கடலூர் சீனு, கடிதங்கள்

கடலூர் சீனு

வணக்கம்

கடலூர் சீனு குறித்து நீங்கள் எழுதிய பதிவைப் படித்து எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.உள்ளத்தின் ஆழத்தில் ஒருவரை இருத்தி நேசிக்காமல் இப்படியான வாசகங்கள் வெளிப்படாது. அவரிடமிருந்து சில விசயங்களைக் கற்றுக்கொள்கிறேன் என்று நீங்கள் குறிப்பிட்டது உங்கள் பெருந்தன்மையின் உச்சம். சீனு மீது எனக்கே கொஞ்சம் பொறாமை உண்டாயிற்று. ஆனால் சீனு உங்கள் புகழுரை களுக்கெல்லாம் தகுதியானவர். சீ

னுவின் தோற்றம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த உயரம் அந்த கொண்டை அந்த வஞ்சகமற்ற சிரிப்பு உரையாடல் தொனி.. நிஜத்தில் அவன் ஒரு ஹீரோ தான். உங்கள் பதிவைப் படித்துவிட்டு சீனுவிடம் பேசினேன். காரசேரியிடம் எங்க ஊரில் ஒரு பசீரிஸ்ட் இருக்கிறார் என்று உங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன் என்றார் சீனு. அப்பழுக்கில்லாத எளிய மனிதன். கடலூரில் அவர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். எப்போது நினைத்தாலும் நெகிழ்வூட்டக்கூடிய அறிவார்ந்த மனிதன்.

உங்கள் பதிவு அவரை மேலும் துடிப்புடன் இயங்க வைக்கும். அடுத்து திருவண்ணாமலைக்கருகில் உள்ள சமண ஸ்தலங்களைப் பார்க்கப்போவதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. நன்றி.

கீரனூர் ஜாகீர் ராஜா

 

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் தங்கள் தளத்தில் வெளியான இக்கட்டுரையை வாசித்தபோது ஏனோ ஒரு மாதிரி ஆயிட்டு சார். கடலூர்ல புத்தகக் கண்காட்சி நடந்தபோது என்னை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாள்த வறாது வருவார். எனக்கும் என்னைப்போலவே உள்ள நண்பர்கள் எவர் கண்ணிலும் தென்பட்டுவிடாத நூல்களை அவர் மட்டும் எப்படியோ கண்டுபிடித்திருப்பார். எனது முதல் கவிதை நூலையும் அது முதல் நூலென தெரிந்தும் அதை வாசித்து அதே புத்தகக் கண்காட்சியில் தேரமொதுக்கி அத்தொகுப்பின் நிறை குறைகளு உட்பட உண்மையில் எனு கவிதை உலகம் எதுவென எனக்கு ஒரு சித்திரத்தை அளித்தார்.

என்னை யாரென்று அவருக்கு தெரியாது. ஆனாலும் ஒரு படைப்பை வாசித்ததன் பயனாக அவர் அதை நேரடியாக என்னிடம் தன் பார்வையை முன்வைத்தார். இன்றுவரை எனக்கு ஏதேனும் ஒரு நூல் வாங்கவேண்டுமெனத் தோன்றினால் அவரிடமும் கலந்தாலோசிக்கிறேன். அவருடைய பார்வையும் என்னுடைய பார்வையுமு வெவ்வேறாக இருக்கும்போது சில நேரம் சுவாரசியமான உரையாடல்கள் நிகழும். இவர் ஏன் எழுதவில்லை என அடிக்கடி தோன்றும்.

இன்று தங்களது தளத்தில் இந்த கட்டுரையை படித்தபோது ஒரு எழுத்தாளன் தன் வாசகனுக்குச் செய்யக்கூடிய ஆகப்பெரியது என்ன என்பது புரிந்தது. லவ் யூ சார்

விஜயகுமார்

முந்தைய கட்டுரைதூரன் இசை, கடிதம்
அடுத்த கட்டுரைபுக்பிரம்மா விருது – கடிதம்