கல்லூரியில் மதியம் ஒரு மணி நேரம் முன் அனுமதி பெற்று கொட்டும் மழையில் 14-ம் தேதி மதியம் ஈரோடு புறப்பட்டேன். சில மாதங்களுக்கிடையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அளிக்கும் விருது விழாக்களுக்கு நான் வரத்தவறுவதே இல்லை. அறிவார்ந்த ஒரு உலகிற்கு அவ்வப்போதாவது வந்து செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாது, 2 தசாப்த காலங்கள் எந்த திட்டமிடலும், பொறுப்புணர்வும், நோக்கமும், தெளிவும், இல்லாமல் நடத்தப்படும் பல கூட்டங்களில் தவிர்க்கவே முடியாமல் கலந்துகொள்வதற்கான பிழையீடாகவும்தான் வருகிறேன்.
தேசியத் தரச்சான்றுக் குழுவினரின் வருகை இந்த மாத இறுதியில் என்பதால் கல்லூரியே காய்ச்சல் பிடித்ததுபோல் இருக்கிறது. நல்லவேளையாக எனக்கு தூரன் விருது விழாவில் கலந்து கொண்டு கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
14-ம் தேதி நான் அங்கு வரும்போது பெரும்பாலானோர் வந்து விட்டிருந்தனர். மிகச்சரியாக குறிப்பிட்ட நேரத்தில் பறவை ஆர்வலர் ஜெகநாதன் அவர்களின் அமர்வு தொடங்கியது. முன்பு அவருடன் இணைந்து நான் கல்லூரி வளாகத்தின் பறவை கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறேன். மிக புதிதாக பல விஷயங்கள் அவரது அமர்விலும், அவரது கட்டுரைகளிலிருந்தும் அறிந்து கொண்டேன். குறிப்பாக சிட்டுக்குருவிகள் அழிந்து விடவில்லை இந்தியா முழுக்க அவை இருக்கின்றன, அவை அழிந்து வருவதாக சொல்லப்பட்டது இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட அந்த பிரதேசத்திற்கான தரவுகளை கொண்டு என்பதை மிகப்புதிதாக அறிந்து கொண்டேன். இதை ஆதாரத்துடன் அவர் விளக்கினார்.
உண்மையில் அரிதாகி விட்டிருக்கிற பாறு கழுகுகளுக்கென ஒரு தினமும் அவற்றை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வுதான் அவசியம் என்றார். மிக அருமையான உரை அவருடையது. கல்லூரி, பள்ளிப் பாடத்திட்டங்களில் வருடக்கணக்காக அரைத்த மாவை அரைப்பதற்கு பதிலாக பாடத்திட்ட ஆலோசனைக் குழுவில் இவர் போன்றோரை இணைத்து அடுத்த தலைமுறைக்கு தேவையானவற்றைகற்றுக் கொடுக்கலாம்.இப்படி கல்விக்கூடங்களின் மேம்பாடு குறித்த என் ஆதங்கங்கள் எல்லாவற்றையும் ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.
அடுத்தடுத்து இருந்த 2 நாட்களின் அமர்வுகள் எல்லாமே பிரமிப்பு அளித்தவை தான். கோவை மணியின் சுவடியியல் ஆய்வாகட்டும், காந்திராஜனின் குகை ஓவியங்களாகட்டும், வேதாசலம் அவர்களின் தொல்லியல் ஆய்வுகளாகட்டும் அவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் கண்டுபிடிப்புகளும் பெரும் ஆச்சரியமளித்தது.
வேதாசலம் அவர்கள் இந்தியாவையே புரட்டிப்போட்டு ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் அத்தனை முக்கியமான தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான 2 லட்சம் புகைப்படங்கள் இருக்கிறது என்பது எத்தனை அரிய விஷயம்? என்னுடன் அமர்ந்திருந்த விஜய சூரியனின் மனைவி ரேணு அமர்வு தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அமர்வின் ஆழத்திற்கு சென்று விட்டார். அவருக்கு அந்த அரங்கு, அதில் இருந்தவர்கள் எல்லாருமே மறைந்துபோய் சிறப்புரை ஆற்றி கொண்டிருந்தவரிடம் உரையாடத் தொடங்கி அவ்வபோது ம் கொட்டுவதும் ’’அதுதான் சரி’’ ஆமாமா என்பதுவுமாக அந்த அமர்வு ரேணுவிற்கான பிரத்யேக அமர்வாகி விட்டிருந்தது.
.நூற்றுக்கணக்கான முனைவர் பட்டங்களுக்கான ஆய்வு அவர் செய்திருப்பது. ஆனால் கல்லூரிகளின் தமிழ்துறையினர் இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் வாயிலாக தெரியவரும் பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் என்று ஆய்வு செய்து அதையும் வருடக்கணக்காகச் செய்து முனைவர் பட்டமும், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு வேலையும் பெறுகிறார்கள்.
எந்த அங்கீகாரத்தையும் அவர்கள் எதிர்பார்க்காமல்,அத்துறையில் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டில் தான் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்றாலும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், தமிழ் விக்கி இணைந்தளித்த இந்த விருதும் அங்கீகாரமும் அவர்களுக்கு பெரு மகிழ்ச்சியை உண்டாக்கி இருப்பதை அவர்களைப் போலவே இதில் மகிழ்ந்திருந்த எங்களாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
.திரு வேதாசலம் அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்துபோன நாகரீகங்களை,அதற்கான சான்றுகளை தேடலைக் குறித்து மட்டுமல்லாது அவை எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதை அறிய உதவும் தெர்மோ லுமினசென்ஸ் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றியும் சொல்கிறார். தொல்லியலும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும் இணையும் அந்தப் புள்ளி மிக புதிதாக இருந்தது. அரங்கில் எழுப்பப்பட்ட கேள்விகளும் மிக தனித்துவம் வாய்ந்தவைகளாக இருந்ததால் உரையாடல் மேலும் செறிவாகி விட்டிருந்தது. பாறை ஓவியங்களில், அகவாழ்வுக்கான சித்தரிப்புக்கள் இல்லையா? என்னும் கேள்வி அப்படியான ஒன்று.
காரசேரி அவர்களின் அமர்வு மிகச் சிறப்பாக இருந்தது. மலையாள மொழி அதன் இனிமையின் பொருட்டே எனக்கு இதுவரையில் பிடித்தமானதாக இருந்தது. காரசேரி அவர்களின் குரலில் அந்த மொழியை அத்தனை கம்பீரமாக முதல்முறையாகக் கேட்டேன். ஒரு வரலாற்றுக் காலத்தை கண்முன்னே அவர் கொண்டு வந்து நிறுத்தி இருந்தார் அவர் சொன்னது எல்லாம் மிக அரிய தகவல்கள் பஷீரையும் காந்தியையும் காரசேரியின் வழியாக அறிந்து கொண்ட மிகப்பெரிய அனுபவமாக அந்த அமர்வு இருந்தது. ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் அந்த ஒரு மணி நேரம் போதவில்லை என்பதை அனைவரும் உணர்ந்தோம் அத்தனை அரிய பொக்கிஷங்கள் அவர்கள்.
வழக்கம் போல இளைஞர்கள் உற்சாகமாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்கள். ஒரு மைக்கை வாங்கி கேள்வி கேட்பவருக்கு அளிக்க மூன்று இளைஞர்கள் ஓடி வருவதை பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
எந்த நிகழ்விலும் இத்தனை அர்ப்பணிப்புடன் இத்தனை மகிழ்வுடன் ஈடுபட்டிருப்பவர்களை நான் பார்த்ததில்லை. தூரன் விழாவிற்கு வந்ததைப்போல எந்த இலக்கிய நிகழ்வுக்கு கைக்குழந்தையும் மனைவியுமாக குடும்பமாக இளைஞர்கள் வருகிறார்கள்?. முந்தைய ஆண்டை விட ஒன்றரை மடங்கு அதிக கூட்டம் இம்முறை இருந்தது.அதிலும் பெண்கள் நிறையப்பேர் இருந்தோம்.
டோக்கியோவில் இருந்து செந்தில் வந்திருந்தார். கோவையிலிருந்து மாலதி வாடகைக்காரில் வந்திருந்தார். பரிதி, பிரபு ஆகியோர் மனைவியுடன், தாமரைக்கண்ணன் குழந்தையும் மனைவியுமாக, புதுச்சேரியிலிருந்தும் கடலூரிலிருந்தும் தமிழகத்தின் எல்லா பகுதியிலிருந்தும் வெளிநாடுகளிருந்தும் ஏராளமாக வந்து கலந்து கொண்டிருந்தார்கள்.
தூரன் விருதுவிழாவின் ஆகச்சிறந்த ஒரு அம்சமாக இசை நிகழ்ச்சி அமைந்து விட்டிருக்கிறது. மரபான இசைக்கு பரிச்சயமே இல்லாத என்னைப் போன்றோருக்கும் அந்த நிகழ்ச்சி அத்தனை இனிமையான அனுபவமாக இருந்தது. அதுவும் ’கால காலன்’ இன்னும் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இசை நிகழ்ச்சிக்கென உங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பாக தனித்த நன்றிகள்.
இசையும், அரிய பணி செய்தோரின் அரங்குகளும், மிக அருமையான உரைகளும் நல்ல உணவும், தங்குமிடமுமாக இந்த இருநாட்கள் அடுத்த விஷ்ணுபுர விழாவில் கலந்து கொள்ளும் வரை பொருளற்ற பலவற்றை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பதற்கான சகிப்புத்தன்மையை எனக்களித்திருக்கிறது. அறிவார்ந்த உலகொன்று வெளியே இருப்பதை அறியாதவர்களாலான சூழலுக்குத்தான் திரும்பி இருக்கிறேன் என்றாலும் மனதின் அடியாழத்தில் தூரன் விழாவின் இனிய நினைவுகள் நீந்திக்கொண்டிருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அனைத்திற்கும் நன்றி.
அன்புடன்
லோகமாதேவி