https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் வாங்க
அன்புள்ள ஜெ
எட்டு மாதங்கள் தொடர்ச்சியான வாசிப்பின் விளைவாக விஷ்ணுபுரம் நாவலை இன்று வாசித்து முடித்தேன். இந்நாவலை வாசிக்க எனக்கு நான்கு நூல்கள் உதவியாக இருந்தன.
1.இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
2 இந்து சமயத் தத்துவம்- டி.எம்.பி.மகாதேவன்
3. இந்திய தத்துவ ஞானம். கி.லட்சுமணன்
இந்த நூல்கள் அளித்த ஓர் ஆரம்பப்புரிதலே இந்நூலை புரிந்துகொண்டு உள்வாங்க போதுமானதாக இருந்தது. சுவீரா ஜெயஸ்வால் எழுதிய வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூல் கைவசம் இருந்தது. ஆனால் அது பெரிதாகத் துணைபுரியவில்லை. விஷ்ணுபுரம் தன்னை இந்தியாவாகவே உருவகம் செய்துகொள்கிறது. இந்திய வரலாற்றின் ஒரு வடிவம்தான் இந்நாவலின் கதையே. ஆனால் இந்த நாவலில் உள்ளது இந்திய வைணவம் அல்ல, தமிழ் வைணவம் என்ற எண்ணம் வந்தது.
என் வைணவ நண்பர் ஒருவருடன் இந்நாவலைப் பற்றி அவ்வப்போது பேசுவதுண்டு. அவரும் படித்தார். ஆனால் இந்நாவலில் உள்ள வைணவ வழிபாட்டு முறைகள் தவறாக உள்ளன என்று சொன்னார். (திருத்துழாய் நூலில் சொல்லப்படவில்லை என்றார்) ஆனால் பிறகு ஆகமங்கள் பற்றிய ஸ்ரீனிவாஸராவ் நூலை படித்தபோது நீங்கள் சரியாகவே எழுதியுள்ளீர்கள் என்று தெரிந்தது. இந்நாவலில் உள்ள வழிபாட்டுமுறை வைகானஸ மரபை சார்ந்தது. அது வைகானஸம் என்று பெயர்பெறுவதற்கு முன்பிருந்த பல தாந்த்ரீக முறைகளில் ஒன்று. அந்த வழிபாட்டுமுறைகள் சரியாகவே உள்ளன.
விஷ்ணுபுரத்தை வாசிப்பதென்பது இந்தியாவை, இந்துமரபை வாசிப்பதுதான். அதுதான் நமக்குள்ளும் இருக்கிறது. ஆகவே நம்மை நாமே வாசிப்பதும்கூடத்தான். ஒரு பெரிய கல்லூரிப்பட்டப் படிப்பு போல படித்தேன். அப்படிப் படிக்காமல் இயல்பாக கதையாகவே படித்தாலும் நாவல் ஈர்ப்புடனேயே இருக்கும். சங்கர்ஷ்ணனும் பாவகனும் பிங்கலனும் இங்கே என்றும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அஜிதனும், சித்தனும், காசியபரும் இருக்கிறார்கள். ஆனால் அடிக்கடிக் கண்ணுக்குப்படுவது தர்மகீர்த்தி போன்றவர்களைத்தான். இந்தியாவின் ஆன்மிகத்தையே விஷ்ணுபுரம் ஒட்டுமொத்தமாகத் தொகுத்தளித்துவிடுகிறது
கிருஷ்ணா ஸ்ரீதர்