அன்புள்ள ஜெ
குருகுலக்கல்வி பற்றி ஒரு காணொளியை நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள். அதை நான் இப்போதுதான் பார்த்தேன். குருகுலக் கல்வி என்பது பண்டைய சாதிமுறையில் இருந்து உருவானது. அதில் அனைவருக்கும் சமமான கல்வி அளிக்கப்படுவதில்லை. அதில் குரு எனப்படும் ஆசிரியரின் இடம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. குருகுலக்கல்வியை எதிர்த்துத்தான் நவீனக்கல்வியே உருவானது. இப்போது மீண்டும் குருகுலக் கல்விமுறையை நீங்கள் முன்வைப்பதன் காரணம் என்ன? அது ஃபாஸிஸத்திற்கான வழி அல்லவா?
சீராளன்
அன்புள்ள சீராளன்,
கேள்வி கேட்பதற்கு முன் நீங்கள் காணொளியைக்கூடப் பார்க்கவில்லை. அனேகமாக அந்தப்பதிவு சார்ந்து சிலர் இணையத்தில் எழுதியதை மட்டுமே தெரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே நான் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அவற்றை நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கமுடியாது. இந்தவகையாகத்தான் இங்கே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன
அந்த காணொளியில் பேசப்பட்டிருப்பதிலேயே எல்லா தெளிவும் உள்ளன. இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன்.
குருகுலக் கல்வி என்பது இரண்டுவகை. ஒன்று, எல்லா கல்வியையும் குருவிடம் பணிந்து அமர்ந்து கற்றுக்கொள்வது. இரண்டு, தனித்திறன் தேவைப்படும் உயர்நிலைக் கல்வியை அதற்குரிய ஆசிரியரிடம் இணைந்திருந்து கற்றுக்கொள்வது. கலைகள், தத்துவம், ஆன்மிகப்பயிற்சிகளை ஓர் ஆசிரியரிடமிருந்து கற்பது அது.
நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் அடிப்படைக்கல்வியே குருகுல முறைப்படி இருந்தது. ஒன்று, தந்தையிடமிருந்தோ குலத்தில் இருந்தோ கற்றுக்கொள்ளவேண்டும். அல்லது, குருவிடம் சென்றமர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும். மொழி, அடிப்படைக்கணிதம், தொழில்கள் எல்லாமே அப்படிக் கற்பிக்கப்பட்டன.
அந்த முறை பின்னர் மாறியது. தரப்படுத்தப்பட்ட, அனைவருக்குமான , பொதுக்கல்வி உருவானது. பொதுக்கல்வியால்தான் நவீன பொதுச்சமூகம் உருவாகிறது. ஆகவே மிக இன்றியமையாதது என்பதே என் எண்ணம். அதை தொடர்ச்சியாக வலியுறுத்தி எழுதியிருக்கிறேன்.
இந்தியாவில் தரப்படுத்தப்பட்ட பொதுக்கல்விக்கு அடித்தளமிட்ட பிரிட்டிஷ் அரசினரும் மெக்காலே பிரபுவும் நம் நன்றிக்குரியவர்கள் என்பதே என் எண்ணம். அதையும் பலமுறை பதிவுசெய்துள்ளேன்.
நான் பேசிக்கொண்டிருப்பது, இரண்டாம் வகையான தனிக்கல்வி பற்றி. அன்றும் சரி, இன்றும் சரி, கலை, தத்துவம் மற்றும் ஆன்மிகம் தனிநபரில் இருந்து தனிநபருக்கு கற்பிக்கப்படும் ஒரு தனிக்கல்வியாகவே உள்ளது.
ஏனென்றால், இந்தவகைக் கல்வியில் கல்வி புறவயமாக மொழியிலோ வேறெங்குமோ தொகுக்கப்பட்டிருப்பதில்லை. அதற்கு பாடத்திட்டம், பயிற்றுமுறை ஏதும் இல்லை. அதை எவர்வேண்டுமென்றாலும் கற்றுக்கொண்டு கற்பிக்கலாம் என்னும் நிலை இல்லை.
என்ன காரணம் என்றால், கலைகளிலும் தத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பொதுவாக அனைவருக்குமாகக் கற்பிக்கப்படுவது என்பது இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் அந்த மாணவரின் அறிவுத்திறன், ரசனை, இயல்புகள் மற்றும் அவரது தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு கல்வி அளிக்கப்படவேண்டும். அந்த மாணவர் தனக்கான கல்வியை தானே அடைய வேண்டும்.
இவ்வகைக் கல்வியில் கற்பிப்பவரின் ஆளுமை (பெர்சனாலிட்டி)தான் முக்கியமானது. மாணவன் கற்றுக்கொள்வது அந்த ஆளுமைதான். மாணவர் அந்த ஆசிரியரின் கூடவே அமர்ந்து அந்த ஆளுமையை கூர்ந்து அறிந்து, தன்னையறியாமலேயே அந்த ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, தன் சொந்த ஆளுமையில் மாற்றத்தை அடைகிறான்.
கலைகள், தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஒருவர் ‘தெரிந்துகொள்வது’ முக்கியம் அல்ல. ’திறமையை’ அடைவது முக்கியம். அதை விட ஒருவர் தனக்கான தனித்தன்மையை அடைவது முக்கியம். அதற்கு பொதுக்கல்வி உதவாது.
குரு என்பவர் நாம் விரும்பும் கல்வியை தன்னிடம் வைத்திருப்பவர், நாம் ஆகவிரும்பும் ஆளுமையை தான் கொண்டிருப்பவர். அவர்முன் இயல்பான பணிவு கொள்வது கற்பதற்கே உதவும். உதவவில்லை என்றால் அந்தக் குருவை அக்கணமே நிராகரித்துச்செல்லவும் மாணவனுக்கு உரிமை உண்டு. அந்த அளவுக்கேனும் தன்னாணவம் கொஞ்சம் தாழாத ஒருவர் எதையும் கற்கமுடியாது.
குருகுலக் கல்வி என்பது சாதி,மதம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டதாக இருக்கவேண்டியதில்லை. அதில் ஆசாரங்கள் இருக்கவேண்டியதில்லை. குருவுக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்பதும் இல்லை.
(பழையகாலத்தில் குருவுக்கு காணிக்கை அல்லது கட்டணம் அளிக்கமுடியாத ஏழைகள் பணிவிடையை காணிக்கையாக அளித்துக் கற்றுக்கொண்டனர். பணம் இல்லையேல் கல்வியே அளிக்கப்படாது என்னும் நிலைக்கு அது கொஞ்சம் மேல் தானோ?)
சரி, ஒருவர் பொதுக்கல்வியை ஏற்கிறார். ஆனால் சில தனித்திறன்களை உருவாக்கிக் கொள்ள தனிக்கல்விமுறையாக, தனக்கு மட்டும் குருகுலக்கல்வி தேவை என்கிறார். இல்லை, அதை அனுமதிக்கமுடியாது, நீயும் பொதுக்கல்வியை மட்டுமே அடையவேண்டும் என அவரிடம் சொல்வது ஃபாஸிஸம் அல்லவா?
ஜெ