பாரு. எனக்கு அறிவுரை சொல்லாதே’ என்பதுபோலிருந்தது.

ஷரவணன் விடவேயில்லை. “உங்க விருப்பம் சார். உங்க நம்பிக்கதான் முக்கியம்…”

“வேலைய முடிச்சுக் குடுப்பியா இல்ல ஆட்களோட ஜாதகத்தப் பாத்துகிட்டிருப்பியா?”

“வாங்குறவங்க நல்லாயிருக்கலைன்னா என்னோட வியாபாரத்துக்குத்தான நஷ்டம்? எல்லாம் நல்லாப் போச்சுன்னா அவங்களாகவே இன்னும் ஆட்கள கொண்டு வருவாங்க. இல்லைன்னா உன் வழியா இந்த இடத்த வாங்கிட்டு நாங்க ரெம்ப கஷ்டப்பட்டுட்டோம்னு சொல்லுவாங்க.”

“ஒனக்கு வேணும்னா நான் குறையே சொல்ல மாட்டேன்னு எழுதித் தர்றேன். நாம செவ்வாக்கிழம வந்திருந்தாலும் இந்த இடம் தெக்கு பாத்துதான் இருந்திருக்குமில்லியா?”

“சார் நான் குதர்க்கமாப் பேசுறேன்னு நினைக்காதீங்க. சிந்தனைக்கும், நம்பிக்கைக்கும் அனுபவத்துக்குமிடையே இருக்கிற முடிச்ச யாராலும் அவிழ்க்கமுடியாது சார். நமக்கு ஜோஸ்யத்துல துளி நம்பிக்கையில்லைன்னாலும் பத்திரிகையின் பக்கங்கள திருப்பும்போது நாம சட்டுன்னு ராசி பலன பாக்கிறதில்லையா? ஒரு போலி கைரேகை நிபுணரப் பாக்கப்போனாலும்கூட நம்ம தனிப்பட்ட வாழ்க்கை பத்தி ஏதாச்சும் சொல்லிட்டா நம்ம மனசுல நிக்குறதில்லியா? உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா? எனக்கு இப்ப அது நியாபகம் வருது. சகானே சாகெப் பத்தி ..”

இவன் இப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகவும் மொழிவன்மையோடும் பேசுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை சமன்படுத்திக்கொண்டு அவனிடம் கேட்டேன் “சொல்லு கேப்போம். சகானே சாகெபுக்கு என்ன? அவரு ஜாலியா ரிட்டையர்ட் வாழ்க்கைய அனுபவிச்சிட்டிருப்பாரு.”

“அவர் ஒரு இடம் வாங்கி வீடும் கட்டினாரு. நானே ஒரு மகராஷ்டிரிய புரோகிதர கிரகப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்தேன். ரெண்டு மாசத்துக்கப்புறமா அவரப் பாக்கும்போது ரெம்ப கவலையா இருந்தாரு. ’நான் என்ன செய்வேன்? முன்னெல்லாம் என்ன எதிர்த்தே பேசாத என் மனைவி இப்ப ஏதேதோ காரணங்களுக்காக எங்கிட்ட சண்ட போட்டுகிட்டே இருக்கா’ன்னாரு. தழுதழுத்த குரல்ல ’சண்டை போடுறப்பொ அவ பல்ல நற நறன்னு கடிக்க்கிறதப் பாக்கத் தாங்கலை’ண்ணும் சொன்னாரு. அவர் மனைவிக்குத் தெரியாம போய் டாக்டரக்கூடப் பாத்திருக்காரு…

… எனக்கு வாஸ்து சரியில்லைன்னு தோணுச்சு. சென்னப்பான்னு ஒருத்தர் இருக்காரு. வாஸ்து நல்லாத் தெரிஞ்சவர். சகானே வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன். அவர் வீட்டுக்கு ஜலம் வரும் வழி சரியில்லைன்னு சொன்னாரு. சகானே அதக் கண்டுக்கல. ரெண்டே நாட்களுக்குள்ள ஒரு விபத்து. கதவத் திறந்து வச்சிட்டு அவர் மனைவி காய்கறி வாங்கப் போயிட்டாங்க. இவர் சோஃபால உக்காந்து ஏதோ ஒரு கம்பெனியோட பாலன்ஸ் ஷீட்டப் பாத்துக்கிட்டிருக்காரு, ஸ்டாக் மார்கெட்டுக்காக. திடீர்ணு வேகமாக் காத்து வீசியிருக்குது. கதவு அறையுறதுக்கு முன்னால நிறுத்திடலாம்ணு நினைச்சு ஒருகையில பேப்பரையும் தூக்கிக்கிட்டு இன்னொரு கைய நீட்டிக்கிட்டு எழுந்து போயிருக்காரு. திடீர்னு அந்த நேரம் அவர பேய்பிடிச்சதுபோல தோன்றியிருக்குது. அதுதான் கெட்ட வாஸ்துவோட வேல. வில்லப்போல அவர் உடம்பு வளைஞ்சிருக்குது. கதவப் பிடிச்சிட்டாரு அப்படியே கீழ விழுந்து தளர்ந்துட்டாரு. தாங்கமுடியாத வலி. உடனே ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க. இடுப்பு எலும்பு நகர்ந்திடுச்சுன்னு சொல்லிட்டாங்க. ஒவ்வொண்ணாப் பல வலிகளும் அவருக்கு வர ஆரம்பிச்சிடுச்சு.

…நான் ஆஸ்பத்திரி போய்ப் பாத்தேன். நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நானே எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அந்த நாளே போய் அவர் வீட்டுக்குத் தண்ணி வரும் குழாயில வால்வுடைய திசைய மாத்திவச்சேன். அவ்வளவுதான். அவ்வளவுதான் சார் பண்ணினேன். ஏதோ அற்புதம்போல வீட்டுக்கு அமைதி திரும்பிடுச்சு. அதுக்கப்புறம், சத்தியமா சொல்றேன், அவங்க சண்டபோட்டிருக்கவே மாட்டாங்க.”

கதை சுவாரஸ்யமாக இருந்தது என்று ஒப்புக்கொள்ளவேண்டும், ஆனாலும் ஜீரணிக்க முடியாமல் நான் சொன்னேன் “காக்கா உட்கார மரம் விழுந்த கத நீ கேள்விப்பட்டதில்லையா?”

“உங்களுக்கு வேணும்னா தற்செயல்னு எடுத்துக்குங்க. ஆனா ஒரு பெரிய மரம் உடைஞ்சு விழுறதுக்கு ஒரு சின்னக் காக்காவோட எடையே போதும். அதுமாதிரிதான் சார், இந்த உலகமே ஒரு மெல்லிய சமன்ல இருக்குது. அந்த சமநிலையக் குலைக்க ஒரு புல்லே போதும், ஒரு பட்டாம்பூச்சியோட சிறகசைவுகூட. கெட்ட வாஸ்துன்னோ துர்ரதிஷ்டம்னோ என்ன வேணும்னா சொல்லுங்க… நீங்க காலையில எந்திரிக்கிற நேரம் கொஞ்சம் மாறினாகூட உங்க நாள் மோசமா போகிறதுக்கு வாய்ப்பிருக்குது.”

நான் அவனோடு மேலும் விவாதிக்க விரும்பவில்லை. அந்த இடம் போய்விட்டது. இரண்டு நாட்கள் கழித்து ஷரவணன் அவனாகவே வந்து சொன்னான் “கவலப்படாதீங்க. அது போனது நல்லது.”

-2-

“ஒரு வீடு பாத்திருக்கேன். ஏதோ சினிமாக்காரங்களோடது. அவசரமா காசு தேவைப்படுதாம் அதனால விக்கிறாங்களாம். நமக்கு வேணும்னா கொஞ்சம் அங்க இங்க மாத்திக்கலாம். ரெம்ப நல்ல வீடு!” ஷரவணன் தொடர்ந்து தொல்லை செய்தான்.

எனக்கு வீடு வாங்குவதா? நிலம் வாங்குவதா என்பதில் உறுதி இல்லை. வீடு வாங்கும் பெரிய முடிவெடுக்க எனக்குத் தயக்கமிருந்தது. நான் ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு சொல்கிறேன் என்றதற்கு,”ஐயோ சார். அதுக்குள்ள அது வித்துடும். இதெல்லாம் அப்படித்தான் யோசிச்சிட்டிருந்தா கையிலிருக்கிறது ஓடிப்போயிரும். இந்த மாதிரி வீடு இவ்வளவு குறைச்சலாக் கிடைக்காது சார்.” என்று நம்பவைத்தான்.

நாங்கள் வீட்டை சாயங்காலமே போய்ப் பார்க்க முடிவெடுத்தோம். ஐந்துமணிக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பே கிளம்ப வேண்டும் என்று ஷரவணன் சொன்னான், ஐந்து மணிக்கு மேல் சகுனம் சரியில்லையாம். நான் ஒன்றும் சொல்லவில்லை.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்கூட்டர்களும் பைக்குகளும் நிறுத்தப்பட்டிருந்த இடத்தைத் தாண்டி சாலையோரத்திற்கு வந்தோம்.என்னைப் பார்த்துத் திரும்பி நின்றுகொண்டிருந்தான் ஷரவணன். நாங்கள் பார்க்கப்போகும் அந்த வீட்டைக் குறித்த தகவல்களையும் சினிமாக்காரர்களின் வெட்டி பந்தாக்களையும் ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டிருந்தான். செல்வச் செழிப்பின் உச்சியிலிருந்து தடம்புரண்டு வறுமையின் ஆழங்களில் வீழ்ந்த ஒருவனைக் குறித்து சொன்னான், இன்னொருவன் விண்கற்களைப் போல உயர்ந்தெழுந்தான். அவர்களின் பெயர்களைக்கூட நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

அந்தக் கணம்…

வேகமாக வந்த பேருந்து ஒன்று தடுமாறி எங்களை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தது. ஷரவணன் சாலைக்கு எதிர்ப்புறமாய் நின்று என்னைப் பார்த்து முழுக்கவனத்துடன் பேசிக்கொண்டிருந்தான். அந்தப் பேருந்து எங்களருகில் வந்தது மட்டும்தான் எனக்கு நினைவிலிருக்கிறது. நான் அவனை இழுத்தது இருவரும் தடுமாறி விழுந்து மயிரிழையில் சக்கரங்களைத் தப்பியது எதுவுமே என் சுய நினைவினால் நடக்கவில்லை. ஒரு திரைப்படக் காட்சி போல, அந்தப் பேருந்து பார்க்கிங்கில் நுழைந்து அரிவாளால் பயிர்களை நாசம் செய்வதைப்போல ஸ்கூட்டர்களையும் பைக்குகளையும் சின்னாபின்னமாக்கியது. நாங்கள் நடந்துகொண்டிருப்பவற்றை உணர்வதற்குள், அங்கே தூங்கிக்கொண்டிருந்த நாயின் ஊளை முடியுமுன்பே பேருந்து நாயை நசுக்கியிருந்தது. உடைந்து கிடக்கும் வண்டிகளுக்கு மத்தியில் தன் மரணத்தையே கண்ட ஷரவணன் அதிர்ந்துவிட்டான். அந்த உலோகக் குவியலின் நடுவில் தன் பிணத்தையே கண்டதைப்போல என் கையைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்துவிட்டான். அவன் கைகள் அதிர்ந்துகொண்டிருந்தன, என் கைகளும்தான். நானும் உட்கார்ந்தேன். எங்கள் ஆடைகள் அழுக்காயிருந்தன. பொதுமக்கள் எங்களைச் சுற்றி நின்று நாங்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்ததைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் முன்புதான் எங்களைக் கடந்து சென்றுவிட்டு இப்போது அசைவின்றிக் கிடந்த நாயின் உடல், முதன்முதலாக வாழ்க்கையின் நிலையின்மையை அப்பட்டமாக எனக்குக் காட்டியது. நானும் பயந்துபோனேன். அவன் கைகளை நான் அழுத்திப் பிடித்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இரு சகோதரர்களைப்போல அங்கே நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி உட்கார்ந்திருக்கும்போதே சப்தம் கேட்டு வந்த எங்கள் அலுவலக நண்பர்கள் எங்களைச் சூழ்ந்தனர்.

அந்த நாள் முதல் ஷரவணன் என்னைக் கடவுளாக பாவித்த்தான். கடவுளின் முன்பு நாம் உண்மையுடனும் வெளிப்படையாகவும் சொல்வதைப்போல என்னிடம் அவன் வாழ்க்கையில் நடந்த சில தெய்வாதீனமான, அதிர்ஷ்டவசமான நிகழ்வுகளைச் சொன்னான். ஒரு மாத காலத்தில் அவ்வப்போது துண்டு துண்டாக அவை சொல்லப்பட்டன, அவன் மனநிலைக்கேற்ப. ஒன்றுக்குப்பின் ஒன்றாய் அவன் சொல்லச் சொல்ல சில தகவல்கள் தவறிப்போகும். அவன் வார்த்தையிலேயே அவற்றைச் சொன்னால் அந்நிகழ்வுகளின் உணர்ச்சி வேகம் மிஞ்சலாம்.

–3–

சார், என் பேரு ஷரவணன். நான் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்குப் பக்கத்தில ஒரு கிராமத்திலிருந்து வந்தேன். நான் என் தொழிலத் துவங்கியப்போ கஸ்டமரெல்லாம் எளிதாகச் சொல்லுறாப்புல என் பேர மாத்திகிட்டேன். அது தமிழ்ப் பெயர்போல இருந்ததால வியாபாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்ல. என்னோட அப்பா கிராமத்துக் கோவில்ல கணக்குப்பிள்ளையா இருந்தார். அவருக்கு ஜாதகம் பார்த்து லக்‌ஷணம் சொல்லவும் தெரியும். லக்‌ஷணம்னா ஒருத்தருடைய குணாதிசயங்கள சொல்லுறது. அத ஜோஸ்யம்னு சொன்னா அவருக்குப் பிடிக்காது. கோவில் அமைப்பாளர்களோட சண்ட போட்டதுக்கப்புறம் லக்‌ஷணம் பாக்கிறது மட்டுமே குடும்ப வருமானம். ஆனா அந்தமாதிரி சின்ன கிராமத்துக்கு எதிர்காலத்தக் கணிக்க யாராச்சும் வருவாங்களா? அப்படியே எதிர்காலத்தத் தெரிஞ்சு அவங்க என்ன செய்யப்போறாங்க. நகரத்துலயாவது வாழ்க்க மேலும் கீழுமா நிச்சயமில்லாம ஓடும், ஏதோ ஒரு எண்ணையோட விலையோ அல்லது வரியோ கூடினாலே போதும். விடிஞ்சா ஒண்ணு செல்வம் வந்து கொட்டும் இல்ல எல்லாத்தையும் இழந்துட்டுத் தெருவில் நிக்கணும். ஜோஸ்யம் வாழ்க்கை நிச்சயமில்லாத, அடுத்த அடி கால‌ எங்க வைக்கணும்னு முடிவெடுக்க மக்கள் திணறக்கூடிய நகரங்களில சரிவரும். எங்க கிராமத்துல யாரு எதிர்காலம் தெரியலைன்னு கவலப்படுறாங்க? அவங்க வாழ்க்க முழுக்கவும் ஒரே கவலதான்.மகளோட கல்யாணம் அல்லது  பையன் ஓடிப்போவானா இல்ல வழிக்கு வருவானா? இந்த ரெண்டுக்கும் விடை தெரிஞ்சா அதுவே போதும், வாழ்நாளுக்கும் திரும்பி என் அப்பாகிட்ட வரமாட்டங்க. அதனால வீட்டில கஷ்டம் வந்துச்சு. ஒரு நேர சாப்பாட்டுக்கும்கூட முடியல.

நான் மைசூருக்கு தினமும் போய் வந்து உயர்நிலைப் படிப்பு முடிச்சேன். அப்புறம் வேற வழியில்லாம எங்க ஊரு கோஆப்பரேட்டிவ் சொசைட்டில வேல பார்க்க ஆரம்பிச்சேன். எல்லா சில்லறை வேலைகளையும் செய்யணும். சொசைட்டியோட தலைவர் நல்லவரானதால எல்லா வேலைகளையும் சிரத்தையோட செய்வேன். சம்பளம் கம்மிதான். சில வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை நிலையானது, வேலையும் நிரந்தரமாயிருக்குதேன்னு நம்பிக்கையில நான் கல்யாணம் செய்துக்கிறதப்பத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.

லாவண்யா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவ; எங்களுக்கு தூரத்து சொந்தம். அவங்க குடும்பமும் அவ்வளவு வசதியில்லாததுதான் இருந்தாலும் அவளுக்கு ஒரு கிராமத்துக்கு வந்து வாழுறது பிடிக்கல. பெரியவங்க அவளுக்கு எடுத்துச் சொல்லவேண்டியிருந்தது. இதெல்லாம் பின்னாடிதான் எங்களுக்குத் தெரியும். கல்யாணமான அன்னைக்கு அவ ரெம்ப அழுதப்போ  அப்பா அம்மாவப் பிரிய முடியாம அழுறான்னு நினைச்சோம். போகப் போக எனக்கு இவ கிராமத்து வாழ்க்கைய நினைச்சுதான் கவலப்படுறான்னு தோணிச்சு. உயர்நிலைப் படிப்பு படிச்சிருந்தா. பேச்சிலும் செயலிலும், நடப்பிலும், விருப்பப்படுறதுலேயும் அவ ஒரு படி அதிகம்தான்.ஆரம்பத்துல எனக்கு இது பிடிச்சிருந்தது. போகப்போக அந்த மனப்பாங்கே எனக்கு எரிச்சலானது. அவ உணர்ச்சிவசப்படுறது எங்க வீட்டு மேலான வெறுப்புனாலன்னு தோணிச்சு. என்ன தேயிலைப் பொடி உபயோகிக்கணும்னு அது துவங்கும். எங்க ஊர் சினிமாக் கொட்டகைய அவ குறை சொன்னாக்கூட எங்களத்தான் குறை சொல்றான்னு எனக்குக் கோபம் வரும். இதுக்கெல்லாத்துக்கும் இடையிலேயும் சந்தோஷமாக் கழிஞ்ச அந்த முதல் வருஷத்த நினைக்கும்போது அந்தக் காதலெல்லாம் வேறு யாருடையதோன்னு தோணும். நான் வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்பட்டாலும் என் வேலையிலையோ வாழ்க்கைத்தரத்திலையோ எந்த மாற்றமும் வரப்போவதில்லைன்னு அவளுக்கு தெரிய ஆரம்பிச்சது. ஒருவேளை அவள் அந்த நிலைமைய ஏத்துகிட்டிருந்திருப்பாளாயிருக்கும். ஆனா அதுவரைக்கும் இதப்பத்தி நினைக்காத நான் எல்லாத்தையும் மாத்திட முடிவெடுத்தவனப்போல நடக்க ஆரம்பிச்சேன்.

ஒருநாள் என் அத்த பையன் பெங்களூரிலிருந்து வந்திருந்தான். ஸ்ரீகாந்துக்கு என் வயசுதான், மெலிசா இருப்பான், படிப்புல கெட்டிக்காரன். அவனுக்கு ‘புட்டி’ன்னு பட்டப்பெயர், ஏன்னா சோடா பாட்டில் அளவுக்குக் கண்ணாடி போட்டிருப்பான். இந்தமுறை புட்டி பங்கு வர்த்தகத்தின் மகிமையப்பத்தி பேச ஆரம்பிச்சான். நாடு முழுக்க மாற்றம் நடந்துக்கிட்டிருந்த நேரம் அது. எங்க போனாலும் மக்கள் காசப்பத்தியும், வியாபாரம்பத்தியும்தான் பேசிகிட்டிருந்தாங்க. இராத்திரி சாப்பாட்டுக்கப்புறம் புட்டி பங்கு வர்த்தகத்துல எப்படியெல்லாம் மக்கள் காசு பண்ணிகிட்டிருக்காங்கன்னு பல சுவாரஸ்யமான கதைகள சொல்ல ஆரம்பிச்சான். அவனோட ஆச்சர்யமான பேச்சுக்கு நடுவில என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்பவும் சொல்ல முடியல. வாழ்க்கையில வெற்றியடயணும் என்கிற எண்ணமும் பணம் சேர்க்கும் போதையும் எல்லாருடைய தலையிலேயும் கொஞ்சமாவது ஏறிடுச்சு. பேச்சுக்கிடையே லாவண்யாவ அவன் பார்த்த பார்வை இன்னும் என் கண்ணுல தெளிவாத் தெரியுது. எங்கேர்ந்து திடீர்னு அவனுக்கு அந்தத் தன்னம்பிக்கை வந்ததுன்னு நான் ஆச்சர்யப்பட்டேன். அடுத்த கணமே லாவண்யா என்னப் பார்த்தா.  அவன் அவளப் பார்த்தது, உடனே அவ என்னப் பார்த்தது எல்லாம் உங்களுக்கு சாதாரணமானதாத் தெரியலாம். ஆனா அது எனக்குள்ளார ஒரு செய்திய சொல்லுச்சு, நான் நினைக்கிறதுபோல அந்தக் கணத்துலதான் என் வாழ்க்கை ரெண்டு திசைகளாப் பிரிஞ்சது. அந்தமாதிரி சாதாரணமான நேரங்களிலதான்  நம்ம வாழ்க்கையில பிசாசுகளோ அல்லது தேவதைகளோ வர்றாங்க இல்ல?  அதுவரைக்கும் அமைதியா கேட்டுக்கிட்டிருந்த எங்கப்பா “கவனம் மகனே. உழைப்பால அல்லாம வெத்துத் தாளிலே மேலே போகும் இந்த செல்வத்துக்கு மேல எச்சரிக்கையா இருக்கணும்.” என்று சொன்னார்.

என் கிராமத்த விட்டு வெளியேறினாலல்லாம என் வாழ்க்கையில சின்ன மாற்றம்கூட இருக்காதுனு எனக்குத் தோணிச்சு. வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிச்சிட்டுத் திரும்புறதெல்லாம் தூங்கப்போறதுக்கு முன்ன நாம காணுற கனவு. வரலாற்றப் பாருங்க அல்லது சந்தமாமா கதைகளப் பாருங்க செல்வத்தத் தேடிப்போற மனுசன் எப்பவுமே தன் வீட்டவிட்டுப் போறான் இல்லியா சார்? லாவண்யா இந்தக் கனவ எப்படியோ எனக்குள்ள உருவாக்கிட்டான்னு நினைச்சேன். அன்னைக்கு அவ பார்த்த பார்வை அந்தக் கனவ உருவாக்கிடுச்சுன்னு நினைச்சேன். என்னால அந்தக் கனவ நிறைவேற்ற முடியும்னு அவ நம்பியிருக்கலாம். ஆனா கிராமத்த விட்டு எங்க போறதுன்னு எனக்குத் தெரியல. புட்டிய நச்சரிச்சு பெங்களூர்ல ஒரு வேல வாங்கினேன். அப்பா அம்மா ரெம்ப பயப்ப‌ட்டாங்க. அழுது ஆர்பாட்டம் பண்ணினாங்க. ஷரவண குமார்னு பேருக்கேத்தாப்புல அவங்கள நான் நல்லபடியா கவனிச்சிக்கிட்டேன்னு சொன்னாங்க. மருமகள சூனியக்காரீன்னு திட்டினாங்க. யார் பேச்சையும் கேக்காம நான் கிளம்பிட்டேன்.

பெங்களூர் வந்து ரெண்டு மாசத்துலேயே என்னுடைய முதல் வேலை போச்சு. அதுக்கப்புறம் ஆறுமாசம் ரொம்பக் கஷ்டப்பட்டேன். யாரும் உதவிக்கு வரல. பங்கு வர்த்தக ஊழல் வெளி வந்துச்சு, பங்குகளோட விலை சரிஞ்சு நஷ்டமாச்சு, புட்டியே தெருவுக்கு வந்துட்டான். கைக்குக் கிடைச்ச எந்த வேலையானாலும் செய்ய ஆரம்பிச்சேன். நம்ம ஆபீஸ்ல வேல வாங்கித் தந்தவர் என்னுடைய பழைய கஸ்டமர். பேர் கண்ணன். கூடவே ரியல் எஸ்டேட், இன்னும் சில வேலைகளும் செய்ய ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா ஷரவணா சர்வீசஸ நான் துவங்கினேன். அதுக்கு என்னன்னு நீங்க கேக்கலாம். இது ஒரு வியாபாரம், நானே சிந்திச்சு உருவாக்கினது. உங்களுக்குத் தெரியும் சார், பெங்களூர் பத்து வருஷத்துல நினைச்சுப் பாக்கமுடியாதபடி  வளர்ந்திருக்குது. பல இடங்களிலிருந்தும் மக்கள் இங்க வர்றாங்க. அவங்க ஊர்ல செய்ததுபோல எல்லா வேலைகளையும் அவங்களால இங்க செய்ய முடியாது. பூஜைக்குப் புரோகிதரக் கண்டுபிடிக்க முடியாது, கிரகப் பிரவேசம் செய்யுறது கடல் போல வேல, யாரையும் தெரியாத இடத்துல மகனோட இருக்க வந்த அம்மா இறந்துட்டாங்கன்னா ஈமச்சடங்கெல்லாம் யார் செய்யிறது? அந்த‌க் கஷ்டமான சமயத்துல ஆறுதலும் ஆதரவும் யார் குடுப்பாங்க? எதையுமே சரியா செய்யலைன்னு குற்ற உணர்வு வேற அவங்கள வாட்டிக்கிட்டிருக்கும். இன்னும் மோசம், அந்த நேரத்துல வெளியே போய் ஆட்களத் தேடி அலைய நேரம் இருக்காது. ஆனா எதையும் காசு குடுத்து வாங்கிடலாம்னு நம்பி இருப்பாங்க. அதைவிட முக்கியம் பழக்கமில்லாத சடங்குமுறைகள்னாலும் அவங்க கண்டுக்கிறதில்ல. புகைபிடிக்கிறவங்களுக்கு அவங்களோட சிகெரெட் கிடைக்கலைன்னா என்ன செய்வாங்க? வேற ஒண்ண வாங்கிப் புகைக்கிறதில்லையா? அதுபோலப் பழக்கந்தான் நம்பிக்கையும் சடங்குகளும்.  நான் அவங்களுக்கு அதுபோல சடங்குகளை நடத்திக் குடுக்கிறேன்.

என்னோட வியாபார இரகசியங்கள உங்ககிட்ட சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. ஒரு புரோக்கர் எல்லாத்தையும் நம்பணும் சார். ஒரே விஷயத்துல அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது. வெச்சா அவன் வேல நடக்காது. முன்முடிவுகளால அடிவாங்கிடுவோம். என்னோட கஸ்டமர்களுக்கு சாதிமேலெல்லாம் ஆழமான நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனா விடவும் முடியாது. அவங்க கட‌வுள் நம்பிக்கை தீர்கமானதில்ல,ஆனா அப்படீன்னு நம்பத்தான் விரும்புறாங்க. ஷரவணா சர்வீசஸ் அவங்களுக்கு ஒரு ஊன்றுகோலத் தருதுன்னு சொல்லலாம். உத்திரப் பிரதேசத்துலேர்ந்து வந்த‌ ஒருத்தர தேவி ப‌னஷங்கரியோட பக்தரா மாத்திட்டேன். லாரி பிசினஸ் வெச்சிருக்கிற சேத்த ஆட்டோ மரம்மா பக்தராக்கிட்டேன், சாட்டர்ஜிக்கு நாடி சாஸ்திரத்த‌ அறிமுகம் செஞ்சேன், ஐ.ஐ.டி இஞ்சினியர் சிங்க ஒரு வாஸ்து பைத்தியமாக்கிட்டேன். விளையாட்டில்ல சார். அதிகமா அறிவுள்ளவன் எளிமையான விஷயங்களக் கொண்டாடுறதில்ல. வாழ்கை எவ்வளவு குழப்பமாத் தோணுதோ அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு. அதுக்கு வாஸ்துவ விட்டா வேறொண்ணுமில்ல. உள்ள‌ இறங்கிட்டீங்கன்னா இன்னும் நுட்பமானதா தெரியும். என்னுடைய வேல அவனவனுக்குத் தேவையானதத் தர்றதுதான். பாபா வேணும்னு சொல்றவங்களுக்கு பாபா, யு.ஜி வேணுமின்னா யு.ஜி … அது போல இன்னும். மனநிறைவ விக்கிறேன்னு சொல்லலாம் சார்.

மரம் ஏறிக்கு இடுப்பு பெருசா இருக்கணுமில்லையா? என்னுடைய பேச்சும் மாற ஆரம்பிடிச்சு. யாருடைய நம்பிக்கையக் காயப்படுத்துற வார்த்தைகளையும் நான் பயன்படுத்துறதில்ல. அதனால என் பேச்சு ஆழமானதாயிடுச்சு. என் அப்பாகிட்டேர்ந்து நான் ஜோஸ்யம் கத்துக்கல. ஆனா ஒரு விஷயத்த வெளிப்படுத்துற கலையக் கத்துகிட்டேன். அவர் சொன்னது சிலது நியாபகம் இருக்குது: ” ‘கணவன் மனைவிக்குள்ள சண்டை’ன்னு சொன்னா மக்களுக்குப் பிடிக்காது ‘திருமண வாழ்க்கையில சிக்கல்’னா பரவாயில்ல. வேற யார்மேலேயோ பிரச்சனை மாதிரி அவங்கள உணர வைக்கணும், ஆனா பரிகாரம் நாம பண்ணணும். இந்த வேலையில வேறெந்த வகையில நீ பேசினாலும்  யாரும் உன்ன நம்ப மாட்டாங்க”

இந்த வியாபாரத்துல எனக்கு வருமானம் அதிகமாக ஆரம்பிச்சுது. வீடு மனை வியாபாரத்துல கூட இத்தனை காசு பாக்க முடியாது. பிரச்சனைன்னு வந்துட்டா காசப்பத்தி யாருக்கும் கவலை இல்ல. வாஸ்து, நாடி சாஸ்திரம், ஜோஸ்யம், யோகா, யுனானி, பாபா, ஆயுர்வேதம், கனக யாகம் — என்ன வேணும்னா செய்தேன். மக்கள் அவங்களோட கஷ்ட நஷ்டங்கள எங்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் பெங்களூருல இந்த மாதிரி எந்த இடமும் சொந்த இடமில்லாம இருக்கிற பெரிய மக்கள் தொகைய நான் கண்டுகிட்டேன். எதையும் ஏத்துக்கொள்ளுற மனப்பாங்கோட அவங்க இருக்கிறாங்க. அவங்களுக்கு வேண்டியதெல்லாம் இந்த நகரத்துல காலூன்றி நிக்கணும். வேர் விட முடியலைன்னாலும் நீர்விட்டுக்கிட்டிருக்கணும், நம்பிக்கை உலராமலிருக்க. சொன்னா ஆச்சரியப்படுவீங்க சார், வெளி ஆட்கள விடுங்க, நம்ம மலநாட்டு ஆட்களுக்கே இந்த கதிதான். சார் இந்த நகரத்துல கால ஊணுறதுக்கு இனியும் இடமில்ல. எதையுமே நாம நமதுன்னு சொந்தம் கொண்டாட முடியாது. எழுதப்படாத விதிகள் எதுவுமில்லாத ஒரு நகரம் எப்படிசார் தன்னுடைய அடையாளத்த கண்டடையுது? நான் அற்புத‌ங்கள நிகழ்த்துவேன் சார். அற்புதங்கள். பூக்கள் கிடைக்கலைன்னா பிளாஸ்டிக் பூக்கள வெச்சு சாஸ்திரங்கள நடத்துவேன். இதுக்கெல்லாம் நம்பிக்கை வேணும். பப்புக்கும் டான்சுக்கும் போறதும் நம்பிக்க சார்ந்த விஷயந்தான். அங்க அவங்க வாழ்கைய அனுபவிச்சிக்கிட்டிருக்காங்க என்பதுதான் அவங்க நம்பிக்கை. நான் படிச்சிட்டிருந்தப்ப பரீட்ச முடிஞ்ச அன்றைக்கே போய் சினிமா பாக்கிறது ஒரு பெரிய கொண்டாட்டம். எனக்கு அது ஒரு பெரிய சந்தோஷமாயில்ல. ஆனா நானும் மகிழ்ச்சியா இருந்ததா நம்பினேன். எது முக்கியமானதுன்னா அடுத்தவங்க அப்படி நம்புறாங்கன்னுறதுதான்.

மூணு வருஷங்களுக்குள்ள காசு கொட்ட ஆரம்பிடிச்சு. ஆனா லாவண்யா கூட நான் கொஞ்ச நேரம்தான் செலவிட முடிஞ்ச‌து. அவளோட எனக்கிருந்த உறவு மொத்தமா மாறிடுச்சு. உங்களுக்கு சிரிப்பாயிருக்கலாம், கிராமத்துல ஒவ்வொருநாள் காலையிலேயும் எங்கப்பா பூஜைக்குப் பூ பறிக்கப் போயிடுவாங்க, அம்மா குளிக்கப் போவாங்க. லாவண்யாவும் நானும் மட்டும் இருந்த அந்தத் தனிமை என்னத் தூண்டிடும். ராத்திரிமுழுக்க நாங்க சேர்ந்து படுத்திருந்தாலும் அந்தத் தனிமைக் கணங்கள் எனக்கு நம்பமுடியாத உற்சாகத்தைத் தந்தன. சார், அவ்வளவு அழகாயிருந்துச்சு சார் எங்க உறவு. உங்ககிட்ட பொய் சொல்ல மாட்டேன் சார். இப்ப என்னன்னா எனக்கு அவ மேல இருந்த காதல் குறைஞ்சிடுச்சுன்னு தோணிடுச்சு சார். அவளுக்காக என் ஊரையும் அப்பா அம்மாவையும் விட்டு வந்தேன். ஒரு காலத்துல அவள சந்தோஷப்படுத்த என்ன வேணும்னா செய்ய நான் தயாரா இருந்தேன். ஆனா இப்ப என் மனம் வேற ஒரு விஷயத்தில நிலைச்சிடிச்சு. பணம் சேர்க்கிற சுகத்தவிட வேறெதுவும் அதிக சுகமில்ல. எப்படியோ அவளும் இதப் புரிஞ்சிகிட்டா. திரும்ப கிராமத்துக்கே போயிடலாம்னு சொன்னா. அவள் வேண்டுதலுக்கு நான் காதுகொடுக்கல.

ஒரு கோடை விடுமுறைக்கு நான் என் மகள கிராமத்துல அப்பா வீட்டில விட்டுட்டு வந்தேன். ரெண்டு நாளைக்கப்புறம் லாவண்யா ‘இன்னைக்கு வேலைக்குப் போகாதீங்க. எனக்கு ரொம்ப காய்ச்சலா இருக்குது’ன்னு சொன்னா. அவளத் தொட்டு அவள் உடம்பு சூட்டக் கூட நான் பாக்கல. அன்றைக்கு முக்கியமான வேலைகளிருந்துச்சு. நான் வீட்ட விட்டுப் போனேன். ஆனா அவ முன்னால ஒருநேரங்கூட இப்படி என்கிட்டக் கெஞ்சினதில்லைங்கிற எண்ணம் நாள் முழுக்கவும் என்ன வதைச்சிக்கிட்டேயிருந்துச்சு. ராத்திரி நான் வீடு வந்தப்போ அவ மயங்கினதுபோலத் தூங்கிட்டிருந்தா. உடம்பு கொதிச்சிட்டிருந்தது. படுக்கைக்குப் பக்கத்துல பாத்திரத்துல கொஞ்சம் கஞ்சி. பக்கத்துவீட்டுலேர்ந்து கொண்டுவந்து கொஞ்சம் சாப்பிடக் குடுத்துட்டுப் போயிருக்காங்க. நான் படுக்கையில உட்கார்ந்தப்போ ஒண்ணு ரெண்டு காஞ்சுபோன அரிசிங்க என் கையில பட்டது. கஞ்சி கொட்டியிருந்த விரிப்புப் பகுதி கடினமாயிருந்தது. படுக்கை விரிப்பில‌ அந்தத் தடங்கள நான் வருடிப் பார்க்கும்போது எங்களுக்குள்ள ஏதோ முறிஞ்சு போனத நான் உணர்ந்தேன். அப்போதான் என் கிராமத்துக்குத் திரும்பப் போறதுனால எதுவுமில்லைன்னு நான் முடிவெடுத்தேன். அவள் பக்கத்துல நான் இருந்த அந்த நேரங்கள என்னால மற‌க்கவே முடியாது. ஒரு நாளும்…சார். புட்டி பேசிக்கிட்டிருக்கும்போது அவ பார்த்த பார்வை சொன்னதப் போல இந்த முடிவும் அழுத்தமா என் மனசுல பதிஞ்சிடுச்சு.

யார்கிட்டேயும் சொல்லாம, ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு அவ வெளியேறிட்டா. சில நேரங்களில தன்னுடைய மகள விட்டுட்டுப் போறோம்னு அவ துளியும் கவலைப்பட்டிருக்க மாட்டாளோன்னு தோணும்போது துக்கமாயிரும்.

அந்த நாள் முதலா என்னுடைய பொண்ணு புரியமுடியாத ஒரு மௌனத்தோடேயே இருக்கிறா. அத்தியாவசியம்னா மட்டுமே பேசுவா. இல்லைன்னா கம்முன்னு உட்கார்ந்திருவா. அவள பேசச் சொல்ல எங்க யாருக்கும் தையிரியமில்ல.

–4—

விபத்திலிருந்து தப்பியதற்காக ஷ‌ரவணனுடைய அம்மா ஷாந்தி, மிருத்யுன்ஜயா இன்னும் சில ஜெபங்களும் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினார். நான் விளையாட்டாகச் சொன்னேன், “இந்தக் குப்பைக்கெல்லாம் வேண்டி ஒண்ணும் நான் உன்ன உயிரக் குடுத்துக் காப்பாத்தல. அது என்னுடைய விருப்பத்தையும் தாண்டி நடந்தது. பஸ்ஸ பாத்துட்டு உன்னப் பிடிச்சு இழுத்ததுக்கு உன்னுடைய வாழ்நாள் முழுவதும் எனக்குக் கடன்பட்டிருக்க வேண்டாம்.”

“அப்படி ஏன் சார் சொல்றீங்க? உங்களுக்குள்ள அது இருந்ததாலதான் நீங்க என் உயிரக் காப்பாத்த முடிஞ்சது. இந்த ஏழையோட வீட்டுக்கு நீங்க வரணும், இந்த ஒரு நாளாவது..” நான் மட்டும்தான் விருந்தினர், வேறு யாரும் அழைக்கப்படவில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தான்.

இந்த ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டைக் கண்டுபிடிப்பதொன்றும் கடினமில்லை. அதே தெருவில் இரண்டு வீடுகள் தள்ளிக் கூட்டமொன்று கூடியிருந்தது. ஷரவணா அந்த வீட்டு வாசலில் எனக்காகக் காத்திருந்தான். கேட்டைத் திறந்தவன் “இங்கெ எதுக்கு இத்தனபேர் கூடியிருக்காங்கன்னு தெரியுமா சார்? யு.ஜி வந்திருக்காரு.”

எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. “அவர யார்வேணும்னா போய்ப் பார்க்க முடியுமா?”

“நிச்சயமா.. அந்த வீட்டு ஆட்கள எனக்கு நல்லாத்தெரியும். நீங்க சொன்னா இப்பவே போய்ப் பாக்கலாம்.” எனக்கு ஆர்வமாயிருந்தது, “சரி போகலாம்” கிளம்பிக்கொண்டே நான் சொன்னேன்.

அந்த வீட்டுக்கு முன் என் சக அலுவலக ஊழியர் பிரபாவைக் கண்டேன். அவளுக்கு சொந்த ஊர் ஹைதராபாத். வேலை குறித்து லட்சியக்கனவுகளைக் கொண்டிருப்பவள். எதையும் அவசியமன்றி அவள் செய்வதில்லை. ”நீ எப்படி இங்க?” என்றேன். “நான் யு.ஜியுடைய சீடர்.  அவர் பெங்களூருக்கு வந்ததும் ஷரவணா எனக்குத் தகவல் சொல்வார். நானும் வந்துடுவேன்.” என்னுடைய ஆச்சரியத்தை உணர்ந்தவளாய் “வாழ்க்கையை எந்த ஃபில்டரும் இல்லாம அவரால பார்க்க முடியும். அவருடைய பெருமையே அதான்.” அந்த வார்த்தைகள் என் மனதில் நின்றன.

நாங்கள் அந்த வீட்டில் நுழைந்தபொது மணி காலை 11. அதற்குள்ளாகப் பலர் கூடிவிட்டிருந்தனர். வெளியே செருப்புக் குவியல் கிடந்தது. உள்ளே பலரும் திவான் மீது சாய்ந்து தரையில் உட்கார்ந்திருந்தனர். வேறு சிலர் கிடைத்த இடத்தில் நின்றுகொண்டிருந்தனர். ஆழ்ந்த மௌனத்தில் எல்லோரும் கவனமாய் செவிமடுத்துக்கொண்டிருந்தனர்.

நான் ஒரு மூலையில் என் கால்களை மடக்கி அவற்றின் மேல் உட்கார்ந்தேன். நிசப்தம். என் கை அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மீது பட்டது. நான் மட்டுமே அறியும்படிதான் அது இருந்தது. யு.ஜி திடீரென ஏதோ பெரிய சத்தம் வந்துவிட்டதைப்போலத் திரும்பி என்னைப் பார்த்தார். தொலைக்காட்சிப்பெட்டியையும் என் கையையும் பார்த்தார். அப்போதுதான் அவரது சக்தியையும் அது தரும் சுமையையும் என்னால் உணரமுடிந்தது. எனக்கு அசௌகரியமாயிருந்தது. பிரபா ஃபில்டர் இல்லாதது குறித்துச் சொன்னது நினவுக்கு வந்தது. ஊடகமில்லாமல் எவ்வளவுதான் ஒரு மனிதனால் பார்க்க முடியும்? இப்படி உலகத்தின் நுட்பமான விஷயங்களைப் பார்க்க ஆரம்பித்தால் அவன் மூளை ஆயிரம் துண்டுகளாக வெடித்துவிடாதா?

பலரும் கேள்விகளைக் கேட்டனர். யு.ஜி பதில் சொன்னார். கேள்விகள் இல்லாமல் கூட பதில் சொல்லியிருப்பார் போலத்தோன்றியது. சரளமாகவும் சோர்வின்றியும் பதில் சொன்னார். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். குத்தே, மாதர்சோத், பெகன் சோத் போன்ற வார்த்தைகள் சங்கின் முழக்கம்போல ஒவ்வொன்றாக சரளமாக வந்து விழுந்துகொண்டிருந்தன. சிறிது நேரத்துக்குப் பின் நான் வெளியே வந்தேன். பிரபா என்னோடு வெளியேவந்தாள், ஏதோ விளக்கம் சொன்னாள். அப்படி வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தனக்கு விருப்பமில்லை என்றாள்.

“அவர் ஊடகங்களில்லாம உலகத்தப் பார்க்கிறதாலதான் உனக்கு அவரப் பிடிக்கும்னு நீ சொல்லல? இப்ப அவருடைய வார்த்தைகளையும் அப்படியே ஃபில்டர் இல்லாம உள்வாங்கவேண்டியதுதான்.”

உள்ளே பெரும்சிரிப்பொலி கேட்டதும் பிரபா மீண்டும் உள்ளே சென்றாள்.

நான் ஷரவணாவின் வீட்டுக்கு அவனோடு சென்றேன். அவன் வீடு வாங்கியதை முன்பே குறிப்பிட்டிருந்தான். ஒரு பெரிய ஹால். அதிலே ஒரு கண்ணாடி ஷோகேஸ், அதுல அவன் மகளுடைய பள்ளிக்கூடப் புகைப்படங்கள், சில பொம்மைகள், கண்ணாடிப் பொருட்கள். அகன்ற நாற்காலியில் வயதான அவன் அம்மா அமர்ந்திருந்து பூஜையைக் கவனித்துக்கொண்டிருந்தார். புரோகிதர் ஹோமம் வளர்த்துக்கொண்டிருந்தார். நிறைய புகை கிளம்பியிருந்தது. அவன் மகள் பெயர் ரேவதி. அவன் அழைத்ததும் உள் அறையிலிருந்து வந்தாள். கைகூப்பி வணக்கம் செய்துவிட்டுத் திரும்பிச் சென்றாள்.

“நீ வேற ஆட்களுக்குத்தான் இந்த சடங்கையெல்லாம் ஏற்பாடு செய்வன்னுல்ல நினைச்சேன்” நான் விளையாட்டாய்ச் சொன்னேன்.

“சார் சமையல்காரனும் சாப்பிடணும்ல?” சிரித்தான். அவனது நெத்தியிலும் கண்களின் ஓரத்திலும் சுருக்கங்கள் விழுந்திருப்பதை முதன்முறையாய் கவனித்தேன்.

அவன் அம்மா நடப்பதற்கு சிரமப்பட்டாலும் கண்பார்வையும் கேள்விப்புலனும் பேச்சும் துல்லியமாயிருந்தன. என்னை அவர் அருகில் உட்கார வைத்து அவர்களின் கிராமத்து நாட்களை அசைபோட்டார்.

ஷரவணனின் மனைவி விட்டு ஓடிப்போனது இந்த வீட்டிலிருந்துதானா
என்ற கேள்வி எனக்குத் தோன்றியது. அடுத்த கணமே அந்தக் கெட்ட எண்ணத்தை எனக்குள் கடிந்துகொண்டேன்.

சாப்பாட்டுக்குப் பிறகு நான் கிளம்பத் தயாரானேன். ஷரவணன் உள்ளே வந்து “ஒரு நிமிஷம்.” என்றான். அவன் அம்மா சிரமத்துடன் எழுந்து, என் பக்கம் வந்து கைகளைப் பற்றி  ”அந்த ஓடுகாலிய மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அவங்கிட்ட சொல்லுங்க. அடுத்தவங்களுக்காக ஆயிரம் வேல செய்யுறான். ஆனா அவன கவனிக்க யாருமேயில்ல. எனக்கு வெளிய போக வர முடியாது வயசாயிடுச்சுல்ல? உங்கள தரகர் வேல செய்யச் சொல்றதா நினைக்காதீங்க. அவன் உயிரக் காப்பாத்தியிருக்கீங்க. தீர்க்கமான மரணத்துலேந்து தப்பியிருக்கான். இத ஒரு புது பிறவியா அவன் எடுத்துக்கணும், பழசுகள மறக்கணும்.” என்று சொல்லிவிட்டு மெதுவாக நகர்ந்து இருக்கைக்குச் சென்றார்.

நான் கிளம்பப்போவதை அறிந்துகொண்டு அவனது மகள் வந்தாள். ஒரு ஆட்டோகிராஃப் புத்தகத்தை நீட்டினாள். நான் கையெழுத்துப் போடும் அளவுக்குப் பெரிய ஆள் இல்லை என்றேன். இருந்தும் அவள் என் முன்னே நின்றுகொண்டிருந்தாள், ஒரு வார்த்தைகூடப் பேசாமல்.

======

ஆங்கில வழி மொழிபெயர்ப்பு சிறில் அலெக்ஸ் http://cyrilalex.com

 

முந்தைய கட்டுரைநைபால்
அடுத்த கட்டுரைவீரகதைப்பாடல்கள்