இந்த உலகிற்கு மிஸ்ரப் பிரபஞ்சம் என்று தத்துவவியலாலர்கள் அழைப்பது உண்டு. மிஸ்ரம் என்றால் கலப்பு என்று பொருள். இருவேறு வகைப்பட்ட உலகமாக இது பரிணமிக்கிறது என்று அவர்கள் விளக்கிச் செல்கிறார்கள்.
கர்நாடக சங்கீதத்தில் மிக முக்கியமான ஒரு தாளம் மிஸ்ரசாபு தாளம். இரண்டு தட்டுகளை சேர்த்து ஒன்றாக வாசிக்கக்கூடிய தாள நடை. பல புகழ்பெற்ற கீர்த்தனைகள் (நிதி சால சுகமா) இந்த தாள நடையில் அமைந்திருக்கின்றன.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் தமிழ் விக்கி பெரியசாமி தூரன் நிகழ்வில் நடந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியில் காவடிச்சிந்துவை இந்தத் தாள நடையில் வாசித்த போது அரங்கத்தில் உள்ள மனங்களும் இரண்டு நிலையில் தான் இருந்திருக்க வேண்டும். ஒன்று கண்ணீர் மல்கி இருக்க வேண்டும், அல்லது உற்சாகத்தில் நிரம்பி இருக்க வேண்டும். காவடிச் சிந்து என்றாலே மேதையான சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் என்ற பெயர் வருவது வழக்கம் தான், ஆனால் அதோடு தூரன் என்ற பெயரையும் சேர்க்க வேண்டும்.
பொதுவாக இன்றைக்கு கர்நாடக இசை மேடைகளில் தமிழ் கீர்த்தனைகள் ஒலிப்பது என்பது ஒரு துக்கடாவாக கருதும் எண்ணம் உண்டு. விதி விலக்குகள் சஞ்சய் சுப்ரமணியம் போன்றவர்கள். அப்படி இசைக்கப்பட்டாலும் தூரன் கீர்த்தனை என்பது மிகவும் அரிது . அதையும் தாண்டி தப்பித் தவறி அவர்கள் வாயில் இருந்து பாட வந்துவிட்டால் templeate ஆக “கலியுக வரதன்” என்ற பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே கடைசி நேர கதியில் பாடிவிட்டு முடித்துவிடுவார்கள்.
ஆனால் தூரன் அந்த ஒரு பாடல் மட்டும் தான் எழுதி இருக்கிறாரா என்ன? எத்தனை அரிய வகை கீர்த்தனைகள். முருகனை பற்றி அவர் கதறி எழுதிய தமிழ் கீர்த்தனைப் போல வேறு ஒருவரும் எழுதிவிடவில்லை என்று துணிந்தே சொல்லலாம்.
வாய்ப்பாட்டிலேயே இந்த நிலை என்றால், நாதஸ்வர இசையில் கேட்கவே வேண்டாம். ஆனால் அதை எல்லாம் உடைத்தது இந்த வருட தூரன் இசை நிகழ்வு. பாருங்கள் தூரன் அவர்கள் எத்தனை வகையில் எத்தனை அறிய ராகங்களில், கீர்த்தனை இயற்றியிருக்கிறார் என்று கர்நாடக சங்கீத உலகிற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது.
சின்னமனூர் அவர்கள் அடாணா ராகத்தை வாசித்த விதம் என்பது ஒரு வகைத் தேன். மிகக் கடினமான ராகத்தை மெல்ல குழைத்து தன் முன் அமர்ந்து இருப்பவர்களைப் பார்த்து இந்தா எடுத்துக் கொள் என்று அரங்கிற்கு தந்தார்.
ராகமாலிகையை காப்பியில் ஆரம்பித்தார், ஆனால் நிமிட நேரத்தில் நடபைரவி, செஞ்சுருட்டி, தேஷ், கரகரப்பிரியா, பிருந்தாவன சாரங்கா என்று இன்னும் பல ராகங்களை சேர்த்துக் கொண்டே போய் மீண்டும் காப்பி ராகத்தில் முடித்த ஒன்று இது வரை நடக்காது. இந்த வகையான வாசிப்பு என்பது முதலிலேயே இப்படி வாசிக்க வேண்டும், என்று பேசி முடிவாகி வாசிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது அங்கே தானாக நிகழ்ந்தது. இசைப்பவர்கள் தன் மனம் பொறுந்தி அந்த ராகத்தில் மேல் அமர்ந்தால் மட்டுமே அது நிகழ முடியும்.
ஒரு இசை நிகழ்ச்சி எங்கே எப்படி முழுமை அடைந்து வெற்றி பெறும் என்பது கனிக்க முடியாத காரியம் தான். அது அருவமாக வாசிப்பனுக்கும் கேட்கிறவனுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். ஆனால் சில நேரங்களில் அது தற்செயலாக அந்த வெற்றி வெளிப்பட்டு விடும். தலைச்சங்காடு அவர்கள் தனி ஆவர்தனத்தில் திஸ்ர நடையில் வாசித்து மேலே மேலே சென்று கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அது உச்சம் தொடும் போது, என் அருகில் அமர்ந்து இருந்த, இது வரை கர்நாடக சங்கீதம் என்னவென்றே தெரியாத ஒருவர் நாற்காலி நுனிக்கு வந்து அவர் கையை சும்மா தானாக தாளம் போட ஆரம்பித்துவிட்டார். அது தான் வெற்றி.
நான் நினைத்துக் கொண்டேன், பெரிய நகரங்களில் மட்டுமே ஒலித்துக் கொண்டு இருந்த நிகழ்வை, சிறிய கிராமத்தில் அதிலும் முழுக்க முழுக்க அந்த மண்ணைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கீர்த்தனைகளை நாதஸ்வரம் மூலம் அந்த மண்ணின் மக்களுக்கே அளித்து, இதோ பாருங்கள் உங்கள் ஊர் மனிதர் தூரன் ஒன்றும் சாதாரண மனிதர் அல்ல, என்று நீங்கள் பெறுமைபட்டுக் கொள்ளலாம் என்ற உண்மையை நன்றிக் கடனோடு வெளிப்படுத்திய செயல்.
தூரனின் தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்.
உ முத்துமாணிக்கம்
பி.கு நான் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்றவன் அல்ல. அந்தப் பின்புலத்தில் இருந்து வந்தவனும் அல்ல. ஒரு மாபெரும் சாகரமான கர்நாடக இசையை தொடர்ந்து கேட்டு ரசிப்பவன் என்ற அடக்கத்தோடு இதை எழுதுகிறேன்.