அன்பின் ஜெ,
நலமா.புக்பிரம்மா விருது பெற்றமைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.
தென்னிந்திய இலக்கியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை முதன் முறையாக நீங்கள் பெற்றது வாசகியாக எனக்கு பெருமிதமளிக்கிறது.ஏறத்தாழ உங்கள் எழுத்துக்கள் அத்தனையையும் வாசித்துள்ளேன்.உங்கள் மொழி நடையும் இந்திய மெய்யியல் ஆக்கங்களும் தத்துவ புரிதல்களும் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் மாற்றங்கள் சொல்ல இயலாதவை.இன்று நான் கொண்டுள்ள புரிதல்களும் இலக்கிய அறிவும் உங்கள் தளத்தையும் புத்தகங்களையும் வாசித்து பெற்றுக் கொண்டவையே.எந்த புத்தகத்தை வாசித்தாலும் அதனைப் பற்றி விரிவாக என்னால் எழுத முடிகிறது என்பது உங்கள் எழுத்துக்களை வாசித்து அறிந்ததாலேயே.இலக்கியம் தமிழ் மொழி எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள் பற்றிய எந்த தகவல் வேண்டுமென்றாலும் உங்கள் தளத்தில் தான் தேடி அறிகிறேன்.
நீங்களே பல விருதுகள் அளித்தாலும், இத்தனை மகத்தான உங்கள் இலக்கிய பங்களிபபிற்குண்டான அங்கீகாரங்களில்இவ்விருதும் ஒன்று என்பதில் மிகவும் மகிழ்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
மோனிகா மாறன்
அன்புள்ள ஜெ
புக் பிரம்மா விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். அந்த விருது எவ்வளவு முக்கியம் என்பதை நான் நேற்றுத்தான் அறிந்தேன். இங்கே பெங்களூரில் நடைபெற்ற ஒரு முக்கியமான அரசுத்தேர்வில் நேர்முகத்தில் கேள்வியாக அது வந்திருந்தது. (நான் சந்தித்த எவரும் சரியாகப் பதில் சொல்லவுமில்லை. எம்.டி.வாசுதேவன் நாயர் என்று இரண்டுபேர் பதில் சொல்லியிருந்தார்கள்)
இந்த விருது உங்களுக்கு அளிக்கப்பட்டது என்பதைவிட தமிழுக்கான விருது என்பதே பொருத்தமானது. நான்கு மொழிகளுக்கான ஒரு நிகழ்வில் முதல் விருது தமிழுக்கு என்பது பெரும் நிறைவை அளிக்கிறது
சஞ்சய் குமார்