உடையாள் நாவலை நான் முதன்முதலில் கதை மட்டும் கேள்விப்பட்டேன். என் நண்பர் சொன்னார். இதென்ன, இந்தக்கதை குழந்தைகளுக்குப் புரியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே வாசிக்கவில்லை. அண்மையில் நூலாக வந்ததும் வாங்கி வாசித்தேன். எனக்கு அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. என் பையன் தமிழில் சரளமாக வாசிக்க மாட்டான். ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனிடம் இந்தக் கதையைச் சொல்லிப்பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. கதையைச் சுருக்கமாகச் சொன்னேன்.
ஆச்சரியமான விஷயம் அவன் கதைக்குள் உடனே தீவிரமாக வந்துவிட்டான். அவனுக்கு அந்தக்குழந்தை விண்ணில் மாட்டிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய திகைப்பை அளிப்பதாக இருந்தது. அத்துடன் அவன் சுனிதா விலியம்ஸ் இப்போது விண்ணில் மாட்டிக்கொண்டிருப்பதைப் பற்றிச் சொன்னான். உடனே அவன் இதையெல்லாம் இணைத்துக்கொண்டது எனக்கு அப்படித் தோன்றவே இல்லை.
எனக்கு தோன்றுகிறது. இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே சின்னக்குழந்தைகளுக்கு வானியலில் ஆர்வமுண்டு. பழைய குழந்தைக்கதைகளில் சயன்ஸ் இல்லாவிட்டாலும் வானத்தில் பறப்பதுபோல கதைகள் உண்டு. பிள்ளைகள் வானத்தைப்பற்றி நிறையத் தெரிந்துவைத்திருக்கின்றன.நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட வாழ்க்கை மேல் ஆர்வம் வருகிறது. வானியல் ஆர்வம் இல்லாமலாகிவிடுகிறது.
உடையாளின் கதையை நான் இரண்டுநாட்களிலாக பையனிடம் சொன்னேன். அந்தக்கதையை அவன் உள்வாங்கிக்கொண்ட விதம் ஆச்சரியமானது. அந்ததையில் இருந்து மேலும் மேலும் புதிய கற்பனைகளை அவனே உருவாக்கிக்கொண்டான். ஒரு வாரம் வேறு பேச்சே இல்லை. உடையாள் எங்கள் வீட்டில் ஒரு ஆயிரம் பக்க நாவலாகப் பெருகிவிட்டது.
நான் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல குழந்தைக்கதை குழந்தைகளுக்கு கற்பிக்கக்கூடாது. தகவல்கள் அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்களுக்கு கான்ஸெப்ட்ஸ் முக்கியம். ஆனால் அவை ஃபேண்டஸியாகச் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அந்த கான்ஸெப்ட் குழந்தைகள் மனதில் கற்பனைக்கதைகளாகவே விரிய ஆரம்பித்துவிடுகிறது.
ஃபேண்டஸி இல்லாத சயன்ஸ் குழந்தைகளுக்குப் போய்ச்சேர்வதில்லை. ஆகவே சயன்ஸில் தொடங்கி சயன்ஸை கொஞ்சம் மீறி கதை சொல்லவேண்டியிருக்கிறது. அந்தவகையில் இந்நாவல் ஒரு கிளாஸிக் என நினைக்கிறேன். இதிலுள்ள தத்துவார்த்தமான ஆழம், சாக்தமத தரிசனம் எல்லாம் எனக்காக. பையன் பிறகு வந்து சேர்ந்துகொள்வான்
நா. பெருமாள்
உடையாள் முன்னுரை ஜெயமோகன்