நாளை நம் உலகம் என்னவாகும்?

அன்புள்ள ஜெயமோகன் அங்கிளுக்கு,

மீண்டும் நிவேதிதா. நான் நலம், நீங்கள் நலமா? சில மாதங்களாகவே உங்களுக்கு கடிதம் அனுப்பவில்லை. நித்யவனத்தில் உங்களை சந்தித்ததை பற்றி கடிதம் எழுதி அதை பாதியிலேயே வைத்துவிட்டேன்.

சில நாட்களாகவே என்னுடைய எதிர்காலத்தை பற்றியும், நான் யார் என்பதை பற்றியும் மும்முரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த எண்ணங்களை தூண்டி விட்ட காரணங்களை பற்றியே இக்கடிதம்.

ஓரிரண்டு மாதங்களுக்கு முன், பிரபாஸ் மற்றும் கமல் நடித்த “கல்கி” என்ற படத்திற்கு சென்றிருந்தோம். நன்றாக இருந்தது. நம் எதிர்காலத்தையும் மகாபாரதத்தையும் சேர்த்து எடுக்கப்பட்ட படம் அது. அப்படத்தில் நம் எதிர்காலம் முழுவதும் இயந்திரங்கள் மட்டுமே இருப்பதாக காண்பித்தார்கள். ஒரு வேகவைத்த முட்டைக்கு கூட அதிக விலை..! அப்படத்தை பற்றி சிந்திக்க சிந்திக்க எதிர்காலத்தை பற்றிய பயம் வந்தது. என்னால் வேறு எந்த வேலைகளிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதை குறித்து யோசிக்க பயம் அதிகரித்ததே தவிர எந்த விதத்திலும் ஆறுதலாக இல்லை.

எல்லா வேலைகளையும் செய்யும் ரோபோட்ஸ், இயந்திரங்களை நம்பி வாழும் உலகம், மரங்கள் இல்லாமல் கஷ்டப்படுவது.. ப்பா!! நினைக்கும் போதே கொடூரமாக இருக்கிறது.  இப்படத்தை பார்க்கும் முன் நான் சுஜாதா அவர்கள் எழுதிய “என் இனிய இயந்திரா” நூலை படித்து முடித்திருந்தேன். மிக சுவாரசியமான புத்தகம். ரவி,மனோ என்னும் இரண்டு இளைஞர்கள் ஜீவா என்னும் ஒரு பொய் பிம்பத்தை வைத்து கொண்டு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். பாட்டு, நடனம், கவிதை, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வழக்கை நீடிப்பு கிடையாது. இந்த நாவலில், “ஜீனோ” என்னும் இயந்திர நாய்தான் கதாநாயகன். இது சுஜாதா 2021இல் நடைபெறும் கதையாக எழுதியிருந்தார். ஆனால் இது போல் நம் எதிர்காலத்தில் நடக்கலாம் அல்லவா? சரியான பெயர் கிடையாது, எண்களை வைத்துக் கொண்டு அடையாளம் காண்பது.. யோசிப்பதால் பயம் சற்று  அதிகரித்தது.

“நம் எதிர்காலம் எப்படி இருக்க போகிறதோ?” என்பதை பற்றி அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தேன். இந்த பயத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியது, என் இனிய இயந்திரா வின் இரண்டாம் பாகம் “மீண்டும் ஜீனோ”. ஜீவா என்பது ஒரு பொய் பிம்பம் தான் என்பதை ரவி, மனோ மக்களுக்கு சொல்லி, மக்களை ஏமாற்றி, அவர்களே நாட்டை ஆளும்படி செய்கிறார்கள். இவர்கள் நடுவே மாட்டிக்கொண்ட பொம்மை அரசி நிலா. முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட உலகம். நிலாவை பின்னாலிருந்து ஆட்டிவைக்கும் ரவி, மனோ. நிலாவுக்கு உதவ ஜீனோ தன ஒட்டுமொத்த தந்திரங்களையும், மூளையையும் பிரயோகிக்கிறது. இப்பொழுது ஒரு சின்ன சிக்கல், நான் நாய் வாங்கினால், அதற்கு நாக்போ, ஜீனோ அல்லது டோகோ இந்த மூன்றில் எந்த பெயர் வைப்பது என்ற குழப்பம்!

ஒரு படம், இரண்டு நாவல்கள் இவை இரண்டும் ரவி மனோவை போல் என்னை (என் மூளையை) ஆட்டிவைக்கிறன. என் கேள்வி என்னவென்றால், நிஜமாகவே நம் எதிர்காலம் முழுவதும் இயந்திரங்களை நம்பிய மனிதர்கள், விஞ்ஞான உலகமாக தான் இருக்குமா, அல்லது, மக்கள் இந்த இயந்திர உலகத்தை விட்டு வெளியே வந்து, பழையபடி மரங்கள், குளங்கள், கடிதங்கள் என மாறுமா? எனக்கு சென்ற மூன்று நாட்களும் விடுமுறை தான், என் பெற்றோர்கள் இந்த நான்கு நாட்களில் யொஸ்டைன் கார்டெர் எழுதிய “சோஃபியின் உலகம்” என்னும் புத்தகத்தை தான் படிக்க சொன்னார்கள். ஆனால்  நான் சில பக்கங்கள் தான் படித்தேன். ஜீனோவின் மீது இருந்த ஆசை என்னை சோபியிடம் இருந்து பிரித்தது..

சோஃபியின் உலகம் புத்தகத்தின் முதல் தொகுதியில், “நீ யார்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதை படித்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு சொல்லமுடியாத உணர்ச்சி தோன்றியது. அந்த இரண்டு வார்த்தை கொண்ட வாக்கியத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. சோஃபியின் உலகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட மேற்கத்திய தத்துவ நூல். என்னை பொறுத்தவரையில், நான் இந்திய தத்துவத்திற்கு அறிமுகமானதில்லை. மதங்களிலிருந்து தன்னை நீக்கி கொண்ட காரணத்தினால் எனக்கு மேற்கத்திய தத்துவத்தின் மேல் ஒரு பற்று. “நான் யார்?” அந்த நாள் முழுவதும் யோசித்தேன். இன்னுமும் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன். அக்கேள்வியை குறித்து யோசிக்க,யோசிக்க தான் அது எவ்வளவு பெரிய கேள்வி என்று புரிந்தது. உங்களை பொறுத்த வரையில், இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? உங்களிடம் யாராவது “நீங்கள் யார்?” என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? எதிர்காலத்திற்கும், நான் யார் என்பதை அறிவதிலும் ஏதோ சம்பந்தம் இருப்பது போலவே இருக்கிறது.

எதிர்காலத்தை பற்றி நினைத்து நாம் அஞ்சலாமா? மற்றவர்கள் மாறவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, நாம் நல்வழியில் போனால் நல்லதா? இது போல் எண்ணங்கள் குறித்து நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. ஆனால் நாம் மட்டும் நல்வழியில் போனால் என்ன பயன்? ஒரு வீட்டில் அம்மா மட்டும் வேலை செய்தால் போதுமா? அப்பாவும் குழந்தைகளும் உதவி செய்ய வேண்டும் அல்லவா? அதுபோல் தானே நம் எதிர்காலமும்.

மீண்டும் ஜீனோ மற்றும் என் இனிய இயந்திரா எனக்கு சொல்லிக் கொடுத்தவை ஒன்றே, இயந்திரங்களை அதிகமாக பயன்படுத்துவது, அதை நம்பிக் கொண்டிருப்பது ஆபத்தே. நாம் இயந்திரங்களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே சரி அதன் கட்டுப்பாட்டிற்குள் நாம் இருக்க கூடாது. இதில் நானும் கொஞ்சம் ஈடுகொடுத்தாக வேண்டும்.

என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நீங்களும், என் பெற்றோர்கள் மட்டுமே உள்ளனர் (எனக்கு தெரிந்தவரை). என் பள்ளியிலோ, என் நண்பர்களுக்கோ இதை பற்றியெல்லாம் பேச இஷ்டமே இருக்காது. நான் அப்படியே சொன்னாலும், “உனக்கு அறிவு வழிந்து கொட்டுகிறது, நீயெல்லாம் இந்த ஸ்கூலில் இருக்கவே கூடாது” என்று மட்டமாக கிண்டலடித்து விட்டு போய்விடுவார்கள். என்னதான் பெரியவர்களிடம் பகிர்ந்து கொண்டாலும், என் வயதினர்களிடம் பகிர்ந்து கொள்வது போல் வருமா?

செப்டம்பர் முதல் வாரத்திற்கு முன், சோஃபியின் உலகம் வழியாக உங்களுக்கு “மேற்கத்திய தத்துவம்” குறித்து ஒரு கடிதம் வரும்.

அன்புள்ள மாணவி,

வீ. நிவேதிதா

அன்புள்ள நிவேதிதா,

இரண்டு வகையான உலகப்பார்வைகள் உண்டு. ஒன்று நம்பிக்கைவாதம் (Optimism) இன்னொன்று அவநம்பிக்கை வாதம் (scepticism) இச்சொற்கள் தத்துவத்தில் இருந்து வந்தவை. சாதாரணமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவநம்பிக்கைவாதம் என்பது அடிப்படையில் மனிதனால் எதையுமே அறுதியாகப் புரிந்துகொள்ள முடியாது என்றும், எதைச்சார்ந்தும் உறுதியான முடிவை எடுக்கமுடியாது என்றும் வாதிடுகிறது. ஆகவே மானுடன் இயற்கையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கமுடியும். தற்செயல்களால் அவன் வாழ்க்கை நிகழ்கிறது என்கிறது.

இந்த இரு பார்வைகளில் எதை நாம் கொண்டிருக்கிறோமோ அதன் அடிப்படையில் உலகம் நமக்கு தெரிகிறது. எதிர்காலம் தோற்றமளிக்கிறது. இந்த இரு பார்வைகளில் ஒன்றை ஒருவர் எடுப்பதென்பது அவருடைய சொந்த தேர்வு. தன் வாழ்க்கையனுபவம், கல்வி, பொதுவான புரிதல் ஆகியவை சார்ந்து அவர் அந்த நிலைபாட்டை எடுக்கிறார். அது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே.

நீங்கள் சொல்லியிருப்பது அவநம்பிக்க சார்ந்த பார்வை. இந்தப் பார்வை எப்படி உருவானது, ஏன் நிலைகொள்கிறது, எப்படி பயன்படுகிறது என்று பார்போம்.

பொதுவாக மதங்கள் அடிப்படையில் அவநம்பிக்கைப் பார்வை கொண்டிருக்கும். இது உடனடியாக ஆச்சரியமளிக்கும் ஒரு மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் இது உண்மை. ஏனென்றால் மதங்களைப் பொறுத்தவரை இந்த உலகம் பொய்யானது, விண்ணுகலம் மட்டுமே உண்மை. இந்த உலகம் துயரமானது, மதம் வழியாக அதில் இருந்து விடுதலை கிடைக்கும். அதுவே வீடுபேறு அல்லது முக்தி அல்லது மோட்சம்.

மதங்கள் எல்லாமே மனிதனிடம் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை திருத்திக் கொள்ளும்படிச் சொல்லிக்கொண்டிருக்கும். அந்த குறைபாடுகளை பாவம் (sin) என்று சில மதங்கள் சொல்லும். பொய்யான புரிதல் அல்லது மாயை என சிலமதங்கள் சொல்லும். இந்த உலகை இறைவன் இன்பமானதாகப் படைத்தான். மனிதன் தன் குறைபாட்டால் அதை சீரழித்துவிட்டான். இந்த உலகம் துன்பமானது, அதற்குக் காரணம் மனிதன் தன. இந்தப் பிழைகளை களைந்தால் மட்டுமே விடுதலையை அடையமுடியும் என்று  மதங்கள்சொல்லும் . இந்த குறைபாடுகள் இருப்பதனால் மனிதனின் இந்த உலகவாழ்க்கை மிகத்துன்பமானது மட்டுமே என்று அவை சொல்லும்.

நீங்கள் மதத்தின் பாடல்களிலெல்லாம் இந்த இரண்டு மனநிலைகளையும் காணலாம். மனிதன் பாவி, இந்த உலகம் ஒரு துயரப்பரப்பு, இறைவனே மீட்புசக்தி: மதங்கள் சொல்வது இவ்வளவுதான்

மால்தஸ்

இந்தக்காரணத்தால் மதங்கள் இரண்டு நிலைபாடுகளை முன்வைக்கும்.

ஒன்று, மனிதனால் எதையும் முழுமையாக அறியவோ, முடிவெடுக்கவோ முடியாது. ஆகவே இறைவனிடம் சரணாகதி அடைவதே ஒரே வழி.

இந்த உலகம் துன்பமானது. முன்பு இது இன்பமாக இருந்தது. ஏதேன் தோட்டம் இன்பமானது. கிருத யுகம் இன்பமானது. அதாவது இறந்தகாலம் சிறந்தது. நிகழ்காலம் ஒரு சரிவு. எதிர்காலம் இன்னும் கொடுமையானது.

இந்த இரண்டு மனநிலைகளும் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற மதங்களில் மிக அழுத்தமானவையாக உள்ளன. அவற்றின் அடிப்படையே இந்த இரண்டு மனநிலைகளும்தான் என்று சொல்லலாம். மனிதன் என்பவன் பாவம் செய்தமையால் ஏதேன் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டவன். அதை ஆதிபாபம் என்கிறார்கள்.

இந்த அடிப்படைகள் ஐரோப்பியச் சிந்தனைகளில் நுட்பமாக ஊடுருவியுள்ளன. மதத்தை ஏற்றுக்கொள்ளாத சிந்தனையாளர்களிலேயே கூட இந்த பார்வை உள்ளே நின்று தொழிற்படுகிறது.

இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். ஒருவர் மால்தஸ். (Thomas Robert Malthus) நவீனப்பொருளியலின் அடிப்படைகளை உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர். மதகுருவும்கூட. பூமியின்மேல் மக்கள்தொகை பெருகிக்கொண்டே செல்கிறது, ஆனால் உணவு உற்பத்திக்கு ஓர் எல்லை உள்ளது, ஆகவே பெரும்பஞ்சங்கள் வந்து மானுட இனமே அழியலாம் என்று அவர் சொன்னார்.

ஃப்ராய்ட்

இன்னொருவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) நவீன உளவியலின் தந்தை. ஃப்ராய்டின் கொள்கைப்படி மனிதன் அடிப்படையில் காமம், வன்முறை, சுயநலம் போன்ற ஆதாரமான உணர்வுகளால் ஆனவன். அந்த உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் சமூகத்தை உருவாக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தியதன் விளைவாக அவனுக்கு பலவகையான உளச்சிக்கல்கள் உருவாகின்றன. நரம்புநோய்களாக அவை மாறுகின்றன. மனித உள்ளம் சிக்கலாகிக்கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் சரிசெய்யவே முடியாத நிலை உருவாகும்.

இவர்கள் அடிப்படையான சிந்தனைகளை உருவாக்கியவர்கள். இவர்களைப்போல பலநூறுபேர் உள்ளனர். இவர்களின் வழித்தோன்றல்கள் பல்லாயிரம் அறிஞர்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக மானுட இனத்தின் எதிர்காலம் மீது ஆழமான அவநம்பிக்கையைச் சிந்தனையில் உருவாக்கியுள்ளனர். ஆகவே நவீனச் சிந்தனையில் அவநம்பிக்கைவாதம் ஆழமாகப் பதிந்த ஒன்றாக உள்ளது.

மேரி ஷெல்லி

இச்சிந்தனைகளில் இருந்துதான் இலக்கியங்கள் உருவாயின. அவற்றிலும் இந்த எதிர்மனநிலை ஆழமாக ஊடுருவியது. அறிவியல்புனைகதைகளை எழுதிய படைப்பாளிகள் அனைவருக்கும் அடிப்படையாக இருப்பவை இரண்டு தொடக்கலாக நூல்கள்.

ஒன்று மேரி ஷெல்லி (Mary Shelley)  எழுதிய ஃப்ராங்கன்ஸ்டைன். இந்தக்கதையில் ஓர் அறிவியலாளர் பிணங்களை வெட்டி இணைத்து ஒரு செயற்கை மனிதனை உருவாக்குகிறார். அந்த மனிதன் கட்டற்றுப்போய் பெரும் கொலைகாரனாக ஆகிவிடுகிறான். அவனை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று வரை ஜுராஸிக் பார்க் முதலிய எல்லா அறிவியல்கதைகளிலும் உள்ளது இந்தக்கதையின் அடிப்படை அமைப்புதான்

இன்னொன்று, மேரி ஷெல்லி எழுதிய கடைசிமனிதன் என்னும் நாவல். இதுதான் பேரழிவுக் கதை (apocalyptic ) சிதைவுலகக் கதை (dystopian ) என்ற வகையான கதைகளை உருவாக்கியது. இதன்பிறகு எச்.ஜி.வெல்ஸ், ஆல்டஸ் ஹக்ஸ்லி  போன்ற பலர் இத்தகைய கதைகளை எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் பெரும் புகழ்பெற்ற கதைகள். படக்கதைகளாக வெளிவந்து சிறுவர்களால் வாசிக்கப்பட்டவை. பின்னர் சினிமா வந்ததும் இவையெல்லாம் சினிமாவாக வெளிவந்தன. ஆரம்பகால சினிமாக்களெல்லாம் இந்தக் கதைகளை நேரடியாகவும் தழுவியும் எடுக்கப்பட்டவைதான்.

இன்றுவரை ஹாலிவுட்டில் எடுக்கப்படும் சினிமாகளில் இந்தவகையான படங்களே பெரும்பாலானவை. நம் மனதுக்குள்ளேயே தொகுத்துப்பார்க்கலாம். ஜுராஸிக் பார்க் போன்ற படங்கள். பிளானட் ஆஃப் ஏப்ஸ், அவதார் போன்ற படங்கள். இரண்டு பாணியிலும் படங்கள் வருகின்றன.

நாம் இவற்றைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் மனம் இவற்றை உண்மையான எதிர்காலம் என்று நம்புகிறது. ஆனால் இவை 18 ஆம் நூற்றாண்டு, 19 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் உருவாக்கிய கதைகளின் தொடர்ச்சியாக உருவானவை. அந்தக் கதைகள் அக்காலச் சிந்தனையாளர்களின் பார்வையை அடிப்படையாகக் கொண்டவை. அந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் இருப்பது மதம் உருவாக்கிய பார்வை.

நான் இப்பார்வையை ஏற்றுக்கொள்பவன் அல்ல. நான் அறிவியல் கதைகளை எழுதியிருக்கிறேன். அவை விசும்பு என்ற பேரில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். பனிமனிதன் வெள்ளிநிலம் மற்றும் உடையாள் ஆகிய குழந்தைகளுக்கான கதைகளை எழுதியிருக்கிறேன். அவற்றில் அவநம்பிக்கைப் பார்வை இருக்காது. நம்பிக்கைநோக்குதான் இருக்கும்.  ஏனென்றால் என் வாழ்க்கை வழியாகவும் என் வாசிப்பு வழியாகவும் என் ஆசிரியர்கள் வழியாகவும் நான் கண்டடைந்தது அது.

அப்படியென்றால் ஏன் நாம் அவநம்பிக்கை பார்வையை அதிகமாக முன்வைக்கிறோம்? ஏன் அவற்றை மக்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள்? அவநம்பிக்கைப்பார்வைக்கு உண்மையான ஏதாவது மதிப்பு உண்டா?

(மேலும்)

தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887
முந்தைய கட்டுரைமித்ரா அழகுவேல்
அடுத்த கட்டுரை‘Work-Meditation’