தமிழ்விக்கி தூரன் விழா, கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். முதன்முறையாக தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது விழாவில் பார்வையாளராக பங்கு பெற்றேன்

கல்வெட்டு, ஓலைச்சுவடி, குகை ஓவியம், சூழியல், பறவையியல் என அரங்குகள் ஒவ்வொன்றிலும் அத்துறை சார்ந்த பல வருட அனுபவம் மிக்க ஆய்வாளர்களைக் கொண்டு நடத்தியது மிகவும் சிறப்பு

வரலாறு பாடம் எனக்கு மிகவும் பிடிக்குமாதலால் கல்வெட்டு, குகை ஓவியம், ஓலைச்சுவடி அரங்குகளோடு இயல்பாகவே என்னால் பொருந்திப் போக முடிந்தது.

ஒவ்வொரு அரங்கைப் பற்றியும் தனித்தனி பதிவுகளாக போட வேண்டிய அளவுக்கு சிறந்த அறிஞர்கள் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆய்வும் இலக்கியமும் ஒருசேர ஒரு இடத்தில் நிகழ வேண்டும் என்று தாங்கள் பேசியது எனக்கு அந்த விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது

தரவுகளுக்காக வருடக் கணக்கில் காத்திருக்கும் ஆய்வாளரை போல் அல்லாது கற்பனையில் அதனை நிரப்பிக் கொள்ளும் செய்தி மூலமாக இலக்கியத்தையும் ஆய்வையும் வேறுபடுத்தி சொன்னது நன்றாக புரிந்தது.

பெரியசாமி தூரன் அவர்களின் பணியை மக்களுக்கு திரும்பவும் நினைவூட்டி அவரின் பெயரில் ஒரு விருதை ஆய்வாளருக்கு அளித்து, அந்த மாபெரும் பணிக்கு சிறப்பு செய்தது மகிழ்ச்சியை தந்தது.

ஒரு விருது தேர்வு செய்வதற்காக 45 ஆய்வேடுகளைப் படித்து ஒன்றை தேர்வு செய்யும் உங்களின் உழைப்பு அசாத்தியமானது. அதுமட்டுமல்லாது தாங்கள் ஆற்றி வரும் பெரும் பணிகளை நான் நன்றாக அறிவேன். இளைஞர்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமும் கூட

வையாபுரி பிள்ளை அவர்களின் நினைவாக தாங்கள் ஆற்றவிருக்கும் அடுத்த பெரும் கனவை எதிர்பார்க்கத் தயாராகி விட்டேன். கனவுகளை சுமக்கவும் அதை செயல்படுத்தி நிகழ்வுகளாக மாற்றவும் வேண்டும் என்பதை உங்களின் செயல்கள் மூலமாக மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

கனவு விதைகளை உங்களின் பேச்சின் மூலமாக ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்து கொண்டே இருக்கிறீர்கள். எப்படி செயல் மூலமாக வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும், நிகழ்வுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை உங்களை பின்தொடர்வதன் மூலமாகவே கற்றுக் கொண்டு வருகிறேன்

அனைத்திற்கும் மேலாக உங்களின் மேடைப் பேச்சுக்கு பெரும் ரசிகன் நான். தாங்கள் எப்போதும் கூறுவதைப் போலவே நேரில் வந்து கேட்பது போல காணொளிகள் நம்மை திருப்திப்படுத்தி விட முடியாது என்பதை இன்னும் ஒரு முறை நான் நேரில் பேச்சைக் கேட்பதன் மூலமாக புரிந்து கொண்டேன்.

ஆய்வும் இலக்கியமும் மட்டுமல்லாது இசையும் மேடைப் பேச்சும் ஒருங்கே அமைந்து விழாவினை அறிவுக்களஞ்சியமாக திரட்டிக் கொடுத்தமைக்கு நன்றி.

வெவ்வேறு பகுதிகளில் இருந்து பலர் கூடியிருந்து மிகவும் மகிழ்ச்சியாக அமைதியாக விழாவை சிறப்பாக நடத்தியது மற்றும் ஒரு பிரமிப்பு. விழா நடைபெறும் இடம், தங்குமிடம், உணவு என ஒவ்வொன்றுமே சிறப்பாக இருந்தது.

மகிழ்ச்சியுடன் 

சு. திருமுருகன் 

முந்தைய கட்டுரைGANDHI – A BANIYA
அடுத்த கட்டுரைக.நா.சு, வே.நி.சூர்யா, உலகக்கவிஞர்கள்