தமிழ்விக்கி தூரன் விருதுவிழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அதற்கு முன் மாலை 3 மணிமுதல் கோவைமணி அவர்கள் சுவடி வாசிப்பது எப்படி- சுவடி எழுதுவது எப்படி என கற்பிக்கிறார். பதிவுசெய்துகொண்ட 30 பேர் அதில் பங்கெடுக்கிறார்கள்.
நான் 12 காலையில் ஈரோடு வந்து மலைத்தங்குமிடம் சென்று அங்கே இரு நாள் இருந்துவிட்டு இன்று காலை கிளம்பி ராஜ் மகால் திருமணமண்டபம் வந்துவிட்டேன். இன்னும் சற்றுநேரத்தில் நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிப்பார்கள் விழா தொடங்கும்
வந்ததுமே இங்கே அரங்குகள் ஒருங்கியிருப்பதைக் கண்டேன். ஒரு நிகழ்வுக்காகக் காத்திருக்கும் அரங்கு ஆழ்ந்த உளஎழுச்சியை அளிக்கிறது. அங்கே என்னவேண்டுமென்றாலும் நிகழலாம். எத்தனையோ விஷயங்கள் பேசப்படலாம். இது ஆய்வாளர்களுக்கான அரங்கு. ஓர் அறிவியக்கவாதி அறிந்துகொள்ளவேண்டிய மாற்றுலகங்கள் இங்கே திறக்கவிருக்கின்றன.
அதைவிட என்னைப்போன்ற ஒருவருக்கு முக்கியமான ஒன்று உண்டு. நவீனத் தமிழிலக்கியத்திற்கு மட்டும் என இப்படி ஓர் அரங்கும் மேடையும் என்றுமே இங்கே உருவானதில்லை. நவீனத் தமிழிலக்கியத்தில் செயல்படும் எத்தனைபேர் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கே அரசியலுக்கு பெரிய மேடைகள் உண்டு. மதத்திற்கு மேடைகள் உண்டு. அதன் ஒரு பகுதியாக, ஓரமாக, இலக்கியம் அமரச்செய்யப்பட்டதுண்டு. அதுவே வழக்கம், அப்பாலொன்றை நவீனத்தமிழிலக்கியம் கண்டதே இல்லை.
விஷ்ணுபுரம் அரங்கும் மேடையும்தான் இலக்கியவாதிகளால், இலக்கியத்திற்காக மட்டும், முதன்முதலாக உருவாக்கப்பட்டவை. ஒரு சொல்கூட வேறெதுவும் பேசப்படுவதில்லை. வேறெவரும் முன்னிறுத்தப்படுவதில்லை. இத்தகைய அரங்கு ஒன்று இவ்வண்ணம் உருவாகி வர இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன. இது இலக்கியத்தின் வெற்றி. இலக்கியத்தின் அறைகூவல். நவீன இலக்கியத்தின் மேல் எளிய அக்கறையாவது ஒருவருக்கு இருக்குமென்றால் பெருமிதம்கொள்ளவேண்டிய நிகழ்வு இது.
இந்த அரங்குகள் அமையத்தொடங்கியபின் பிறர் இதைப்போலச் செய்ய முயன்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் வெல்லவேண்டும் என்றே விரும்பினோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆன உதவிகளையும் செய்தோம். நாங்கள் நீடிப்பதற்குக் காரணம் எந்தவகையிலும் தன்னை முன்வைக்காமல், எதிர்மறை உளநிலைகளுக்குச் செவிகொடுக்காமல் செயல்படும் ஓர் அணி.அதை உருவாக்குவதே மெய்யான சாதனை. அத்தகைய அணியை உருவாக்க தேவையானவை மூன்று. தன்னலமற்ற ஓர் இலக்கு, நட்பை எந்நிலையிலும் முதன்மைப்படுத்தும் போக்கு, திட்டவட்டமான தற்கட்டுப்பாடு.
நவீன இலக்கியம் நீண்டகாலமாகவே பிற பண்பாட்டு -அறிவியக்கத்துடன் தொடர்பற்றதாகவே செயல்பட்டு வந்துள்ளது. வரலாறு, சமூகவியல், பண்பாட்டாய்வுக்களங்களில் செயல்படுபவர்களின் பெயர்களை அறிந்த இலக்கியவாதிகள் அரிதினும் அரிதானவர்கள். சென்றகால நவீன இலக்கியம் ஒருவகையான தனிநபர் எழுத்து மட்டுமே. இன்று இலக்கியம் அந்தக் குறுகலைக் கடந்துவிட்டிருக்கிறது. இன்றைய அறைகூவல் இலக்கியம் அனைத்து அறிவுத்துறைகளையும் இணைத்து முன்னகரவேண்டும் என்பது. அதற்கான மேடை இது.
இந்த அறைகூவலை வாசகர்கள் பெருந்திரளாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். அறிவியக்கத்தின் ஒவ்வொரு களத்திலும் புதியன கற்கும் ஆர்வத்துடன் வந்து குழுமும் இளைஞர்கள் திகைப்பூட்டுகிறார்கள். அவர்களுக்கான எழுத்தை தாங்கள் எழுதுகிறோமா, அதற்குரிய அறிவுத்தயாரிப்புகளில் ஈடுபடுகிறோமா என்று எழுத்தாளர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் ராஜ்மகால் திருமண மண்டபம் சென்னிமலை சாலையில் கவுண்டிச்சிப்பாளையம் என்னும் ஊரில் உள்ளது. அங்கே தாங்களாகவே வர முடியாதவர்கள் பேருந்து நிலையத்திற்கு மிக அருகே உள்ள விஷ்ணுபுரம் அலுவலகத்திற்கு வருவார்கள் என்றால் அங்கிருந்து வண்டியில் இலவசமாக ராஜ்மகாலுக்கு கொண்டு சென்று சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம் . அலுவலகத்தை தொடர்புகொண்டு வண்டிக்கு ஏற்பாடு செய்துகொள்லலாம்(தொ எண்: 9500384307)