அனல் காற்று (குறுநாவல்) : 10

காலையில் அம்மா வந்து என் அறைக்கதவை பதற்றமாக தட்டினாள். நான் விழித்துகொண்டு எழுந்து கதவை திறந்தேன். இமைகள் கனத்து ஒளி விழிகளைக் குத்தியது. எழுந்தபோது தலைசுற்றி சற்றே குமட்டியது. நான் இரவில் தூங்க நெடுநேரமாகியது. சந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தேன் என்பது மட்டும்தான் நினைவிலிருந்தது. என்ன பேசிக்கோண்டிருந்தேன் என்பதை எத்தனை முட்டியபோதிலும் நினைவுகூர முடியவில்லை.

அம்மா பதறியபடிஎந்திரிடாஎத்தனைநாழி கூப்பிடறது?” என்றாள். ”ம்ம்என்றபடி எழுந்து லுங்கியை சரியாகக் கட்டிக்கொண்டேன். என் அறைக்குள் நான் முந்தைய நாள் இரவு கழற்றிப்போட்ட பாண்டும் சட்டையும் பெல்ட்டும் ஷுக்களும் சிதறிக்கிடந்தன. அம்மா உள்ளே வந்திருந்தால் மதுவின் வாசனையையும் அடைந்திருப்பாள்

சீக்கிரம் வாடா

மணி என்ன ஆச்சு?” என்றேன். பின்பு வாட்ச்சை எடுத்துப் பார்த்தேன். எட்டரை. ஜன்னலுக்கு வெளியே அப்போதே நல்ல வெயில் பொழிந்துகொண்டிருந்தது.

பாத்ரூம் போய் முகத்தைக் கழுவினேன். கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். கண்களுக்குக் கீழே சதை தொய்ந்து நிழல் பரவி முகம் முதுமை தட்டியதுபோல் இருந்தது. வாயை கழுவியபோது சற்று குமட்டியது. பல் விளக்க ஆரம்பித்தேன்.

அம்மா பாத்ரூம் கதவைத்தட்டினாள்டேய்டேய்…”

கதவு அதிர்வது என்னுள் எரிச்சலை எழுப்பியது. சரேலென்று திறந்துஎதுக்கு இப்ப கத்துறே? வரேன்னு சொன்னேன்ல

அம்மா தளர்ந்து மெல்லிய குரலில்டேய் அந்த மூதேவி வந்து வாசலிலே நிக்குதுடா…” என்றாள்

யாரு?”

அவதான்அந்த சின்னக்குட்டி…” அந்தக்கணத்தில் அவள் முகம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அம்மாவின் குரல் எகிறியதுசனியன்…. எப்டிடா அதுக்கு நம்ம வீடு தெரிஞ்சுது? நீ அங்க போறதுண்டா? எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்நிலைகுலைந்தவளாக கட்டற்றவளாக இருந்தாள். குரல் ஓங்கியது, மூச்சுவாங்கியது.

என்ன விஷயம்? என்ன?” என்றேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளைத் தாண்டி வாசலுக்குச் செல்லப்போனேன்.

அந்த மூதேவி ஏன் இங்கவரணும்? எப்டி அதுக்கு உன்னைத்தெரியும்? சொல்டா.. சொல்லிட்டுபோடாடேய்என் பனியனைப் பிடித்து இழுத்தாள்

நான் கோபத்துடன்என்ன உளறுறே? சொல்லித்தொலைஎன்றேன் சீற்றமாக

அந்தாள் செத்துப் போயிட்டானாம்.அந்த தேவடியா பெத்த குட்டி வந்து காலம்பர நம்ம வீட்டு வாசலிலே நின்னிட்டிருக்குஅரைக்கணம் கழிந்துதான் எனக்கு அது புரிந்தது.

நான் வெளியே ஓடினேன். வாசலில் குரோட்டன்ஸ் செடியருகே அழுக்கு சுடிதார் போட்டுக்கொண்டு கண்ணீருடன் ராணி நின்றிருந்தாள். என்னைக் கண்டதும்அண்ணாஎன்று அலறியபடி ஓடிவந்தாள்.

சீ யாருடீ அண்ணன்? போடி வெளியேஎன்றபடி அம்மா பின்னால் பாய்ந்து வந்தாள். ”செருப்பாலடி நாயேசொந்தமா கொண்டாடறே..”

அம்மா நீ உள்ள போஎன்றேன்

ஏய் உன்னைய அப்பவே தொரத்தினேன்லபோடீ

அம்மா

தொரத்துடா அந்த சனியன தேவ்டியா பெத்த தேவ்டியாக்குட்டி என்ன மாதிரி சட்டமா வந்து நிக்கிறா பாரு

நான் திரும்பி அம்மாவின் முகத்தை பார்த்து திடமாகஏய் உள்ள போஎன்றேன்

டேய் இது என் வீடுவெளிய போகச்சொல்லுடா அந்த நாய

சீ வாய மூடு….போ உள்ளஎன்று கையை ஓங்கியபடி அம்மாவை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தேன். என் உக்கிரத்தைக் கண்டு அம்மா நடுங்கிவிட்டாள். அப்படியே வாய் திறந்து நின்றவள் கதவைப் பிடிக்க அதன் கிரீச்சிடல் மட்டும் ஒலித்தது.

அருண், பிஹேவ் யுவர்செல்ஃப்என்று உள்ளிருந்து அவசரமாக ஓடி வந்த நீ சொன்னாய். ”அத்தை நீங்க உள்ள போங்க

அந்தாள் செத்தா இவன் ஏன் போகணும்? அவனுக்கும் இவனுக்கும் என்ன சொந்தம்? இவனை வளத்தவ நான்…” அம்மா அரற்றினாள். அவள் குரலும் பேச்சும் குளறின.

அருண் லெட் அஸ் கோஎன்றபடி நீ படியிறங்கினாய். ஏற்கனவே உடைமாற்றி விட்டிருந்தாய்.

சுசி எங்க போறே? நில்லுடீ… ” என்று அம்மா பாய்ந்தாள்நீ போகப்பிடாது.. போனே இனிமே இந்த வாசப்படி மிதிக்கப்பிடாதுஉள்ள வா உள்ள வா சொல்றேன்…” அம்மா கையை விரித்துக்கொண்டு முன்னால் ஓடிவந்தாள்.

நீ திரும்பி அம்மாவைப் பார்த்த பார்வையை, அந்தக்கணத்தில் வெளிப்பட்ட உன்னை நான் என் வாழ்வின் இறுதித்துளி வரை மறக்கமாட்டேன் சுசி. திடமான குரலில்அத்தை நான் என்னைக்குமே இன்னொருத்தர் பேச்சை கேட்டு நடந்துகிட்டதில்லைஎன் மனசாட்சிப்படித்தான் நடப்பேன்…” என்றாய். படி இறங்கிப்போய் பிரமித்து நின்ற ராணியை மெல்ல அணைத்துக் கொண்டாய்வாடி.. காரிலே ஏறு

நாம் காரில் ஏறிக்கொண்டதை அம்மா நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். சட்டென்று பைத்தியம் போல ஏதேதோ கத்தியபடி கீழே இருந்த பூந்தொட்டிகளைத் தூக்கி வீசி உடைக்க ஆரம்பித்தாள்.

நான் காருக்குள் பின்னால் திரும்பிப்பார்த்துஅம்மா— ” என்றேன்

ஒண்ணும் ஆகாதுகொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு படுத்திருவாங்கஎன்றாய் நீ.

காருக்குள் பின் இருக்கையில் உன் மடியில் ராணி தலைபுதைத்து குப்புற விழுந்து கதறி அழுதாள். ”இல்லம்மா இல்லம்மா சரி சரீஎன்று நீ ஆறுதல் சொன்னாய்அதான் அண்ணா இருக்காருல்ல அப்றம் என்ன?” அப்போது நீ ஆயிரம் அன்னைகளுக்கு நிகராக இருந்தாய் சுசி.

அப்பா இப்ப எங்க இருக்கார்?” என்றேன்

வீட்டிலதான் அண்ணா…. நேத்து ராத்திரி ஏழுமணிக்கே அப்பா செத்துட்டார்

எனக்கு ·போன் பண்ணியிருக்கலாம்ல?” என்றேன் அதிர்ச்சியுடன்

போன் பண்ணிட்டே இருந்தோம். நீதான் எடுக்கலை. வீட்டுல யாருமே இல்லை. வீட்டு அட்ரசும் சரியாத் தெரியலை. என்ன பண்றது? யாருமே துணைக்கு வரல்லை. இருட்டிலே பொம்பிளை தனியா போகவேணாம்னு அம்மா சொல்லிட்டா. நானும் அக்காவும் அம்மாவும் அப்பாவை அப்டியே வச்சுகிட்டு ராத்திரியெல்லாம் உக்காந்திருந்தோம்என்றாள் ராணிஅப்றம்தான் நான் காலம்பர எந்திரிச்சு எங்கூட படிக்கிர செல்வி வீட்டுக்குப்போய் உங்கம்மா அட்ரஸை விசாரிச்சுட்டு நேரில வந்தேன்…”

நான் குற்ற உணர்வுடன் பல்லைக் கடித்தேன். அக்ஸிலேட்டரை வேகத்துடன் மிதித்தேன். அப்பா அப்பா அப்பாமரணத்தின்போது ஒரு மனிதர் சட்டென்று தன் முழுமையுடன் நமக்குத் தெரியவருகிறார். நாம் அவரைப்பற்றி அறிந்தவை அனைத்தும் அப்போது தொகுக்கப்பட்டு விடுகின்றன. நான் அப்பாவை இழந்தமைக்காக அப்போது உள்ளூர கொந்தளித்துக் கொண்டிருந்தேன்.

ஏன்? அவர் சாவை காத்திருந்தவன் அல்லவா? ஆம், ஆனால் நேற்று அந்த உறவில் ஏதோ ஒன்று கூடிவிட்டிருந்தது என அப்போது அறிந்தேன். அவரை நான் மீண்டும் கண்டிருந்தால் ஒருவேளை அவர் கையை பற்றி ஏதேனும் சொல்ல விரும்பியிருந்திருப்பேன். அவருடன் எனக்கிருந்த உறவின் கடைசிக் கசப்பும் நேற்று மறைந்துவிட்டிருந்ததுஆம், நேற்று நான் அவரை நினைக்கவேயில்லை. ஆனால் அது உண்மை

அப்பா என்னை பழிவாங்கிவிட்டார் என்று உணர்ந்தேன். அவரை நான் நுட்பமாக அவமதித்தேன். அவர் என் முன் ஒரு கணம்கூட இயல்பாக இருந்ததில்லை. நிலையில்லாதவராக என்ன சொல்வதென அறியாதவராக இருப்பார். அந்த தருணத்தில் நான் திளைப்பேன். அவரை அங்குமிங்கும் மானசீகமாக அலைக்கழிப்பேன். அதற்கு அவர் பழிவாங்கிவிட்டார்

அவரை நான் நேசித்தேனா? நேசித்தேன் என்று அப்போது உணர்ந்தேன். ஏனென்றால் என் மனம் அப்பா அப்பா அப்பா என்றே அரற்றிக்கொண்டிருந்தது. அவரை நேசிப்பது என்னுள் நான் வெறுத்த ஏதோ ஒன்றை நான் அங்கீகரிப்பதற்குச் சமம் என்று நினைத்துக் கொண்டேன் போலும்

காரை தெரருவில் நிறுத்திவிட்டு மாடியேறியபோது பின்னால் நீ ராணியைக் கூட்டிக்கொண்டு வந்தாய். என் எதிரே ஒரு பெரியவர் வந்தார். கையில்லாத பனியன் போட்டு வேட்டி கட்டியிருந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை. பனியன் வழியாக தெரிந்த பூணூல். என்னிடம் உரக்கஎன்னதம்பி நீதானா அந்தாள் பையன்…? இது கூத்தியா குடும்பம்தானே?”என்றார்.

நான் அப்படியே பொங்கிவிட்டேன். ஆனால் மெல்ல அடக்கிக் கொண்டேன். அவர்உன்னைய இங்க பாத்திருக்கேன்..நீதான் அந்தாளோட முதல் சம்சாரத்தோட மகன்னு இப்பதான் என் ஆத்துக்காரி சொன்னா…” என்றார்

நான் அவரைத் தாண்டிச் செல்லும்போது அவர் பின்னாலிருந்துபாத்தா பளபளான்னு இருக்கேஏன் இங்க குடிவய்க்கணும்இது கௌரவமானவா இருக்கப்பட்ட காலனியாக்கும் பாத்துக்கோஎன்றார்.

இன்னொரு ஆசாமிசீக்கு ஒடம்பு…. ராத்திரியே நாத்தம் கெளம்பியாச்சு இப்ப சாவகாசமா வாறே.. இங்க மத்தவா வாழறதா வேண்டாமா?” என்றார்

நான் பொறுமை அறுபட்டு ஆவேசத்துடன் திரும்பிடேய்என்று அவரை அடிக்கப்போனேன்.

நீஅருண்என்று உரத்த கூரிய குரலில் என்னை அடக்கினாய். அந்தக்குரலை எவரும் மீறமுடியாது.

அடிச்சிருவியாடா? டேய் அடிச்சிருவியாடா?” என்று அந்த ஆள் முன்னால் வந்தார் நெஞ்சை தள்ளிக்காட்டிஎங்க அடி பாக்கலாம்ரவுடிப்பயலே

அய்யர் பின்னால் நின்றுஅதான் பாத்தாலே தெரியுதே பொறுக்கின்னு…” என்றார்

நீ சட்டென்று எரியும் கண்களுடன் முன்னால் வந்தாய்மிஸ்டர், உன்னை அடிக்கணுமானா ஆள் வச்சு அடிச்சு ரத்தமும் சதையுமா தெருவிலே தூக்கிப் போட எங்களால முடியும், புரியுதா?” என்றாய்

அந்த ஆள் வாய் திறந்து பிரமித்து நின்றான்.”…கோ எவேஎன்றாய் நீ. உன் சொற்களில் ஒலித்த தீவிரம் என்னையே பிரமிக்கச் செய்தது. அய்யர் அப்படியே தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்

அப்பா தரையில் பாயில் துணிமூடிக்கிடந்தார். மூக்கில் பஞ்சு. மண்ணெண்ணையும் ஊதுபத்தியும் கலந்த வாசனை எழுந்தது. என்னைக்கண்டதும் சுபாவும் சித்தியும் கதறி அழுதார்கள்.

என்ன நாத்தம்?” என்றேன்

எறும்பு வந்திச்சு அதான் மண்ணெண்ணைய உடம்பைச் சுத்தி பூசினோம்என்றாள் ராணி

நான் ஒருகணம் அப்பாவைப் பார்த்தேன். வாய் திறந்து தேய்ந்த பற்கள் தெரிந்தன. பற்களின் அடியில் காவி நிறம். வெளிறிய நோயுற்ற சருமம் மெழுகு போல் இருந்தது. அவரை அதுவரை அத்தனை கூர்ந்து நான் பார்த்ததில்லை. அவரது மூக்குத்தண்டின் வளைவு மேலுதடை விட கீழுதடு எழுந்திருந்த விதம்….. ஆனால் நான் பார்ப்பது அவரைத்தானா?

இது என் அப்பா…. இவரது உடலின் ஒரு துளிதான் நானாக ஆகியது. என்னைப் போன்ற ஒரு முட்டாள். காமம் என்ற புலிவாலைப் பற்றி விடமுடியாது அழிந்த ஒரு ஆத்மா. அவரை தொடவேண்டும் போலிருந்தது. அப்பா என்ன நினைத்தார் என்னைப்பற்றி? ஒருபோதும் அவர் என்னை ஏறிட்டு பார்த்ததில்லை. ஏதாவது வேடிக்கையாகச் சொல்லிவிட்டால் அவரே சிரித்துவிட்டு அரைக்கணம் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து விலகுவார்.

சட்டென்று நிலைமை புரிந்து நான் திரும்பி வெளியே சென்றேன். நீ பின்னால் வந்தாய்எங்க போறே?” என்றாய்

ஏடிஎம் கார்டுகூட எடுக்கலை, பதற்றத்திலே அதை மறந்துட்டேன். விட்டுக்கு போய்ட்டு–”

பணம்லாம் நான் எடுத்துக்கிட்டேன்..” என்று ஒரு கத்தை நோட்டை நீட்டினாய்உடனே மார்ச்சுவரி வேனுக்குச் சொல்லி ஏற்பாடுசெய்

நான் செல்போனுக்காக துழாவி மண்டையை அறைந்தேன்.. ”நான் எடுத்துட்டு வந்தேன்என்று அதையும் நீ நீட்டினாய்.

உன்னை அப்போதுதான் பார்ப்பது போல பார்த்தேன். பின்பு இறங்கி தெருவில் ஓடினேன். செல்போனில் எண் விசாரித்து மார்ச்சுவரி வேனுக்குச் சொன்னேன். அவர்கள் என்னை தெரு சந்திப்பில் நிற்கச் சொன்னார்கள்.

தெருமுனையில் ஒரு சிறு காய்கறிச் சந்தை. புத்தம்புதிய வெண்முள்ளங்கிகள் குவிந்துகிடந்தன. நடுவயது மனைவிகள் ஆர அமர காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார்கள். பேருந்துகள் குமட்டும் புகை கக்கி கடந்துசென்றன. என் நேர் எதிரே செல்போன் விளம்பரத்தில் ஒரு இளைஞன் அவன் அப்பாவிடம் ·போனில் பேசிக்கோண்டிருந்தான். மகன் பிரகாசமான இளைஞன். ஏதோ ரயில் நிலையத்தில் நின்றிருந்தான். அப்பா ஒரு வீட்டின் போர்ட்டிகோவில் செய்தித்தாள் காபிக் கோப்பையுடன் பைஜாமா சட்டை போட்டு அமர்ந்திருந்தார். இதுதான் அப்பா மகன் ஒரு இலட்சிய உறவா? அது எங்காவது இருக்கிறதா?

வேன் வந்து தயங்கியது. ஆம்புலன்ஸ் போன்ற வண்டி. நான் அதை கவனித்தும்கூட அது எனக்காகவே வருகிறது என்று ஊகிக்கவில்லை. ஒருபோதும் அந்த வண்டியுடன் ஓர் தொடர்பு எனக்கு ஏற்படும் என எண்ணியதில்லை. அந்த வெள்ளை உடை சிப்பந்தி என்னை பார்த்து ஏதோ கேட்ட பின்னர்தான் எல்லாம் என் மூளைக்கு உறைத்தது. கையை ஆட்டி ஓடினேன். வேனிலேயே ஏறிக்கொண்டு தெருவுக்குள் சென்றேன்.

மேலே ஏறிச்சென்றபோது அழுகைக் குரல் கேட்கவில்லை. வராந்தா முழுக்க பல்வேறு மனிதர்கள். வீட்டு வாசல்களிலும் சன்னல்களிலும் பெண்முகங்கள். அழுக்குத்துணிவாடை தூசுவாடை மிக்க சிறிய வீடுகளுக்குள் இருந்து டிவி ஒலி எழுந்தது. அய்யர் என்னைக் கண்டதும் மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

சிப்பந்திகள் ஸ்டிரெச்சருடன் படி ஏறி மேலே வந்தார்கள். ”என்னா சார் இம்மாம் படி இருக்குசெங்குத்தா எறக்கணும் போலஎன்றான் ஒருவன் .நான் ஒன்றும் சொல்லவில்லை

இன்னொரு முதிய சிப்பந்திஅல்லாம் ரூல்ஸ் இருக்கு சார், நாங்க ரோட் மட்டத்திலேதான் பாடி தூக்கணும்இப்ப பாருங்க எத்தினி படி”’

என்ன வேணுமோ குடுத்திடறேன்பாஎன்றேன்

அதுக்காகச் சொல்லலைடெட் பாடி பாத்தீங்களா? பத்திரமா எறக்கணும் அதிலே…”

நான்இதான் வீடுஎன்றேன்

பாடி மேலா ·பீமேலா சார்என்றபடி உள்ளே நுழைந்தார். ”இன்னா சார் கிஸ்னாயில் கப்பு வருதுசூஸைடா? அப்பாலே ராயப்பேட்டை ஆஸ்பிடலாண்ட சொல்லு சார்போலீஸ் கேஸ்…”

யோவ், எறும்பு வராம இருக்கறதுக்காக போட்ட சீமெண்ணைசும்மா கத்தாதே

எறும்பாசீக்கு ஒடம்புஸார் டிராப்ஸ் சொட்டும்னு நெனைக்கறேன்….” என்றார் சிப்பந்திஇந்த ஸ்டிரெச்சர்லே கொண்டு போக முடியாது. பிளாஸ்டிக் பேக் ஓணும்அது அவ்ளோ காஸ்ட் ஆவும்இப்ப எதுக்குச் சொல்றேன்னா—”

சார் உங்க பேர் என்ன?” என்றாய் நீ

துலுக்காணம்நாங்க ஆஸ்பிடல் எம்ப்ளாயீஸ்மேடம் யாரு?”

துலுக்காணம் உங்களப் பாத்தா விஷயம் தெரிஞ்சவர் மாதிரி இருக்கீங்கஎல்லாம் முடிஞ்சதுக்குப் பிறகு நான் வேண்டியத செய்ஞ்சிடறோம்நீங்க பாத்து என்ன வேணுமோ எல்லாத்தையும் செஞ்சிடுங்கப்ளீஸ்..”

அவ்ளவுதாம்மா…. நான் பாத்துக்கறேன்உங்க ·பாதராம்மா?”

இல்ல, மாமா

பாவம் சீக்கு ஆளுடேய் அந்தப்பக்கமா போடா. பம்முறான் பாரு

சித்தி மட்டும்தான் மூலையில் படுத்து அழுதுகொண்டிருந்தார்கள். ராணியும் சுபாவும் சுவரில் ஒட்டி பிரமித்த கண்களுடன் நின்றார்கள். அப்பாவை மெல்ல தூக்கி ஸ்டிரெச்சரில் படுக்க வைத்தார்கள். உடல் நன்றாக இறுகியிருந்தது.

சில்லுன்னு ஆகிப்போச்சு சார்ஸ்மெல் வேற வந்தாச்சுஎப்ப போனாரு?”

நீநேத்து சாயங்காலம்…” என்றாய்

அப்பாவை வெண்துணியால் மூடி அந்த துணியை சேர்த்து கட்டினார்கள். முகத்தை மூடி அவரை தூக்கியதும் சித்தி கதறியபடி பாய்ந்து பிடிக்க வந்தாள். நீ அவளை பிடித்துக் கொண்டாய். ராணியும் சுபாவும் கதறியபடி பின்னால் வந்தார்கள்.

நான் வண்டியில் ஏறிக்கொண்டேன். பின்பக்கம் காரில் நீ மட்டும் ஓட்டிவந்தாய். மயானத்தை நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். அது ஒரு சிறிய ஆலை போலிருந்தது. அதன் முன் நாலைந்து வெள்ளை வேன்கள். சிறிய அமைதியான கூட்டம் சிதறி நின்றிருந்தது. ஒரு இளைஞன் மண் தரையில் படுத்து புரண்டு அழ இருவர் அவனை அள்ளி அமரச்செய்ய முயன்றார்கள். அவன் நழுவி நழுவி தரையில் விழுந்து மண்ணை அறைந்து அழுதான். அவனுடைய துயரத்துக்கு மண்ணில் ஒட்டிக்கொள்வதே ஆறுதலாக இருந்தது போல.

நீ காரை நிறுத்திவிட்டு சாவியுடன் வந்தாய். மயானமே உன்னை வேடிக்கை பார்த்தது. அங்கே உன்னைப்போன்ற ஒரு பெண் வருவதில்லை போல. ”துலுக்காணம் சார்என்றாய். துலுக்காணம் ஓடிவந்துசொல்லுங்க மேடம்…” என்றார்

இங்கே என்னென்ன ·பார்மாலிட்டீஸ்னு தெரியல்லைநீங்கதான் பாத்து எல்லாம் செய்யணும்…”என்றாய். ”அது என்னம்மா நாங்க எத்தினி பாத்திருக்கோம்மோ. நீங்க பேசாம அப்பாலே குந்துங்க.. தோ வந்திடறேன்

துலுக்காணமே எல்லாவற்றையும் செய்தார். படிவங்கள் கொண்டுவந்து என்னிடம் கையெழுத்து வாங்கினார். ”ஆயிரத்தி எண்ணூறு ரூவா குடுசார்என்று அதிகாரமாக கேட்டு வாங்கி கொண்டு சென்றார். ரசீதுடன் திரும்பி வந்தார். ஒரு நோயாளியை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்வதுபோல இருந்தது

அப்பாவை அவர்கள் உள்ளே கொண்டு சென்றார்கள்.முடிந்தது என்ற ஒற்றைச்சொல் என் மனதில் எழுந்தது. எத்தனை துயரங்கள் ஏக்கங்கள் அலைக்கழிப்புகள் பதற்றங்கள் வலிகள்…. எல்லாம் இப்படி முடிவதற்காகத்தான். அந்த இடத்தில் இருந்தபோது எல்லாமே மிக மிக சல்லிசானவையாக தோன்றின. ஒன்றுக்கும் ஒரு பொருளும் இல்லை. கனவில் பாம்பைப் பார்த்து பதற்றம் கொள்வதுபோலத்தான் எல்லா உணர்ச்சிவேகங்களும்.

அங்கேயே நாவிதர் இருந்தார். துலுக்காணம்இப்பல்லாம் ஆரும் மொட்டை போட்டுக்கறதில்லை சார்.. சொம்மா ஒரு கத்தை முடிய வெட்டினு போய்னே இருஇன்னா?” என்று அவரே முடிவெடுத்துசாஸ்திரத்துக்கு கட் பண்ணு இன்னாப்பா?” என்று உத்தரவும் கொடுத்துவிட்டார்.

முடியைக் களைந்து வேகமாக சில சடங்குகளைச் செய்தேன். ஐந்து நிமிடங்கள்தான். ”அப்பாலே உங்க சாதி வழக்கப்படி அல்லாத்தையும் சப்ஜாடா பண்ணிக்கோ சார்…” என்றார் துலுக்காணம்.

ஒரு மணிநேரம் காத்திருந்தோம். துலுக்காணம் வராந்தாவில் அமர்ந்து இன்னொரு சிப்பந்தியிடம் பீடி வாங்கி பகிர்ந்து இழுக்க ஆரம்பித்தார். மயானமுற்றத்தில் நின்ற மரங்களிலிருந்து அணில்கள் இறங்கி துள்ளி துள்ளி ஓடி முற்றத்தில் சிதறிக்கிடந்த பொரிகளைக் கவ்வி மீண்டும் மேலேறின. கிச் கிச் என்ற ஒலி. நூற்றுக்கணக்கான கத்திரிக்கோல்கள் சிமிட்டிக்கொள்வதுபோல.

நான் அணில்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை உற்சாகமான பொருளில்லாத வாழ்க்கை. என்ன பொருளை எதிர்பார்க்கிறேன். எல்லா உயிரினங்களையும் போல பிறப்பு, காமம், மரணம். ஆனால் நம்பும்படி ஒரு அர்த்தம் தேவைப்படுகிறது அதற்கு. கடவுள் விதி மறுபிறப்பு பாவபுண்ணியம் சொற்கம் நரகம்….

என்னருகே நீ இறுக்கமாக அமர்ந்திருந்தாய். உன்னை ஓரக்கண்ணால் பார்த்தேன். நீ என் பார்வையை பொருட்படுத்தவில்லை. அணில்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாய். ஒரு அணில் உன்னை நோக்கி ஓடிவந்தது. கும்பிட்டு குந்தி அமர்ந்து படுவேகமாகக் கொறித்தது. நீ சற்றே குனிந்து ச்சு ச்சூ என்றாய். அது நாணல்குலை போன்ற வாலைத்தூக்கி சிச் சிச் சிச் என்று சொல்லி துள்ளி ஓடியது. மலர்ந்த முகத்துடன் இயல்பாக திரும்பிய நீ என்னை பார்த்தாய். உன் முகம் மாறியது. கண்கள் என்னை சந்திக்காமல் திரும்பிக்கொண்டன.

சுசி அப்போது நான் மகிழ்ந்தேன். உன் கோபம் எனக்கு உறுதியான ஒரு ஆதாரமாக இருந்தது, உன் மனதில் நான் இருக்கிறேன். நீ என்னை வெறுக்கவில்லை, என் மீது கடுமையான கோபத்துடன் இருக்கிறாய் அவ்வளவுதான். சுசி, நெடுங்காலமாகவே நீ என்னைப்பற்றிய கனவுகளுடன் வளர்ந்திருக்கலாம். உன் மனதில் இருந்து என்னை அழிக்க உன்னால் முடியாது என அப்போது உணர்ந்தேன்.

எத்தனை அருமையான இடம் ஒரு பிரியத்தைப் புரிந்துகொள்ள என எண்ணினேன். ஆனால் அதுவும் நியாயம்தானே? மரணத்தைச் சொல்லித்தானே காதலர்கள் வாக்குறுதி எடுக்கிறார்கள். அன்பிலும் காதலிலும் அதிகமாகப் பேசப்படும் சொல்லே மரணம்தானே? மரணத்தின் வெறுமையை வெல்ல மனிதன் கண்டுபிடித்தவைதானா அன்பும் காதலும்?

அப்பாவின் அஸ்தியை ஒரு சிறிய டப்பாவில் தந்தார்கள். அதை என்னால் வாங்க முடியவில்லை. அதற்குள் இருப்பது அப்பா என்ற எண்ணம் எழவில்லை, ஆனால் அதிலிருந்து அப்பாவை பிரிக்கவும் முடியவில்லை. நீ என் கையிலிருந்து அதை வாங்கிக் கொண்டாய்

துலுக்காணம் சார்என்றாய்.

அம்மாஎன்று ஓடிவந்தார்

நாங்க காரிலே போய்க்கறோம்…. ரொம்ப தாங்ஸ்ங்கரொம்ப உபகாரமா இருந்தீங்கஇக்கட்டான நேரத்திலே உங்கள மாதிரி ஒருத்தர் வந்தது சாமியே வந்ததுமாதிரிதப்பா நெனைக்க மாட்டீங்களேஎன்று ஐநூறு ரூபாயை நீட்டினாய். ”ஷேர் பண்ணிக்குங்க

என்னம்மா நீயிஎன்று அவர் முகம் மலர்ந்து அதைப் பெற்றுக்கொண்டார்இவ்ளவெல்லாம் ஆரும் குடுக்கிறதில்லை

என்னபரவால்லை நீங்க செஞ்ச உதவி பெரிசில்லியா?”

எங்க டூட்டிம்மா இது

வரேன் துலுக்காணம் சார்வரேங்கஎன்றாய்

நான் காரை ஓட்டினேன். நீ மடியில் கலசத்துடன் அருகே விரைப்பாக அமர்ந்திருந்தாய். சுசி அப்போது என் மனதில் துயரமே இல்லை. வெறுமை காலைப்பனிபோல விலகி மெல்லமெல்ல ஒளி பரவிக்கொண்டிருந்தது. உன்னை ஓரக்கண்ணால் பார்த்தேன். நான் எதையாவது வேடிக்கையாகச் சொல்லியிருக்கக் கூடும். உன் கையில் இருந்த அப்பாவின் அஸ்தி மட்டும்தான் தடையாக இருந்தது.

கார் தெருவை அடைந்ததுநம்ம வீட்டிலேயே குளிச்சுக்கலாம்இந்த வீட்டிலே எடமே இல்லியேஎன்றாய். “ஒரு செகண்ட் நிப்பாட்டுங்கஎன்று பேக்கரி முன் காரை நிறுத்தச் சொன்னாய் இறங்கிப்போய் பிரட்டும் வெண்ணையும் ஜாமும் வாங்கிவந்தாய்.

வீட்டுக்குள் நாம் நுழைந்ததும் மீண்டும் சித்தியும் சுபாவும் அழுதார்கள். ராணி உன்னருகே வந்து தோளைத் தொட்டுக்கொண்டு நின்றாள். நான் நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். அப்பாவின் படம் குங்குமப்பொட்டுடன் மாலைபோடப்பட்டு நாற்காலி மீது இருந்தது. நான் அப்பாவின் படத்தைப் பார்த்தேன். அவர் இருந்தபோது அந்தப்படம் அவரைப்போல இல்லை என்றே தோன்றியிருந்தது. இப்போது அது அவராகவே இருந்தது.

வாடிஎன்று ராணியை அழைத்துக்கொண்டு நீ உள்ளே போய் காபி போட்டுக்கொண்டு வந்தாய். பிரட் துண்டுகளை தட்டில் வைத்து பரிமாறினாய். சுபாவும் சித்தியும் மறுத்தார்கள். ராணி உள்ளேயே தின்றிருந்தாள் என்று வாயைப் பார்த்தாலே தெரிந்தது. ”சாப்பிடுங்கசெத்துப்போனவங்க ஆத்மா சாந்தி அடையணும்னா இருக்கிறவங்க பட்டினி கிடக்கக்கூடாதுன்னு சொல்வாங்கசாப்பிடுங்க அத்தை

சித்திஇல்லம்மாஎன்றாள்.

சாப்பிடுங்க சொல்றேன்என்று நீ அதட்டினாய்ஏய் சுபா எடுத்துக்கப்போறியா இல்லியா?”

மெல்ல சுபாவும் அத்தையும் எடுத்துக்கொண்டார்கள். சாப்பிடும்போது சித்தி விக்கி விக்கி அழுதாள்.

அழுதிட்டே சாப்பிடக்கூடாது அத்தை

சித்தி சட்டென்று கையை விரித்துக்கொண்டு என்னிடம் உடைந்த குரலில் உரக்கதம்பி மூத்தவ உங்க ரத்தமில்லேன்னு விட்டுடாதேஅவளுக்கு யாருமில்லை தம்பீஎன்றாள்

அந்தக் கணத்தில் உன் முகம் சிவந்து தழல் போல எரிந்ததைக் கண்டேன். கடுமையாகவாய மூடுங்க…. என்ன பேச்சு இது? இப்ப அவரு ஏதாவது சொன்னாரா? சும்மா சின்னப்புள்ளைங்க மனசைக் கலைச்சுகிட்டு…. அவதான் அருணோட முதல் தங்கச்சிமுதல் உறவே அவதான் போதுமாஎன்றாய்

சுபா சட்டென்று அப்படியே உன் காலைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள். நீ அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாய். மூன்று பெண்களும் ஓர் அருவியில் குளிப்பதுபோல அழுகையில் நின்றீர்கள்.

நான் எழுந்து வெளியே வந்தேன். எனக்கு ஒரு டீ குடிக்க வேண்டும் போலிருந்தது. தெருவில் இறங்கி நாயர் கடையில் ஒரு டீ சொன்னேன்

அய்யர் கையில் ஒரு பையுடன் வந்தார். என்னைப்பார்த்து சிரித்தபடிடீ குடிக்கிறேளா?” என்றார்

ம்ம்என்றேன்

நான் ஒண்ணும் தப்பா சொல்லல்லைநீங்கதான் சட்டுனு சீரியஸா ஆயிட்டேள்.. அந்த ராஜமாணிக்கம் ஒரு மொரடன்தாசில்தார் ஆபீஸ்ல கிளார்க்குசரியான ஊழல் ஆசாமீன்னு சொல்றா.. அபத்தமா ஏதோ பேசி உங்கள அப்செட் பண்ணி விட்டுட்டான்

பரவாயில்லைஎன்றேன்

ஒண்ணும் கவலைப்படாதீங்கோ நல்ல நேரத்திலே போயிருக்கார்அவருக்கு மோக்ஷம் உண்டுநாப்பத்தொண்ணுந் ஆள் கழிச்சு ஒரு மோட்சதீபம் ஏத்திடுங்கோ…”

சரி

பாப்பா நம்மளை ரொம்ப கோவிச்சுண்டுட்டாநம்மாத்து மாமிக்குக் கூட அதிலே மனஸ்தாபம்பாப்பா யாரு?”

என்னோட முறைப்பொண்ணு

அதுசரிஎன்றார் “பாப்பா ரொம்ப போல்டு.. அந்தாளுக்கு போட்டா பாருங்க ஒரு போடுசெத்தான் நாயிபொண்ணானா அப்டி இருக்கணும். என்ன சொல்றீங்க?”

நான் நடக்க ஆரம்பித்தேன். அவர் என்னுடன் வந்தபடிஉங்கப்பாவை நான் நாலஞ்சு வாட்டி சந்திச்சு பேசியிருக்கேன். தங்கமான மனுஷன்என்றார்

அவர் நேத்தே போயிட்டார்யாராவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கலாமேஎன்றேன்

எனக்கு அல்ஸர்சாப்பிடாம இருந்தா மறுநாள் ஆஸ்பத்திரிதான் வாசம். டெட்பாடிய வச்சுண்டு சாப்பிடவும்படாதுஅதான் செத்துப்போன விஷயமே தெரியவாணாம்னு எங்காத்து மாமிட்டே சொல்லிட்டேன். காலைல பாத்துண்டா போச்சுன்னு பிடி மோருஞ்சாதம் சாப்பிட்டிட்டு ராமா தாசாரதேன்னு போத்தி படுத்துட்டேன்

அவர் தன் வீட்டில் நுழைந்தார். நான் வாசலில் நின்றேன். எழுந்து என் அருகே வந்தாய். நான் மெல்லசுசி நாம கெளம்பலாம். அம்மா என்ன செய்றான்னே தெரியல்லைஎன்றேன்

ஆமா..அவங்கள நெனைச்சா கவலையாத்தான் இருக்குநீ போநான் இங்கியே ராத்திரி தங்கணும்…”

ஏன்?” என்றேன்

பின்ன? மரண வீட்டிலே இவங்களை தனியா விடலாமா? நீ போ..” என்று சொன்னாய். நான் உன்னைப் பார்த்தபடி நின்றேன்சண்டை போடவேணாம். எது சொன்னாலும் இப்ப அத்தைக்கு ஏறாதுஒரு பத்துநாள் போகட்டும். அதுக்குமேலே பேசிக்கலாம். இப்ப அவங்க சொல்றதை மட்டும் கேட்டுட்டு பேசாம படுத்து தூங்கு

கள்ளமற்ற குழந்தைமுகம். ஐஸ்கிரீமுக்க்காக குதித்த அதே சிறுமி. சுசி பெண்ணை ஆண் முகங்களின் நதிபோல பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல.

நான் பெருமூச்சுடன் கிளம்பி கீழே காரை நோக்கி நடந்தேன். என் மனம் எப்படி நெகிழ்ந்திருந்தது என்று அறிவாயா? இந்தச் சொற்களை எல்லாம் நீ வெறும் உணர்ச்சிப் பிதற்றலாகவே எண்ணுவாய்

சுசி சுசி சுசி…. கருவறைவிட்டு வெளியே வரும்போதே பெண் தாயாகத்தான் வருகிறாள் என்று அப்போது புரிந்துகொண்டேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 11