சென்னிமலை நூற்பு விழாவில் பேசுகிறேன்

நூற்பு அமைப்பின் புதிய பயிற்சிநிலைய திறப்புவிழா சென்னிமலையில் ஆகஸ்ட் காலை 10 மணிக்கு நிகழ்கிறது. நான் கலந்துகொள்கிறேன்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

“செயல் மட்டுமே எஞ்சியிருக்கும்” என்ற தங்களது வாசகம்தான் ஒவ்வொரு நாளையும் நிறைவுடன் கடக்க வைக்கிறது. நூற்பு ஆரம்பித்த தருணத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு நாளின் இறுதியும் ஏதோ ஒரு நிறைவை அளித்துவிடுகிறது. இப்பொழுது எட்டாம் வருடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அத்தனை அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.

2013ம் ஆண்டு வாசிப்பின் வழியே குக்கூ சிவராஜ் அண்ணாவை சந்தித்த போது, அவரிடம் இருந்து நீங்கள் எழுதிய இன்றைய காந்தி நூலினை பெற்றதில் இருந்தே எனக்கான நல்லூழ் ஆரம்பித்தது என்று நம்புகிறேன்.

புத்தகமும் சிவராஜ் அண்ணன் அனுப்பிய தாங்கள் எழுதிய காந்திய கட்டுரைகளும் செயல் சார்ந்து வேலைகளை தொடங்க வேண்டும் என்ற தேடலில் என்னைப் பயணிக்க வைத்தது.  அந்தப் பயணத்தால் எனக்கு அருளப்பட்டது தான் காந்தியின் கைநூற்பும் கைத்தறி நெசவும்.

அந்த தேடல் பயணத்தில்  கௌசிக் மூலம் ஜனப்படா காதி அமைப்பின் நிறுவனர் சுரேந்திர கௌலகி ஐயாவை சந்தித்ததும் அவரது செயல்பாடுகளும் என்னுள் தீவிரத்தை உருவாக்கியது. தீவிரத்தின் விளைவாக பதினொரு ஆண்டுகளாக செய்துகொண்டிருந்த மென்பொருள் வேலையை விடுத்து  2016ம் ஆண்டு குக்கூ நண்பர்களின் உதவியோடு நூற்பை ஆரம்பித்தேன்.

2017ல் இருந்து சென்னிமலையை மையமாக வைத்து நூற்பு செயல்படத் தொடங்கியது. அங்குள்ள நெசவாளர்களிடம் ஏற்பட்ட உரையாடல், கிராமத்தில் இருந்து தான் வேலைகளை செய்ய வேண்டும் என்ற தீர்க்கத்தை கொடுத்தது.  நிறைய புதிய முயற்சிகள் செய்து செய்து பார்த்தோம். நிறைய தோல்விகள். தோல்விகளில் இருந்தே சிறு சிறு நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டோம்.

ஆண்டு இறுதியில் புதிய நெசவாளர்கள் அறிமுகமானார்கள். சென்னிமலை தாண்டி உலகில் பல நிலங்களிலும் உள்ள கைத்தறி நெசவாளர்களை நோக்கிய  பயணமானது மனதை இன்னும் விரியச்செய்தது. திருச்சி அருகே உள்ள நெசவாளர்களுடன் நூற்பும் கைகோர்த்து கொண்டது. அந்த காலகட்டத்தில் நிறைய நடைமுறை சவால்களை சந்திக்க நேர்ந்தது. மதுரையில் நண்பர்களுடன் உங்களை சந்தித்ததும் நீங்கள் சுதந்திர போராட்ட தியாகி திரு.ஜெகந்நாதன் ஐயாவை பேட்டி எடுத்த பொழுது அவர் சொன்னதாக நீங்கள் அப்போது பகிர்ந்து கொண்ட விஷயங்களும் பெரும் திறப்பை கொடுத்தது.

உங்களின் அந்த உரை தான் நோய்தொற்று காலத்தில் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து என்னை மீட்டெடுத்து செயலை நோக்கி மீண்டும் அழைத்து சென்றது. 2019ம் ஆண்டு கைத்தறி கூடத்துடன் இணைந்த தமிழ்நாட்டின் முதல் கைத்தறி நெசவுப்பள்ளியினை தொடங்கினோம். தொடர் செயல்பாட்டின் விளைவாக 2020ம் ஆண்டு இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, மற்றும் மலேசியாவில் பொருளாரதாரம் படிக்கும் மாணவர்களின்   “Social and Sustainability Marketing: A Casebook for Reaching Your Socially Responsible Consumers through Marketing Science” என்ற புத்தகத்தில் நூற்பு பற்றிய Case Study இடம்பெற்றது எல்லோருக்கும் பெரும் மகிழ்வை கொடுத்தது.

பெரிய அளவில் இயக்கங்களாக இருக்கும் அமைப்புகளின் நிராகரிப்பும் கைத்தறி நெசவுக்கலை மற்றும் நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் கனவின்மீது கொண்ட தவிப்பும் இன்னும் தீவிரமாக வேலை செய்ய வைத்தது. எப்படியாவது கைத்தறி கலையையும் அதில் ஆழப்பொதிந்திருக்கும் ஆன்மீகத்தையும் அடுத்த தலைமுறைக்கு  கைமாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற வேட்கை எழுந்தது. ஒவ்வொரு நாளும் அந்த எண்ணம் செயலாகும் நாளின் மீதான தவிப்பும் பெருகிக்கொண்டே வந்தது. இன்று வரையிலும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். இனியும் நம்பிக்கையுடன் தொடர்வோம்.

இத்தனை கால முயற்சியின் வெளிப்பாடாக இந்திய அளவில் கைத்தறி சார்ந்து இயங்கும் சிறு சிறு குழுக்களுடன் இனிவரும் காலங்களில் கைகோர்த்து வேலைகள் செய்யவுள்ளோம். ஏழு ஆண்டுகளில்  நெசவாளர்களுடனான ஏற்பட்ட உரையாடல் மற்றும் செயல் அனுபவத்தின் மூலம் வெவ்வேறு படி நிலைகள் கொண்ட கைத்தறி சார்ந்த பாடத்திட்டத்தினை உருவாக்கியுள்ளோம். அதனை தொடர்சியாக கற்பிக்கும் களமாக “நூற்பு கைத்தறிக் கூட்டமைவு” எனும் செயல்தளம் திறக்கவுள்ளோம்.

நூற்பு கைத்தறிக் கூட்டமைவில் ஒரு பாகமான கைத்தறி நெசவுப்பள்ளியும் பிறப்பு கொள்கிறது. நெசவு குறித்த விரிவுபடுத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் கூடிய கைத்தறி நெசவுப்பள்ளியை எங்களின் ஆசிரியரான நீங்கள் திறந்து வைப்பது பெரும் ஆசீர்வாதம். “இந்த நெசவுப்பள்ளியில் எழப்போகும் கைத்தறி சத்தம் நெசவு கற்க வரும் குழந்தைகளின் உயிரில் கலந்துவிட வேண்டும். அப்படியாகும்பொழுது நிச்சயம் அடுத்த தலைமுறை இந்த கலையினை கையில் எடுப்பார்கள்” என்று சிவராஜ் அண்ணன் அடிக்கடி சொல்வது போல் நூற்பு உருமாற்றம் பெரும் என்று நம்பிக்கையுடன் பெரும் கனவை நோக்கிப் பயணப்படுகிறோம்.

எதிர்மறைக்கு செவிமடுக்காமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மதிப்பளித்து  அது சார்ந்த செயல்பாட்டில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளும்போது அனுதினமும் வாழ்வு மகிழ்வையும் நிறைவையும் அடையும் என்ற உங்களது சொல்லை மனதில் ஏந்தி செல்கிறோம்.

ஆசிரியரான உங்களையும் தங்களுடைய வாசக நண்பர்கள் அனைவரையும் நூற்பு கைத்தறிக் கூட்டமைவின் திறப்பு விழாவிற்கு அன்போடு  அழைக்கிறோம்.

சி.சிவகுருநாதன்

9578620207

www.nurpu.in

முந்தைய கட்டுரைஆசாரங்கள் எதுவரை தேவை?
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு