தூரன் விழா உரை, கடிதம்

அன்புள்ள ஜெ

தமிழ்விக்கி- தூரன் விழா உரையைக் கேட்டேன். வழக்கம்போல அழகான உரை. சென்ற சில மாதங்களாக நீங்கள் வெளியிட்டுவரும் காணொளிகளாலோ என்னவோ உங்கள் உரையின் உச்சரிப்பு சீராக உள்ளது. மொழி பேச்சுமொழிக்குச் செல்லாமல் அச்சிடுவதற்குரிய வகையில் சீராக உள்ளது. ஒரு சொல் கூடுதல் இல்லாமல், எங்கும் திசைதிரும்பாமல் அழகாகச் சென்ற உரை ஒரு பெரிய கற்றலனுபவம்.

நியூயார்க்- வாசிங்டனில் நிகழவிருக்கும் நவீனத்தமிழ் இலக்கிய மாநாடு பற்றிச் சொன்னீர்கள். மகத்தான செய்தி. மனமார்ந்த வாழ்த்துக்கள். தம்மை முன்வைக்கும் சூழலில் தமிழை முன்வைக்கும் உங்களை வணங்குகிறேன்

சு. மதியழகன்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

தமிழ் விக்கி- தூரன் விழாவின் உரை மிகச்சிறப்பாக இருந்தது. இன்று, தமிழ்விக்கி ஒரு தவிர்க்கமுடியாத அறிவுச்சேகரம். ஒவ்வொரு நாளும் என்னைப்போன்ற கல்வியாளர்கள் எதையாவது தேடி வந்துகொண்டேதான் இருக்கிறோம். இங்கிருக்கும் முழுமையான தகவல்களை எங்குமே காணமுடிவதில்லை. அத்துடன் உசாத்துணையில் இருக்கும் இணைப்புகள் முழுமையான ஆய்வுக்குப்பின் வந்தவை. தமிழ்விக்கியின் மொழிநடை வாசிப்புக்கு சுவையானது. தகவல்கள் பகுக்கப்பட்டிருக்கும் மாறாத அமைப்பும் மிகப்பெரிய உதவி. முன்னுதாரணமான முயற்சி.

நியூயார்க் இலக்கியமாநாடு பற்றிச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள். செயற்கரிய செய்பவர் நீங்கள். நீங்கள் அறிவிக்கும்போது ஒவ்வொரு விஷயமும் அசாத்தியமானதாகத் தெரிகிறது. சாதித்துக்காட்டி கடந்துசென்றபடியே இருக்கிறீர்கள்.

செல்வ முத்துக்குமார்.

முந்தைய கட்டுரைபுக்பிரம்மா விருது, கடிதங்கள்
அடுத்த கட்டுரையோகம்