கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
நீங்கள் விருது அளிக்கிறீர்கள் என்பது தெரியும். விருதுகளுக்குப் பரிந்துரைக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. விருதுகளில் ‘தலையிடுவது’ என்றும் ‘செல்வாக்கு செலுத்துவது’ என்றும் இதை சிலர் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ‘இப்படித்தான் விருதுகள் அளிக்கப்படுகின்றனவா?’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள்.
சங்கர்ராம்
அன்புள்ள சங்கர்,
சாகித்ய அக்காதமி விருது உட்பட எந்த விருதும் ஒரே நடைமுறைப்படித்தான் வழங்கப்படுகின்றன. முதலில் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எவர் வேண்டுமென்றாலும் பரிந்துரைக்கலாம் என்னும் நடைமுறை சில விருதுகளில் உள்ளது. சில விருதுகளில் அறிவியக்கத்துடன் தொடர்புடைய அறியப்பட்ட ஆளுமைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு பரிந்துரைகள் கோரப்படும். சாகித்ய அக்காதமி முதல்முறை. சரஸ்வதி சம்மான் போன்றவை இரண்டாம் முறை.
இந்தப் பரிந்துரைகளில் இருந்து இறுதிப்பட்டியல் படிப்படியாக தேர்வுசெய்யப்பட்ட நடுவர்களால் முடிவு செய்யப் படுகிறது. அந்த இறுதிப்பட்டியல் 3 பேர் கொண்ட நடுவர் குழுவுக்கு அனுப்பப்படுகிறது. மூன்றில் இருவர் தெரிவுசெய்பவருக்கு விருது வழங்கப்படும். நோபல் பரிசு உட்பட இதுவே நடைமுறை
அண்மையில் பல விருதுகளில் விருது வேண்டும் என நினைப்பவர்கள் முறைப்படி தங்களைப் பற்றிய தரவுகளுடன் விண்ணப்பிக்கவேண்டும் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் விருதுகள் பெற்றபின் அவற்றை திருப்பியளிப்பதை தடுப்பதற்காக இது செய்யப்படுகிறது என்கிறார்கள். இது முற்றிலும் அபத்தமான நடைமுறை. ஒரு சுயகௌரவமுள்ள எழுத்தாளர் இப்படி தனக்காக விண்ணப்பிக்க மாட்டார். விருதுகள் அவ்வெழுத்தாளனின் படைப்பின்மேல் மதிப்புகொண்டவர்களால் அளிக்கப்படுவதாகவே இருக்கவேண்டும்.
இந்தப் பரிந்துரைகளை எந்த எழுத்தாளரும் செய்யவேண்டும் என்பதே என் எண்ணம். நாம் விருதுகளை விமர்சிக்கிறோம் என்றால் உரியவர்களைப் பரிந்துரை செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. நாம் மதிக்காத விருந்துக்கு பரிந்துரை செய்யவேண்டியதில்லை.
நான் இந்திய அளவில் அறியப்பட்ட எழுத்தாளனாகவே 1992 முதல் இருந்து வருகிறேன். நான் பெற்ற கதா விருது, சம்ஸ்கிருதி சம்மான் விருதுகள் முதன்மைக்காரணம். பல விருதுக்குழுக்களில் இருக்கும் இந்திய எழுத்தாளர்கள் என்மேல் மதிப்பு கொண்டவர்கள் என்பது இன்னொரு காரணம். ஆகவே பரிந்துரைக்கக்கோரி எனக்கு கடிதங்கள் வந்தபடியே இருக்கும். நான் பரிந்துரைகளை தவிர்ப்பதில்லை.
ஞானபீடம் உட்பட பல விருதுகளுக்கு கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்றவர்களை பரிந்துரைத்து அவர்களை முன்னிறுத்தவும் நான் பல தீவிர முயற்சிகளை செய்துள்ளேன். பிறமொழி படைப்பாளிகளை ஒருங்கிணைத்திருக்கிறேன். சிலசமயம் நடக்கும், பலசமயம் நடக்காது. ஏனென்றால் வலுவான கல்விப்புல ஆதரவுகள்தான் பெரிய விருதுகளுக்கு அடிப்படைத்தேவை. தமிழகத்தில் கல்வித்துறை நவீன இலக்கியத்துக்கு ஆதரவாக இல்லை.
விருதுக்குப் பரிந்துரைப்பது என்பது ஓர் இலக்கியச் செயல்பாடு. நாம் விரும்பும் இலக்கியத்தரப்பை நாம் முடிந்தவரை வலுவாக, தர்க்கபூர்வமாக முன்வைத்துக் கொண்டே இருக்கவேண்டும். நாம் மறுப்பவற்றையும் மறுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறுதான் நாம் நம் தரப்பை நிறுவுகிறோம். ஒவ்வொரு தரப்பும் அதையே செய்கின்றன. எதற்கு அதிகச் செல்வாக்கு உள்ளதோ அது நிலைகொள்கிறது. நாம் நம்புகின்ற அழகியல்தரப்பு வெல்லவேண்டும் என நாம் முயல்வது நம் கடமை. நாம் அதைச் செய்யாவிட்டால் நாம் எதிர்க்கும் தரப்பு வெல்ல வழியமைத்தவர்களாவோம்
ஆகவே நான் விருதுகளுக்குப் பரிந்துரை செய்வதுடன் பரிந்துரைக்கான காரணங்களையும் விரிவாக எழுதி அனுப்புவேன். எளிதில் மறுக்க முடியாத காரணங்கள். பல விருது அறிவிப்புகளிலேயே என் வரிகள் இடம்பெற்றிருக்கும்.
விருதுகளின் நடுவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த அழகியல்- கருத்தியல் நிலைபாடு கொண்டிருக்கிறார்களோ அதை நேர்மையாக முன்வைத்து, அவற்றுக்கு உகந்த படைப்பாளிகளை விருதுக்குத் தெரிவுசெய்யவேண்டும். அதுவே அவர்களின் கடமை. அதற்காகவே அவர்கள் அங்கே சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஏற்காத தரப்பினர் விருதுபெற்றால் கடுமையாக அதை எதிர்ப்பதும் அவர்களின் கடமையே. முற்றிலும் ஏற்கமுடியாத ஒருவருக்கு விருது செல்லுமென்றால் அந்த நடுவர்க்குழுவில் இருந்து விலகுவதே செய்யவேண்டியது.
இதில் எதுவெல்லாம் பிழை அல்லது அறமீறல்?
அ. ஓரு படைப்பாளி தனக்கு விருதுக்காக தானே முயற்சி செய்வதே முதல் அறப்பிழை, மரபுப்பிழை. தன்னைப் பரிந்துரைசெய்யும்படிக் கோருவதும் தன்னை தேர்வுசெய்யும்படி நடுவர்களிடம் கேட்டுக்கொள்வதும் இழிவான செயல்கள். நடுவர்குழுவுக்கு அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் வழியாக அழுத்தமளிப்பது பெரும்குற்றம்.
ஆ. ஒரு நடுவர் வெளிப்படையாக ஓர் அழகியல் – அரசியல் நிலைபாடு கொண்டிருந்துவிட்டு நடுவராகச் செயல்படும்போது அதற்கு மாறாகச் செயல்பட்டால் அது பிழை, இழிவு. தன் தனிப்பட்ட தொடர்புகளுக்காக அவர் செயல்படக்கூடாது. அதிகார அழுத்தத்திற்காக அவர் வளையவும் கூடாது.
இ. நடுவர் எந்நிலையிலும் பரிசுக்குரிய படைப்பாளியை தொடர்புகொள்ளக்கூடாது. ஐயம் இருக்குமென்றால் தனக்கான ஆலோசனைகளை அவர் தான் மதிக்கும் இலக்கியவிமர்சகனிடம் மட்டுமே கேட்டுக்கொள்ளவேண்டும். அதுவே சர்வதேச நடைமுறை.
இதில் விமர்சகர் செய்யவேண்டியது என்ன?
அ. விருது குறித்த தன் ஏற்பு – மறுப்பு இரண்டையும் தெளிவாக பொதுவெளியில் முன்வைக்கவேண்டும். ஏனென்றால் விருது ஒரு தனிப்பட்ட நடவடிக்கை அல்ல. ஒரு பொது நடவடிக்கை. ஒருவரை அந்த விருதுக்குழு முக்கியமான எழுத்தாளராக சமூகத்தின் முன் நிறுத்துகிறது. அது ஏற்கத்தக்கதா அல்லவா என்று இலக்கிய விமர்சகன் கருத்து சொல்லவேண்டும். அது தனிநபருக்கு எதிரான கருத்து அல்ல. அது ஓர் இலக்கிய அளவுகோலை முன்வைப்பதுதான். ஓர் இலக்கிய விமர்சகன் செய்துகொண்டிருக்கும் செயல்பாட்டின் ஒரு தொடர்ச்சிதான்.
ஆ. தன் ஏற்பு மறுப்பு இரண்டுக்குமான காரணங்களை விமர்சகன் முன்வைக்கவேண்டும். அது அந்த விமர்சகன் அதுவரைச் சொல்லிவந்த விமர்சனக்கருத்துக்களின் நீட்சியாகவே அமையவேண்டும். அந்தக் கருத்துக்கள் வழியாக அவன் உருவாக்குவது ஓர் இலக்கிய கருத்துச்சூழலைத்தான்.
இவையெல்லாம் விருதுகளின் அடிப்படைகள். பொதுவாசகர்களுக்கு இவை தெரிந்திருக்க நியாயமில்லை. எழுத்தாளர்கள் அறிந்திருக்கவேண்டும்.
ஜெ