ஒரு புத்தகத்தை படிக்க எடுத்தால் இடைவெளியே இல்லாமல் அதை படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கும் ஒரு சில புத்தகங்கள். இதைஒரு சில படைப்புகளில் மட்டுமே உணர முடியும்.அப்படி நான் படித்த எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரின் நூல் தான் இது.
இதை ஜெயமோகன் அவர்கள் 2020 யில் இணையத்தில் எழுதிவிட்டார். ஆனால் இதை புத்தகமாக வாங்கி படிப்பது தான் எனது விருப்பம். அதனால் வெளியிடுவதற்காக காத்திருந்து இதை வாங்கி படித்தேன்…அவர் எழுதி பனிமனிதன், வெள்ளி நிலம், யானை டாக்டர் போன்ற புத்தகங்கள் படித்து உள்ளேன்.
இந்த கதையின் கதாநாயகி – வேற்று கிரகத்தில் வசிக்கும் ‘நாமி’ என்றொரு சிறுமி. செயற்கையாக உருவாக்கப்பட்ட குழந்தை. பெயரே இல்லாத அவள் தனக்கு – காலிகை, ஜனனி, ஏகை போன்ற வெவ்வேறு பெயர்களை சூட்டிக்கொண்டு, எப்படி ‘உடையாள்’ ஆகிறாள் என்பது தான் இக்கதையே.
இது ஒரு அறிவியல் புனைக்கதை. இதில் கொஞ்சம் தத்துவமும் அழகாக கலக்கப் பட்டுள்ளது. மிகவும் எளிமையாக குழந்தைகளுக்கு புரியும்படி சுவாரசியமாக எழுதியுள்ளார் ஜெயமோகன் அவர்கள்.
புத்தகத்தில் எனக்கு பிடித்தது :
* நாமி வேறொரு கிரகத்தில் வசித்து வருவாள். அது என்ன கிரகம் என்று வெளிப்படையாக ஆசிரியர் கூறாமல் அந்த கிரகத்தைப் பற்றிய குறிப்புகளை மட்டும் சொல்லி கொண்டே வருவார். அந்த கிரகத்தை கண்டுபிடிப்பதில் ஒரு தனி சுவாரசியம்.
அந்த கிரகத்தைப் பற்றிய குறிப்புகள்-
- அந்த கிரகத்தில் கந்தகம் மிகுதியாக இருந்தது.
- அங்கு நைட்ரஜன் தான் மிகுதியாக இருந்தது.
- அங்கு சூரியன் தெற்கே உதித்து மேற்கில் மறைகிறது.
- மஞ்சள் நிறமான புழுதி மண் நிறைந்திருந்தது.
* இந்த கதையில் குரு என்றொரு மென்பொருள் இருக்கும். அது நாமிக்கு துணையாக இருந்து அவளின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தும்.
நாமியுடன் பேசும் போது அவளின் மனதை பொறுத்து உருவங்களை மாற்றி கொள்ளும்.
அறிவியலாளரான ஐன்ஸ்டீனின் முகம், தத்துவத்தைப் பற்றி பேசும் பொழுது ஷோப்பனோவரின் முகம், கவிஞரான ஷேக்ஸ்பியரின் முகம், வியாசரின் முகம் என்று வெவ்வேறு உருவங்கள். அவள் பதட்டமாக இருக்கும் பொழுது குரு ஒரு அன்னையின் உருவத்தில் பேசும். இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
* இந்த புத்தகத்திலேயே எனக்கு பிடித்த அத்தியாயம் ‘நிழல்’. இதில் நாமி தனது மற்றும் அவளை சுற்றியுள்ள பொருட்களின் நிழலை பற்றி கண்டறிவாள். இதில் அவள் தன் நிழல் அவள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைத்து கொள்வாள். பிறகு இல்லை என்று உணருவாள். இது ஒரு தத்துவம் நிறைந்த அத்தியாயம்.இங்கு நிழலை நாம் ஒரு நபராக அல்லது தோழமையாக கூட கருதிக் கொள்ளலாம். நிழலைப் போலவே இவை எதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை..
நான் ரசித்த வரிகள் :
1.ஒவ்வொரு உயிருக்குள்ளும் உள்ள ஆசை. வாழ வேண்டும், பெருகவேண்டும் என்று துடிப்பு அது. அதற்கு பெயர் ‘திருஷ்ணை’.
2.”பிறப்பு போலவே ஓர் இயல்பான நிகழ்வு தான் இறப்பும்”
3.”நான் என்று ஒன்று உருவானதும் அறிவுதிரள ஆரம்பித்தது. நான் என்ற உணர்வை சுற்றி அந்த அறிவு திரண்டது”.
4.”நீ பிரபஞ்சத்தின் ஒரு துளி தான் ”
5.கல்வி தான் மனிதனின் தனி அடையாளம்.
நன்றி
ரியா ரோஷன்