அன்புள்ள ஜெ
இன்று நானும் ஒரு நண்பரும் பேசிக்கொண்டோம், நான் அவரிடம் ஜெமோ தளம் படித்தீர்களா என்று கேட்டேன். அவர் படித்துவிட்டேன், தினமும் படிப்பேன், சுவாரசியமானவற்றை மட்டுமே படிப்பேன் என்றார். இன்று என்ன சுவாரசியம் என்று கேட்டேன். கடலூர் சீனு விவகாரத்தில் உங்க ஆசான் இன்னொரு ஃபாலோ அப் கட்டுரை எழுதியிருக்கார் அதை வாசிச்சேன் என்றார். சர், வேறொன்றும் இல்லையா என்று கேட்டேன். அவர் எதையும் பார்க்கவில்லை. யோகம் பற்றி தமிழ் விக்கியில் ஒரு பதிவு இருக்கிறது, அதற்கான லிங்க் இருக்கிறது, படித்தீர்களா என்றேன். அவர் அதை கவனிக்கவில்லை, ஆர்வமும் காட்டவில்லை. இவ்வளவுதான் இவர்களின் வாசிப்பு. இரவுபகல் இல்லாமல் எந்நேரமும் வம்பு வம்புதான். நீங்கள் எழுதுவதில் எது வம்போ அதை மட்டுமே வாசிக்கிறார்கள்.
யோகம் பற்றிய அந்த குறிப்புக்கு வருகிறேன். அப்படி ஒரு பதிவு தமிழில் இருப்பதே ஒரு பெரிய நிகழ்வு. அவ்வளவு விரிவானது. எனக்குத் தெரிந்து யோகம் பற்றி இத்தனை விரிவான ஒரு சித்திரம் இப்போதுதான் தமிழிலேயே எழுதப்படுகிறது. பல படிகளாகச் செல்லும் அந்தப் பதிவை வாசிக்கவே ஒரு மணிநேரம் ஆகியது. அவ்வளவு செறிவானது. ஏராளமான இணைப்புகள். அதையெல்லாம் வாசிக்க இன்னொரு வாரம் ஆகும். எவ்வளவு பெரிய அறிவுப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே அறிவுஜீவிகள் என்று பாவனை செய்யும் கும்பல்கள் எதையாவது கவனிக்கிறார்களா?
ராஜேந்திரன் எம்
அன்புள்ள ராஜேந்திரன்,
அந்நண்பரும் நமக்கு வேண்டும், அவர்தான் நமக்கு ஹிட் தருபவர். அவ்வகையில் அவரும் எறும்புக்குரிய அளவில் ஒரு பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறார். இந்தவகையான பதிவுகள் அவரைப்போன்றவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பால் நிகழ்பவை. அவை நிகழவேண்டும் என்றால் இந்த இணையப்பக்கம் தொடர்ச்சியாக வாசிக்கப்படவேண்டும் அல்லவா?
இந்தப் பதிவுக்குண்டான வாசகர்கள் வேறு. அப்பதிவு வெளிவந்த சிலநாட்களிலேயே இங்கே யோகம் பற்றிப் பேசப்படும் எல்லா பேச்சுக்களிலும் அதன் செல்வாக்கை காணமுடிந்தது. அறிவுச்செயல்பாடுகள் அவ்வாறுதான் சென்றுசேரும். ஒருபக்கம் எப்போதும் சில்லறை வம்பும் வெட்டிச்சண்டையும் காழ்ப்புகளும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
ஜெ