இரண்டாவது நாளாக இங்கே புக்பிரம்மா தென்னக இலக்கிய விழாவில் இருக்கிறேன். தமிழின் ஏறத்தாழ எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் பார்த்த நிறைவு. இசை, சாம்ராஜ், சுனீல்கிருஷ்ணன் என எங்கே பார்த்தாலும் நண்பர்கள். காலையில் ஸ்டாலின் ராஜாங்க, சுகிர்தராணி ஆகியோரை பார்த்தேன். எனக்கு இன்று நிகழ்வுகள் ஏதுமில்லை. ஆகவே விடுபட்ட உளநிலையில் இருந்தேன்.
இன்று எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. என் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் ஐந்துபேர், ஐந்துபேரும் பெண்கள், வந்திருந்தனர். அவர்கள் ஒரே மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தெலுகு மொழிபெயர்ப்பாளர்கள் மூவரில் இருவர், கன்னட மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் அதே இடத்தில் அப்போது இருந்தார்கள்.
தொடர்ச்சியாக தெலுகு மொழி படைப்பாளிகள், வாசகர்களைச் சந்தித்துக்கொண்டே இருந்தேன். அனைவருமே அவினேனி பாஸ்கர் மொழிபெயர்ப்பில் அறம் கதைகளை படித்தவர்கள். அந்த மொழியாக்கம் அபாரமான நடையழகுடன் அமைந்திருப்பதாகச் சொன்னார்கள். சின்னவீரபத்ருடுவை பார்த்தேன். அவரும் அந்த மொழியாக்கம் அபாரமானது என்றார். ஆச்சரியமாக இருந்தது, ஒரு மொழியாக்கம் அதன் அழகிய நடைக்காக மூலப்படைப்பு போலவே கொண்டாடப்படுவதை அரிதாகவே கண்டிருக்கிறேன்
டாக்டர் மிருணாளினியைச் சந்தித்தேன். மறைந்த மார்க்ஸிய சிந்தனையாளரும் மனித உரிமைப்போராளியுமான பாலகோபாலவின் தங்கை. ஆந்திரத்தில் முக்கியமான இலக்கிய விமர்சகர். கன்னட விமர்சகர் நாகபூஷணாவைச் சந்திக்க நேர்ந்ததும் ஒரு நல்ல நிகழ்வு. நான் செல்லும் சர்வதேச இலக்கிய விழாக்கள் எதிலும் இத்தனைச் சந்திப்புகள் சாத்தியமானதில்லை.
தொடர்ச்சியாக வாசகர்களைச் சந்தித்துக்கொண்டே இருந்தமையால் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியவில்லை. நண்பர்களின் அரங்குகள் நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள். மலையாள நாவல் பற்றிய ஒரே அரங்கில் மட்டுமே நான் பார்வையாளராகக் கலந்துகொண்டேன். தமிழ் அரங்குகளுக்கு பங்கேற்பாளர் தேர்வில் ஒரு நெறி இருந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவர், இளம் எழுத்தாளர் ஒருவர், ஒரு தேர்ந்த வாசகர் என. அவர்களின் உரையாடலில் ஒருவகையான விவாதத்தன்மை உருவாக அது காரணமாக அமைந்தது.
இன்றும் பார்வையாளராக தேவதேவன் வந்திருந்தார். பெங்களூரில் இருப்பதனால் அவருக்கு ஒரு தனிமை இருக்கிறது, விழாவில் மிக உற்சாகமாக இருந்தார். இயக்குநர் வசந்த் பார்வையாளராக வந்திருந்தார். பகல் முழுக்க உற்சாகமான அளவளாவல்கள். அருகே ஆந்திரா மெஸுக்கு சென்று சாப்பிட்டோம்,
காலையில் அருவி படத்தின் இசையமைப்பாளரான பிந்துமாலினி நடத்திய மெல்லிசை நிகழ்வு. மாலையில் ஆர்.கே.பத்மநாபாவின் மரபிசை நிகழ்வு. இரண்டிலும் கலந்துகொண்டேன். இரண்டுமே மிகச்சிறந்த அனுபவமாக அமைந்தன.
இரவு பத்தரை மணிவரை என் அறைக்குள் வழக்கம்போல் நண்பர் கூட்டம். அதன்பின் பக்கத்து அறைக்காரர் வந்து தூங்கவிடும்படி மன்றாடியமையால் அவை கலைக்கப்பட்டது
என் அறம் கதைத் தொகுப்பு தெலுகில் நெம்மிநீலம் (மயில்நீலம்) என்ற பேரில் பாஸ்கர் அவினேனி மொழியாக்கத்தில் சாயா பதிப்பக வெளியீடாக வருகிறது.
ஆகஸ்ட் 11 அன்று பெங்களூர் புக்பிரம்மா இலக்கிய விழாவில் நிகழும் வெளியீட்டு நிகழ்வில் தெலுங்கு டாக்டர் மிருளானினி தலைமை தாங்க விவேக் ஷன்பேக், வசுதேவேந்திரா ஆகியோர் பேசுகிறார்கள். மொழிபெயர்ப்பாளர் அவினேனி பாஸ்கர், சாயா பதிப்பக இயக்குநர் அருணாங்க் லதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இடம் நூல் விற்பனையகம் (புஸ்தகா அரங்கு) நிகழ்வு அரைமணிநேரம் நடைபெறும்
பெங்களூர் நண்பர்களை விழாவுக்கு வரவேற்கிறேன்
அறம் கதைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே தெலுகில் இலக்கிய இதழ்களில் வெளிவந்து மிக விரிவான வாசிப்பையும் ஏற்பையும் பெற்றவை. மற்ற மொழிகளைப்போலவே நூறு நாற்காலிகள், யானைடாக்டர், சோற்றுக்கணக்கு ஆகியவைதான் அதிகமாக விரும்பப்பட்ட கதைகள்.
நெம்மிநீலத்தை தொடர்ந்து குமரித்துறைவி (ஈநாடு ராஜு மொழியாக்கம்) வெளிவரவுள்ளது. ஆடகம், நெடுந்தூரம், தம்பி, வெற்றி உள்ளிட்ட 13 கதைகளின் தொகுப்பு HBT (கீதா ராமசாமி பதிப்பாளர்) வெளிவரவுள்ளது
நண்பர் அவினேனி பாஸ்கர் தமிழைப்போலவே எனக்காக மட்டும் ஒரு தெலுகு இணைய இதழ் வெளியிடலாமா என்னும் எண்ணத்தில் உள்ளார். வாரந்தோறும் என் படைப்புகள் வெளியாவதுபோல.