பஷீரும், முகைதீனும்

அன்புள்ள ஜெ,

இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்வரிசையில் வைக்கம் முகம்மது பஷீரின் நூலை எம்.என்.காரசேரி
எழுதியிருக்கிறார், தமிழில் தோப்பில் முகமது மீரான் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் முதல் அத்தியாயத்தை Ms-word வடிவில் இணைத்திருக்கிறேன்.
                                                                                                                                    அன்புடன்
                                                                                                                                    மணவாளன்.
எம்.என்.காரசேரி ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.

எம்.என்.காரஸேரி

வைக்கம் முகமது பஷீர்

இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்வரிசை:

     வைக்கம் முகமது பஷீர்எம்.என்.காரசேரி   (மூலம்:மலையாளம்)

                             தமிழில்-தோப்பில் முகமது மீரான்

அத்தியாயம் 1: மனிதன்

சைகாலின்ஸோஜா ராஜகுமாரிஅல்லது பங்கஜ் மல்லிக்குடைய ஏதாவது பாட்டு பேப்பூரிலுள்ள அந்த இடைவழியிலிருந்து நீங்கள் கேட்பீர்கள். ஏறிச்செல்லும் வேளையில் வைக்கம் முகம்மது பஷீர் பாடலில் மூழ்கி, கண்மூடி, வீட்டு முற்றத்திலுள்ள மாங்கோஸ்டின்  மர குளிர்ச்சியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருப்பார். கஷண்டித் தலையில் பொன் மூலாம் பூசிக் கொண்டு மாங்கோஸ்டின் மறைவில் சூரியன். முன்னால் போடப்பட்டிருக்கும் ஸ்டூல் மீது பத்திரிக்கைகளும் இதழ்களும் சிதறிக்கிடக்கின்றன. அருகாமையில் ஃபிளாஸ்கில் சுலைமானி என்று அழைக்கப்படும் பால்விடாத கடும்சாயா.  மடிமீது தீப்பெட்டியும் பீடியும். நீங்கள் வந்ததைத் தெரிந்துக்கொண்டு தலைக்குப் பின்னால் நாற்காலியில் பிணைத்து வைத்திருந்த கைகளை விடுவித்து, இரசிகர்களும் நண்பர்களும்சுல்தான்என்று அழைக்கும் அந்த மனிதர் நிமிர்ந்து உட்கார்கின்றார். இப்போது ரேடியோ கிராமிலிருந்து கேட்ட பாடல் மெலிதாகி பின்னணி இசையாக மட்டும் மாறுகின்றது. 

யாரென்று பார்க்காமல் அன்போடு சொல்கிறார்:

உட்காருங்கள்

உங்களை யாரென்று விசாரிப்பாரென எண்ணியிருந்தீர்களேயானால் உங்களுக்கு தவறு நேர்ந்துவிட்டது.

எங்கிருந்து வருகிறீர்கள்?

நீங்கள் ஊர் பேர் சொல்லி முடித்ததும் வழக்கமான கேள்வி.

உணவருந்தினீர்களா?

பஷீர் தம்மைப் பார்க்க வீட்டில் வருவோர்களிடத்தில் முக்கியமாக விசாரிக்கும் விசயம் அதுதான். பசியிருக்கிறதா? மிகப்பெரிய வாழ்க்கை எதார்த்தம் என்ற நிலையில் பசியைத் தெரிந்த மனிதன் வேறென்ன விசாரிப்பார்.

பல ஆண்டுகளாக கோழிக்கோடு நகரின் அருகாமை யிலுள்ள பேப்பூரில்வைலாலில்அவர் வீட்டுக்கு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், எழுத்தாளர்கள். திரைப்படக்காரர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், மாணவர்கள், யாசகர்கள், பைத்தியக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள், மத புரோகிதர்கள் என பலர், ஆணும், பெண்ணும்பலதரப்பட்ட வயதுடையவர்கள்பல நிலைகளிலுள்ளவர்கள்பல நாட்டைச் சார்ந்தவர்கள் பல மொழி பேசுவோர். 

பஷீர் அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார்.  அவ்வளவு ஆழமான விசயங்கள் ஏதுமில்லை. சாதாரண விசயங்கள், வீட்டு விசயங்கள், நாட்டு விசயங்கள், பட்டினியைப் பற்றி அநீதிகளைப் பற்றி, பெண்கள் எதிர்கொள்ளும் அநியாயங்களை பற்றி, ஆட்சியாளர்களுடைய மோசமான செயல்கள் பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போவார். 

அந்த துறையைச் சார்ந்த யார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொண்டிருப்பார். தார்மீக கோபத்தை எள்ளல் வாயிலாக வெளிப்படுத்துவார். இலக்கியத்தைப் பற்றி அவர் பேசவே மாட்டார். எவரானாலும் அங்கு அவருக்கு இருக்கை உண்டு. கடும் சாயா உண்டு. சம முக்கியத்துவம் உண்டு. உங்களுடைய எந்தச் சங்கடங்களைச் சொன்னாலும் அவர் கவனிப்பார். அவர் அதிகாரமுடையவரோ செல்வந்தரோ இல்லை. அவர் அவரைப் பற்றிச் சொல்வது போல ஒரு சாதாரண எழுத்துத் தொழிலாளி. அங்கே உங்களுடைய பிரச்சனைகளுக்கு நடைமுறை தீர்வு ஏதுமிருக்காது. எனினும் அன்பு மயமான அந்த சூழலும், கவனத்தோடு சொல்வதைக் கேட்பதும், ஆறுதல் நிறைந்த அந்த சொற்களும் உங்களை குளிர வைக்கும். நீங்கள் எழும் போது அந்தத் தளர்ந்த கை ஆசீர்வாத முத்திரையுடன் உயர்கிறது: ‘லோகா ஸமஸ்தர்; ஸுகினோ பவந்து‘; பெண்களுக்காக வேண்டுகிறார்: ‘ தீர்க்க சுமங்கலி பவ பஷீரின் சமஸ்கிருதத் தேர்ச்சி இப்படிப்பட்ட சில நல்ல வசனங்களில் ஒதுங்குகிறது.

இந்த எழுத்தாளருடைய விருப்பமான கலை, இலக்கியமல்ல சங்கீதமாகும். அவர் பாடல்கள் எழுதியதில்லை. பாட்டுக்கு இசை அமைத்ததில்லை. பாட்டுப் பாடியது கிடையாது. ஏதாவது ஒரு இசைக்கருவியை இயக்கியதுமில்லை. இசை இரசிகர் மட்டுமே. எவ்வளவு நேரம் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவருக்கு சோர்வே இருக்காது. பாடகர்களைப் பற்றி ஆவேசமாகப் பேசுவார். பெரும்பாலும் இந்துஸ்தானி பாடகர்களைப் பற்றியதாகும்.

சைகால், பங்கஜ் மல்லிக், திலீப்குமார் ராய், பிங் கிராஸ்பி, பால்ராப்சன், அப்துல்கரீம்கான், சுனான்தேவி, குமாரி மஜும் தாஸ் குப்தா,குர்ஷீர்த், ஜுத்காரே. எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.எச். ஆத்மா போன்றோர் மீது அதிகம் பிரியம். பங்கஜ்உடாஸ், தலத் அஸீஸ் முதலிய இளைஞர்களிடத்திலும் கூட அவருக்கு ஆராதனை உண்டு. பழைய முறையிலான கிராமஃபோனும் இப்படிப்பட்ட ஏராளமான இசைத்தட்டுகளும் எந்த நேரமும் அவரோடு இருந்து கொண்டிருக்கும். பல நாடுகளில் அலைந்து திரிந்திருந்த பஷீர் எப்பவும் அதையெல்லாம் உடன் எடுத்துக் கொண்டு போனார். புதிய ரேடியோ கிராமும் ஸ்டீரியோவும் எல்லாம் சொந்தமாக வைத்திருந்தார். பல நாடுகளிலிருந்து பல மொழிகளில் புகழ்பெற்ற பாடகர்களின் ரிக்கார்டுகளை அவர் சொந்தமாக்கியிருந்தார். புத்தகங்களல்ல, பாடல்கள்தான் அவருடைய சேமிப்பு. பஷீரிடம் அப்படிப்பட்ட விலைமதிப்பற்ற ஒரு சேமிப்பு இருந்தது. பொதுவாக திரைப்படப் பாடல்களைப் பொருட்படுத்துவதில்லை. சங்கீதக் கச்சேரி கோழிக்கோட்டில் எப்போது நடந்தாலும் பஷீர் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டிருப்பார். இலக்கிய அவைகளில் இந்தக் கதை ஆசிரியரைப் பார்க்க முடியாது.

வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்

கடந்த கால் நூற்றாண்டிற்கிடையில் எத்தனையோ முறை பஷீருடைய வீட்டிற்கு நான் சென்றிருக்கின்றேன். ஏதாவது ஒரு நல்ல புத்தகம் அவர் வாசிப்பதை நான் பார்த்ததே இல்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. ஒருமுறை  நீலநிற அட்டைபோட்ட ஒரு தடியான ஆங்கில நூல் அவர் கையில் இருந்தது. மோப்பசாங்கின் ஒட்டுமொத்தக் கதைகள் என்பதை அட்டையைப் பார்த்துப் புரிந்து கொண்டாலும், நான் கேட்டேன்.

என்ன கித்தாபு….?”

கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல்ஆமாவென்று கூறிவிட்டு அதை ஸ்டூல் மீது வைத்து, அதன்மீது ஏதோ பத்திரிக்கையை தூக்கி வைத்தார். நான் ஏதாவது இலக்கியச் சர்ச்சை செய்து விடுவேனோ என்று பயந்திருப்பார். கொஞ்சம் கோபம் மூட்டி விடலாம் என்ற நினைப்பில் நான் கேட்டேன்.

மோப்பசாங் இல்லை? அவருடைய கதைகளை வாசித்திருக்கிறீர்களா?”

சின்ன வயதில் சில நூல்களை வாசித்திருக்கிறேன். உங்கள் வீட்டு கட்டுமானம் எந்த நிலையில் உள்ளது? இலக்கியச் சர்ச்சை தேவையில்லை என்று திசை திருப்பினார்.

எழுத்து விசயத்திலும் இப்படித்தான். எழுதிக்கொண்டிருப்பதை பற்றி எதுவும் பேசமாட்டார். ஏதாவது பேசினாலோ எழுதமாட்டார். எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டால் உடன் நிப்பாட்டிவிட்டு, எழுதிய காகிதத்தை ஏதாவது பத்திரிக்கையில் மறைவாக வைத்துவிட்டு பேசுவதற்கு  உட்கார்ந்து விடுவார். அதைப்பற்றிக் கேட்க வேண்டாம் என்று பொருள். 

தன்னைப் பற்றிய விமர்சனங்களை பஷீர் மிகவும் சகிப்புத் தன்மையுடன் அணுகினார் என்று பலர் சொல்வதுண்டு. அவை அனைத்தும் உண்மையல்ல. சில தரமற்ற விமர்சனங்களைக் கண்டு கொள்ளமாட்டார். அல்லாதவற்றிற்கு நேராக கொந்தளித்தெழுவார். ஆனால் அது அந்த நேரம் மட்டும்தான். ஒரு வெடித்துச் சிதறலில் எல்லாம் முடியும். பகைமை இல்லை; விரோதமில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாகக்கூட பஷீருக்கு நினைவிருக்காது. குடும்ப உறுப்பினர்களிடத்திலும் கடுமையான முறையில் கோபப்பட்டாலும் நிலைமை இதுதான் என்று அவருடைய மனைவி ஃபாபி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மிகவும் தயாள மனமுடையவர் பஷீர். அலட்சியப்படுத்தி அகற்றிவிடுகின்ற அடிமட்ட மக்கள் மீது அவருக்கிருக்கும் மன  இரக்ககுணத்தைப்  பார்க்கலாம். அவருடைய மனநிலையில், விலைமாதுக்களிடத்திலும் திருடர்களிடத்திலும் தன்னுடைய படைப்புக்கள் வாயிலாகக் காட்டியதைவிடவும் கருணை பஷீர் காட்டியிருக்கிறார். ஒரு திருடன் பஷீரை அழைத்திருந்ததுஉஸ்தாதுஎன்றாகும். பல நாட்களிலும் அவன் பஷீரின் வீடான வைலாலுக்கு செல்வான். கை நீட்டம் வாங்குவதற்கு. பஷீர் ஒரு ரூபாய் துட்டு எடுத்துக் கொடுப்பார். ‘சுகமான திருடல்‘- ஆசீர்வதிப்பார். திருடனின் தலைக்கு நேராக ஆசீர்வதிப்பதற்கு கை நீண்டு செல்லும். இச்செயலை திருடர்களை உருவாக்கிய சமூகத்தை விமர்சனம் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம். மானிகளாக சமூகத்தில் நடமாடும் பல திருடர்களை எள்ளல் செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அந்தத் திருடனின் உள்ளிலும் ஒரு மனித ஜீவன் குடியிருக்கிறது. அதை பிறருக்கு நினைவூட்டுவதற்காகவுமிருக்கலாம். அன்பால் அந்த  திருடனின் உள்ளுக்குள்ளிருக்கும் மனிதனை மீட்க ஆர்வம் காட்டுவதாவுமிருக்கலாம். சமூகம் உருவாக்கிவிட்ட சரிதப்புகளின் வெற்றிடத்தை எடுத்துக் காட்டுவதாகவுமிருக்கலாம்.

பஷீருக்கு நல்லமுறையில் உடை அணிய விருப்பமிருக்கவில்லை. எளிமையானதும் ஆடம்பரமற்றதுமான சொந்த வீட்டிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் வேட்டி மட்டும் உடுத்திக்கொண்டு தான் உட்கார்ந்து கொண்டிருப்பதும் நடப்பதும். ஏராளமான புகைப்படங்களில் பதிவான அவருடைய உருவமும் இப்படித்தான். எனக்கு ஆடை அலங்காரங்களில் கொஞ்சமும் ஆர்வமில்லை என்று ஒரேயடியாக சொல்லிவிடுவார். ஜிப்பா சட்டை அணிந்து வீட்டிலிருப்பதைப் பார்த்ததே இல்லை. நிர்வாணத்தை அணிந்திருப்பதில்தான் மோகம். இருப்பினும் வேட்டியை அணிந்ததுபோல காட்சி தருவார் அவ்வளவுதான். உலகத்தின் பல பகுதிகளிலிருந்து கடிதங்கள் வரும். இரசிகர்களான பெண்களின் கடிதங்களைப் பற்றி எப்பவும் சொல்வதுகாதல் கடிதம்என்று. அவற்றிற்கிடையில் காதல் கடிதங்களுக்குப் பஞ்சமிருக்காது. எல்லாம் வெளிப்படையாக மனைவியும் பிள்ளைகளும் கேட்கும்படி சொல்வார். இதற்கெல்லாம் முறைபோல் பதில்போட்ட கிஸ்ஸாவையும் விளக்குவார். இவரிடம் எதையும் மறைப்பதிற்கில்லை. செய்ததும் சொன்னதும் நினைத்ததும் எல்லாம் வெளிப்படையாகத்தான். மிகவும் நெருங்கிய உங்கள் நண்பர் உங்களிடம் சொல்ல விரும்பாத இரகசியங்களைக் கூட பஷீர் உங்களிடம் சொல்வார்.

பஷீர் வெடுக்கென்று சிரிக்கமாட்டார். தமாஷ் பேசுவதாக நடிப்பதுமில்லை. உண்மையில் அவர் தமாஷல்ல சொல்வது. தமக்கே உரிய முறையில் விசயங்களைச் சொல்கிறார். அந்தக் குரலுக்கே சொற்களால் விளக்க முடியாத ஏதோ ஒரு நகைச்சுவைக் குணமுண்டு. கை அசைவுகளும் முகபாவனைகளும் சிறு நடிப்பும் தழுவலும் சேர்ந்த வெளிப்படுத்தல். அவருடைய முகத்தில் அந்த நேரம் ஒரு சிறு புன்னகையைப் பார்க்கலாம். புது சொற்களும் புது சொல்முறைகளும் திடீரென்று வடிவமெடுப்பதைப் பார்க்கும் பொழுது நீங்கள் சிரித்துவிடுவீர்கள்வயிறு வலிக்க !

பஷீர் எப்போதாவதுதான் கூட்டங்களுக்குச் செல்வார். ஒரு தடவை கோழிக்கோட்டில் ஒரு அவையில் வைத்து ஏதோ துவக்கவிழா நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டு சொன்னார்: “கருணாநிதியான அல்லாஹு அனைவருக்கும் சாந்தியும் சுகமும் தரட்டும். நான் இந்த அவையில் பெண்களுக்கு அதிகம் அழகு கிடைக்க வேண்டுகிறேன்.” அடுத்த கணம் சொன்னார்: “ஆண்களுக்கு இப்போது இருக்கும் அழகெல்லாம் போதும்.”

1985 ஷாபானு சர்ச்சை நடந்து கொண்டிருந்த நேரம் ஷரிஅத் விவாதங்கள் எங்கும் நடைபெறுகின்றன. ஷரீஅத்தை தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் ஆண்கள் காட்டும் அநீதிகளைப் பற்றியும் பேசுவதற்கிடையில் சொன்னார். “இப்படிப்பட்ட ஆண்களுடைய கல்யாண எந்திரத்தை வெட்டிக் கழுத்தில் கட்டி தொங்கவிடனும்.”

தொலைக்காட்சிக்காரர்களுக்காக  நடைபெற்ற  ஒரு தேர்காணலில் ஃபிரிட்ஜைப் பற்றி பேசுவதற்கிடையில் வாஷிங்மெஷின் பற்றி பேசவேண்டிய சந்தர்ப்பத்தில் பஷீர் சொன்னது: “சலவை ஃபிரிட்ஜ்என்று.

புகைப்படக்காரர்களுடைய தொல்லையைப் பற்றிய அவருடைய கமன்ட்போட்டோ எடுத்தெடுத்து என்னுடைய முகம் தேய்ந்து விட்டது.”

பஷீர் இறை நம்பிக்கையுடையவராக இருந்தார். நான் முஸ்லீம் என்று இடையிடையே சொல்வார். ஆனால், ஏதாவது மதச் சடங்குகளில் அவருக்கு ஆர்மிருந்ததா என்பது சந்தேகம். அவர் அப்படி ஏதாவது சடங்கு செய்ததாகப் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. நேசத்தைப் பற்றித்தான் எப்போதும் பேசுவார். கருணாநிதியான அல்லாஹு என்று திரும்ப திரும்ப சொல்வார்.

எந்த நேரமும் அவர் நினைவு கூர்வதும் பேசுவதும் மரணத்தைப் பற்றியேயாகும். அது இன்று நேற்று அல்லது அதற்கு முந்தைய நாள் துவங்கியதல்ல. முன்னமே உண்டு. சொந்தம் வாழ்க்கையின் பிரபஞ்சங்களான எல்லா பிரபஞ்சங்களுடைய அழிவைப் பற்றி, அந்த நித்திய சத்தியத்தின் கவலையை எண்ணி பஷீர் எப்போதும் மன வேகமுடையவராக இருந்தார். பேச்சைத் துவங்குவது பெரும்பாலும் மரணத்தைப் பற்றி சொல்லியபடியாகத் தானிருக்கும். இடையிடையே அங்கேயே திரும்பி செல்வார். அவர் நிரந்தரமாக திருப்பி திருப்பிச்சொல்வது நேரம் எப்போதென்றில்லை. யார் எப்போது இறந்து போவர் என்று தெரியாது. கருணாநிதியான அல்லாஹுவின் கஜானாவில் மட்டும் முடிவற்ற நேரமிருக்கிறது.

மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கையை அவர் நம்பியிருந்தார். அது பற்றிய விளக்கங்கள் ஒருபோதும் சர்ச்சைக்கான விசயமாயிருக்கவில்லை. ஆசை யூட்டும் சொர்க்கத்தில்ஆர்வமிருப்பதாகவோ, பயமூட்டும் நரகத்தில் பயப்படுபவராகவோ பஷீர் சொல்லிக்கேட்டதில்லை. என்றும் எப்பவும் எல்லா இறந்த ஆத்மாக்களுக்கும்சாந்திகிடைக்க வாழ்த்துச் சொன்னார்.

அந்த தயவும் அன்பும் மனிதர்களுக்காக மட்டுமுள்ளதல்ல. பஷீர் சாயா குடித்துவிட்டு குவளையை கவிழ்த்தி வைப்பதை பலதடவை பார்த்திருக்கிறேன். ஒரு தடவை நான் கேட்டேன்.

எதுக்காக குவளையை கவிழ்த்தி வைக்கிறீர்கள்?”

கொஞ்சமாவது அறிவு இருக்கா? பொன்னு சாரே. இந்த குவளையில் கொஞ்சம் சாயா மிச்சமிருக்கும். எறும்புகள் வந்து விழுந்து செத்துப்போகும். அதை தவிர்க்கத்தான் கவிழ்த்தி வைக்கிறேன்.”

என்னுடைய நினைவில் தெளிவாக நிற்கின்ற ஒரு நிகழ்ச்சி. நான் வீட்டுக்குச் செல்லும்போது பஷீர் வீட்டு முற்றத்தில் நின்றுக்கொண்டு உரக்கக் கத்துகிறார். அவர் முன் ஒரே மகள் ஷாஹினா. பிள்ளைகள்ட்டாட்டாஎன்று அழைக்கும் தந்தையாருக்கு என்ன நிகழ்ந்துவிட்டது? என்னைப் பார்த்தும் அவருக்கு எந்தவித மாற்றமும் இல்லை. கூப்பாடும் கத்தலும் நிற்கவில்லை. நான் கேட்டேன்.

என்ன விஷயம்….?”

மகள் சிரித்தபடி சொன்னாள்.

இந்த ரோஜா செடியிலிருந்த புழுவை நான் கீழே தட்டிப் போட்டேன். அதற்காகத் தான் இந்த ரகளை.

எனக்குப் புரியவில்லை. வீட்டில் செய்வதுபோல் விடுதலைப் போராட்ட வீரனாக கிடந்த சிறையிலும், மனநோயாளியாக கிடந்த மனநோய் மருத்துவமனையிலும், பூந்தோட்டங்கள் உண்டாக்குபவர் பஷீர். அவருக்கு விருப்பமான ஒரு சொல்தான் பூங்காவனம்‘.  மகளுக்கும் இது விஷயத்தில் நல்ல ஆர்வமுண்டு.

மகள் சொன்னாள்.

ட்டாட்டா சொல்கிறார். ரோஜாச்செடி உனக்கு காண்பதற்கு

என்பது போல் புழுவுக்குத் தின்பதற்கும் உள்ளது. அதைத்தட்டிக்கீழே போடுவதற்கு உனக்கு அதிகாரம் தந்தது யார்?

சில வருடங்களுக்கு முன், நாங்கள் இருவரும் பேப்பூர் மார்க்கெட்டிற்கு போனோம். மீன் வாங்குவதற்கு; வீட்டிலிருந்து

இறங்கும்போது நான் நினைவுப்படுத்தினேன்: செருப்பு போடல்லியே.

உடன் பதில் வந்தது. எனக்கு செருப்பு இல்லை.

அப்போது தான் எனக்கு நினைவு வந்ததுஇவர் செருப்பு அணிந்து பார்த்ததில்லையே. பல ஆண்டுகளுக்குப்பின் அதுபற்றி பிறகு வித்தியாசமான ஆழமான குரலில் பஷீர் பதிலுரைத்தார்

இந்த பூமியில் செருப்பு போட்டு மிதிப்பதற்கு சங்கடமாக இருக்கிறது. இத்தனை காலமும் இல்லை போட்டதே இல்லை.

தமாஷும் உண்மையும் வகைப்படுத்திப் பார்க்க முடியாத முறையிலிருக்கும் அவருடைய பேச்சும், செயலும்.

ஒரு தடவை நான் அவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது கொஞ்சம் கலர் புகைப்படங்கள் என்னிடம் காண்பித்தார். பஷீர் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ரூபாய் நோட்டுகள் கொடுக்கின்ற காட்சிகள். விளக்கம் தந்தார். யாருடைய மனைவியோ, பிள்ளைகளோ கிடைத்த பணத்தை முழுதும் கிடைத்தது என்று இன்று வரை ஒப்புக்கொண்டிருக்கிறார்களா? ஆதி புராதனமான விசயம் இது. என்னிடம் தெளிவுகள் உள்ளன. புரிஞ்சுதா? பேசாம இரு.

இப்படிப்பட்ட நடைமுறை நகைக்சுவைகளுக்கிடையில் அவர் காரியமான முறையில் தன்னைச் சந்திக்க வருகின்ற பேய்களைப் பற்றியும் பேசுவார். உண்மையும் உண்மையல்லாததுமான விசயங்களுக்கிடையிலான உரையாடல் பற்றியும் நேரில் பார்த்தது போல் விளக்குவார். விசயம் உண்மையென ஆணையிடுவார்.

ஒரு தடவை என்னிடம் சொன்னது, முகம்மது நபி தன்னைப் பார்ப்பதற்காக வந்தாரென்று!

விளக்கம்.

நபி மட்டுமல்ல, கேட்டீங்களா, அலியும் அவருடன் வந்திருந்தார். அலி யாரென்று தெரியுமா? அவருடைய மகள் பார்த்திமாவின் கண்ணான மணவாளன். இருவரும் சேர்ந்து வந்தார்கள். கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு அவர்கள் போனார்கள்.

நான் கேட்டேன்.

அவர்களுக்கு சுலைமானி கொடுத்தீங்களா?

கொடுத்தேன்.

அவர்கள் வந்ததற்கு ஏதேனும் அடையாளமுண்டுமா? உடன் அவர் சாய்வு நாற்காலிக்கு வலப்பக்கமுள்ள பனீநீர் செடியை சுட்டிக்காண்பித்தார். இரண்டு செடிகள். ஒன்றில் அழகான ஒரு சிகப்பு பூ மலர்ந்து நிற்கின்றது. இரண்டாவது செடி வாடி கருகிப்போய்விட்டது.

பாத்தீங்களா, இது இரண்டும் அவர்கள் நட்டது. பூவிருக்கும் செடி நபி நட்டது. அடுத்தது அலி நட்டது. புரிஞ்சுதா சாரே? பேசாம போ…!

இப்படியான விசயங்கள் சொல்லி வந்த ஒரு சந்தர்ப்பத்தில் நான் கேட்டேன். பஷீருக்கு பைத்தியம் இப்போது உண்டா?

கொஞ்சம் பைத்தியம் உண்டு என்று எண்ணிக் கொள். ஆனால், நான் சொல்வது உண்மை. நீ நம்ப வேண்டாம். நான் கண்ணால் பார்த்ததல்லவா?

ஆழ்ந்து எதையோ சிந்தனை செய்தபடி தொலைவில் கண்ணை நட்டுக்கொண்டு சுற்றுச்சூழலை மறந்து பஷீர் சாய்வு நாற்காலியில் கிடப்பதை அபூர்வமாக பார்த்திருக்கிறேன். பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும்போது  இதே பாவனைதான். வெளிஉலகம் என்று ஒரு உணர்வுகூட அவருக்கு இல்லை என்று தோன்றும். அந்தக் காட்சியை காணும் போதெல்லாம் நான் எண்ணுவதுண்டு. இமய மலையிலும் காசியிலும் காஷ்மீரில் தால் தடாகத்தின் கரையிலும் வட இந்தியப் பாலைவனங்களிலும், ‘அஹம் பிரம்மாஸ்மி‘ (நாந்தான் பிரம்மம்) என்று உருப்போட்டுக் கொண்டு வாழ்கின்ற சன்னியாசியாகவும் அனல் ஹக் (நாந்தான் சனாதன சத்தியம்) என்று உருப்போட்டு வாழ்கின்ற சூஃபியாகவும் வாழ்ந்த தனிமையான இளமைக்காலத்தைப் போன்று இன்று மண வாழ்க்கைக்கு திரும்பி முதுமைக் காலத்திலும் இந்த மனிதன்  சூஃபியாகவிருக்கலாம்.

நான் எண்ணுகிறேன். உலக உறவுகளின் பொருளின்மையில் உணர்ந்திருக்கலாம், தனிமையின் சோகத்தைச் சுமந்து பஷீர் நடந்து சென்றது. முடிவின்மையை நோக்கி. சோகராகத்திற்கு செவியுற்றுக் கொண்டிருந்த பாவம் அந்த மனிதனின் சிரிப்பு அன்பால் துலங்குவதாக இருக்கலாம். அங்கு நன்மையின் கதைகள் மட்டும் மலர்வது இயற்கை.

நள்ளிரவில் அவரோடு உட்கார்ந்து பாட்டுக் கேட்கும்பொழுது பல தடவை அவர் எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார். சோகந்தான் கலையாவது, உண்மையான கலை சங்கீதமாகும். அதற்கு மட்டுமே சோகத்தின் தனி அச்சுவடிவமாக இருக்க முடியும். அதுதான்  நாத பிரம்மம். சங்கீதந்தான் ஈஸ்வரன்இறைவன்.

உள்ளுக்குள் பெரிய அளவில் தனிமைப்பட்டவராகவும் கவலையுடையவராகவுமிருந்தார். பஷீர் அகிலத்தையும் படைத்த இறைவனைப் பற்றிய சிந்தனை அவருக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். பிரார்த்தனையைப் பற்றி பேசும்போதெல்லாம் அடிக்கடி சொல்வார். நான் பிரார்த்திப்பதே இல்லை. பிரார்த்திப்பதற்கு என்ன இருக்கு? எல்லா விசயமும் அவருக்குத் தெரியும். முடிவற்ற பிரார்த்தனை தான் வாழ்க்கை. எல்லா சூஃபிகளைப் போன்று பஷீரும் அன்பின், சங்கீதத்தின் நகைச்சுவையின் வாயிலாக வாழ்க்கையின் பொருள் தேடி அலைந்தவர். சோகம் நிறைந்ததும் தனிமையுமான அந்தப் பாதை உலக வாழ்க்கைக்கு மத்தியிலும் நல்லவரான அந்த மனிதருக்கு வாழ்க்கையின் பொருள் தெளிவாகக் கிடைத்தது என்று நான் எண்ணுகிறேன்.

———————

இந்திய இலக்கியச் சிற்பிகள் : வைக்கம் முகம்மது பஷீர் நூல் வாங்க

முந்தைய கட்டுரைதூரன் விழா இசைமரபு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜெயராமன் ரகுநாதன்.