இந்த கட்டுரை ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
பின்புலம்
இந்த சிறுகதைகள் பின்நவீனத்துவமும் புதிய முயற்சி எழுத்துகளும் தளும்பிய காலத்தில் எழுதப்பட்டது .ஆனால் பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டவை அல்ல.கதை சொல்லும் உத்வேகமே இதன் யுத்தி.இந்த பின்புலத்தை புரிந்துகொள்வது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலிருக்கும் மொழியின் ஆதாரமான தகவல்தொடர்பை பல தடங்களில் மெருகேற்றுகின்றன.
மொத்தம் 36 கதைகள் அடங்கிய தொகுப்பு இது.இவற்றில் பல சிறுபத்திரிக்கைகளில் வெளியானவை.ஜெயமோகனின் எழுத்துலகத்தின் பல காலகட்டத்தில் எழுதப்பட்டவை.கதை சொல்லும் மனித இச்சை மேல் தீராத வேட்கை கொண்ட ஒருவனின் வர்ண சிதறல்கள்.வடிவ யுத்தி , பிண்ணிப்பிணையும் கதைப்பரப்பு , மறுதலிக்கும் பார்வை மட்டுமே உள்ள தற்கால தமிழ் படைப்புலக போக்கான ஜாலத்தை மைக்குளிட்டு எழுதப்பட்ட கதைகளல்ல.ஞானி சொல்வதைப்போல இதற்கு ஜெயமோகனுக்கு ஒரு ஷொட்டு! என் பார்வையில் சில குட்டுக்களையும் குறிப்பிடவேண்டும்.அவற்றைப்பற்றி பின்னர் பார்க்கலாம்.இது ஒரு தொகுப்பு என்பதாலும் பல காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்பதாலும் ஜன்னல் கண்ணாடியில் வடியும் ஒரு தண்ணீர் துளிபோல சில கதைகளில் வேகமும் சில கதைகளில் தொய்வும் வருவது இயற்கை என எண்ணத்தோன்றுகிறது.
பின்நவீனத்துவத்தை புரிந்து கொள்ள அதன் பின்புலனையும் அது ருதுவான சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.நவீனத்துவத்தில் மனிதத்துவம் சாகாமலில்லை.சுபிட்சம் இல்லை.மனிதற்குள் சிக்கலும் உணர்ச்சிகளின் பிண்ணலும் இருந்தது.இவை எல்லாவற்றையும் கிழித்து மகுடம் சூட்டி உட்கார்ந்தது எதிர்கால நம்பிக்கை.கறுப்பு ஞாயிறு,சிகப்பு கொடிகள்,பிரெஞ்சு புரட்சி,அடிமை எதிர்ப்பு,கிலாப்பத் அமைப்பு,அயர்லாந்து புரட்சி இவை எல்லாவற்றிலும் வராத துன்பம்,இழப்பு,சுயவிரக்கம் இல்லை.ஆனால் இவற்றை தாங்கிய யானைகளாக நம்பிக்கையும் மனிதனின் கூட்டு முயற்சியால் உருவான மனிதம் என்ற அமைப்பும் அமையப்பெற்றது நவீனத்துவத்தின் ஆணிவேர்.
பிற்பாடு வந்த இரு உலக மகா யுத்தங்கள் இந்த அமைப்பை குளைத்து ,பீமனைப்போல எறிந்த துகளில் சிதறி விளைந்தது பின்நவீனத்துவம்.எழுத்தின் வடிவமாக மட்டுமல்லாது சமூகத்தின் அனைத்து ரத்த நாளங்களிலும் பாய்ந்தது.திக்குதெரியாமல் முழிக்கும் குழந்தையின் நிதர்சனம்.நம்பிக்கையெனும் நாதங்களின் அடுத்த கம்பியை மீட்ட திசை தெரியாமல் இருக்கும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடு.இசை, எழுத்து ,நாடகம், மொழி ,செயல்பாடு, என எல்லாவற்றிலும் வந்த ஒரு தேக்க நிலை.உலக மகா யுத்தங்களின் பெருமூச்சு.இந்த குழப்ப நிலையாலே பல ஆதர்ச புரட்சியாளர்களை உருவாக்க முடியாமல் போனது.
நவீனத்துவம் மனித ஆத்மாவை கிளறி தேடுதலுக்காக விரட்டியதுயென்றால் ,ஆத்மாவின் ஓட்டத்தை நிறுத்தி புழுதிசூழ நின்றிருந்த மனிதனைப்பார்த்து சிரிக்க வைத்தது பின்நவீனத்துவம்.
அகவயமாகவும் புறவயமாகவும் இந்த போக்கை அறிந்து படைக்கும் படைப்பே முழுமைஅடையும்.வெற்றி அடையுமா என சொல்ல இயலாது.ஏனென்றால் படைப்பில் வெற்றி தோல்வி கிடையாது.தான் எழுத உணர்ந்ததை எழுத முடிந்தால் எழுத்தாளனுக்கு வெற்றி.வாசகனும் அதே சுவையை உணரும் போது தான் ஒரு வாசகனுக்கு வெற்றி.எழுத்தாளனுக்கு இதில் எதுவும் ஆகவேண்டியதில்லை.கதையே கதையை எழுதிக்கொள்ளும் வாதத்தில் ஜெயமோகனுக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அவர் உணர்ந்த சுவையை நானும் அனுபவித்தேன்.
பாத்திரப்படைப்பிலோ,சூழலிலோ பின்நவீனத்துவத்தை காட்டும் ஒரு கதைகளேனும் தமிழில் இல்லை.இதனால்தான் எழுத்தின் கட்டமைப்பில் மட்டுமே பின்நவீனத்துவத்தின் வேரை காண முற்படும் தமிழ் எழுத்துக்களை படிக்க சக்கையையாக இருக்கும்.
ஆனால் இந்த போக்கின் பாதிப்பும் தெரியாமல் மாலையை தொடுத்த ஜெயமோகனுக்கு வெற்றியே.இனி பூக்களாய் விளைந்த இந்த கதைகளை பற்றி சில பொதுப் பிரிவுகளில் பார்க்கலாம்.
குறியீடுகள்
ஜெயமோகனின் கதைகளை பொதுவாக இரு வகைப்படுத்தமுடியம்.ஒர் சீறிய நோக்கில் விளைந்த யதார்த்தக்கதைகள் மற்றும் குறியீடுகள் நிறைந்த புனைவுக்கதைகள்.யதார்த்தக்கதைகளில் குறியீடுகள் இல்லாமலில்லை.
‘நதி’ என்ற முதல் கதையில் வரும் நதி ஒர் முக்கியமான குறியீடு.இதை பல கதைகளில் மன உணர்ச்சிகளின் பல்வேறு படிமங்களாக உருவகப்படுத்தியுள்ளார்.நதியில் முங்கும் ஒருவனின் உடலைப்போல அறிவும் உறைந்துபோவதும்,பலவித உணர்ச்சிகளில் வழியே நதியை உருவகப்படுத்துவதும் குறியீடுகளின் சாத்தியக்கூறுகளை முயன்று அதில் கதையின் பின்புலனை நிறுவுகிறார்.
“அனந்தமான ஒருவழிப் பாதையாகப் பாய்ந்து செல்லும் அவளுக்குள் எனக்குத் தெரியாத ஆயிரமாயிரம் ரகசியங்கள் இருப்பதாகத் தோன்றியது.இடுப்பளவு ஆழம் கூட இல்லாத ஆற்றுக்கு பல்லாயிரம் மைல் ஆழமிருப்பதாக நினைத்தேன்.ஒரு நிமிடம் உடம்பு நடுங்கி சிலிர்த்தது.”
நதிக்கு பல தாதுத் தன்மைகளை விவரித்தாலும் , இந்த சில குறியீடுகளில் கதையின் சொல்லப்படாத சாத்தியக்கூறுகளை ஜெயமோகன் திறந்துவிடுகிறார்.
இத்தொகுப்பில் உள்ள சில முக்கியமான கதைகளில் பின்யுத்த சலிப்புகள்,எழுத்து எனும் அளங்காரச் சொல்லின் வீக்கம்,எழுத்தே தகவல் பரிமாற்றத்தின் பெரும்தடையாய் போன கீழ்நிலை போன்ற ‘post-incident trauma’ போன்ற பல சவால்களை முழுவீச்சோடு எதிர்கொண்டுள்ளார்.இதன் தொடர்ச்சி ‘பின் தொடரும் நிழலின் குரல்’ , ‘விஷ்ணுபுரம்’ ஆக்கங்களிலும் வெளிப்படுகிறது. பல எழுத்துக்களைப்போல குறிப்பிட்ட விவரணைகளுக்கு ஒரே விதமான குறியீட்டுகளை பார்க்கமுடிவதில்லை. நதியின் பிரமானங்களாக அமைதி,வெறுமை,நாணம் ஒவ்வொறு கதையிலும் வேறுவேறு விதமாக கையாளப்பட்டுள்ளது. ஆனாலும் இக்குறியீடுகள் பாத்திரங்களின் போக்கிற்கு தேவையான பின்புல உணர்வுகளை தக்கவைத்துக்கொண்டே செல்கிறது.
பீமன் ,தருமனின் வாதங்களில் ‘நதிக்கரையில்’ எனும் கதையில் நதி ஒரு மௌனமான மூன்றாம் புள்ளியாகி,இக்கதைக்கு வேறுவித வாதத்தை வைக்கிறது.பாரத யுத்தத்தில் வெற்றி தோல்வி கணக்கிடும்விதமாக கங்கை நதியோரம் போரில் இறந்தோருக்கு நீர்பலியிட பாண்டவர்கள் கூழ்ந்துள்ளனர்.தருமரைத்தவிர அனைவரும் பின்யுத்தக் களைப்பில் இருக்கையில்,பீமனின் வாதங்களுக்கு நதியின் இயல்புகளிலிருந்து விளக்கம் தர முற்பட்டுள்ளது.கடோஜ்கஜனனின் இழப்பால் புத்திர சோகத்திலுள்ள பீமனுக்கு தன் கோபத்தனலுக்கு நீர் குளிர்விக்கும் போல் தோன்றினாலும்,உள்ளேசென்ற வேகத்தில் பல ஆயிரம் மீனின் கண்கள் அவனை மொய்க்க நதி அச்சமூட்டியது. காற்றுப்படாத அந்த கங்கையின் வெளிப்பரப்பிற்குள் நதி தனக்குதானே பேசிக்கொண்டாலும்,உள்ளே ஒரு கனத்த சோகம் பரவியிருக்கும்.இந்த கதையின் முடிவு வரை அது ‘நதி’ கதையில் கூறுவதைப்போல ‘ஆயிரமாயிரம் ரகசியங்கள்’ கொண்டிருக்கும். குந்தர் கிராஸின் ‘Tin Drum’, தாமஸ் பைன்சானின் ‘Gravity’s Rainbow’ ஆகிய உலக மகாயுத்தத்தின் விளைவுகளை பிரதிபளிக்கும் ஆக்கங்கள் கொண்டுள்ள வெறுமையும் , உதாசீனத்தையும் மிக எளிமையாகக் கையாண்டுயிருக்கிறது இக்கதை.பாரதயுத்ததிற்கு தேவையான சாத்தியக்கூறுகளை மனிதனின் அகந்தையில் தேடி , போரின் மாற்றமுடியாத முடிவாக வெறுமையை கையாள்கிறார்.வெற்றி-தோல்வி போரின் முடிவாக இருக்க இயலாத நிதர்சனத்தை பாத்திரங்களின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காணமுடிகிறது. தமிழிலுள்ள முக்கியமான ஆக்கங்களில் இக்கதை உயரிய இடத்தில் மிக சுலபமாக அடையும்.
‘அது ஒரு கரிய வாள் போல கிடந்தது.ஆழத்தில் நிழல் நிழலாகக் கரைந்திரங்குவது என்ன?’
‘நைனிடால்’ கதையில் இந்த நதி மனதின் அடியாழத்தில் எழும் தவிப்பாக உருவாகி , அதிகாலையில் காணும்போது பெரிய ஏக்கமாக மாறும்.அந்த ஏக்கத்தில் எஞ்சிய கொடுமை கடைசியில் ‘இத்தனை விளக்குகள் இந்தத் தண்ணீர் மீது விழுகிறதே,உள்ளே கொஞ்சம்கூடவா வெப்பம் இருக்காது?’ என மனைவி கேட்கும்போது முழுரூபத்துடன் வெளிப்படும்.’வெள்ளம்’ என்ற கதையிலும் இதேபோல நதி ஒரு கரிய குறியீடாகவே கையாளப்பட்டுள்ளது.
காப்ரியல் கார்சியா மார்கே கதைகளில் வரும் முக்கியமான ‘tuesday siesta’ என்ற லத்தீன் அமெரிக்க கரீபியன் ஊர் மக்களின் பழக்கம் அந்த ஊரின் குறியீடாகவே மாறியிருக்கும். இதை அவரின் பல ஆக்கங்களில் உள்ள பொதுவான விஷயம்.ஆனால் இந்த siesta எல்லா நாட்களிலும் மத்தியான வேளையில் நடந்தாலும் ஸ்பானிஷ் சிவில் யுத்தங்களால் பின்யுத்த உருவகமே இந்த சொல் உபயோகம். அவர் கதைகளில் வரும் தனிமை இந்த உருவகத்தினால் அந்த கதைகளத்திற்கே ஒரு தனித்தன்மையை உருவாக்கும்.
ஜெயமோகனின் புனைவுக் கதைகளிலும் இந்த கரிய வாள் பிந்தொடரும். அவ்வகையில் நதி இவரின் கதைகளில் ஒரு முக்கியமான வெறுமையை தாங்கிக்கொண்டிருக்கும் கரிய நிழல்.
முக்கியமான யதார்த்தக்கதைகளான ‘அப்பாவும் மகனும்’,’இரணியன்’,’தேவகி சித்தியின் டைரி’, ஆகிய கதைகளில் வரும் உணர்ச்சிகள் அகவயமானது.இவை ஒரே உணர்ச்சியிலிருந்து சிதறிய எண்ணங்கள்.மேலோட்டமாகப் பார்த்தால் பல நிகழ்வுகளாகத்தெரியும் கதையின் புரிதலை அடக்கிய பின்புலம் ஒன்றே.ரத்த பந்தங்களானாலும் சக மனிதனுக்கு உணர்வுகளை தெளிவுப்படுத்தும் எணணத்திற்க்கு உள்ள பயமும் ஏதோ சில காரணங்களினால் மனதை பூட்டி வைத்து அவை திறக்கும் கணத்தில் வெளியேறும் மறைமுக உணர்வுகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.மிகுந்த கோபம் வரும் நேரங்களில் கண்களில் தண்ணீர் வருவதைப்போல்.
மொழி நடை
சிலசமயம் மொழி நடையைக்கொண்டு யதார்த்தக்கதைகளாகவும் புனைவுக்கதைகளாகவும் தவறாகப் புரிந்து கொள்வார் உண்டு.பல விதமான மொழி நடையை கொண்டுள்ள தொகுப்பு இது.நாகர்கோயில் வட்டார வழக்கு கொண்ட மலையாளம் கலந்த தமிழ்,கரிசல் பேச்சு வழக்கு கொண்ட ‘மாடன் மோட்சம்’ , மீமொழி நடை கொண்ட புனைவுக்கதைகள் [‘நாகம்’,’வீடு’].இவை எல்லாவற்றையும்விட புனைவுக்கதைகளே என்னை மொழி வீச்சில் கவர்ந்தது.கருத்தை புனைவு பாணியுலும் நேரடி பாணியுலும் சொல்வதிலிருக்கும் எல்லை கோட்டை ‘திசைகளின் நடுவே’ கதையில் செறிவாகக் கையாளப்பட்டுள்ளது.அது ஒரு புனைவும் அல்லாமல் சரித்திர கதையுமில்லாமல் ஒருவித பொய் பிம்பத்தை தோற்றுவிக்கும் சரித்திர புனைவு.
சக கடவுள்களின் வருகையால் தனக்கு படையல்களும் மதிப்பும் குறைவதைக்கண்டு குமறும் மாடனின் ‘மாடன் மோட்சம்’ கதையை ஒருவித புனைவு கலந்த நனஓடை முறையில் படைத்திருந்தால் சொல்ல வந்த கருத்தை பல தளங்களுக்கு எடுத்து சென்றிருக்க முடியுமென எண்ணத்தோன்றுகிறது.கதையில் மாடனை ஒருவித கேளிக்கை கலந்த சோகத்துடன் வடித்தது carricature வடிவிலிருந்து நூலிழையில் தப்பித்தது என்றே தோன்றுகிறது.ஆனாலும் கதை சொல்லும் கருத்தில் மிகத்தெளிவுள்ளது.சமகால கருத்துகளும் குறியீடுகளும் ஒருவிதத்தில் கடந்த காலத்தின் சிந்தனைளை கேளியாகத் தொக்க வைத்துக்கொண்டிருக்கும்.
என்னைப்பொருத்தவரை இதுவே ‘பின் தொடரும் நிழலின் குரல்’புதினத்தின் ஆரம்பம்.மேலும் புதினம் முழுவதிலும் வரும் பல பாத்திரங்களின் வெளிப்பாடாக எனக்கு உரைக்கிறது.
விஷ்ணுபுரம் , பின் தொடரும் நிழலின் குரல் ,திசைகளின் நடுவே போன்ற ஆக்கங்களை கூர்ந்து படித்தால் ஒர் பொதுவான சிக்கல் மைய்யத்தில் ஆசிரியரின் எழுத்து ஒரு திசையில் செல்வதை காண முடியும். இந்த ஆக்கங்களில் உலவும் பாத்திரங்கள் சாகச காரியங்களில் ஒர் எழுச்சியுடன் சிக்கல்களை சமாளிக்க முனைவதும்,அந்த சிக்கல்களின் தன்மை பல தடங்களில் விரியும் போது எழும் சாதாரண சவால்களையும் எதிர்கொள்ள இயலாமல் ஒருவித ஜடத்தன்மையுடன் அலைக்கழிக்கப்படுவதை காண முடியும். விஷ்ணுபுரத்தில் அஜிதரால் ஞான சபையில் பல கேள்விகளை எதிர்கொண்டு உண்மையை நிறுவ முடிந்த தீவிரத்தில் ஒரு சதவிகிதம் கூட அந்த ஞான மரபு இயக்கமாக உருவாவதையும் அதன் பெயரால் கழுவேற்றப்படப்படும் ஞானியர்களையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த இடத்தில் மாணிக்கம் ‘புயலிலே ஒரு தோணியில்’ சாதித்த சாகசங்களும்
கடைசியில் சிக்கலில்லாத தன் காதல் வாழ்வில் நினைத்ததை அடைய முடியாமல் வெறுமையில் உயிர் இறக்கும் தருவாயும் ஒத்துள்ள பிரச்சனை முடிச்சுகளே.
‘சிவமயம்’ என்ற கதை ஆத்மார்த்தமாக அழுக்கை களைந்து கடவுளை உணராமல் உதட்டளவில் இயந்திரத்தன்மையாக ஜபம் செய்யும் மனிதனின் இயல்பை சித்தரிக்கிறது.சிவன் கோயிலுக்குள் ஒரு சாமியாரின் வருகையுடன் ஆரம்பிக்கும் கதை,கடவுள் நம்பிக்கையின் விளிம்பிலிருக்கும் பூசாரியை தன் நம்பிக்கையை பரிசீலித்துப்பார்க்கத் தூண்டுகிறது.சாமியாரின் வருகையால் மக்கள் கூடுவதையும்,கிளிகள் ‘சிவா சிவா’ என ஜபம் செய்வதும் முதலில் சந்தோசத்தை கொடுத்தாலும் சாரதாவைப் பற்றி சிலாகித்து சொல்லுமிடத்தில் அடிமனத்தின் ஆசை சாமியாரின் ஜபத்தை களைக்காதது பலவித கேள்விகளை பூசாரியிடம் உண்டாக்கிறது.கடவுள் நம்பிக்கையே ஒருவித பணம் செய்யும் தொழில் என நினைத்த அவனை சாமியாரின் தீவிர ஜபம் முழுவதும் மாற்றியது.இதுவரை சாமியாரின் மனத்தை பிரதிபலித்த கிளிகள் ஒவ்வொன்றாக ‘சாரதா’ என ஜபிக்க ஆரம்பிக்க , தன் மனதாழத்தில் உள்ள அமைதியின்மையே காரணமாகப்பட சாரதாவைத் தேடி வீடு வீடாகச் சென்று பிறகு ஊரை விட்டு சென்றுவிடுகிறார் சாமியார்.
வழிநடத்தும் பிம்பங்களாக [Anagogical] முறையை கையாண்டிருக்கும் இந்த கதை ஒர் அற்புத முன்மாதிரி.பல கதைகளில் பதிலிபிம்பங்கள் வழியாக ஆழ்மனதென்னங்களை கோடிகாட்டி , இந்த வடிவங்களை பல தளங்களுக்கு ஜெயமோகன் எடுத்துசென்றுள்ளார்.
நன்றி திண்ணை இணைய இதழ் நவம்பர் 2007
நூல்கள் வாங்க