வண்டுகள் ரீங்கரிக்கும் அடர் வனம்

கிட்டதட்ட பதினைந்து நாட்களாக இந்த புதினத்துடன் வாழ்ந்தேன், தினமும் இதன் பக்கங்கள் தீர்ந்து விடுமோ என்ற அச்சம் என்னுள் வியாபித்திருந்தது. பக்கங்களை திருப்பும் ஒவ்வொரு கணமும் வண்டுகள் ரீங்கரிக்கும் அடர் வனத்தில் உலவும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. முதல் முறை காட்டிற்குள் நுழைந்து தொலைந்து போகும் நாயகனை போல ஒரு வருடம் முன்பு இந்த புதினத்தை கையில் எடுத்து ஒரு நாற்பது பக்கங்கள் படித்து விட்டு தொடர்ந்து வாசிக்காமல் விட்டு விட்டேன். காட்டின் நிதப்தத்தை அனுபவித்து வாசிக்க வேண்டும் வேகமான வாசிப்பு இந்த புதினத்திற்கு நியாயம் செய்யாது என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழும் மலையாளமும் கலந்த மொழி நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த புதினம். ஆரம்பத்தில் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தாலும் காடு உங்களை உள்ளிழுத்து செல்லும் போது அந்த வன நீலி மீது கொண்ட மயக்கத்தில் மொழி எல்லாம் நமக்கு தடையாக இருக்காது. நாவல் முடிந்த போது நானும் இந்த வட்டார வழக்கில் பேச தொடங்கிவிட்டேன் என்றால் அது மிகையில்லை.

வயதான நிலையில் இருக்கும் கிரிதரன் தன்னுடைய இளமை பருவத்தில் தான் சில மாதங்கள் தங்க நேர்ந்த காட்டை அதன் நினைவுகளை அசை போடுவதும் அங்கு திரும்பி வந்து அந்த பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுமே கதை. கிரி தன்னுடைய அம்மாவின் கட்டாயத்திற்காக அவனுடைய மாமாவுடன் சேர்ந்து காட்டில் கால்வெர்ட் கட்டும் பணி செய்ய காட்டிற்கு வருகிறான். மாமா எப்போதாவது மட்டுமே வந்து பணிகளை மேற்பார்வை செய்கிறார். கிரியுடன் ரெசாலம் என்கிற மேஸ்த்ரி, குட்டப்பன் என்கிற சமையல்காரன் இருவர் மட்டுமே அந்த காட்டிலேயே தங்கி இருக்கிறார்கள். கூலியாட்கள் பலர் வந்து போகிறார்கள் அதில் சினேகம்மை மட்டுமே மனதில் நிற்கிறாள்.

காட்டுக்குள் முதலில் நுழைந்து காணாமல் போகும் கிரி பின்பு தங்கள் குடில் இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் ஓடைக்கு நீர்அருந்த வரும் மிளாவை பின் தொடர்ந்து வந்து தப்பி குடிலுக்கு அருகில் இருக்கும் பெரிய அயனி மரத்திற்கு வந்து சேரும் போதே காடு நம்மை ஆட்கொண்டு விடுகிறது. அய்யர் என்று அழைக்கப்படுகிற என்ஜினீயருக்கும் கிரிக்கும் நடுவில் நடக்கும் உரையாடல்கள் ஆக சிறந்த கவிதைகள். இயற்கையையும் கபிலரையும் கம்பனையும் இசையையும் இவர்கள் சிலாகித்து கொள்வது வாசிக்க வாசிக்க அவ்வளவு சுவையாக இருந்தது. யானை டாக்டர் கதையில் வரும் டாக்டர் கே மற்றும் அந்த வனக் காவலர் நினைவு ஏற்பட்டது. அய்யர் இந்த புதினத்தின் அதி அற்புதமான கதா பாத்திரம்.

மகத்தான எல்லாத்துக்கும் தூய காதல் தான் முதல் உவமை, இல்லாட்டி உவமைகள் முளைக்கிற ஈரம் உலராத வயல்ன்னு சொல்லலாம்

சின்ன பிள்ளைகளுக்கு பணம்னா என்னன்னு புரியறது இல்லை. பைசான்னா மிட்டாய்க்கு பதிலான ஒரு பொருள்ன்னு நினைச்சு வச்சுருக்கும். அப்படியே நேரா கடைத் தெருவுக்கு வந்திருச்சுன்னு வச்சுக்கோ பிரமிச்சு போயிடும். பணம்னா சாப்பாடு, துணி, மதிப்பு, மரியாதை, அதிகாரம், தர்மம் எல்லாம் தான். அதெல்லாம் புரிஞ்சிக்கிறதுக்குள்ள அது ஆயிரம் அனுபவங்களை அடைஞ்சிடும். காமமும் பணம் மாதிரி தான்

மலையன் மகள் நீலிக்கும் கிரிக்குமான காதல் வனத்தின் ஆதி ருசியை தன்னுள் தேக்கிக் வைத்திருக்கும் தூய தேன் போல தித்திருக்கிறது. நீலியை தேடி மிருகங்கள் உலவும் அர்த்த ராத்திரியில் காட்டிற்குள் தைரியமாக போகிறான் கிரி. கரடியோ, யானைக் கூட்டங்களோ, காட்டுப் பன்றிகளோ, ஓநாய்களோ எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை, காதல் மட்டுமே அவனை வழி நடத்துகிறது. நீலியிடம் அதிகம் உரையாட வேண்டும் என்று கூட கிரி நினைக்கவில்லை அவளை பார்க்க வேண்டும் அது மட்டுமே அவன் உள்ளத்தில் வியாபித்திருக்கிறது. நீலியை பற்றி நினைக்கும் போது கிரிக்கு எழும் கபிலரின் பாடல் :

சுனைப்பூகுற்று தொடலை தைஇவனக்கிளி கடியும் மாக்கண் பேதைத்தானறிந்தனளோ இலளே பள்ளியானையின் உயிர்த்துஎன் உள்ளம் பின்னும் தான் உழையதுவே இதன் எழிலான விளக்கம் இப்படி விரிகிறது வனத்தடாகத்தில் பூபறித்து அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள், தூங்கும் யானை போல பெருமூச்சு விட்டு என் மனம் அவள் நினைவை…… தொடர்வதை……..இப்படி ஒரு வனக்காதலி கிடைத்தால் யார் தான் அவளை காணாமல் இருப்பார்….நீலியின் முடிவும் மனதை உலுக்குகிறது.

கீரகாதன் என்ற யானையும் ஒரு கதாபாத்திரமாக இந்த புதினத்தில் உலவுகிறது. காது கீறப்பட்டு இரு பிரிவுகளாக இருக்கும் அந்த கொம்பன் யாரையும் கொல்லாது. மழைவெள்ளத்தால் காடே துண்டிக்கப்பட்டு கிடக்கும் நிலையில் தன்னுடைய கூட்டத்திடமிருந்து பிரிந்து தனித்து துயரத்தில் மரணிக்கும் அதன் கதையும் துயரம் நிறைந்தது தான்.

பெயல்கால் மழைத்தலின் விசும்பு காணலரே, நீர் நிறைந்து ஒழுகலின் மண் காணலரேகபிலனின் வரி. பெயல்கால் என்ற வரியில் மனம் பதிந்திருக்க மழை நின்று பெய்யும் மலைச் சரிவை பார்த்து நிற்பேன். மழையின் பல்லாயிரம் கோடி கால்கள்…..

 பெயல்கால் என்ற அற்புதமான வார்த்தையை கபிலன் நமக்கு தந்திருக்கிறார், அதை ஆசிரியர் ஜெமோ தகுந்த இடத்தில் பயன்படுத்தி இருப்பது கிளாசிக்.

ரெசாலம் மேஸ்திரிக்கு காட்டில் மிக பெரிய பிடிப்பாய் வந்து சேர்க்கிறது ஒரு தேவாங்கு. அதன் மேல் அதீதமாக அன்பு செலுத்துகிறார். அதை ஒரு சிறுத்தை கொண்டு சென்று போய்விடவும் அந்த துயரத்தை தாங்க இயலாமல் மனநலம் பாதிக்கப்படுகிறார். பின்னாளில் அவர் செய்யும் செயல்களை வாசிக்கும் போது தான் அவர் எதற்காக அந்த தேவாங்கின் மீது அவ்வளவு பிரியம் வைத்தார் என்பது புரிகிறது. கிரியின் மாமா இறந்த பிறகு அவனது வாழ்க்கையே மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகிறது. மாமாவின் மகளான சற்றே மனநலம் பிறழ்ந்த வேணியை மணமுடித்துக் கொள்கிறான். நீலிக்கும் அவனுக்குமான காதல் அவன் மனதில் அப்படியே அதே பசுமையோடு பதிந்து போய்விடுகிறது.

குட்டப்பன் மிக அற்புதமான கதாபாத்திரம் காட்டை மட்டுமல்ல மனிதர்களையும் நன்றாக அறிந்து வைத்திருப்பவன். அவனை போன்றோர் கூட இருந்தால் மலையை கூட புரட்டி போடலாம். என்ஜினீயர்களால் சூறையாடப்படும் மலைச்சாதி பெண்ணை பாதரியிடம் சேர்த்து புனித மேரியாக மாற்றும் அற்புத வித்தைக் காரன் அவன். மழை வெள்ளத்தாலும் கொடும் தொற்று காய்ச்சலாலும் மக்கள் மடிந்து சாகும் போது ஒரு தூண் போல இருந்து மருத்துவர்களுக்கு உதவுகிறான்.

நாவல் முழுவதும் காமம் ஒரு காட்டாறு போல பெருகுகிறது. காமம் என்பது ஒருவனுக்கும் ஒருத்திக்கு மட்டுமானதாக இங்கு காட்டப்படவில்லை அது இயல்பான ஒன்றாய் அனைவரிடமும் அத்துமீறுகிறது. அதை இயல்பாக ஏற்கும் சினேகம்மையின் கதாபாத்திரம் அருமை. பல வருடங்கள் கடந்து அய்யரும் கிரியும் மீண்டும் சந்திக்கும் போது கிரிக்கு மீண்டும் நீலியின் நினைவுகள் மேழும்புகிறது. திருவனந்தபுரம் அரண்மனையின் ராஜா பாலராம வர்மாவிற்கும் நீலிக்குமான கதை சற்றே மிரட்டுவதாக இருந்தாலும் மறக்க முடியாத கதை. உண்மையாக வனநீலி எப்படி இருந்திருக்க கூடும் என்கிற கற்பனை எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கிரி காட்டிற்குள் போகும் போது மிதிக்கும் செடி கொடிகளின் வகைகள், அங்கு பழுத்து தொங்கும் பழங்கள், கொடிகள், பூச்சிகள் என்று வாசிக்க வாசிக்க நம் கற்பனையில் விரிகிறது காடு. புதினத்தின் கடைசி பக்கத்தை முடிக்கும் போது ஐயோ காட்டை விட்டு வெளியில் வந்து தான் தீரவேண்டுமா என்கிற நிராசை நம்மை கவ்வுகிறது. மனம் என்றாவது முரண்டு பிடித்தால் அந்த அயனி மரத்தடியில் உட்கார்ந்து சற்றே இளைப்பாறிவிட்டு செல்லலாம்….அற்புதமான வாசிப்பனுபவம்.

இந்து கணேஷ்

தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887

 

காடு சினிமாவாக?

காடும் விடுதலையும்

காடு வாசிப்பனுபவம் – இன்பா

காடு- பதிவுகள்

காடு- படிமங்களை புரிந்துகொள்வது…கடிதம்

மழைக்குளிரும் காடும் – சக்திவாசா

 

முந்தைய கட்டுரைWhy do we need Old Philosophy?
அடுத்த கட்டுரைகுழந்தைகளின் கவனச்சிதைவும் புனைவும், கடிதம்