இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டுக் கிளைவிட்டுத் தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை, இலக்கியம், வாழ்க்கைமுறை அனைத்துக்கும் கோயில்களே ஆதாரமாக நிற்கின்றன.
ஆனால் நாம் மிகக் குறைவாகவே கோயில்களைப் புரிந்துகொண்டிருக்கிறோம். பத்துப்பதினைந்து முக்கியமான கோயில்களுக்குச் செல்லாதவர்கள் நம்மிடையே அபூர்வம். ஆனால் கோயிலின் அமைப்பு, அதன் பரிணாமம் ஆகியவற்றைப் பற்றி எளிய புரிதல்கூட நம்மிடையே இல்லை. நம் பண்பாட்டின் ஆதாரமாக விளங்கும் ஆலயங்களைப் பற்றி எளிய அறிமுகம்கூட நம் கல்வி முறைமூலம் நமக்குக் கிடைப்பதில்லை.
நம் மொழிகளில் நம் சிற்பக்கலை குறித்த நல்ல நூல்கள் மிக மிகக் குறைவு. நல்ல புகைப்படங்களும் கோட்டோவியங்களும் விளக்கங்களும் கொண்ட அறிமுக நூல்கள் தமிழில் அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் வரும் நூல்கள் மிகவிலைமதிப்பு மிக்கவை. பெரும்பாலும் வெளிநாட்டுப்பல்கலைகளை கருத்தில்கொண்டவை.
ஆலயங்கள் பற்றிய ஆய்வுநூல்களே தமிழில் மிக மிகக் குறைவு. தமிழநாட்டு ஆலயங்களைப்பற்றிய நூல்களில் ஒரு மாபெரும் செவ்வியலாக்கம் என்றால் சுசீந்திரம் ஆலயத்தைப்பற்றிய முனைவர் கெ.கெ.பிள்ளை அவர்களின் நூல்தான். அந்நூல் இன்றுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. முனைவர் தொ.பரமசிவன் எழுதிய் ‘அழகர்கோயில் வரலாறு ‘ நூலும் அ.கா.பெருமாள் எழுதிய ‘திருவட்டார் ஆலயம்’ நூலும் முக்கியமானவை.
இந்தியச் சிற்பக்கலையைப் பற்றி தமிழில் கிடைக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது கே.ஆர்.சீனிவாசன் எழுதிய ‘தென்னிந்தியக் கோயில்கள்’ என்ற நூல். அறிமுகவாசகர்களுக்கு உரிய ஆய்வுநூல் என இதைச் சொல்லலாம். கெ.ஆர்.சீனிவாசன் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம் இது.
இந்தியக் கோயில்கலையை பௌத்தர்களின் காலத்தில் வளர்ச்சிகொள்ள ஆரம்பித்த ஒன்று என்று அடையாளம் காண்கிறார் கே.ஆர்.சீனிவாசன். புத்தகயை பகுதிகளில் அசோகர் பல இடங்களில் உருவாக்கிய குடைவரைக் கோயில்முறை மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தே நம்முடைய ஆலயக் கடமைப்பு உருவானது என்கிறார். இது மரபான ஒரு பார்வையாகும்.
ஆரம்பத்தில் திறந்தவெளிக்கோயில்கலும் ஸ்தூபங்களும்தான் கோயில்களின் முதல்வடிவங்களாக இருந்தன.பின்னர் மரத்திலும் செங்கல்லிலும் கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் குடைவரை கோயில்கள் உருவாயின. அதன்பின் அவை தனித்து நிற்கும் கருங்கல் கோயில்களாக மாறின. கருங்கல்லிலும் மரம் செங்கல் கட்டுமானங்களின் அழகியல் அமைப்பு தொடரப்பட்டது. கருங்கல் கோயில்களில் கூட மரக்கட்டிடங்களின் உத்தரங்களும் பட்டிகைகளும் கபோதங்களும் அமைக்கப்பட்டன. கருங்கல் கட்டிட அமைப்பு பல்வேறு காலகட்டங்களாக வளர்ச்சி அடைந்து தென்னிந்தியப் பேராலயங்களில் அதன் உச்சத்தைக் கண்டது.
இந்தியா முழுக்க கட்டிடக்கலை பௌத்தத்தின் எழுச்சியை ஒட்டி வீறுடன் உருவாகி வளர்ந்தது. எல்லோராவின் குகைக்கோயில்கல் குடைவரைக்கோயில்கள் படிப்படியாக தனிக்கோயில்களாக ஆவதன் பரிணாம சித்திரத்தை அளிக்கின்றன. பின்னர் வட இந்தியாவில் அந்த வளர்ச்சி மட்டுப்பட்டது. பெரும்பாலான கோயில்கள் அன்னியப் படையெடுப்பாளர்களால் இடித்து அழிக்கப்பட்டன. ஆனால் நிலையான பேரரசுகள் இருந்தமையால் தென்னிந்திய கலைச்செல்வங்கள் அழியாமல் நீடித்தன.
தென்னிந்தியாவில் ராஷ்டிரகூடர்கள், காகதீயர்கள், யாதவர்கள், பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் அரசுகள் உருவாக்கிய கோயிற்கட்டும்கலை விஜயநகரப்பேரரசின் காலகடத்தில் உச்சத்தை அடைந்தது. அந்த பரிணாமத்தின் சித்திரத்தை நுட்பமான தகவல்கள் வழியாக அளிக்கிறார் ஸ்ரீனிவாசன். அந்தந்த கட்டிடக்கலைகளின் சிறப்பியல்புகளையும் அவை ஒன்றில் இருந்து ஒன்றாக உருவாகிவந்த முறையையும் விரிவான உதாரணங்கள் மூலம் காட்டுகிறார்.
முற்காலக் கோயில்கள், முற்கால குடைவரைக்கோயில்கள், பிற்காலகுடைவரைக்கோயில்கள், கட்டிடச்சிற்பங்கள், தொடக்ககால கட்டுமானக் கற்கோயில்கள், பிற்காலக் கட்டுமானக் கற்கோயில்கள், பிற்காலக்கோயில் வகைகள் என்னும் தலைப்புகளில் இந்தியச் சிற்பக்கலையின் வரலாறு தொகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் கேரளத்து மரக்கோயில்கள் , உலோகக்கூரையிட்ட கோயில்கல் போன்ற தனித்தன்மை கொண்ட கோயில்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன இந்தியக் கோயிலமைப்பு சார்ந்த கலைச்சொல் பட்டியலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியக்கோயில்களின் பரிணாமத்தை விளக்கும் 23 படங்களும் உள்ளன.
கோயில்களைப்பற்றி தமிழில் வெளிவந்த முக்கியமான நூல்களில் ஒன்று இது
[நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வெளியீடு. ரூ 61. நியூசெஞ்சுரி புத்தகநிலையங்களில் கிடைக்கும்]
***
http://www.varalaaru.com/Default.asp?articleid=234
vaaramorualayam.blogspot.com
சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்
சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 8, 2009