அனல் காற்று (குறுநாவல்) : 11

நான் வீட்டை அடையும்போது இருட்டியிருந்தது. வீடு இருண்டு கிடந்தது. போர்ட்டிகோவிலும் சிட் அவுட்டிலும் விளக்குகள் இல்லை. கேட் பூட்டியிருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை. சிமெண்ட் முற்றமெங்கும் பூந்தொட்டிகள் உடைந்து செடிகள் வாடிக்கிடந்தன. காரை நிறுத்திவிட்டு சென்று கதவை அடைந்தேன். கதவுக்கு அப்பாலும் விளக்கு இல்லை என்பதை சாவித்துளை காட்டியது

காலிங் பெல்லை அழுத்தினேன். பலமுறை அழுத்தியும் கதவு திறக்கவில்லை. உள்ளே அசைவே இல்லை. நான் அம்மா வெளியே பூட்டிக்கொண்டு போய்விட்டாளா என்று எண்ணி தாழை அசைத்தேன். பூட்டவில்லை, உள்ளே தாழிட்டிருக்கிறது. பரபரவென்று சந்தேகங்களும் பயங்களும் எழுந்து அடிவயிற்றை சில்லிடச்செய்தன கதவை போட்டு உந்தினேன்.

உள்ளே அசைவு தெரிந்தது. அம்மா உள்ளே கதவருகே நின்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். காத்திருந்தேன். மெல்லிய கிளிக்- கதவு திறந்தது.

அம்மா கதவைத்திறந்து சிறிய இடைவெளியை கைகளால் தடுத்தபடி நின்றாள். அவளுடைய தோற்றம் என்னை ஒரு கணம் துணுக்குறச் செய்தது. நெற்றியில் பொட்டும் நகைகளும் இல்லை. வீட்டுக்குள் இருட்டு. அவள் ஒரு நிழல் போலிருந்தாள்.

”எங்க வந்தே?” என்றாள்

”ம்ம்?”

”இங்கஎங்க வந்தே?”

”வழிய விடு”

”போடா… உள்ள வராதே…”

நான் அவளையே பார்த்தேன். பாழ்நெற்றியுடன் அவள் முகம் நேராகப் பார்க்கவிடவில்லை

”போ வெளியே.. அப்டியே போயிடு” என்றபோது அவள் குரல் எழுந்தது. சுட்டிக்காட்டிய கை நடுங்கியது.

”சும்மா டிராமா போடாதே…” என்றபடி உள்ளே செல்ல முயன்றேன்

”வெளிய போடா ராஸ்கல்.. இனி நீ எனக்கு மகன் கெடையாது…. நான் உனக்கு அம்மாவும் கெடையாது” என்று என் தோளைப்பிடித்துத் தள்ளினாள். அதை எதிர்பாராததனால் நான் சற்றுத் தடுமாறிவிட்டேன்.

நிதானப்படுத்திக் கொண்டு நான் அவளையே உற்று பார்த்தேன். பிறகு திடமான தாழ்ந்த குரலில் ”இப்ப நான் வெளியே போனேன்னா அப்றம் நீ என்னைப் பாக்க முடியாது… கண்டிப்பா நீ செத்தா கொள்ளி போடக்கூட வரமாட்டேன்… இது உன்மேலே சத்தியம்” என்றேன்

அம்மா அயர்ந்து போய்விட்டாள். வாசலை தடுத்த கை தழைந்து தட்டென்று பக்கவாட்டில் விழுந்தது. பின்னால் சாய்ந்து சுவரில் ஆதரவாக பிடித்துக்கொண்டாள்.

”நான் உள்ள போகலாமா?” என்றேன்

அவள் விலகிக்கொண்டாள். நான் உள்ளே சென்று என் அறைக்குள் போய் உடையை மாற்ற ஆரம்பித்தேன். அவள் பின்னால் வந்து கதவுமீது கன்னங்களைச் சேர்த்து நின்றாள்.

”சுசி எங்கேடா?”

”அங்க இருக்கா… அவங்களுக்கு துணைக்கு”

”அவளுக்கென்ன கிறுக்கா?” என்றாள் சீற்றத்துடன். ”அந்த தேவ்டியா வீட்டிலே…”

”கிறுக்கு உனக்கு… வெறிபிடிச்சு மனுஷத்தனத்தை மறந்துட்டு அலையுறே…”

அம்மா அவள் நினைத்தபடி கத்தும் ஆற்றலை அப்போதுதான் அடைந்தாள் ”டேய் நீ இதைச்சொல்லணும்டா… அந்தப் பாவி எனக்கு துரோகம் பண்ணிட்டு போனதுக்கு அப்றம் உன்னை பாடுபட்டு வளத்தேன் பாரு அதுக்கு நீ இதைத்தான் சொல்லணும்… பதினெட்டு வருஷம் ஏச்சும் பேச்சும் அவமானமும் பட்டு உன்னை வளத்து ஆளாக்கினேனே… அதுக்கு நீ என்னைச் செருப்பாலே அடிக்கணும்… உன்னை ரத்தம் குடுத்து வளத்தவ நான். இப்ப அந்தப் பொறுக்கி உனக்கு பெரிசாப் போயிட்டார்… இல்ல?”

”அவரு உன்னைவிட பெரிசுன்னு நான் சொல்லல்லை. நீதான் எனக்கு முக்கியம். நான் நீ வளத்த பிள்ளை. ஆனா அவரோட ரத்தம் நான்.. அந்தக்கடமைகளை நான் செஞ்சாகணும்.”

“எதுடா கடமை? துரோகம் செஞ்ச பாவிக்கு அடைக்கலம் குடுக்கிறதா? டேய் நீ அந்தாளைப்போய் பாத்திட்டுதானே இருந்தே? உண்மையச் சொல்லு… என் மூஞ்சியப் பாத்து சொல்லு”

”உன் முகத்தைப் பாத்தே சொல்றேன். ஆமா.” என்றேன் ”அவருக்கு நான் தான் வைத்தியம் பாத்தேன். அந்தக் குடும்பத்துக்கே நான்தான் சோறு போடுறேன்… இப்ப அந்தக் குடும்பத்தையே என் கிட்ட ஒப்படைச்சுட்டுதான் அவர் போயிருக்கார்”

”டேய் நீ எனக்கு துரோகம் செய்திட்டிருந்தே இல்ல? சொல்லுடா பாவி”

”அம்மா நீ நம்பினாலும் நம்பாட்டியும் ஒண்ணு சொல்றேன், நெஞ்சில கையவைச்சு சொல்றேன். எனக்கு இந்த பூமியிலே நீ மட்டும்தான் முக்கியம். உனக்கு சமானமா எனக்கு யாருமே கெடையாது… உனக்காக மட்டும்தான் நான் சிரிச்சுட்டே என் உயிரைக் கொடுப்பேன்… ஆனால் நீ என்கிட்ட பாவம் செய்யச்சொன்னா செய்யமாட்டேன்…”

”என்னடா பாவம்? அந்த தேவ்டியாளை போய் பாத்துக்கிடறதா?”

”அம்மா… ஜாஸ்தி பேசறே நீ…” என்று நான் திரும்பிக்கோண்டேன்

”டேய் பாவி” என்று அலறியபடி என்னை அடிக்க வந்தாள். ”மனுஷனாடா நீ? சொந்த அம்மாவுக்கே துரோகம் செய்றியே நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? நான் உனக்கு என்னனடா பாவம் செஞ்சேன்… அடப்பாவி… தீய அள்ளிபோடுறது மாதிரி சொல்றியேடா டேய்” என்று பாதியிலேயே தொய்ந்து என் முழங்கையைப் பிடித்தபடி கதறி அழ ஆரம்பித்தாள்.

”நான் என்ன பண்ணனும்ணு சொல்றே?” என்றேன் கோபத்தை அடக்கியபடி.

”அந்தப்பாவி புழுத்து செத்திருக்கணும்டா… அவன் செஞ்ச துரோகத்துக்கு அவன் அணுவணுவா அழுகிச் செத்திருக்கணும்…. அந்தப்பாவியோட குடும்பம் நடுத்தெருவிலே நிக்கணும்.. அவன் எனக்குச் செஞ்ச துரோகத்துக்கு அவன் நாசமா போயிருக்கணும்… கடைசீ காலத்தில நீ போய் அவனை சந்தோஷமா சாகவிட்டுட்டேல்ல? பாவி இதுக்காடா நான் உன்னை வளத்தேன்…”

என்னுள் இருந்து உக்கிரமான வெறுப்பு ஒன்று குமுறிவந்தது. சுசி எத்தனை நெருக்கமானவர்கள் ஆனாலும் நமக்கு எல்லார் மேலும் ஒரு துளி வெறுப்பாவது உள்ளே இருக்கும். மிக ஆழத்தில். அந்த வெறுப்பு சிலசமயம் நம்மை அறியாமலேயே நம் சொற்களில் முனை கொண்டுவிடும்.

”துரோகம் துரோகம்னு சொல்றியே… துரோகம் செய்யாத மனுஷங்க இந்த பூமியிலே உண்டா என்ன?”

”என்னடா சொல்றே நீ?”என்றாள் பீதியுடன்

”அவரு செஞ்சது துரோகம்… பெரிய தப்புதான் அது…. ஆனா தப்புசெய்யாத மனுஷனே கெடையாது…. இந்த கூப்பாடு போடுறியே, சரி நீ ஒருநாளைக்காவது ஒரு தடவையாவது மனசாலே எங்கப்பாவுக்கு துரோகம் செஞ்சதில்லேன்னு சொல்ல முடியுமா? வேற ஆம்பிளைய கற்பனையிலயும் நெனைச்சதில்லைன்னு சொல்ல முடியுமா உன்னால? சொல்லமுடியும்னா வா சாமி முன்னாடி சூடம் அணைச்சு சத்தியம் பண்ணு. நான் நம்பறேன்”

“டேய்!டேய் பாவி” என்று தளர்ந்து வெறும்தரையில் அப்படியே அமர்ந்து விட்டாள். முகம் பிரேதம்போல வெளுத்து விட்டது.

அவள் முகத்தை அப்போது பார்த்தபோது என் மனத்தில் அச்சம்தான் ஏற்பட்டது. அவள் உயிரோடு மீள்வாள் என்றே தோன்றவில்லை. ஆனால் அச்சத்துடன் போட்டியிட்டு ஓடிய குரூரம் அரைக்கணத்தில் முந்திக்கொண்டது.

”மத்தவங்களோட ஒழுக்கத்துக்கு மார்க் போடுறதுக்கு யாருக்குமே ரைட் இல்ல… சும்மா ஒழுக்கம் ஒழுக்கம்னு சொல்றரவங்க அவங்களை மறைச்சுக்கிடறதுக்காகத்தான் அப்டி சொல்றாங்க… எல்லாருக்கும் மனசு ஒண்ணுதான்…” என்றேன்

ஆனால் அம்மாவும் பெண்தான். அவளுக்கும் தெரியும் ஆணை ஆழமாகப் புண்படுத்தும் விதம். அம்மா பாம்புபோல தலையை சொடுக்கி தூக்கி ”சீ… பொறுக்கி நாயே… நீ சொல்லுவேடா.. அந்தாளோட ரத்தம்தானே நீ? அவன் ஒடம்பிலே ஓடுற சாக்கடைதானே உன் ஒடம்பிலேயும் ஓடுது.. அவனை மாதிரி நீயும் எச்சில்கலைக்கு நாக்கத் தொங்கப்போட்டு ஓடணும்னு திட்டம்போடறே.. போடா போ”

அதுதான் என் கடைசி எல்லை. நான் உடைந்து மளமளவென சரிந்தேன். மடேரென்று என் மார்பில் ஓங்கி அறைந்து கூவினேன். .”…. ஆமா நானும் எங்கப்பாவும் ஒழுக்கம் கெட்டவங்கதான்… போக்கிரிங்கதான். காமவெறி பிடிச்சவங்கதான். போதுமா? உலகத்தில இருக்கிற யோக்கியங்க அத்தனை பேரும் சேர்ந்து வந்து எங்கள தூக்கில ஏத்துங்க… போதும்… கேட்டுக்கேட்டு புளிச்சு போச்சு… தீயில எரிஞ்சு எரிஞ்சு ஆத்மாவே சாம்பலாயாச்சு… துரோகம், ஒழுக்கம், மண்ணாங்கட்டி…. எங்களைக் குறைசொல்ல உலகத்துல யாருக்குமே யோக்கியதை கெடையாது. உனக்கும் கிடையாது உன் மருமகளுக்கும் கெடையாது…”

”டேய்.. என்னடா ஒளறுறே.” என்று அம்மா பதறியபடி ஏதோ சொல்ல வந்தாள்

”நானும் எங்கப்பா மாதிரித்தான்… அதைத்தான் சொல்லவந்தேன்”

”டேய்”

”நான் சந்திராகூட உறவு வச்சிட்டிருக்கேன்… மூணு வருஷமா அவகூட படுக்கிறேன்… நான் கேவலமான பொம்பிளைப் பொறுக்கி… அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவன்… போதுமா? நீதான் உத்தமியாச்சே, போ, சமையலறையில போய் எனக்கு வெஷத்தைக் கலந்து கொண்டாந்து குடு… இல்ல நான் தூங்குறப்ப தலையில கல்லைத் தூக்கிபோடு… கொல்றியா? கொல்றியா? கொல்ல முடியுமா உன்னால?”

அம்மாவின் பிணமுகத்தைப் பார்த்துச் சொன்னேன். ”உன்னாலே முடியாது… ஏன்னா நான் உன் புள்ளை… என்னை நீ மன்னிச்சிருவே. ஆனா அப்பாவை மன்னிக்க மாட்டே. ஏன்னா அவரு உன் ரத்தம் இல்லை. அவரைவிட உனக்கு உன் ஈகோ பெரிசு… நீ பெரிய இவள்னு நாலுபேருட்ட காட்டிக்கணும்கிற ஆசை…. நீ சொல்ற மாதிரி நீ பெரிய உத்தமின்னா நான் இப்ப போய் தூங்கறேன். என் தலையில அம்மிக்குழவியை தூக்கிப் போடணும் நீ… சத்தியமா அதைத்தான் செய்யணும்”

ஒருகணத்தில் சொற்களெல்லாம் விலகிப்போய் முழுமுற்றான வெறுமையை அடைந்தேன். இறந்துபோய் மெல்ல மெல்ல மீண்டு வருவதுபோல மீண்டேன். திரும்பி என் அறைக்குப்போய் கதவை அறைந்து மூடிவிட்டு கட்டிலில் விழுந்து மல்லாந்து படுத்துக் கொண்டேன்.

தூங்கி எத்தனை நாள் ஆகிறது என எண்ணிக் கொண்டேன். ஆனால் இனி என் வாழ்நாளிலேயே என்னால் தூங்கமுடியும் என்று தோன்றவில்லை. வாய் கசந்தது, தலை சுழன்றது, உடல் நீர் நிறைந்த தோல்பை போல கனத்து கிடந்தது. ஆனால் மனம் உள்ளே கொந்தளித்துக் கொண்டே இருந்தது. படுத்தபடியே நான் வேகமாக ஓடிக்கொண்டிருப்பவன் போல உணர்ந்தேன்.

புரண்டு புரண்டு படுத்தேன். என் எண்ணங்கள் சிதறி விட்டன. அவற்றை குலுக்கி இணைத்துக்கொள்ள முயல்பவனைப் போல தலையணையில் தலையை அறைந்தேன். கையால் நெற்றியில் அடித்துக் கொண்டேன். எழுந்து அமர்ந்து மேலே ஓடிய ·பேனைப் பார்த்தேன். அக்கணமே போர்வையை எடுத்து அதில் கட்டி தொங்கிவிடவேண்டும் என்று எண்ணினேன்.

மீண்டும் படுத்துக்கொண்டேன். என்ன வலி இது… மனித உடல் நோயுற்று அழுகி வலித்துத் துடிப்பதை இயல்பானது என்று சொல்லலாம். இந்த மேலும் பலமடங்கு தீவிரமான மனவலிக்கு என்ன அர்த்தம்? ஏன் இதை நான் அனுபவிக்க வேண்டும்? இது நானே கற்பித்துக் கொள்வதல்லவா? இதை ஏன் என்னால் தூக்கி வீசிவிடமுடியவில்லை?

மனித உடலைவிட திடவட்டமான மனித இருப்பு மனித அகங்காரம். உடலில் படும் அடியைவிட தீவிரமானது அகங்காரத்தில் படும் அடி. என் உடல் தூங்கத் தவிக்கிறது. ஆனால் அகங்காரம் அடங்காமல் அதனால் தூங்க முடியாது. டிராயரை திறந்து ஏதாவது மாத்திரை இருக்கிறதா என்று பார்த்தேன். ஏதுமில்லை. மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டேன். கடிகாரம் டிக் டிக் டிக் என்று சென்றுகொண்டே இருந்தது.

ஏன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எது பிடிக்கிறதோ அதைமட்டும் செய்துகொண்டு செல்லக்கூடாது? எதற்கு இந்த அவஸ்தை? நான் பிறரைப் பயப்படுகிறேனா? ஏன்? இல்லை இது அதுவல்ல. நான் செய்வதை நானே நியாயப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி நியாயபப்டுத்திக் கொள்ளத்தான் உலகில் கோடானுகோடி சொற்கள் கணம் தோறும் கொட்டப்படுகின்றன கோடானுகோடி எண்ணங்கள் கணந்தோறும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

எதையும் நியாயப்படுத்திக் கொள்ளாமல் பிடித்ததைச் செய்து வாழ்பவர் எவராவது உண்டா என்ன? அது சாத்தியமா? எல்லாருமே ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். ஆனால் மண்ணில் எதையும் நியாயப்படுத்திவிடலாம். கொஞ்சம் கண்ணீரும் கொஞ்சம் சொற்களும்போதும். ஆனால் நான் நல்லவன் என்று நம்பாமல் மண்ணில் உயிர்வாழவே முடியாது. கால்கீழ் பூமி சவ்வாகக் கிழிந்து பாதாளத்துக்குத் தள்ளிவிட்டுவிடும்.

எழுந்து வெளியே சென்றேன். அம்மாவின் அறை பூட்டியிருந்தது. உள்ளே அம்மா தூங்கிவிட்டிருந்தாள். இல்லை கண்டிப்பாக தூங்க மாட்டாள். இன்று இந்த நகரில் நான்கு உயிர்கள் தூங்கியிருக்காது. நான் அம்மாவின் அறைக்கதவருகே சென்று நின்றேன். கதவை தட்டுவதற்கு முந்தைய கணத்தில் காலமே இல்லாதவனாக நின்றுகொண்டிருந்தேன்

கதவைத் தீண்டினால்போதும் அது திறக்கும். ஆம், அம்மா என்னை எதிர்பார்த்து உள்ளே படுத்திருக்கிறாள். நான் அவள் கால்களில் விழுந்து அம்மா என்னை மன்னித்துவிடு என்று ஒரு வார்த்தை சொன்னால்போதும் மீண்டும் ஆறுவயதுப் பையனாக அவள் மடியின் இளம் வெம்மையில் அடைக்கலமாகிவிடமுடியும். எல்லாம் சரியாகிவிடும், எல்லாம்.

அம்மாவின் தனிமையை என்னால் நினைக்கவே முடியவில்லை. முன்பு ஒரு கேரள மன்னரின் வதைக்கூடத்தைப் பார்த்தேன். தன் எதிரியை அவன் உடல் அளவுக்கே சிறிய, உணவுக்கும் கழிவுக்கும் மட்டும் பொந்துள்ள, அறைக்குள் தள்ளி நிரந்தரமாக சுவர்கட்டி மூடிவிட்டார். அங்கே அவன் எட்டுமாதம் உயிரோடு இருந்தான். பைத்தியம் பிடித்து செத்தான்.

அம்மா அதுவரை நம்பி வாழ்ந்த அனைத்தையும் இழந்து வெறுமையில் உள்ளே கிடக்கிறாள். அவளுடைய மரணம் நிகழ்ந்துவிட்டது. நாளைக் காலையில் அவள் தூங்கி எழுவதற்கான காரணம் எதுவுமே இப்போது எஞ்சியிருக்கவில்லை…

ஆனால் என்னால் கதவைத் தட்ட முடியவில்லை. என் விரல்களை என்னால அசைக்கவே முடியவில்லை. பின்பு மெல்ல ஓசையில்லாமல் திரும்பி ·ப்ரிட்ஜை அடைந்து தண்ணீர் புட்டியை எடுத்து குளிர்நீரை வாயில் கொட்டி குடித்தேன். நான் எத்தனை தாகமாக இருந்தேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. என் எரியும் எண்ணங்கள் மீதே குளுமையான நீர் வழிந்தோடுவது போல் இருந்தது

ப்ரிட்ஜை மூடும்போது நான் திரும்பி பார்த்தேன், அம்மா அறைவாசலில் நின்றிருந்தாள். இருண்ட கோயிலுக்குள் சிலை நிற்பதுபோல. நான் அசப்பில் அவளைக் கண்டு சற்று அதிர்ந்தபின் மெல்ல மீண்டு அவளை நோக்கி நடந்தேன். அவளிடம் ஏதோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் சொற்களால் சென்றடையும் தூரத்துக்கு அப்பால் இருந்தாள் அம்மா.

அவளருகே நின்று தயங்கி பின்னர் மெல்ல ”மாத்திரை போட்டுக்கோ” என்றேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. நான் ”முகத்திலே பிரஷர் தெரியுது…” என்றேன். அம்மா உள்ளே போய் கதவைச் சாத்திக்கொண்டாள். மூடிய கதவை பார்த்து நின்றபின் என் அறைக்குச் சென்றேன்

கதவை மூடியபின் என் தன்னிரக்கம் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. அந்த உடலளவுச் சிறைக்குள் சிக்கிக் கொண்டிருப்பவன் நான் அல்லவா? எனக்குத்தான் எதுவுமே மிஞ்சவில்லை. நம்புவதற்கு, சாய்ந்திருப்பதற்கு. நாந்தான் முற்றிலும் அனாதை. எனக்கிருந்தது அம்மா மட்டும்தான், அவளை சற்றுமுன் கொன்று விட்டேன்.

தொண்டை கரகரத்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டேன். செல் போனை பாய்ந்து எடுத்தேன். வழக்கம்போல நூற்றுக்கும் மேல் மிஸ்டுகால்கள். நான் அதை கையில் வைத்துக்கொண்டு சிந்தனை செய்தேன். பின்பு உன்னுடைய எண்ணை அழுத்தினேன். மணியடித்தது. மீண்டும் மீண்டும் . நீ எடுக்கவில்லை. சைலண்ட் மோடில் வைத்துவிட்டு தூங்கியிருந்தாய்.

சுசி நான் அந்த இரவில் உனக்காக மீண்டும் மீண்டும் கூவிக்கொண்டிருந்தேன். பின்பு செல்போனை வீசிவிட்டு மின்விசிறியைப் பார்த்தபடி நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.

பின்பு நான் சந்திராவின் எண்ணை அழைத்தேன். மணி ஒலி பீப் என்றதுமே அவள் எடுத்து ”அருண்” என்றாள். சுசி அப்போது உன் முகம் என் மனதில் வந்துசென்றது.

”ம்ம்”

”என்ன ஆச்சு? அப்பா–”

”ஆமா”

”என் ஸ்டுடன்ட் ஒருத்தி சொன்னா… ” என்றாள் ”இப்பதான் வந்தியா?”

”ஆமா”

”அக்கா வந்தாங்களா?”

”இல்லை”

”வரமாட்டாங்க…. நீ அவங்களை கம்பெல் பண்ணாம விட்டிடு… அவங்களோட நேச்சர் அப்டி…”

”சந்திரா”

”என்ன?”

எனக்கு அழுகை வந்து உடல் விம்மியது ”சந்திரா என்னால தாங்க முடியல்லை… ஐ யம் டையிங்” என்றேன்.

”உனக்கு அப்பாமேல அன்பு உண்டுன்னு தெரியும்… ஆனா அவர் செஞ்சதையும் நீ யோசிச்சுப்பாக்கணும்…. பாவம் அக்கா. அவங்களோட லைஃப் எப்டி ஆயிடிச்சு… முப்பத்தஞ்சு வயசு முதல் தனியா புள்ளையையும் வச்சுகிட்டு… நம்ம ஊரிலே பொண்ணு புருஷனைப் பிரிஞ்சிருந்தா எல்லாருக்கும் இளக்காரம் ஆயிடுது. வம்புப் பார்ட்டிங்க பேசிட்டே இருக்கும். அதாவது பரவாயில்லை, நம்மகிட்ட நெருக்கமா இருக்கிறவங்க கூட அவங்களை மறந்து அந்த கூட்டத்திலே சேந்துகிடுவாங்க… உனக்கு சாரதா மேடத்தை தெரியும்ல?”

”தெரியாது”

”எங்க காலேஜ்தான்… ரிட்டயர் ஆயிட்டாங்க. உங்கம்மாவோட உயிர்தோழி.நான் வரதுக்கு முன்னாடி அவங்க ரெண்டுபேரும்தான் ஒண்ணா இருப்பாங்களாம். ஒருவாட்டி ஸ்டா·ப்ரூமிலே நாலஞ்சுபேர் உங்கம்மாவைப் பத்தி கேவலமா பேசி சிரிச்சுட்டிருந்தாங்க. சாரதாம்மாவும் சேந்து சிரிச்சிருக்காங்க. அப்ப அதைக் கேட்டுட்டு உங்கம்மா உள்ள வந்தாங்களாம். சாரதாம்மா அப்டியே வியர்த்திட்டாங்க… அப்றம் உங்கம்மாவை பாத்து கண்ணீர் விட்டு அழுதிருக்காங்க. ஆனா உங்கம்மா அப்றம் அவங்ககூட பேசவே இல்லை. ஒம்பதுவருஷம் பேசலைன்னா பாத்துக்கோ. சாரதாம்மாவோட பையன் பைக் ஆக்ஸிடெண்டிலே செத்துப் போனப்ப எல்லாரும் திரண்டு போனாங்க. உங்கம்மா போகலை. நான்கூட சொல்லிப் பாத்தேன். பேசாம இருந்திட்டாங்க. இத்தனைக்கும் அவங்க அந்த பையனை தூக்கி வளத்திருக்காங்க… அந்த அளவுக்கு மனசிலே கசப்பு…”

நான் அந்தச் சொற்களுக்கு சம்பந்தமில்லாத தூரத்தில் இருந்தேன். சந்திராவின் சகஜத்தன்மை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் அந்த நள்ளிரவில்…

”சின்ன அவமானங்களா? ஒருவாட்டி சந்தானம் சார்ட்டே லைப்ரரியிலே என்னமோ கத்தினாங்க. அவர் வேகமாக ஓடிப்போனார். நான் போய் என்ன ஜிஎஸ்னு கேட்டேன். ஒண்ணுமில்லை, எங்கூட படுக்கணும்னு கேக்கிறார். புருஷன் இல்லாத பொண்ணுன்னா பொதுச்சொத்துதானே யாரு வேனும்னாலும் அப்ரோச் பண்ணலாமே-ன்னு சொன்னாங்க. நான் அப்டியே கைய பிடிச்சுட்டு அழுதிட்டேன் …”

நான் ”சந்திரா நான் உன் கிட்ட பேசணும்…” என்றேன். அவளுடைய சகஜத்தை உடைத்து உள்ளே போவது கடினமாக இருந்தது. அவள் சொல்வது எதுவும் என் மனதில் பதியவில்லை

”ஏன்?” என்றாள், சாதாரணமாக.

”என்னால ஒண்ணுமே யோசிக்கமுடியலை.. பித்து பிடிச்சதுமாதிரி இருக்கு” சந்திரா எந்த உணர்ச்சியும் இல்லாமல் மறுபக்கம் அதைக் கேட்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. அவளைக் கொந்தளிக்கச் செய்தாகவேண்டும். அவளில் ஏதாவது ஓர் உணர்ச்சியை எழச்செய்தாக வேண்டும்

அம்மாவிடம் சொன்னதைச் சொல்லலாமா என்று எண்ணினேன். ஆனால் அது சந்திராவுக்கு அதிர்ச்சி அளிக்கும். அவள் வெறி கொள்ளக்கூடும். அப்போது எனக்கு அவளிடம் தேவைப்பட்டது மென்மையான ஆதரவான முத்தங்கள்… கொஞ்சல். ‘என்ன கண்ணா என்னடா’ என்று ஒரு மென்குரல் கிணுங்கல்.. நேற்றிரவெல்லாம் அவள் குரலுடன் சல்லாபித்திருந்தேன். அந்தக்குரலை முத்தமிட்டேன், அந்தக்குரலை புணர்ந்தேன். இன்று அது எனக்கு தேவைப்பட்டது. தாகநீர் போல, உயிர் மருந்து போல

”எனக்கு மனசே சரியில்லை சந்திரா” என்ன அபத்தமான சொல்லாட்சி. சினிமா வசனம் போல. ஆனால் மனம் வேறு எங்கோ கவனம் கொள்கையில் பழகிப்போன சொற்களைத்தான் சொல்கிறது. அவள் கேட்கப்போகிறாள். இதோ… என்ன கண்ணா… என்ன சொல்லு…எங்கிட்ட சொல்லு நான் உன் சந்திராதானே…ம்ம்ம்.

”நீ ரொம்ப ஜாஸ்தி பண்ணிக்கிறே” என்றாள் சந்திரா கறாராக ”டெத்னா பெரிய விஷயம்தான். ஆனா ஹி இஸ் அல்ரெடி ஸிக்…”

”இல்ல சந்திரா…நான்-”

சந்திரா ”சுசி எங்க இருக்கா?” என்றாள்.

நான் ”அங்க” என்றேன். என் கொந்தளிப்பு ஒருகணம் உறைந்து பின் அப்படியே இறங்கி அடங்கியது.

”அங்கயா?” என்றபின் ”அவளும் கூடவே வந்தாளா?” என்றாள்

”ம்ம்”

எல்லாவற்றையும் ஒரே கணத்தில் சந்திரா கண்டுவிட்டாள் என்று உணர்ந்தேன். என் அழுகை நுரை அடங்குவதுபோல உள்ளுக்குள் அமிழ்ந்தது. நாக்குக்கு அடியில் மெல்லிய கசப்பு மட்டும் இருந்தது

”என்ன சொல்றா?” என்றாள் சந்திரா. அவள் கண்களை என்னால் கற்பனையில் காணமுடிந்தது.

”ஒண்ணும் சொல்லலியே” என்றேன். என் கசப்பு வளர்ந்தது.

”சச் எ நைஸ் கேர்ல்” என்றாள்.

புல்ஷிட்! புல்ஷிட்! புல்ஷிட்! புல்ஷிட்! புல்ஷிட்! பாவனைகள்… இத்தனை பாவனைகளுடன் உலகில் உள்ல அத்தனை பெண்களையும் பெட்ரோல் ஊற்றிக்கொளுத்தவேண்டும். பிச்…டாம் பிச்

”என்ன பேசாம இருக்கிறே?”

”ம்ம்ஹும்”

”சுசி உனக்கு இப்ப பெரிய பலம், இல்ல?”

நான் பெருமூச்சு விட்டேன். ”சரி சந்திரா, ஐ யம் ஸ்லீப்பி… ஸீ யூ”

”சுசிகிட்ட பேசினியா?” சந்திரா விட விரும்பவில்லை.

”சாயங்காலம்தானே வந்தேன்?”

”இப்ப?”

”இல்லியே”

”அம்மாகிட்ட பேசின பிறகு?”

”இல்ல” என்றபின் சட்டென்று ஐயம் கொண்டு ”அம்மா கூப்பிடாங்களா?” என்றேன்.

”ஆமா…”

“எப்ப?”

”ஒன் அவர் பேக்… ஷி வாஸ் டயர்ட்”

”என்ன சொன்னாங்க?” என்றேன். எனக்குள் கடலோசை எழுவதைக் கேட்டேன்.

”ஒண்ணும் சொல்லல்லை… பொதுவாத்தான் பேசினாங்க…. ஒண்ணுமே புடிக்கலை செத்துப்போகணும்போல இருக்கு அப்டீன்னாங்க… நான் சமாதானப்படுத்தினேன்”

”அப்டியா?”

”நீ அம்மாகிட்டே என்ன சொன்னே?”

”ஒண்ணும் சொல்லலியே” அந்தச் சாதாரணக்குரலில் நான் அலசி அலசித்தேடினேன், காலிபெட்டியை துழாவுவதுபோல.

”ஜிஎஸ் இஸ் நாட் நார்மல்…”

”ம்ம்” என்ன சொல்கிறாள்…. ஆனால் ஏதோ ஒன்று ஒலிக்கிறது.

”நான் நாளைக்கு அங்கே வரேன்… உங்கம்மாகிட்டே பேசணும்… இன்னைக்கு சாயங்காலம்தான் எனக்கு விஷயமே தெரியும். உங்க ரெண்டுபேர் மொபைலிலயும் கூப்பிட்டா பதில் இல்லை”

”ம்ம்” என்றேன் ”பை”

”பை..ஸீ யூ”

நான் படுத்துக்கொண்டேன். அம்மா சந்திராவை ஏன் கூப்பிட்டாள்? என்ன பேசினாள்? அதிலும் இந்த நள்ளிரவில். மின்னலில் மலை தெரிவதுபோல எனக்கு அந்த விஷயம் ஒரே கணத்தில் முற்றிலுமாகப் புரிந்து உடல் உதறிக்கொள்ள எழுந்து அமர்ந்தேன்.

அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது என சந்திராவுக்குப் புரிந்துவிட்டது. ஆகவேதான் அவள் அம்மாவுக்காகப் பேசுகிறாள். நிதானமாக இருக்கிறாள். உற்சாகமாகக்கூட இருக்கிறாள். என்னுடன் விளையாடுகிறாள். இப்போது அவள் நினைப்பது சுசியைப்பற்றி மட்டும்தான். அம்மா அறிந்து கொண்டது அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் அவள் நெடுங்காலமாக நெஞ்சுக்குள் மிக ரகசியமாக ஆசைப்பட்ட ஒன்று நடந்துவிட்டது. பல்லாயிரம் முறை அவளுக்குள் அவள் சொல்லிப் பார்த்து நிகழ்த்திப் பார்த்து அஞ்சி அஞ்சி பின்பு ரகசியமாக ரசிக்க ஆரம்பித்துவிட்ட தருணம் தாண்டிவிட்டது. சந்திரா அம்மாவின் மீது தன் வெற்றியை நிகழ்த்திவிட்டாள். ஆம், அதுதான். அதுதான். நான் மீண்டும் படுத்துக் கொண்டேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 10
அடுத்த கட்டுரைகாதலர் தினம்:கடிதங்கள்