லடாக்கிலிருந்து வீட்டிற்கு வந்ததும் “VENMURASU” என்று அச்சிடப்பட்ட இரண்டு பெரிய பெட்டிகள் காத்திருந்தன. பார்த்த உடனேயே மனதில் மகிழ்ச்சி. கையில் இருக்கும் இனிப்பை சாப்பிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையின் ஆனந்தம்.. பயண அலுப்புகள் நீங்கியதும் பெட்டிகளை திறந்தோம். புத்தகங்கள் பயணத்தில் எந்த வகையிலும் சேதமாகதபடி அருமையாக பாக் செய்யப்பட்டிருந்தது – உள்ளே அட்டை மற்றும் காற்றுக்குமிழி நெகிழியால் சுற்றப்பட்டும், வெளியே தண்ணீர் புகாதவாறு நெகிழி ஓட்டப்பட்டும். இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு அநேக நன்றி!
பிரித்ததும் புதிய புத்தக மணமே ஒரு கிறங்கவைக்கும் அனுபவம்! புத்தகங்களின் திண்மையான வழவழப்பான அட்டை, மொரமொர காகிதம், அழகான எழுத்துரு, அருமையான வண்ணப்படங்கள், அனைத்தையும் தாண்டி கையில் இருப்பது ஒரு இலக்கிய போக்கிஷம் என்ற பொங்கும் மகிழ்வும், படிக்கவெழும் விழைவும்.
கையில் முதலில் வந்த புத்தகம் கடைசி பாகமாகிய “முதலாவிண்”; முதல் பக்கத்தில் (நாங்கள் மீனாம்பிக்கையிடம் கோரியபடி) எங்கள் இரண்டு மகள்களுக்கும் நீங்கள் எழுதிய வாழ்த்துக்களுடன். மிக்க மகிழ்ச்சி. அடுத்து எடுத்தது “முதற்கனல்” – இதிலும் எங்கள் மகள்களுக்கான வாழ்த்துக்கள். ஒரு மகிழ்ச்சியின் நிறைவின் உச்சத்தில் இருந்தோம்… கோடி நன்றிகள்!
முதலும் கடைசியுமான பாகங்களில் வாழ்த்து எழுதியிருக்கிறீர்கள் என்றெண்ணினோம். ஆனால், ஓவ்வொரு பாகமாக எடுத்துபார்க்க அவற்றிலும் உங்கள் வாழ்த்துக்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சியாகவும் இருந்தது (ஓவ்வொரு புத்தகமும் ஒரு தனித்துவமான பரிசுகள், உங்கள் வாழ்த்துக்களுடன் வந்தமையால்), ஆனால், அதே நேரத்தில் இந்த அளவுக்கு உங்கள் மிக மதிப்புமிக்க நேரத்தையும் உழைப்பையும் எடுத்து கொண்டதற்கு கூடவே வருத்தமாகவும்.. அதுவும் உங்கள் எழுத்துகளையும், உரைகளையும், பயணங்களையும், தினசரி இணையதள பதிவுகளையும் படித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு, எங்கள் கோரிக்கை இப்போது நியாயமற்றதாகவே தோன்றுகிறது. அதற்கு எங்களை மன்னிக்கவும்… இதை சொல்லவேண்டும் என்று தோன்றியது.
முதலாவிண் புத்தகத்தை முதலில் புரட்டிபார்த்தபோது கண்ணில் பட்டது வியாசரின் வார்த்தைகள்: “அறத்திற்கும் மறத்திற்கும் போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை… இது ஒவ்வொரு மானுடர் மனதிலும் நிகழும் போரல்லவா?” என்று. வெண்முரசு க்கு ஒரு சரியான துவக்கம்.
குமரன் & விஜி (பெங்களூர் )
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)