வள்ளலாரின் திருவருட்பா தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முதன்மையான பக்தி இலக்கியமாக மதிப்பிடப்படுகிறது. வள்ளலார் எழுதிய பக்திசார்ந்த சிறுநூல்களின் தொகுப்பாகிய இது வள்ளலார் மரபினரால் சைவத் திருமுறைகளின் நிலையில் வைத்து பயிலப்படுகிறது. உள்ளடக்க அடிப்படையில் இந்நூல் தமிழின் சிற்றிலக்கியங்களின் மரபைச் சேர்ந்தது. பக்தியுடன் தமிழ் அகத்துறை சார்ந்த உளநிலைகளையும் இணைத்துக் கொண்ட பாடல்களும் இதில் உள்ளன. பக்திக்குரிய நெகிழ்வான, கற்பனாவாதம் சார்ந்த உளநிலைகொண்ட இப்பாடல்கள் இசைத்தன்மையும் எளிமையான நேரடி மொழியமைப்பும் கொண்டவை. மரபான அணிகளும் சொல்லழகும் கொண்டவை ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குரிய வாழ்க்கைக்கூறுகளும் கவித்துவமாக பயின்றுவருகின்றன. தமிழ் மரபிலக்கியத்தின் இறுதிப்பெரும்படைப்பு என்று திருவருட்பா மதிப்பிடப்படுகிறது.
தமிழ் விக்கி திருவருட்பா