பெங்களூரில் புக்பிரம்மா அமைப்பு நடத்தும் இலக்கியத் திருவிழாவுக்கு 8 ஆம் தேதி மாலை கிளம்பி நள்ளிரவில் வந்து சேர்ந்தேன். பெங்களூரில் 20 டிகிரி வரை குளிர் இருக்கும் என நடுங்கியபடி அறிந்தேன். செயிண்ட் ஜான் ஆடிட்டோரியத்தில் விழா. அங்கேயே தங்குமிடமும். படுத்து நீண்டநேரம் தூக்கம் வரவில்லை. காரணம் விமானத்தில் ஒரு காபி சாப்பிட்டேன். வேறு ஒன்றுமே சாப்பிடுவதற்கில்லை. எல்லாவற்றிலும் சீஸ். நவீன சீஸ் என்பது வனஸ்பதியின் மாறுவேடம் என்று உணவுநிபுணர் சொல்கிறார்கள். எல்.டி.எல்!
காலையில் எம்.கோபாலகிருஷ்ணனும் சாம்ராஜும் வந்து என்னை எழுப்பும்வரை தூங்கிக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். இசை, சுனீல்கிருஷ்ணன் . தமிழில் எழுதும் மிகப்பெரும்பாலானவர்களுக்கு அழைப்பு உண்டு என்று தெரிந்தது. என் தத்துவ வகுப்பு அவசரத்தில் நிகழ்ச்சிநிரலையே நான் பார்க்கவில்லை. என் நிகழ்வு பற்றி மட்டுமே தெரிந்துகொண்டேன்
நண்பர்களுடன் சென்று காபி குடித்துவிட்டு வந்தேன். தமிழ்ப்பகுதியின் ஒருங்கிணைப்பாளரான பாவண்ணன் வழக்கமான தடுமாற்றத்துடனும் மாறாப்புன்னகையுடனும் அங்கே நின்றிருந்தார். சீனிபோடாத காபி இல்லை. ஆகவே சீனி போட்ட காபி.
குளித்து முடித்து காலையுணவுக்கு சென்றேன். இட்லிதான் சரிவரும் என அதை தெரிவுசெய்தேன். ஆனால் நேற்றைய என் கட்டுரையை படித்துவிட்டு சுசித்ரா சர்க்கரைப் பொங்கல் கொண்டுவந்திருந்தார். அதை நண்பர்களுக்கும் பரிமாறினேன்
கே.சச்சிதானந்தன் வந்து தங்கியிருப்பதை மலையாள எழுத்தாளர் சுபாஷ் சந்திரன் சொன்னார். நேரில் சென்று ஓரிரு வார்த்தை பேசவேண்டியது மலையாள மரபு. இதெல்லாம் அங்கே ஒழுங்காகக் கணக்கு வைத்திருப்பார்கள். சச்சிதானந்தன் குளித்துவிட்டு விழாவுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். சற்றுநேரம் பேசிவிட்டு அங்கிருந்து அவருடனேயே கிளம்பி அரங்குக்குச் சென்றேன்.
முதல் அரங்கு துவக்கவிழா. சச்சிதானந்தன், (மலையாளம்) எச்.எஸ்.சிவப்பிரகாஷ் (கன்னடம்), ஓல்கா (தெலுங்கு) மற்றும் விவேக் ஷான்பேக் (கன்னடம்) ஆகியோருடன் தமிழுக்காக நான்.
தொடக்கவிழா ஐம்பது நிமிடம். எனக்கு கிடைத்த நேரத்தில் சுருக்கமாக தென்னிந்திய இலக்கியம் பற்றியும் தமிழிலக்கியம் பற்றியும் பேசினேன். என் உரையில் ஐந்து நிமிடத்தில் தமிழிலக்கியத்தின் பொதுவான போக்குகளை வகுத்துரைத்து, சில பெயர்களையும் சொல்லவேண்டும் என்பது என் எண்ணம்.
இப்போதெல்லாம் பெரிய சிக்கலில்லாமல் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஆனால் இப்படி இளம் எழுத்தாளர் பெயர்களின் பட்டியலைச் சொல்லும்போது எப்போதுமே ஒரு தத்தளிப்பு வரும், மேடையில் சொல்லும்போது சில பெயர்கள் மறந்துபோகும். பெரும்பாலும் மறந்துவிடுவதுதான் முக்கியமான பெயராகவும் இருக்கும். இந்த மேடையில் தமிழ்ப்பிரபாவின் பெயர் விடுபட்டுவிட்டது. வாசு முருகவேலின் பெயரும். பேச்சின் முடிவில் நான் ஆங்கிலத்தில் பேசியவற்றையே மலையாளத்திலும் தமிழிலும் திரும்பச் சொன்னேன்.
அதன்பின் வெளியே வந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த விழாவில் முதல்முறையாக ஒன்றைக் கவனித்தேன். என் பெயரும் படைப்பும் தெலுங்கு, கன்னட எழுத்தாளர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட எழுத்தாளர்கள் வந்து பேசிக்கொண்டே இருந்தனர். காரணம், இந்த மொழிகளில் என் படைப்புகள் வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்றிருக்கின்றன என்பதுதான். தெலுங்குக்காக பாஸ்கர் அவினேனி, அனில் சர்வப்பள்ளி ஆகியோருக்கும் சாயா பதிப்பகத்தாருக்கும் நன்றி சொல்லவேண்டும். கன்னடத்திற்காக நாராயணாவுக்கு.
கன்னடத்தில் அறம் கதைகள் அக்டோபரில் வெளியாகின்றன. இவ்வாண்டே ஏழாம் உலகம் வெளியாகிறது. தெலுங்கில் நெம்மிநீலம் நாளை வெளியிடப்படுகிறது. ஏழாம் உலகமும், இன்னொரு சிறுகதை தொகுதியும் இவ்வாண்டு வெளியாகும்.
தொடர்ச்சியான சந்திப்புகள், அளவளாவல்கள். அரங்குகளில் அமர்ந்து கேட்டது குறைவுதான். காரணம், தெலுங்கு வாசகர்களும் நிறைய வந்திருந்தனர். பெங்களூரில் தெலுங்கர்கள் அதிகம் என நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் வந்து பேசி படமெடுத்துக்கொண்டே இருந்தார்கள். ‘தமிழை விட தெலுங்கிலே நெறைய ஃபேன்ஸ் இருக்காங்க போல” என்று சுனீல் கிருஷ்ணன் சொன்னார்.
இரவு ஆறு மணிக்கு அறைக்கு வந்தோம்.எட்டுமணி வரை தேவதேவனுடனும், ஏ.வி.மணிகண்டன், விஷால்ராஜா ஆகியோருடனும் பேசிக்கொண்டிருந்தேன். நேற்று சரியாகத் தூங்காமையால், பகல்தூக்கமும் இல்லாமையால் களைப்பு இருந்தாலும் பேச்சின் வேகத்தில் ஒன்றும் தெரியவில்லை. இலக்கிய விழாச் சந்திப்புகள் எப்போதுமே ஊக்கமூட்டுபவை. பெங்களூரில் இரண்டு பெரிய இலக்கியவிழாக்கள் நிகழ்கின்றன, இது தென்னக இலக்கிய விழா. அடுத்தது சர்வதேச இலக்கிய விழா. இனிய தட்பவெப்பம். உற்சாகமான ஒரு நாள்.
என் உரையின் சுருக்கமான தமிழ்வடிவம்
அனைவருக்கும் வணக்கம். அமெரிக்காவில் ஒரு பேட்டியில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று. நான் இரண்டுமொழிகள் மிக நன்றாகத் தெரியும், ஆங்கிலத்தில் சமாளிப்பேன் என்று பதில் சொன்னேன். ஆச்சரியத்துடன் எவ்வாறு இரண்டுமொழிகள் தெரியும் என்று கேட்டனர். என் தாய்மொழி மலையாளம், எழுதும் மொழி தமிழ் என்று பதில் சொன்னேன். அது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால் நமக்கு இது வியப்பூட்டுவது அல்ல. தென்னகத்தின் யதார்த்தம் இது. இந்த அரங்கில் இருப்பவர்களிலேயே எம்.கோபாலகிருஷ்ணனின் தாய்மொழி கன்னடம். இன்னொரு எழுத்தாளரான சு.வேணுகோபாலின் தாய்மொழியும் கன்னடம். இங்கிருக்கும் எங்கள் பெருங்கவிஞரான சுகுமாரனின் தாய்மொழி மலையாளம். நெடுங்கால இடப்பெயர்வுளால் நம் ஒவ்வொரு பகுதியும் பன்மொழித்தன்மை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது.
இதுவே தென்னகப் பண்பாடு. தென்னகத்திற்கென ஒரு தனிப்பண்பாடு உண்டு. நாம் ஒரு தனிப் பண்பாட்டுத்தேசம். பெர்னாட் ஷா சொன்னார், அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகள் என்று. நாம் ஐந்து மொழிகளால் இணைக்கப்பட்ட ஒரு தேசம். இந்த தென்னக இலக்கியவிழாவை முன்னெடுக்கும் புக்பிரம்மா அமைப்புக்கு என் வாழ்த்துக்கள்.
என் மொழியின் இலக்கியத்தின் போக்குகளைப்பற்றி சில சொற்கள் சொல்லும்படி சொன்னார்கள். தமிழில் இரண்டு போக்குகளின் கீழிறக்கமும், இரண்டு போக்குகளின் மேலெழலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்வேன். பின்நவீனத்துவம் கீழிறங்கிவிட்டது. இன்று எந்த குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரும் தன்னை பின்நவீனத்துவர் என்று சொல்லிக்கொள்வதில்லை. தலித் இலக்கியம் பின்னகர்ந்து வருகிறது. தலித் இலக்கிய முன்னோடிகளான மூத்த படைப்பாளிகளே தங்களை அவ்வாறு அடையாளப்படுத்தலாகாது என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இரு போக்குகள் மேலெழுகின்றன. ஒன்று, மையப்போக்கு. அதை நான் நுண்மையின் அழகியல் என்பேன். இன்றைய இளையதலைமுறை நவீன உலகில் வாழ்கிறது. அதற்கு வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடில்லை. அரசியலார்வகங்ளும் பெரிதாக இல்லை. அதிநவீன நுகர்வுக்கலாச்சாரமும், பெருகிவரும் உயர்தொழில்நுட்ப உலகமும்தான் அதன் பிரச்சினை. அது உருவாக்கும் உறவுச்சிக்கல்கள், ஆளுமைச்சிக்கல்களே அவர்களின் பேசுபொருட்கள்.
அவர்கள் அதற்கான அழகியலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது பல அடுக்குகள் கொண்டது அல்ல. சிக்கலானதும் அல்ல. ஆனால் மிகமிக நுட்பமான கூறுமுறையும், பூடகமான சந்தர்ப்பங்களும் கொண்டது. மிக உள்ளடங்கியது. கடிகாரம் பழுதுபார்ப்பவரின் கருவி போல என்று உவமை சொல்லலாம். மிகச்சிறிய, மிகநுணுக்கமான ஒன்று. அந்த அழகியலை முன்வைக்கும் இளையபடைப்பாளிகள் என்று சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சி.சரவணகார்த்திகேயன், அனோஜன் பாலகிருஷ்ணன், சுஷீல்குமார் என பலரை குறிப்பிடமுடியும்.
என் முன்னோடிகளான படைப்பாளிகளாகிய சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் கற்பனாவாதத்திற்கு நவீன இலக்கியத்தில் இடமில்லை என்னும் கொள்கை கொண்டிருந்தனர். கற்பனாவாதத்தின் அடிப்படையான உயர் இலட்சியவாதம் மீது கொண்ட அவநம்பிக்கையால்தான் நவீன இலக்கியம் உருவாகியது என்றனர். ஆனால் அவர்களின் சமகாலத்திலேயே மாபெரும் இலட்சியவாதியும் கற்பனாவாதியுமான வைக்கம் முகமது பஷீர் எழுதிக்கொண்டிருந்தார்.
இன்று சில படைப்பாளிகள் பஷீரை தங்கள் ஆதர்சமாகக் கொண்டிருக்கிறார்கள். உயர் இலட்சியவாதமின்றி உயர் இலக்கியம் இல்லை என நினைக்கிறார்கள். ஆன்மிகமான அடிப்படைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆகவே அவர்களின் அழகியல் கற்பனாவாதம் சார்ந்ததாக உள்ளது. அதை நவீன கற்பனாவாதம் என்பேன். இன்னும் குறிப்பாக ஆன்மிகக் கற்பனாவாதம் என்பேன். அந்த வகை எழுத்துக்களை அஜிதன் எழுதி வருகிறார். இன்னொருவகை கற்பனாவாதம் அகரமுதல்வன் எழுதுவது. அகரமுதல்வன் இந்தியாவில் குடியேறிய ஈழத்தவர். தன் நாட்டின், தன் பண்பாட்டின் எழுச்சியை அவர் கனவு காண்கிறார். ஆகவே இயல்பாகவே கற்பனாவாதம் அவரில் திரள்கிறது.
இந்த இரு போக்குகளையும் ஒன்றோடொன்று மோதி முன்னகரும் முரணியக்கமாகச் சொல்லலாமா என்று தெரியவில்லை. அதை எதிர்காலம்தான் சொல்லவேண்டும். நன்றி.