பெருந்தேன் நட்பு -அருண்மொழி நங்கை
நேற்று, ஆகஸ்ட் 8 அன்று, எங்கள் திருமண நாள். காலையில் அருண்மொழியும் நானும் சைதன்யாவும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்றுவந்தோம். அதை என் வாட்ஸப் நிலைத்தகவலாகப் பகிர்ந்திருந்தேன். ஏராளமான வாழ்த்துக்கள். நடுவே ஒரு குரல் “சார், ஆடியிலேயா கல்யாணம்?”
“ஆமாம், ஆடியில்தான். நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகுதான் சோதிடர்களை என் அண்ணா சந்தித்தார்” என்று பதில் சொன்னேன்.
நாங்கள் எப்படி திருமணம் செய்துகொண்டோம் என்றெல்லாம் அருண்மொழி அவள் எழுதிய ‘பெருந்தேன் நட்பு’ என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். காதல் திருமணம், நாங்களே அவசரப்பட்டு செய்துகொண்டது. அதன்பின் என் அண்ணா அந்த திருமணத்தை முறையாக அருண்மொழி வீட்டாரிடம் பேசி நடத்தி வைத்தார். அவர்களும் தஞ்சையில் ஒரு விரிவான வரவேற்பு நிகழ்த்தினர்.
ஆடியில் திருமணம் செய்துகொள்ளலாமா? நீங்கள் சோதிடம் பார்க்காதவர் என்றால் செய்துகொள்ளலாம். சோதிடத்தை விடப்பெரிய சிலவற்றில் நம்பிக்கை இருந்தால். அன்பில், காதலில், பாசத்தில். அல்லது கடவுளில். ஆனால் நாம் எப்போதும் எதிர்காலம் பற்றிப் பதறிக்கொண்டே இருக்கிறோம். அந்த நிலையழிவுக்குச் சோதிடம் ஓர் ஆறுதலை, பற்றுகோட்டை அளிக்கிறது. தேவையானவர்கள் பற்றிக்கொள்ளலாம்.
சரி, திருமணம் செய்துகொள்ளலாமா? நேற்று அல்லது முன்தினம், ஒருவர் ஞாநி எழுதிய ஒரு ‘மேற்கோளை’ எனக்கு அனுப்பி குடும்பம் பற்றிய என் கருத்தைக் கேட்டிருந்தார். அதாவது திருமணம் என்பது தேவையே அற்ற ஓர் அமைப்பு, குடும்ப உறவுகளில் இருந்து விடுபடாமல் அகவிடுதலை இல்லை, சமூக விடுதலை இல்லை, ப்ளா ப்ளா..
கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். கருத்திற்கு தன்னளவில் என்ன மதிப்பு? கருத்துச்சந்தை மட்டும் அல்ல, கருத்து சூப்பர்மார்க்கெட்டே இங்குள்ளது. அவரவருக்கு வசதியான கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். என் வரையில் கருத்தைச் சொல்பவரின் வாழ்க்கையும் , மொத்தக் கருத்துலகும் கொள்ளும் ஒருமைப்பாடுதான் முக்கியம். அதுவே அவர் சொல்லும் கருத்தின் ஆதாரப்புலம்.
ஞாநி நேர்மையான மனிதர், நல்ல இதழாளர் என்பது என் மதிப்பீடு. ஆனால் நம் சூழலிலுள்ள மிகச்சிறந்த இதழாளர்களுக்குக் கூட இலக்கிய வாசிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருப்பதில்லை. தத்துவம், சமூகவியல் சார்ந்த புரிதல்கள் அறவே இருப்பதில்லை. தன்னம்பிக்கை மிகையாகவும் இருக்கும். ஆகவே, இலக்கியம் பொருளியல் எதிலும் ஆலோசனை சொல்வார்கள்.
ஞாநியும் விதிவிலக்கல்ல. ஞானி என்னுடைய ஒரே ஒரு கதையைக்கூட வாசித்ததில்லை -நான் அவருக்கு அணுக்கமானவன், அவருக்கு ஒரு நூலை சமர்ப்பணம் செய்தவன். ஆனால் எனக்கு நிறைய இலக்கிய ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமானது நான் வெண்முரசு எழுதக்கூடாது, அது வெட்டிவேலை என்பது. அவருக்கு இருந்த அறிவு என்பது தமிழகத்தின் அரசியல் பற்றி முப்பதாண்டுகளாக அவர் சேகரித்த தரவுகள் மட்டுமே.
ஞாநியின் தனிவாழ்க்கையை நான் அறிவேன். அவர் குடும்பம் பற்றிய கருத்தைச் சொன்னதனாலேயே அவருடைய குடும்பவாழ்க்கை பற்றிப் பேசவேண்டியுள்ளது. அவர் முறையான மணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் முறையாக அறிவித்துவிட்டுச் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்கு மகன் பிறந்தான். பிறகு அவர்கள் பிரிந்தனர். பதிவு செய்யவில்லை என்பதனால் அது திருமணமல்ல என்று சொல்லமுடியாது. அவர் பாணியிலான திருமணம் அது. அவர் தன் மகனை ‘அவையத்து முன்பன் ஆக்க’ எல்லாவற்றையும் செய்த முன்னுதாரணமான தந்தை.
ஞாநி இறுதிக்காலத்தில் சிறுநீரக நோய்க்கு ஆளாகி தனிமைப்பட்டபோது அவருடைய முன்னாள் துணைவி வந்து உடன் தங்கி அவரை பார்த்துக்கொண்டார். சாதாரணமாக அல்ல, மிகமிகப் பிரியமாக, மிகமிகச் சிறப்பாக. அதைப்பற்றி அவர் கண்களில் நீருடன் என்னிடம் பேசினார். அந்த உறவைத்தான் நான் ’குடும்பம்’ என்கிறேன்.
பெண்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆண்களுக்குக் குடும்பம் இன்றியமையாதது.குடும்பம் இல்லையேல் ஆணிடம் இயல்பாக இருக்கும் தனிமை பேருருக் கொண்டுவிடும். குடும்பம் இல்லாது வாழக்கூடுமா? ஆமாம், ஆனால் அதற்கு குடும்பத்தைவிடப் பெரிய சில விழுமியங்களால் ஆட்கொள்ளப்பட வேண்டும். தன்னலம் அற்ற பெரும் இலட்சியங்கள் அல்லது பெரும்பணிகள். அல்லது மெய்தேடிச்செல்லும் தவம்…எழுத்தாளர்களுக்கெல்லாம் அது சாத்தியமல்ல.
அத்துடன் குடும்பம் என்றால் அது மனைவி- குழந்தைகள் மட்டும் அல்ல. அதற்கிணையான வேறு குடும்பங்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். குடும்பம் என்பது இணைந்து இறுதிவரை வாழ்வதற்கான ஓர் அமைப்பு. குருதியுறவு என்னும் அம்சத்தால் சாதாரணமான குடும்பங்கள் உருவாகியுள்ளன, அதைவிடப்பெரிய இலட்சியத்தால் வேறுவகையான குடும்பங்கள் உருவாகக்கூடும்.
நான் இளமையில் குடும்பம் பற்றிய எதிர்மறைக் கருத்துக்களை நேரில் கேட்டது இருவரிடமிருந்து. இருவருமே என் பெருமதிப்புக்குரியவர்கள். ஒருவர் பிரபஞ்சன், இன்னொருவர் ரமேஷ் பிரேதன். பிரபஞ்சன் தன் மனைவியிடம் எத்தனை அணுக்கமாக இருந்தார் என நான் அறிவேன், மனைவியின் இறப்பால் அவர் கிட்டத்தட்ட நிராதரவாகி மறைந்ததையும் கண்டேன். ரமேஷ் பிரேதன் குடும்பம் என்னும் அமைப்புக்கு மாற்றாக அவர் உருவாக்கி முன்வைத்த உறவால் நம்பவே முடியாத துரோகத்திற்கும், கைவிடப்படலுக்கும், அவமதிப்புக்கும் ஆளானார். இன்று அவருக்கு ஆதரவாக இருப்பது இன்னொரு பெரும்பற்றுதான்.
குடும்பம் என்ற வன்முறை, குடும்பம் என்னும் ஒடுக்குமுறை என்றெல்லாம் உதிரிவரிகளை சிதறடிக்கும் சிறிய உள்ளங்களுக்கு மானுடனின் மாளாத்தனிமை பற்றி ஒன்றும் தெரியாது. அவர்களின் உலகம் அவர்களிடமிருக்கும் சிமினி விளக்கின் வெளிச்சத்தில் தெரியும் சிறு வட்டம். சௌகரியமாக யோசிப்பதையே கருத்து என நினைத்து முன்வைக்கிறார்கள்.
மானுடன் தன் மாபெரும்தனிமைக்கு மாற்றாக உருவாக்கிக் கொண்டது குடும்பம். அதை அவன் கடக்கவேண்டும் என்றால் அந்தத் தனிமையை வெல்ல அதைவிடச் சிறந்த ஒரு முறையை அவன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்றுவரை அவ்வாறொன்று கண்ணுக்குப் படவில்லை. எல்லா முயற்சிகளும் மேலும் மேலும் கொடிய, அபத்தமான அமைப்புகளையே உருவாக்கின.
மானுடக்குழந்தை உடலாலும் உள்ளத்தாலும் முழுவளர்ச்சி அடைய 20 ஆண்டுகளாகிறது. அதுவரைக்கும் அதற்கு இல்லம் தேவை, பெற்றோர் தேவை. அந்த இல்லத்தின் முழுப்பொறுப்பையும் பெண் மேல் சுமத்திவிட்டு, ஆண்கள் பாலியலில் திளைக்கும் விந்துவினியோகஸ்தர்களாக வாழும் ஒரு நிலையைத்தான் வீணர்களாகிய ஆண்கள் கனவுகாண்கிறார்கள், அதையே குடும்பமில்லா சமூகம் என்ற பேரில் முன்வைக்கிறார்கள்.
குழந்தைகளுக்காக வாழவேண்டுமா? ஏன் கூடாது? நம்மைச்சுற்றி அத்தனை உயிர்களும் அப்படித்தான் வாழ்கின்றன. அடுத்த தலைமுறையை உருவாக்க, தலைமுறைச் சங்கிலியைப் பேண, அவை ஒவ்வொரு கணமும் முயல்கின்றன. துயருறுகின்றன, தியாகம் செய்கின்றன. மனிதன் மட்டும் என்ன அவ்வளவு உயர்வு? இங்கே ‘சவுண்டு’ விடுபவர்கள் அது அன்றி வேறு பெரிதாக எதை இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள்? இயற்கையில் இருந்து அவர்கள் தின்னும் உணவு அப்படியேனும் பயனுறட்டுமே?
பெருந்தியாகிகள், சமூகப்பணியாளர், அறிவியக்கத்தார், மெய்நாடிச்செல்வோர் விதிவிலக்கு. அவர்களின் தொடர்ச்சி உயிர்ச்சங்கிலியில் இல்லை. பணியில், அறிவில், அறிவைக்கடந்த ஞானத்தில் உள்ளது. எஞ்சியோர் உருப்படியாகச் செய்யத்தக்கது குடும்பத்தை உருவாக்கி, பிள்ளைபெற்று, அவற்றை வளர்த்து ஆளாக்குவது மட்டுமே. அதைச்செய், போ என்பதே இந்த ’குடும்பம் தேவையில்லை பாஸ்’ வகை அசடுகளுக்கு நான் சொல்வது.
நான் என் பாதை மெய்மைக்குரியது என்றும், துறவு மட்டுமே எனக்குரியது என்றும் கருதிவந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் பிறகு உணந்தேன், நான் கலைஞன். உணர்ச்சிகரமானவன், அதைப்பெருக்கும் கனவுலகு கொண்டவன். ஆகவே என் நிறைவு பெண் இன்றி அமையாது என. என் அன்னை அந்நிறைவை அளித்தவள். அதன்பின் அருண்மொழி. ஓரிரு ஆண்டுகளிலேயே அவள் இடம் அன்னைக்கு நிகர் என்பதுதான். அவள் முன் நான் எழுத்தாளனோ சிந்தனையாளனோ அல்ல. விசாலாட்சி அம்மாவின் முன் நின்ற அதே அசடனான சிறுவன்.
அவள் வந்தபின்னர்தான் நான் இரவுகளில் இயல்பாகத் தூங்கத் தொடங்கினேன். என் பகலிரவுகள் எல்லை கொண்டன. சீரான வாழ்க்கைமுறை அமைந்தது. தொடர்ச்சியாக உழைக்க முடிந்தது. என் கனவுகளை நோக்கி நான் முன்னகர முடிந்தது. அதற்கிணையாகவே அவளுடைய இளமையின் அர்த்தமின்மையுணர்வை நான் நிரப்பினேன். இன்றுவரை அவள் திளைக்கும் உலகங்களை உருவாக்கி அளித்தேன். அவளுடைய அறிவுத்தேடலை, ஆன்மிகப்பயணத்தை வழிகாட்டி இட்டுச்சென்றேன். அவளுடைய புறவுலகத்தை சவால்கள் அற்றதாக ஆக்கினேன்.
என் வாழ்க்கையின் மகத்தான நாட்கள் என் குழந்தைகளின் இளமைக்காலம். அவர்களுடன் இணைந்து நான் மீண்டும் என் இளமையை வாழ்ந்தேன். என் உணர்வுகளை மேலும் மேலும் ஒளிமிக்கதாக்கிக் கொண்டேன். என்னை நான் மீளமீளக் கண்டடைந்தேன்.
‘குடும்பம் சுமை’ என்பவனிடம் நான் ஒன்றே கேட்பேன். அல்லது அவன் சுட்டும் மேற்கோளைச் சொன்னவரிடம் கேட்பேன். என்னைவிடவா அவர்கள் பணியாற்றிவிட்டனர்? என்னைவிடவா சாதித்துவிட்டனர்? கொஞ்சம் அடிப்படை அறிவிருந்தால் அவன் புரிந்துகொள்ள முடியும், என்னைவிடப் பணியாற்றிய, என்னளவுக்கே எண்ணியதை எய்திய மிகமிகச் சிலரையே ஒட்டுமொத்த வரலாற்றிலும் காணமுடியும். நான் குடும்பத்தை தடையென உணரவில்லை. நேர்மாறாக குடும்பம் மாபெரும் துணை என்றே உணர்கிறேன். குடும்பம் இல்லையேல் என் உணர்வுகள் சிதறுண்டு அலைய நான் திசையழிந்திருப்பேன். எண்ணிய இயற்றாமல் அழிந்திருப்பேன்.
எனில் குடும்பம் சுமையாவது எப்படி? அது பெரும்பாலும் சுமையென உணர்பவரின் பிழையால்தான். கொள்வதை மட்டுமே கருதுபவர் அனைத்தையும் இழப்பார். கொடுப்பதன் வழியாக மட்டும் தானாகவே வந்தடைவனதான் இவ்வுலகில் மதிப்புக்குரியவை.
ஒவ்வொன்றையும் அடைய அதற்குரியதை அளித்தாகவேண்டும். குடும்பம் எனும் அமைப்பின் நலன்களை அடைய விரும்புபவர் அதற்குரிய அனைத்தையும் செய்தாகவேண்டும். பற்றும், கூடவே உரிய விலக்கமும் இல்லாமல் எந்த அமைப்பிலும் சிறப்புறத் திகழ முடியாது.
ஒவ்வொரு நாளும் அப்படி எத்தனை அமைப்புகளில் இணைந்திருக்கிறோம்! அனைத்துக்கும் அளிக்கவேண்டியதை அளித்துக்கொண்டேதான் இருக்கிறோம். குடும்பம் வேண்டாம் என்பவர் அலுவலகம் வேண்டாம் என்பாரா, சமூகமும் அரசும் வேண்டாம் என்பாரா? எவ்வளவு பெரிய அபத்தம் இந்த அறிவிப்புகள்!
ஒவ்வொன்றும் அதற்குரிய நெறிகள் கொண்டவை. அவற்றை அறிந்து, இயைந்து, அவற்றை நாம் ஏற்கிறோம், நம்மை ஏற்கச்செய்கிறோம். குடும்பம் மட்டுமல்ல எல்லா உறவுகளுமே. ஒரு விலங்குடனான உறவே கூட அத்தகைய நெறிகள் கொண்டதுதான். குடும்பமும் அத்தகையதே.
இந்த மணநாளில் நீண்டகாலம் கடந்துவிட்டதென்ற உணர்வை அடைகிறேன். மிகச்சிறு காலம் சட்டென்று கடந்துசென்றுவிட்டது என்றும் தோன்றுகிறது. இன்று வரும்போது 1994ல் நானும் அருண்மொழியும் சென்று இந்தியா இண்டர்நேஷனலில் தங்கி, சன்ஸ்கிருதி சம்மான் விருது பெற்றதைப் பற்றிப் பேசினோம். இப்போது என தெரிகிறது அந்நாள்.
திருமணத்திற்குப் பிறகு அண்ணா சென்று சோதிடர்களைப் பார்த்தார் என்றேன். எங்கள் உறவினரான முதன்மைச் சோதிடர் அண்ணாவிடம் சொன்னார். “அதான் மனசு இணைஞ்சாச்சுல்ல? எல்லாம் சரியா பொருந்தினாத்தான் அப்டி இணையும்… எல்லாம் சிறப்பா வரும். பாக்கவே வேண்டியதில்லை” .ஜாதகங்களை திரும்ப அளித்துவிட்டார்.
இன்று, என் குடும்பத்திற்கான ஒவ்வொன்றையும் செய்து முடித்துக்கொண்டே இருக்கிறேன். அஜிதன் இன்று வேறொரு குடும்பம். சைதன்யாவின் திருமணம் முன்னிற்கிறது. அவளுக்கான மணமகனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அக்கடமைக்குப் பின் படிப்படியாக விடுபடத் தொடங்குவேன் என நினைக்கிறேன். இங்கிருந்து செய்தவற்றைபோலவே மெல்ல விலகிச்சென்று செய்யவும் பல உள்ளன. உள்ளே செல்லுமளவுக்கே இனிதாக இருக்கவேண்டும் வெளியேறுவதும்.
பிகு: நாளை திருமணநாள் என்று அருண்மொழி 7 ஆம் தேதி சொன்னாள். காலை 7 மணிக்கு சுசீந்திரம் கிளம்பவேண்டும் என்று. என் மனதில் முதலில் எழுந்த எண்ணம் சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயசம் செய்வாள் என்றுதான். கோயில் செல்லும் அவசரம். அதன்பின் திரும்பி வந்த களைப்பு. செய்யவில்லை. பகல்முழுக்க அதே நினைவாக இருந்திருக்கிறேன் என்பதை மாலை நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் கிளம்பி, விமானநிலையம் வந்து, விமானத்தில் ஏறியமர்ந்த பின்னர்தான் உணர்ந்தேன். அடாடா இன்றைக்கு சர்க்கரைப்பொங்கலோ பாயசமோ சாப்பிடவே இல்லையே என்று. இந்த மண்டையை வைத்துக்கொண்டுதான் இத்தனை தத்துவமும் பேசிக்கொண்டிருக்கிறேன். உருப்படும் வழியே இல்லைதான்.