ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1

1-

தயானந்தா முதன்முதலாக அளித்த ஜாமீன் அவனுடைய தந்தைக்குத்தான்! அப்போது அவனுக்கு வயது இருபத்திரண்டு. பி.ஏ.,பரீட்சையில் முதல் இரண்டு முயற்சிகளில் தோற்றுப் போனபிறகு,எப்படியாவது அதை முடித்து விட வேண்டும் என்று அவன் போராடிக் கொண்டிருந்த நேரம் அது.

தங்களது விடுமுறை நாட்களில் ஒன்றுகூடும் அவனது பட்டதாரி நண்பர்கள்,தங்களது ஊதிய விகிதம்,கடன் வாங்கும் தகுதி,தங்களுக்குரிய விடுப்புக் காலம்,வீட்டிலிருந்து தள்ளி இருக்கும்போது ஏற்படும் சாப்பாட்டுப் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது,தானும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று தயானந்தாவுக்கும் தோன்றும்.ஒரு சில சிபாரிசுகள்,அறிமுகங்களின் மூலம் வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவன் செய்த முயற்சிகளுக்கு-அவன் ஒரு பட்டதாரியாக மட்டும் ஆகி விட்டால் நிச்சயமாக உதவி செய்கிறோம் என்ற இனிப்பான வாக்குறுதிகளே பதிலாகக் கிடைத்து வந்தன.

தயானந்தாவின் தந்தை கமலாகர்,ஒரு காலத்தில் கார்வார் முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு ஜவுளிக் கடையின் உரிமையாளர்.துறைமுகத்துக்குச் செல்லும் வழியில்,பஸ் நிறுத்தத்தை ஒட்டினாற்போல அந்தக் கடை இருந்தது.அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் திருமணத்துக்கான துணிமணிகள் எடுக்க எப்போதும் கமலாகரின் கடைக்கே வந்து குவிந்து கொண்டிருந்தார்கள்.வருடத்துக்கு இரண்டு தடவை ,கமலாகரே பம்பாய் சென்று,தேவையான ஜவுளிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவார்;அவற்றுக்கான விலையையும் நிர்ணயம் செய்வார்.மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெவ்வேறு வண்ணக் குடைகள் அங்கே விற்பனைக்கு வந்து விடும்.அந்தக் குடைகள் அங்கே வந்து சேர்ந்ததுமே அவற்றின் உட்புறங்களில் வெள்ளிஜரிகையால் பெயர் பொறிக்கும் தன் வியாபாரத்தைத் தொடங்கி விடுவார் அடுத்த கடைக்காரரான பொற்கொல்லர் மோகன்.

நல்ல முறையில் செழித்து வளர்ந்தபடி,எப்போதும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த அந்தக்கடை,கமலாகரின் கண்களுக்கு முன்பாகவே வீழ்ச்சியடையத் தொடங்கியது.காமத் வாத்தியாருடனும் அவரது கூட்டாளிகளுடனும் சேர்ந்து கொண்டு,பணம் வைத்துச் சீட்டாடும் பழக்கத்திற்குக் கமலாகர் ஆட்பட்டுப் போன பிறகு,அந்தக் கடையின் தலையெழுத்தே மாறிப் போக ஆரம்பித்தது.தன் பொறுப்புக்களையெல்லாம் தன் இளைய சகோதரர்களிடம் தள்ளிவிட்ட கமலாகர்,பம்பாய் சென்று துணி வாங்கும் வேலை,கடையின் கணக்கு வழக்குப் பார்ப்பது என்று சகலத்தையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில்-பழைய இடத்தின் பற்றாக் குறையைக் காரணம் காட்டிப் பிற ஊர்களிலிருந்து கார்வாருக்கு வந்து சேரும் பேருந்துகள் நிற்க வசதியாக-முன்பிருந்த பஸ் நிறுத்தமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.அந்தக் கடைத் தெருவின் உயிர்நாடியே பேருந்து நிலையம்தான் என்பது போலப் புதிய பேருந்து நிலையம் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடைத்தெரு வளர்ச்சியடையத் தொடங்கியது.புதிய கடைகளின் ஜொலிஜொலிக்கும் விளக்குகள்,பழைய கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களைத் தானாகவே அங்கு கொண்டு வந்து சேர்த்தன.குடைகளும் கூட அங்குள்ள எல்லா இடங்களிலுமே கிடைக்க ஆரம்பித்து விட்டன.அந்த ஆண்டின் மழைக் காலத்தில்,கமலாகரின் கடையில் அறுபது குடைகள் விற்பனையாகாமல் தேங்கிப் போயிருந்தன;நாற்பது குடைகள் மட்டுமே எப்படியோ விற்றுப் போயின. அதே போன்ற குடைகள்,பிற கடைகளில் மூன்று ரூபாய் குறைவாகவே கிடைத்தன.

தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உணர்வில் உறைப்பதற்கு முன்னமே கமலாகர் திவாலாகி விட்டிருந்தார்.தான் செலுத்தியாக வேண்டிய தொகை, தனக்கு வர வேண்டிய தொகை என எதற்குமே சரியான கணக்கு வழக்குகள் அவரிடம் இல்லை.புதிதாக ஜவுளிக் கொள்முதல் செய்ய வேண்டிய தேவையே இல்லாதபடி,கடந்த சில ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருந்த சரக்குகளையே மிகுந்த சிரமத்தோடுதான் அவர் தள்ளி விட வேண்டி இருந்தது.

வண்ண மயமான துணிகளை விளம்பரப்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டிருந்த கடையின் வெளிப்புற ஜன்னல்களெல்லாம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தன.காலி அலமாரிகளும்,பல கஜ நீளம் கொண்ட துணிகளைச் சுற்றி வைக்க ஒரு காலத்தில் பயன்பட்டுக் கொண்டிருந்த மரக் கழிகளும் கடையின் ஒரு மூலையில் போட்டு வைக்கப்பட்டன.

ஜவுளி வியாபாரத்தைக் கை விட்டு விட்டுத் தன் கடையின் ஒரு பக்கத்திலேயே தேங்காய் வியாபாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து போய்விட்டார் கமலாகர்.அவரது தம்பிகள் இருவரும் இதற்காக அவரைப் பழித்ததோடு மட்டுமல்லாமல்,தங்கள் பங்குச் சொத்தைப் பிரித்துத் தரும்படியும் அவரை வற்புறுத்தத் தொடங்கியிருந்தனர்.தன்னிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்சப் பொருளையும் பங்கு போட்டு இழந்து விட மனம் வராத கமலாகர்,அவர்களது கோரிக்கைக்குப் பணிந்து கொடுக்க மறுத்து விட்டார்.காவல்துறையோடு ஏதோ இரகசிய ஒப்பந்தம் செய்தபடி,பொய் சாட்சிகளை உருவாக்கிக் கொண்ட அவரது சகோதரர்கள் சொத்துத் தகராறு காரணமாக அவர் தங்களை அடித்து விட்டதாக ஒரு பொய்ப் புகாரை அளித்தனர்.அதன் அடிப்படையில் போலீசர்ர் ஒரு நாள் இரவு முழுவதும் கமலாகரை லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.நிலைமை இந்த எல்லை வரை செல்லக் கூடும் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத தயானந்தாவும்,அவனது தாயும் அந்த இரவுப் பொழுதை மிகுந்த கவலையோடு கழிக்க நேர்ந்தது.

மறுநாள் காலையில் வழக்கறிஞர் நாயக்கின் வீட்டை நோக்கி விரைந்த அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவர்,தயானந்தா மூலம் ஜாமீன் வாங்கித் தந்து கமலாகர் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

சகோதரர்களுக்கு இடையிலான சச்சரவில் இப்பொழுது சிக்கிக் கொண்டான் தயானந்தா.

அந்த நகரத்திலிருந்த பெரிய மனிதர்கள் பலரும் சமாதானமாகப் போகுமாறு கமலாகரின் தம்பிகளுக்கு ஆலோசனையளித்தனர்.

‘’எது சரி..எது தப்புன்னு கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்’’

என்று கூறிய அந்தச் சகோரர்கள் அந்த அறிவுரைகளைப் புறந்தள்ளி விட்டனர்.அவர்களது கொடூரமான மனப்போக்கைப் பார்த்து ஆவேசமடைந்தான் தயானந்தா.

‘’உங்களை நாங்க அடிச்சதாப் புகார் கொடுத்தீங்களே…உண்மையிலே அப்படியா நடந்தது..சொல்லுங்க!’’

என்று உரக்கச் சத்தமிட்டபடி,ஒரு விறகுக் கட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு தன் சித்தப்பா ஒருவரின் மீது பாய்வதற்குக் கூடத் துணிந்து விட்டான் அவன்.

நிலைமை கை மீறிப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்ததாலும்,காவல்துறையோடு போராடி அலுத்துப் போய்விட்டதாலும் நொந்து போய்க் கிடந்த கமலாகர் வேறு வழியின்றி, மூன்று பகுதிகளாகத் தன் சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சம்மதித்து விட்டார்.

’கமலாகர் குல்கர்னி இல்லம்’என்ற அஞ்சல் முகவரியோடு இது வரை இருந்த அந்த இல்லம்.,இப்போது’குல்கர்னி காம்பவுண்ட்’என்பதாக மாறிப் போயிற்று.

வீட்டைத் தனக்குரியதாக வைத்துக் கொண்டு,அதைச் சுற்றியிருந்த திறந்த வெளியைத் தன் சகோதரர்களுக்குக் கொடுத்து விட்டார்கமலாகர். அந்த இடத்தில் அவர்கள் சிறியதாக வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.அதற்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்வதில் கூடக் கமலாகர் ஆர்வம் காட்டவில்லை;அந்த அளவுக்கு முழுமையாக உடைந்து நொறுங்கிப் போயிருந்தார் அவர்.

தனது தேங்காய் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த கமலாகரை விட்டேற்றியான ஒரு மனோபாவம் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது.இவ்வாறு எல்லாக் காரணங்களும் ஒன்றாகச் சேர்ந்து போனதால் அவரது ஒரே மகனான தயானந்தாவே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.

-2-

பி.ஏ.,தேர்வில் தோல்வியடைந்து விட்டானே தவிர , தயானந்தா அப்படி ஒன்றும் எதற்கும் உபயோகமற்றவனாக ஆகி விடவில்லை.தேங்காய் வியாபாரத்தால் மட்டுமே தங்கள் குடும்ப நிலைமை உயர்ந்து விட்ப்போவதில்லை என்பது, தனது தந்தைக்கு முன்பாகவே அவனுக்குப் புரிந்து விட்டிருந்தது.;அதனாலேயே வருவாயைப் பெருக்கும் ஒரு உப தொழிலாகப் பதநீர் விற்பனையையும் அவன் தொடங்கியிருந்தான்.ஒரு பானை நிறையப் பதநீரை நிரப்பிக் கொள்வதற்காகப் பதநீர் இறக்கும் இடத்திற்குப் பொழுது விடிவதற்கு முன்பாகவே தன் சைக்கிளில் போய்விடுவான் தயானந்தா.பானையைத் தன் சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டிக் கொண்டு,அதை விற்பனை செய்வதற்காக நெடுஞ்சாலைக்கு அருகே செல்வான்.பதநீர் விற்பனை என்பது,அத்தனை கௌரவமான ஒரு வேலையாகக் கருதப்படாததால் காலை ஏழு மணிக்குள் அதை முடித்துவிடுவது அவனுக்கு வசதியாக இருந்தது.

‘இங்கே பதநீர் விற்கப்படும்’என்ற பெயர்ப்பலகையோடு தன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருப்பான் அவன்.அவனிடமிருந்த சரக்கு முழுவதும் விற்பனையாவதற்கு,அந்த வழியாக ஐந்து,ஆறு கார்கள் போனாலே போதுமானதாக இருந்தது.சில நேரங்களில் தன் வாடிக்கையாளர்களின் முகங்களை நோட்டம் விட்டபடி,விலையைக் கொஞ்சம் கூட்டிச் சொல்லிச் சற்றுக் கூடுதான பணத்தைக் கூட அவனால் சம்பாதிக்க முடிந்தது.

ஒரு நாள் அதிகாலை வேளையில் பதநீரை விற்றுவிட்டு தயானந்தா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,கார்வாரிலிருந்து வந்து கொண்டிருந்த கார் மூலம் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது.தனது சைக்கிளில் இளநீர்க் காய்களைக் கட்டி வைத்தபடி வந்து கொண்டிருந்த ஒரு நபரின் மீது கார் மோதி அவன் கீழே விழுந்து விட்டான்;அவனது பின்புறமாக வந்து கொண்டிருந்த கார் சற்றுத் திரும்பும்போது அவன் மீது மோதியிருந்தது.

காருக்கடியில் அகப்பட்டு அவன் நசுங்கிப் போய்விடவில்லை என்றபோதும் அவனுக்குக் காயம் பட்டு விட்டது.

அவனுக்கு உடனடியாக உதவி செய்ய விரைந்தான் தயானந்தா.அந்தக் காரில் இருந்த வயதான தம்பதிகள்,கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள்;தங்கள் மகனுடனும்,மருமகளுடனும் அவர்கள் கோவாவிலிருந்து மங்களூருக்குச் சென்று கொண்டிருந்தார்கள .தரையில் சிதறிக் கிடந்த தேங்காய்களைத் தயானந்தாவின் உதவியுடன் ஒன்றுதிரட்டிச் சேகரித்தத அவர்கள்,அடிபட்ட மனிதனுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அரசு மருத்துவ மனைக்கு விரைந்தனர்.அது ஒரு விபத்தாகப் போய்விட்டதால்,மருத்துவ மனை நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுக்க,அவர்களும் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்தனர்.தன்னுடைய சைக்கிளைத் திரும்ப எடுத்துக் கொள்வதற்காகத் தான் பதநீர் விற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து,தயானந்தா வீடு திரும்பும்போது உச்சிப் பொழுதாகி விட்டது.

அன்று மாலையே வேறொரு வேலைக்காக தயானந்தா அந்த மருத்துவ மனைக்கு மீண்டும் செல்ல வேண்டியிருந்தது.ஏதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவனாக,அந்த இளநீர்க்காரன் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதற்குப் போனான் அவன்;ஒரு சில காயங்களால் சிறிது இரத்தசேதம் ஏற்பட்டிருந்ததைத் தவிர – மற்றபடி நன்றாகவே இருந்தான் அவன்.வேண்டுமென்றே ஒரு பதட்டத்தையும்,பயத்தையும் ஏற்படுத்துவதற்காக அவன் மருத்துவ மனையின் கண்காணிப்பில் இருந்தாக வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

அந்த வயதான தம்பதியரும் அவர்களது மருமகளும் – அன்று பகல் முழுவதும் போலீஸ் கெடுபிடிகளைத் தாங்கிக் கொண்டு,ஒன்றும் சாப்பிடாமல் கூட அங்கே இருந்த கோலத்தைப் பார்த்துத் தயானந்தாவுக்குப் பரிதாபமாக இருந்தது.காரை ஓட்டியது அவர்களது மகன் என்பதால் காவலர்கள் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.அந்த மனிதர்களுக்கு மராத்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் சரியாகப் பேசத் தெரியவில்லை.தாங்கள் கோலாப்பூருக்குத் திரும்பிச் சென்ற பிறகு,காயம்பட்ட அந்த மனிதனுக்குத் தேவையான பணத்தை அனுப்பி வைப்பதோடு-அவசியம் ஏற்பட்டால் நல்லதொரு மருத்துவ மனைக்கு அவனை மாற்றித் தகுந்த சிகிச்சையளிப்பதாகவும் வாக்களித்தபடி,தங்கள் மகனை விடுதலை செய்யுமாறு அவர்கள் மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் நிலையைப் பார்த்து இரக்கம் கொண்ட தயானந்தா,வழக்கறிஞர் நாயக்கின் வீட்டுக்குச் சென்று,அவரையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றான்.வக்கீலின் ஆலோசனைப்படி அந்த இளைஞனுக்கு ஜாமீன் தந்து அவன் விடுவிக்கப்படவும் உதவினான்.போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம்..எளிதில் புரிந்து கொள்ள முடியாத சட்ட நுணுக்கங்கள் தொடர்பான கடினமான பல சொற்களைப் பயன்படுத்திக் கச்சிதமாக விடையளித்தார் வழக்கறிஞர்.குறிப்பிட்ட இந்த வழக்கில் நிறையப் பணம் கறந்து விடலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்த போலீசாருக்கு இது மிகவும் ஆத்திரமூட்டியது.

‘’ஜாமீன் கொடுக்கிறதுன்னா என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்..அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..’’

என்று அந்த இளைஞனை விடுதலை செய்யும்போது தயானந்தாவிடம் எச்சரிக்கை செய்தார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.

ஏதோ ஒரு கணம் ஏற்பட்ட அசட்டுத் தைரியத்தில் அந்த விபத்தின் பாரம் முழுவதையும் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு விட்டோமோ என்று அப்போது சற்று யோசித்தான் தயானந்தா.

தங்கள் மகனைப் பார்த்த சந்தோஷத்தில் இருந்த அந்த முதிய தம்பதியர் நன்றிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

தாங்கள் வாக்களித்தபடியே – இரண்டே நாட்களில்,மேலும் மூன்று பேரையும்,ஒரு வக்கீலையும் அழைத்துக் கொண்டு அவர்கள் திரும்பி வந்து விட்டனர்.அந்த இளநீர்க்காரனும் நன்கு தேறிக் கொண்டிருந்தான்.அவனுக்கு ஒரு கணிசமான தொகையை அவர்கள் வழங்கினர்.போலீசுக்கும் கூட அவர்கள் ஏதாவது கையூட்டு தந்திருக்கக் கூடும்.எப்படியோ அந்த வழக்கு சிக்கலின்றி நல்லபடியாக முடிவடைந்து விட்டது.அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு தயானந்தாவின் கடைக்கு வந்த அந்த மனிதர்கள்,அவனிடம் ஒரு ‘கவ’ரைக் கொடுத்தனர்.அதில் பணம் இருக்கலாம் என்பதை ஊகித்து விட்ட தயானந்தா அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தான்.

‘’அந்த சாமியே நேரிலே வந்தாப்பிலே நீங்க வந்து தலையிட்டு எங்க மானத்தைக் காப்பாத்தினீங்க..’’

என்றபடி அதை அவன் கட்டாயம் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து அவனை வற்புறுத்தினர்.

வீடு திரும்பி அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்த தயானந்தா அதற்குள் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று இருப்பதைக் கண்டான்;வேறு எவரிடமும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல் தானே அதை வைத்துக் கொண்டான் அவன்.

தானாக முன் வந்து செய்த ஒரு உதவி,இவ்வாறு பணத்தால் அளக்கப்படுவது அவனுக்கு இலேசான மனத் தாங்கலை  அளித்தாலும்,அப்போது அவன் இருந்த மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகவும்,பணத்தைச் சம்பாதிப்பதற்குப் பலவகையான வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டிய போராட்டத்தில் தான் இருந்ததாலும் அந்த அன்பளிப்பை வாங்கிக் கொண்டதில் தவறில்லை என்று தனக்குள் சமரசம் செய்து கொண்டான் அவன்.எதிர்பாராமல் அவனுக்குக் கிடைத்த அந்தப் பரிசுத் தொகை,அவனது தேங்காய்க் கடையின் கொள்முதலை அதிகரித்துக் கொள்வதற்குப் பயன்பட்டது.ஆனாலும் கூட இப்படிப்பட்ட சின்னச் சின்ன வரும்படிகளால் தயானந்தாவின் வருமானம் பெருமளவில் அதிகரித்து விடவில்லை;அதனால் அவன் இன்னும் கூடப் பதநீர் விற்றுக் கொண்டுதான் இருந்தான்.

அந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் சென்ற பிறகு,முன்பு தயானந்தாவுடன் ஒன்றாகப் படித்திருந்த பள்ளித் தோழனான உமேஷ்,காவல்துறைப் பணியில் சேர்ந்தான்.தயானந்தாவுக்கு இது பற்றித் தெரிய வந்தபோது முந்தைய ஞாபகம் ஒன்று அவனது மனதுக்குள் மீண்டு வந்தது.பதநீர் வியாபாரத்தால் அதிகம் சம்பாதிப்பது என்பது தயானந்தாவால் முடியக்கூடிய காரியமாக இல்லை.மிகுந்த யோசனைக்குப் பிறகு உமேஷை நாடிச் சென்ற தயானந்தா,தன் உள்ளத்திலிருப்பதையெல்லாம் திறந்து காட்டினான்.உமேஷ் அனுபவமில்லாத ஒரு போலீஸ்காரன் என்பதால் ஒரு ‘வாடிக்கையாள’ரைக் கூட்டிக் கொண்டு வர அவனுக்கு ஆறு மாதம் பிடித்தது.விபசார விடுதி ஒன்றில் நடந்த காவல் துறை ‘ரெய்’டின்போது அதில் மாட்டிக் கொண்ட வங்கி அலுவலரான அந்த நபர்,கும்தாவைச் சேர்ந்தவர்.உமேஷுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற தயானந்தா இருநூறு ரூபாய் ஜாமீன் தந்து அந்த ஆளை மீட்டுக் கொண்டு வந்தான்.அந்தத் தொகையில் ஐம்பது ரூபாய் உமேஷுக்கும்,மற்றொரு ஐம்பது ரூபாய் சப் இன்ஸ்பெக்டருக்கும் போய்ச் சேர்ந்தது.வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்கும் லாபகரமான ஒரு வியாபாரத்தைத் தயானந்தா தொடங்கியது இப்படித்தான்.

-3-

அந்த வியாபாரத்தின் ஆரம்பக் கட்டத்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு ஜாமீன் தருவதற்கு தயானந்தா மிகவும் பயந்து கொண்டிருந்தான்;ஆனால் அவனுக்குத் தெரிந்த மனிதர்களுக்கோ ஜாமீன் தேவையாக இல்லை.கார்வார் நகரும் அதன் சுற்றுப் புறங்களும் எவ்வளவு பெரியதாய் இருந்தனவோ அதே அளவுக்கு அங்கே நடக்கும் குற்றங்களும் பெரிதாகவே இருந்தன.முதலில் தன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பிற மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்க முன் வந்து கொண்டிருந்தான் தயானந்தா.தொடக்க காலங்களில்,குறிப்பிட்ட அந்தக் குற்றத்தைத் தானே செய்வது போன்ற உணர்வே அவனைப் பீடித்திருந்தது.கோலாப்பூரிலிருந்து வந்த மனிதர்களுக்கு அவன் ஜாமீன் தர முன் வந்த நேரத்தில் ‘’அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..’’என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் செய்திருந்த எச்சரிக்கை அவனது உள்ளத்தில் ஆழமாகப்பதிவாகியிருந்தது.ஆனாலும் தான் ஒன்றும் எந்த வகையான சட்ட மீறலையும் செய்து விடவில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.

இந்த பேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது போலீசாருடனான நட்பு;அதன் மூலம் அவன் பலதரப்பட்ட குற்றங்களைப்பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முடிந்தது.சொந்த சகோதரர்களையே கழுத்தறுத்தவர்கள், மனைவிகளைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட கணவர்கள்,வீட்டு வேலைக்காரிகளைக் கர்ப்பவதிகளாக்கிய எஜமானர்கள்,விபசார விடுதிகளில் நடந்த சோதனைகளில்பிடிபட்டவர்கள்,வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் என்று பல்வேறு வகையான மனிதர்களுக்கு அவன் ஜாமீன் அளித்து வந்தான்.தனது தொழில் மூலம் பெற்ற தொடர்புகளால் வெவ்வேறு வகையான குற்றங்களையும்,குற்றவாளிகளையும் அவன் எதிர்ப்பட நேர்ந்தது.முதன் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகள் – அதனுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள்,ஜாமீன் தருவது போன்ற எதைப் பற்றியும் தெரிந்திருப்பதில்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.அவன் மட்டும் நினைத்திருந்தால் அவ்வாறான நபர்களைத் தன்னால் முடிந்த அளவு ஏமாற்றிப் பணம் பறித்திருக்க முடியும்தான்;ஆனால் தன்னாலும் கூட இப்படிப்பட்ட தவறுகளைச் செய்ய முடியும் என அவனது மனதுக்குள் இருந்த மெல்லிய கீற்றுப் போன்ற ஒரு எண்ணம்,அவர்களது நிராதரவான நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.நாளாக ஆக,இந்த விளையாட்டில் கரை கண்டவனாக மாறிவிட்ட தயானந்தா,தான் ஜாமீன் தரும் நபர்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டவர்கள் குறித்த எல்லா விவரங்களையும் தோண்டித் துருவிப் பார்க்கும் பொறுமையைக் கூட இழந்தவனாக ஆகிப் போனான்.

போலீசாருடன் நட்புக் கொண்டிருப்பது மட்டுமே போதாது என்பதை உணர்ந்து கொண்ட பிறகு,வக்கீல் நாயக்குடனும் நல்ல பழக்கம் வைத்துக் கொள்ளத் தொடங்கிய தயானந்தா,பெரும்பாலான தனது நேரத்தைக் கோர்ட்டிலும்,போலீஸ் ஸ்டேஷனிலும் மட்டுமே செலவழித்து வந்தான்.கடையில் இருக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது என்பதால் மாலை வேளைகளில் கொஞ்ச நேரம் மட்டுமே அங்கே இருப்பான் அவன்.எந்த வழக்கிலும் தான் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்ற அவனது விருப்பம், சட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு அவனைத் தூண்டியது.இதனால் அவனும்,வழக்கறிஞர் நாயக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டிருந்தனர்.ஜாமீனளிக்கும் வியாபாரம் மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக மாறிப் போய்விட்டதால்,வக்கீலுக்கும் அதில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது.வக்கீல்,போலீஸ்-இவர்களுடனேயே தொடர்ச்சியாகப் பழக நேர்ந்ததால் சட்டம் தொடபான அனைத்து விஷயங்களும் அவனுக்கு அத்துப்படியாகிவிட்டிருந்தன.

தான் எடுத்துக் கொள்ளும் வழக்கின் முடிவு வரை அதைத் தொடர்ந்து அவதானிப்பவன் தயானந்தா.அது,அவனுக்கு ஒரு பழக்கமாக-சுவாரசியமான ஒரு விளையாட்டாகவே ஆகிப் போயிற்று. ஒரு குற்றம் சார்ந்த தகவல்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அதற்கான தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை அவனால் முன்கூட்டியே சொல்லி விட முடியும்.ஆனால்,கடத்தல்காரர்களுக்கு ஜாமீன் தர முற்பட வேண்டாம் என்று வக்கீல் நாயக் கூறியிருந்த ஆலோசனையை மட்டும் அவன் ஒருபோதும் மீறியதே இல்லை.எல்லா விஷங்களையும் சட்டத்தின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்து பார்ப்பதிலேயே அவனது கவனம் முழுவதும் குவிந்திருந்தது.குறிப்பிட்ட சில வழக்குகளைப் பொறுத்தவரை,மறைவான சில சந்துபொந்துகளை,எவருக்கும் தெரியாத குறுக்கு வழிகளைக் கண்டு பிடித்து இரகசியமாகத் தப்பித்துச் செல்லும் முறைகளைப் பற்றிக் கூட அவன் தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்தான்.இவ்வாறு சட்டம் பற்றிய யோசனைகளே அவனது மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால்,குற்றம் சார்ந்த பிற தகவல்கள் பற்றிய பயமும்,கவலைகளும் இப்போது அவனை விட்டுப் போய் விட்டிருந்தன.தன்னிடம் வருபவர்களின் குற்றங்களுக்கும்,கொடூரச் செயல்களுக்கும் எப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கக் கூடும் என்பதைக் கூட வரையறுத்துச் சொல்லத் தொடங்கியிருந்தான் அவன்.

குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் செய்திருக்க முடியுமே என்று ஆச்சரியப்படும் எல்லை வரைக்கும் கூட அவன் சென்று விட்டிருந்தான்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜாமீன் தரும்போது

‘’என் கிட்டே நீ ஏன் இதைப் பத்திக் கேக்கலை? நீ மட்டும் அந்த மாதிரி நடந்திருந்தா இந்த உலகத்திலே இருக்கிற எந்தச் சட்டத்தாலேயும் உன்னை வளைச்சுப் பிடிச்சிருக்க முடியாது.’’என்பான் அவன்.

சரி எது,தவறு எது என்ற முடிவுகள்,குறிப்பிட்ட வழக்குகளோடு பொருத்திப் பார்த்து மறுவரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்பதால் அவ்வப்போது சட்டங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றியும் அவன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான்.

’’நீ சட்டப் பரீட்சை மட்டும் எழுதிப் பாஸாகலை..அவ்வளவுதான்.மத்தபடி எந்த வக்கீலுக்கும் சளைச்சவன் இல்லைப்பா நீ’’என்று வழக்கறிஞர் நாயக் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.

மாதத்தில் ஐந்து,ஆறு பேருக்கு ஜாமீன் தந்தாலும் கூட தயானந்தாவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.அந்த ஊரிலிருந்தவர்கள் தனக்கு ‘ஜாமீன் சாஹேப்’என்று பெயர் சூட்டியிருப்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது;அதைத் தன்னால் எந்த வகையிலும் மறுத்துப் பேச முடியாமலிருந்தது அவனுக்கு வருத்தமளித்தது.அவனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதும் கூட சுவாரசியமான ஒரு கதைதான்.தயானந்தா ஜாமீன் தர ஆரம்பித்திருந்த புதிதில்-அந்தத் தொடக்க காலகட்டத்தில்,ரானே என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார்.ஒரு நாள் சாயங்கால வேளையில்,தன் கால்களை விரித்து நீட்டிக் கொண்டு,போண்டாவை மென்றபடி தேநீரை உறிஞ்சிக் கொண்டு-வேலையில் புதிதாகச் சேர்ந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவனக் கொடுமைப்படித்தியபடி,தன்னுடைய உலகத்திற்குள் மூழ்கிப் போயிருந்தார் அவர்;சரியாக அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் தயானந்தா.ஸ்டேஷனுக்குள் யாரோ வருவதைப் பார்த்த ரானே,அது யாரென்று கான்ஸ்டபிளிடம் கேட்டார்.தயானந்தாவை முதல் நாள்தான் பார்த்திருந்தபோதும் அவனது பெயர் நினைவுக்கு வராமல் தடுமாறினான் அந்த கான்ஸ்டபிள்.உற்சாகமான ஒரு மனநிலையில் இருந்த அந்த சப் இன்ஸ்பெக்டர்,

‘’எதுக்காக இப்படித் தட்டுத் தடுமாறிக்கிட்டிருக்கே நீ?அது நம்ம சாஹேப்தானே..?உள்ளே வரச் சொல்லு அவரை’’

என்று அவனிடம் ஜோக்கடித்தார்.அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் தயானந்தா.அவனைப் பார்த்ததும்,

‘’அடேடே வாங்க ‘ஜாமீன் சாஹேப்’..வாங்க வாங்க..’’

என்று உரக்கக் குரல் கொடுத்தார் அவர். தன்னுடைய ஜோக்கைத் தானே ரசித்து மகிழ்ந்து கொண்டிருப்பவரைப்போலக் காணப்பட்ட அவரைத் திருப்திப்படுத்தும் பாவனையில் மெல்லிதாகப் புன்னகை செய்தான் தயானந்தா.‘ஜாமீன் சாஹேப்’என்ற பெயரைத் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் ரானே;அப்படி ஒரு பெயரைத் தான் கண்டு பிடித்து விட்டோமென்பதில் தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.அதற்குப் பிறகு எப்போதும் தயானந்தாவை அந்தப் பெயரை வைத்தே கூப்பிடத் தொடங்கி விட்டார் அவர்.நகரம் முழுவதும் அந்தப் பெயர் பரவ வெகு நாளாகவில்லை.

தயானந்தாவின் குடும்பத்திலிருந்த எவரும் ஒருபோதும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில்லை.அவனது மனைவி சுனந்தாவுக்குக் கூடத் திருமணத்துக்கு முன்பே இது பற்றித் தெரிந்திருந்தது.அவளுக்கு இதில் விருப்பமில்லாதபோதும் இந்தப் பிரச்சினையை எழுப்பிக் கணவனோடு சண்டை போடும் துணிச்சல் அவளிடம் இல்லை.போலீஸ்காரர்களுடன் கொண்ட நட்பும்,வக்கீல்களோடான தொடர்பும் தயானந்தாவைச் சுற்றி வித்தியாசமான ஒரு ஒளிவட்டத்தை உண்டாக்கி விட்டிருந்தன.அதனுடன் கூடவே அவனிடம் பணமும் படிப்படியாகச் சேர ஆரம்பித்திருந்தது.குடும்ப கௌரவம்,மரியாதை என்று அவன் தந்தை சிலவேளைகளில் ஏதாவது முணுமுணுப்பார்;ஆனால் மற்றவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆரம்ப காலத்தில் தொந்தரவு செய்து கொண்டிருந்த மாமாக்களும் கூட,தயானந்தாவின் ‘சாதனைக’ளைப் பார்த்த பிறகு மென்மையானவர்களாக மாறிப் போய்விட்டார்கள்.பொதுவாகவே – சமூகத்தை எதிர்கொள்வதென்பது,தன் குடும்ப உறுப்பினர்களுக்குத் தர்மசங்கடம் அளிப்பதாக இருப்பதைக் கண்டு – அது குறித்த மன உளைச்சல் தனக்கு ஏற்படும்போதெல்லாம்,தனது சட்டஞானமும்,போலீசுடனான நெருக்கமும் தன்னைச் சக்தியும்,அதிகாரமும் மிகுந்தவனாக ஆக்கி வைத்திருப்பதை நினைத்தபடி தன்னைச் சமாதானம் செய்து கொள்வான் அவன்.வாய்ப்புக் கிடைத்தால்-தனக்குரிய வரம்புகளையெல்லாம் மீறிக்கூடத் தன் சக்தியை வெளிப்படுத்தி அதை நிரூபித்து விட வேண்டுமென்று அவனுக்குள் குடியிருந்த அதிகார போதை அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.உலகத்தின் பார்வையில் தன் அதிகார பலத்தை எப்படியாவது காட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தான் அவன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைதூக்கு-கடிதம்
அடுத்த கட்டுரைஜாமீன் சாஹேப்-2