சீமைக்கொன்றை என்னும் சென்னா சயாமியா, மஞ்சக்கொன்னை என்னும் சென்னா ஸ்பெக்டாபிலிஸ் இரண்டுமே இந்தியாவின் அயல் ஆக்ரமிப்பு மரங்கள். மலர் மஞ்சரிகள் அமைந்திருக்கும் விதத்தில் மட்டும் மிக சிறிய வேறுபாட்டை கொண்டிருக்கும் இம்மரங்கள் இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை. இரண்டுமே இயல்மரங்களுக்கான அச்சுறுத்தல்தான்
நீங்கள் சொல்லியிருப்பது போலச் சென்னா ஸ்பெக்டாபிலிஸ் வயநாட்டுக்கு 1986-ல் கேரள வனத்துறையால் பிற்பாடு வருந்தப்போகிறோம் என்பதை அறியாமல் நிழல் மரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் விதைகள் தருவிக்கப்பட்டு, முளைத்த நாற்றுக்கள் வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலும், அருகிலிருந்த வனச்சரகங்களின் சாலையோரங்களிலும் நடப்பட்டன.
அப்போது கேரள வனத்துறையினருக்கு தெரிந்திருக்கவில்லை அவர்கள் வளர்த்திக்கொண்டிருந்தது அமெரிக்காவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு மரத்தைத்தான் என்று. அப்போதே அது ஆசியா, ஆப்பிரிகா, ஆஸ்திரேலியாவில் ஆக்ரமிப்பு மரமாக அறியப்பட்டிருந்தது.
கேரள வனத்துறை இதன் ஆக்கிரமிப்பு ஆபத்தை உணர்ந்தபோது, ஆக்ரமிப்புத் தாவரங்கள் அதற்குள் என்னவெல்லாம் செய்திருக்குமோ அதை அந்த மரம் செய்திருந்தது.
அறிமுகமாகிய 25 வருடங்கள் கழித்து, 2011ல் பல்கிப்பெருகியிருந்த இந்தச் சென்னா மரம் கேரளக்காடுகளின் ஆக்கிரமிப்பு மரமாக அறியப்பட்டது.
கர்நாடகமும் 2000-ங்களில் லண்டானா ஆக்ரமிப்பு புதர்களைக் கட்டுப்படுத்தும் என எண்ணி பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோளே தேசியப்பூங்காக்களில் சென்னா மரங்களை அறிமுகப்படுத்தினார்கள்.
2020-ல் முதுமலைப் பகுதிகளில் சென்னா அடர்த்தியாக வளர்ந்து இயல் மரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பது கண்டறியப்பட்டது.
இப்போது சென்னாவின் ஆக்ரமிப்பு கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் மிகப்பெரிய சிக்கலாகி இருக்கிறது. இவற்றைத்தவிர அஸ்ஸாமில் மட்டும் ஒரு சில இடங்களில் இதன் ஆக்கிரமிப்பு கண்டறியபட்டிருக்கிறது
2012-லிருந்து வயநாடு பகுதியில் இதன் ஆக்ரமிப்பை ஆய்வு செய்து வரும் திரு வினயன் “344.44 km², பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்தில் 2013-14-ல் 16 km² –ல் பரவியிருந்த சென்னா, 2019-ல் 89 km² பரப்பளவை ஆக்கிரமித்திருந்தது. தற்போது இதன் ஆக்கிரமிப்பு இந்தச் சரணாலயத்தின் 35% பரப்பளவில் சுமார் 123.86 km-ல் பெருகியிருக்கிறது “என்கிறார். இதன் பரவிப்பெருகும் வேகம் அச்சுறுத்துகிறது.
வயநாடு சரணாலயத்தில், மலர்ந்து அழிந்த மூங்கில்களின் இடத்திலெல்லாம் மீண்டும் அவை வளர்வதற்குள் சென்னா பரவி மூங்கில்களின் வாழிடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறது.
காடுகளிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் விதைகள் பரவின. இந்த மரங்களின் மஞ்சள் நிற மலர்களுக்காகவும் நிழலுக்காகவும் இவற்றின் ஆபத்து தெரியாமல் பல இடங்களில் இவை அலங்கார மரங்களாக வளர்க்கப்பட்டன.
வினயனின் ஆய்வுக்குழு சென்னாவின் பரவலில் யானைகளின் பங்கு மிக அதிகமென்கிறது. ஒரு யானைச்சாணக்குவியலில் மட்டும் சுமர் 2000 சென்னா விதைகள் இருப்பதை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆக்கிரமிப்பு மரங்களின் இயல்புகளான, விரைந்து வளர்வது, குறுகிய வாழ்க்கைச் சுழற்சி, ஏராளமான விதைகளை உருவாக்குவது, வெட்டிய அடித்தண்டிலிருந்தும் முளைத்து வளர்வது, வேரிலிருந்தும் தண்டிலிருந்தும் இனப்பெருக்கம் செய்வது ஆகிய இயல்புகளை இந்த இரு மரங்களுமே கொண்டிருக்கின்றன.
கர்நாடகத்திலும் கேரளாவிலும் இந்தச் சென்னா மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டும் ரசாயனங்களை உபயோகித்தும் மரப்பட்டையை உரித்து உலரச்செய்தும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் இன்னும் இதன் ஆக்கிரமிப்பு குறித்து பலர் அறிந்திருக்கவில்லை
நான் அந்தியூர் வனப்பகுதிக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்தபோது அதிகம் தென்பட்டிருக்காத சீமைக்கொன்றை இப்போது மலைப்பகுதி முழுக்க எங்கெங்கிலும் இருக்கிறது
வெள்ளிமலை ஆசிரியர் நவநீதன் இந்த மரங்களின் ஆக்கிரமிப்பை குறித்து சொன்னதும் அவருடன் சீமைக்கொன்றையின் ஆக்கிரமிப்பை அந்த மலைப்பகுதியில் நேரில் ஆய்வுசெய்துவிட்டே அந்த கடிதத்தை எழுதினேன். சென்னை கோவை உடுமலை என நான் செல்லும் நகரங்களில் எல்லாம் இவை பல்கிப்பெருகிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
கோனொசார்பஸ்,சென்னா போன்ற விரைந்து வளரும் இயல்புகொண்ட அயல் மரங்களை உறுதியாக நாம் அறிமுகம் செய்வதும் வளர்த்துவதும் தடைசெய்யப்படவேண்டும்
ஆக்ரமிப்பு மரம் கடிதம் உங்கள் தளத்தில் வெளியான அன்று கத்தாரில் இருக்கும் விஷ்ணுபுரம் குழும நண்பர் பழனி அழைத்திருந்தார். துபாய், கத்தார் முழுக்க நர்சரிகளில் ரெய்டு நடத்தி இந்த கோனோகார்பஸ் மரங்கள் முழுக்க அழிக்கப்பட்டதை தெரிவித்தார்
அப்படியான ஒரு தீவிரக்கட்டுப்பாட்டு முன்னெடுப்பு இந்தச் சீமைக்கொன்றை மற்றும் கோனோகார்பஸ் மரங்களுக்கு இங்கும் உடனடித் தேவையாக இருக்கிறது.
சீமைக்கொன்றையின் விதைகளிலும் இலைகளிலும் இருக்கும் நச்சுpபொருட்களால் பறவைகள், பன்றிகளுக்கு ஆரோக்கியக்கேடுகளும் உண்டாகிறது.
நிழல் தருகிறது கரிக்கட்டை கிடைக்கிறது என்பதுதான் சீமைக்கொன்றையின் பயன்கள். இம்மரத்தை அறுக்கையில் உருவாகும் மரத்தூள் தீவிரமான தொண்டை கண் மற்றும் மூக்கு அழற்சியை உருவாக்குகிறது.
மகேஸ்வரி இணைத்திருக்கும் (2022ல் கடைசியாக மேம்படுத்தப்பட்டிருக்கும்) இணையதளத்திலும் சீமைக்கொன்றை ஆஸ்திரேலியாவில் ஆக்கிரமிப்பு மரமாகியிருப்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது .
இயல் மரங்கள் அழிந்துகொண்டிருப்பது அவற்றைச் சார்ந்துவாழும் , அவற்றில் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு பூச்சிஇனங்களையும் அழித்துவிடுகிறது.
குஜாராத் முழுக்கவும், வளைகுடா நாடுகளிலும் கோனோகார்பஸ் அழிக்கப்பட்டுவிட்டது ஆனால் கோவையில் பங்களூரில் பழனியில் நூற்றுக்கணக்கில் அவை வளர்க்கப்படுகின்றன என்றால் அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரவல் குறித்த இந்திய வனத்துறையின் செயல்பாடுகள் என்ன என்னும் கேள்வி எழுகிறது
சீமைக்கொன்றையின் ஆக்கிரமிப்பு அபாயம் குறித்த ஏராளம் ஆய்வறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன.
டெக்கன் ஹெரால்ட் 2023 டிசம்பரில் சீமைக்கொன்றை மற்றும் பிற அயல் ஆக்கிரமிப்பு மரங்களால் இந்தியப்புல்வெளிகள் அழிந்துகொண்டு வருவதை குறித்த கட்டுரையை வெளியிட்டிருக்கிறது
- India’s grasslands in peril https://www.deccanherald.com/environment/indias-grasslands-in-peril-2803727
- https://www.cabidigitallibrary.org/doi/10.1079/cabicompendium.11462
- https://www.manoramaonline.com/environment/habitat-and-pollution/2022/11/17/senna-siamea-invasive-plant-species-present-a-threat-to-keralas-biodiversity.html
- https://plantwiseplusknowledgebank.org/doi/10.1079/PWKB.Species.11462
- https://www.drishtiias.com/daily-updates/daily-news-analysis/senna-spectabilis
- https://india.wcs.org/Newsroom/Blog/ID/13044/Senna-spectabilis-The-Alien-Green
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூடுதிரையைப்போலக் காடுகளுக்குள் சென்று விட்டிருக்கும் ஆக்ரமிப்பு ஏறுகொடிகளில் Mikania micrantha மிக முக்கியமானது.மரங்களிலும் மின் கம்பங்களில் ஏறி காடுகளுக்குள் சென்று மரங்களின் உச்சி வரை பரவியிருக்கும் இந்தக் கொடி மிக மோசமான ஆக்ரமிப்புக் களைச்செடியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இக்கொடியின் பெயர் mile-a-minute vine.
குட்ஸூ என்னும் ஆக்ரமிப்பு ஏறு கொடி தென்கிழக்காசியா முழுக்க பெரும் சூழல்அச்சுறுத்தலை உண்டாக்கி இருக்கிறது. குட்ஸுவை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்: https://logamadevi.in/3191
அன்புடன்
லோகமாதேவி